உடையிலார், சீவரத்தார்- முதல் பகுதி

0

சு.கோதண்டராமன்

வேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்க அவதரித்த திருஞானசம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் வேதநெறிக்குப் புறம்பான சமண சாக்கியர்களைச் சாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பதிகத்தின் பதினோராவது பாடல் திருக்கடைக்காப்பு எனப்படுகிறது. அதில் தன் பெயரைப் பதிவு செய்வதோடு இப்பதிகத்தைப் பாடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே பத்தாவது பாடலே இறைவனைப் பற்றிய பாடல் தொகுதியின் நிறைவுப் பாடலாக அமைகிறது. இறைவியிடம் ஞானப்பால் உண்டவுடன் அவர் பாடிய ‘தோடுடைய செவியன்’ என்ற முதல் பதிகத்தில் பத்தாவது பாடல் சமண சாக்கியர்களுக்கு எதிராக அமைந்தது திட்டமிடாதது அல்லது இறைவன் செயல் எனக் கூறலாம். ஆனால் மற்றப் பதிகங்களிலும் அதே பாணியைப் பின்பற்றியது இறைவன் வகுத்துக் கொடுத்த அமைப்பை ஒட்டிச் செல்ல வேண்டும் என்று அவர் திட்டமிட்டே செய்ததாகத் தோன்றுகிறது.

ஒன்பது பாடல்களில் இறைவனின் சிறப்புகளைப் பலபடப் புகழ்ந்து விட்டுப் பத்தாவது பாடலில் புறச்சமயத்தாரைச் சாடி நிறைவு செய்திருப்பதைப் பார்க்கும்போது முழுப்பதிகத்தின் நோக்கமே புறச்சமயத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தி விட்டுச் சைவத்தை அரியணை ஏற்றுவது தான் என்பது புலப்படுகிறது. அத்தகைய சமண சாக்கிய எதிர்ப்புப் பாடல்களை மட்டும் இப்பொழுது ஆராய்வோம்.

சம்பந்தர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை (கல்வெட்டுகளின் மூலம் கிடைத்தவை உள்பட) 385. அவற்றில் பெரும்பாலானவை கடைக்காப்பு உள்பட 11 பாடல்களைக் கொண்டவை. சில பதிகங்களில் 12 பாடல்களும், ஒன்றில் மட்டும் 10 பாடல்களும் உள்ளன. இந்த 385 இல் 19 பதிகங்களில் புறச்சமய எதிர்ப்பு வெளிப்படையாகக் காட்டப் பெறவில்லை. 5 பதிகங்களில் 10வது பாடல் கிடைக்கவில்லை. இந்த 24 நீங்கலாக மீதி அனைத்திலும் சமண சாக்கியங்கள் இகழப்பட்டுள்ளன. பெரும்பாலான பதிகங்களில் பத்தாவதாகவும், ஐந்தில் ஒன்பதாவது பாடலாகவும், ஏழில் 11வது பாடலாகவும் இது அமைந்துள்ளது. 47 அடிகள் கொண்ட தொடர்நிலைச் செய்யுளான திருவெழுகூற்றிருக்கையில் 36, 37வது அடியாக இக்கருத்து அமைந்துள்ளது. மதுரையில் பாடிய பதிகங்களில் நான்கில் எல்லாப் பாடல்களிலுமே புறச்சமயத்தைத் தாக்குவது காணப்படுகிறது.

சமணம் சாக்கியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிக் கொள்கை உடையவை. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்ற கர்மாக் கொள்கை, மறுபிறவிக் கொள்கை, உண்மை, அகிம்சை, புலனடக்கம், புலால் மறுப்பு, இறை மறுப்பு இவை அவற்றின் பொதுக் கொள்கைகள். பௌத்தத்தை விடச் சமணம் இவற்றை அளவு கடந்து வலியுறுத்தியது என்பது தான் அவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடு. எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை அவை இரண்டும் ஒன்றாகவே கூறப்படுகின்றன. சம்பந்தரும் தன் பாடல்களில் அவ்விரண்டையும் சேர்த்தே பேசுகிறார். ஆனாலும் சமண சாக்கியர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களைத் தனித்தனியாகவே குறிப்பிடுகிறார்.

மிகுதேரர் எனக் குறிப்பிடப்படுவதால் பௌத்தர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர் எனத் தெரிகிறது. ஆனால் சாக்கியத்தை விடச் சமணமே அன்றைய தமிழ்நாட்டில் சைவத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது என்பது சம்பந்தர் அதிகமாகச் சமணத்தைப் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். சாக்கியரைப் பற்றிக் குறிப்பிடாத பதிகங்கள் உண்டு. ஆனால் சமணரைப் பற்றிக் குறிப்பிடாதவை இல்லை.

இனி, அக்காலச் சமண சாக்கியப் பழக்க வழக்கங்களைச் சம்பந்தர் கூறும் வகையில் காண்போம்.

உணவு
சமண சாக்கியத் துறவிகள் மனைதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தனர். சமணர் கையில் உணவை வாங்கி நின்று கொண்டே உண்ண, சாக்கியர்களோ மண்டை எனப்படும் பாத்திரத்தில் உணவைப் பெற்று அமர்ந்து உண்டனர். இரு வகையினரும் குண்டிகை எனப்படும் சுரைக் குடுக்கையில் அருந்துவதற்கு நீர் வைத்திருந்தனர். அதை உறி கட்டித் தூக்கிச் சென்றனர். சமணர்கள் காலையில் தூங்கி விழித்தவுடன் கண் கழுவுமுன்னே உணவு உண்டதாகச் சம்பந்தர் குறிப்பிடுகிறார். சாக்கியர்கள் அந்த அளவுக்கு உணவுக்குப் பறக்கவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் காலையில் உணவு உண்டாலும் அது போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது, ‘யானைத் தீ எனப்படும் கொடும்பசி வரும் அளவும் உண்ணாமல் உச்சி வேளையில் மிகுதியாக உண்டனர்’ என்று சொல்லப்படுவதால் தெரிகிறது. இருவகையினரும் ஒரு நாளில் இருமுறை, காலையிலும் பகலிலும் மட்டும், உணவு கொண்டனர். இரு வகையினரும் நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்டதாகக் குறிப்பிடுகிறார் காழியார்.

பௌத்தம் என்றாலே அகிம்சை என்றும் புலால் இல்லாத உணவு என்றும் கேட்டுப் பழகி வந்த நமக்கு அவர்கள் மீன் உண்டார்கள் என்ற செய்தி வியப்பை அளிக்கிறது. ஆனால் சாக்கியம் என்றுமே புலால் உணவை முழுமையாகக் கண்டித்ததில்லை. புத்தரே ஒரு அடியவர் கொடுத்ததை மறுக்கக்கூடாது என்பதற்காகப் பன்றி ஊன் கலந்த உணவை உண்டு அதனால் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக அறிகிறோம். ஊன் உண்ணல் நன்று எனச் சாக்கியரும் தீது எனச் சமணரும் வாதம் புரிந்து கொண்டிருப்பதாகச் சம்பந்தர் கூறுகிறார்.

ஆனால் சமணரையும் இதே போன்று மீன் உண்பவர் என்று அவர் வர்ணித்திருப்பது மிக அதிகமான வியப்பை அளிக்கிறது. ஏனெனில் சமணர்கள் அகிம்சையை அளவு கடந்து பின்பற்றியவர்கள். நடக்கும்போது புழு பூச்சிகள் மிதிபட்டு இறந்து விடப் போகிறதே என்பதற்காக மயில் தோகையால் பாதையை நீவிக்கொண்டே நடப்பர் என்று அறிந்திருக்கிறோம். அவர்கள் கையில் மயில் தோகை வைத்திருப்பதைச் சம்பந்தரும் குறிப்பிடுகிறார். இவ்வளவு அகிம்சைக் கொள்கையுள்ளவர்கள் மீன் பிடித்து உண்டிருப்பரா என்பது ஐயமாக இருக்கிறது.

மீன் உண்ணும் வழக்கமுடையவர்கள் சமண மதத்தில் சேர்ந்த பின்னும் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாதிருந்ததையும் அதை மற்றவர்கள் பார்த்துவிடப் போகிறார்களே என்று அஞ்சி, பள்ளி அருகே உள்ள ஆற்றில் மீன்களைப் பிறர் அறியாமல் கவர்ந்து உண்டதையும் இதிலிருந்து ஊகிக்கிறோம். அதனால் தான் அவர்களது நோன்பைப் பொய்ம்மை நோன்பு என்று சம்பந்தர் எள்ளுகிறார் போலும்.

சமண சாக்கியர் இருவருமே கஞ்சி உண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கஞ்சி என்பது இன்று நாம் வழங்கும் பொருளில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக எல்லா மக்களும் உண்ணும் பொருளாக இருந்தால் அதை ஒரு இகழ்ச்சிக்குரியதாகச் சம்பந்தர் குறிப்பிட்டிருக்க மாட்டார். “கண் கழுவு முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை உண்டவர்கள்” என்ற தொடரிலிருந்து இரவில் உணவு கொள்ளாத அவர்கள் அதிகாலையிலேயே பிச்சைக்குக் கிளம்பி விட்டிருப்பது தெரிய வருகிறது. அவ்வளவு அதிகாலையில் இல்லறத்தார் நொய் அல்லது மாவு கொண்டு இந்த யாசகர்களுக்காகக் கஞ்சி தயாரித்து இருப்பரா என்பது ஐயத்துக்கு உரியது. மேலும் சமணர் கையில் உணவை வாங்கி நின்ற நிலையிலேயே உண்டவர் எனக் கூறப்படுவதால் அது திரவ வடிவிலுள்ள கஞ்சியாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே கஞ்சி என்பது பழைய சோற்றைக் குறிப்பதாக இருக்கலாம். மீந்து போன சோற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக் காலையில் வரும் யாசகருக்குப் படைத்திருப்பர் எனக் கருதலாம். மேலும் ‘புளித்தட்டையர்’ என்ற சொல்லுக்குப் புளித்த கஞ்சியை உண்பவர் என்று பொருள் சொல்லப்படுவதால் அது புளித்த பழைய சோறாகத் தான் இருக்க வேண்டும்.

முன்கூறு, பின் கூறு – “மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு காடி தொடு சமண்” என்ற தொடர் (திருக்குறும்பலாப் பதிகம்) ஆராயத் தக்கது. மூடிய சீவரத்தர் ஆகிய புத்தர்கள் முன்கூறு உண்டு வெளியேறிய பின்னர், பின்கூற்றை உண்டு காடியை அருந்திய சமணர் என்று இதைப் பொருள் கொள்ளலாம். முன்கூறு பின்கூறு என்பது என்ன? இது சாதாரணமாகப் பொதுமக்கள் உண்ணும் உணவின் முற்பகுதியான குழம்புச் சோற்றையும் பிற்பகுதியான மோர்ச் சோற்றையும் குறிப்பதாக இருக்கலாம். புத்தர்கள் குழம்புச் சாதத்துடன் நிறுத்திக் கொண்டனர், சமணர்கள் மோர் சாதம் மட்டும் சாப்பிட்டனர் என்று கொள்வது தவறாகாது. மற்றொரு இடத்தில் அறுவகைத் தேரர் என்பதற்கு அறுசுவையுடன் கூடிய உணவு உண்ணும் புத்தர் என்று பொருள் கூறப்படுவதால் (1.128 திருவெழுகூற்றிருக்கை – தருமை ஆதீன உரை) அவர்கள் அறுசுவையும் அடங்கிய குழம்பு போன்ற பொருளை உண்டிருப்பர் என்றும் சமணர்கள் அறுசுவை அற்ற மோர்ச் சோற்றை மட்டுமே உண்டிருப்பர் என்பதும் வலுப்படுகிறது. உலக இன்பங்களைத் துய்த்தல் ஆகாது என்னும் சமணக் கொள்கையில் உணவின்பமும் அடங்குவதால் இவ்வாறு ஊகிக்கிறோம்.

சாக்கியரும் புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தக் காடி என்பது என்ன? அரிசிச் சோற்றை நீரில் பல நாட்கள் ஊற வைத்துப் புளிக்க விட்டுத் தயாரிக்கப்படும் பானம் இது. இதை உண்டால் வரும் போதை மயக்கம் போன்ற மனநிலை தியானத்துக்கு ஏற்றது என்ற நம்பிக்கை அண்மைக் காலத் துறவிகளிடமும் உண்டு.

சமணர்கள் கடுக்காய், சுக்கு இவற்றைத் தின்றது கூறப்பட்டுள்ளது. உடலில் காம உணர்வு தோன்றக் கூடாது என்பதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கலாம். இதே நோக்கத்துடன் கடுக்காயும் எட்டிக்காயும் சேர்த்து உண்ணும் வழக்கம் அண்மைக் காலத் துறவிகளிடமும் உண்டு.

உடை
சமணர்கள் ஆடை அணியாமல் இருந்ததும் அவர்கள் அதை நாணுதற்குரிய செயலாகக் கருதவில்லை என்பதும் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓரிடத்தில் மட்டும் (சாய்க்காட்டுப் பதிகம்) நான்கு விரல் அகலமுள்ள கோவணம் அணிந்த குறிப்பு காணப்படுகிறது. அரிதாக ஓரிருவர் இவ்வாறு கோவணம் அணிந்திருக்கலாம். எல்லாச் சமணத் துறவிகளும் ஓலையால் முடையப்பட்ட தடுக்கு ஒன்றைக் கையில் ஏந்தி உடலை மறைத்தனர். உட்காரும்போது தடுக்கின் மேல் அமர்ந்தனர்.

சாக்கியர்கள் துவராடை அணிந்திருந்தனர். ஆடையில் காவி வண்ணம் ஏற்றுவதற்கு மருத மரத்தின் இலையையோ, காவிக் கல்லையோ, செம்மண்ணையோ பயன்படுத்தினர். அவ்வாடை சீவரம் எனப்பட்டது. இவர்கள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பர். நீண்ட போர்வையர் என்றும் இணைப் போர்வையர் (இரு போர்வை போர்த்தியவர்) என்றும் அவர்கள் கூறப்படுகின்றனர்.

கலிங்கமுடை பட்டைக் கொண்டார்’ என்ற தொடரிலிருந்து சாக்கியர்கள் கலிங்கம் எனப்படும் பட்டாடையை உடுத்தியதை அறிகிறோம். அது கலிங்க நாட்டுப் பட்டாடையாகவும் இருக்கலாம்.

உறைவிடம்
இரு வகையினரும் தத்தம் பள்ளிகளில் தங்கினர். சமணர்கள் மட்டும் பாழிகளில் தங்கியது கூறப்பட்டுள்ளது. அது தவம் புரியும் இடமாக இருக்கலாம். தம் உடலைச் சுற்றிப் புற்றேறும்படி கடுமையாகத் தவம் செய்தனர் என்பதும் தெரிகிறது.

உடல் தோற்றம்
இருவகையினரும் கருநிறத்தவர் எனக் கூறப்படுவதிலிருந்து அவர்கள் பகல் முழுவதும் வெய்யிலில் உணவுக்காக அலைந்ததால் கருத்திருந்தது பெறப்படுகிறது. சமணர்களைப் பற்றிக் ‘குளித்துணாச் சமணர்’, ‘ஊத்தை வாய்ச் சமண்’ என்று கூறப்படுவதால் அவர்கள் குளிப்பதில்லை என்றும் பல் கூடத் துலக்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது. உடம்பினை இழுக்கு என்று கருதுவது அவர்களது கொள்கை போலும். இதனால் உடலில் வியர்வை தோன்றி அழுக்கேறி அவரது உடலில் முடைநாற்றம் எப்பொழுதும் வீசிக் கொண்டிருந்ததையும், அவர்கள் இகழத்தக்க உருவுடையோராக இருந்ததையும் ஆளுடைய பிள்ளை கூறுகிறார். மாறாகச் சாக்கியர்கள் நீரில் பலகாலும் மூழ்கிக் குளித்துத் தூய்மை செய்து கொண்டது சொல்லப்பட்டுள்ளது. சமணர்கள் கடுக்காய்ப் பொடியை உடல் முழுவதும் பூசிக் கொண்டதும் சாக்கியர்கள் மருதமரப் பூவை அரைத்துப் பின்பக்கத்தில் பூசி உடலை மறைத்ததும் குறிக்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்பது தெரியவில்லை.

குறைந்த அளவே உணவு கொள்கின்ற சமணரைக் குண்டர் என்று சம்பந்தர் அடிக்கடி குறிப்பிடுகிறார். அது உடல் பருமனைக் குறிக்காமல் கீழ்மையைக் குறிப்பிடுவதாக உரையாசிரியர்கள் சொல்கின்றனர். சாக்கியர்களைப் பொறுத்தவரை குண்டர் என்ற சொல் உடற் பருமனையே குறிப்பதாகும். அவர்கள் உடல் பருத்தவர்கள் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார் கவுணியர் கோன்.

சாக்கியர்கள் வழக்கமான முறையில் தலையை மொட்டை அடித்துக் கொண்டதும் சமணர்கள் பறிதலைக் கையினராக இருந்ததும் கூறப்பட்டுள்ளது.

கொள்கைகள்
சமணர்கள் தெய்வம் ஒன்று உண்டு என்பதை முற்றிலுமாக மறுத்தனர். தங்கள் சமய குருவாகிய மகாவீரரின் சின்னமான அசோக மரத்தைப் புனிதமாகக் கருதினர். துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதினர். கடுமையான தவத்தால் உடம்பை வாட்டினர். வெய்யிலில் அலைதல், முடியைக் கையினால் பறித்துத் தலையை முண்டிதமாக்கிக் கொள்ளுதல், பல வகை உண்ணா நோன்புகள் ஆகியவற்றின் மூலம் தம் உடலைத் துன்புறுத்திக் கொண்டனர்.

சாக்கியர்கள் பிடகத்தை வேதமாக உரைத்தனர். இறை மறுப்பைப் பொறுத்தவரை அவர்கள் சமணர்களைப் போல் முழு நாத்திகர்களாக இல்லாமல் சற்றுத் தடுமாற்றமான கொள்கைகளைக் கொண்டிருந்தனர். தெய்வம் இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும், அது பற்றிக் கவலைப்படாமல் மனிதனின் துன்பங்களைப் பற்றிச் சிந்திக்க என்னும் புத்தரின் அறிவுரைப்படி, ‘கடவுள் உண்டு, இல்லை’யென்று குழப்பமாகக் கூறினர். “எட்டுத் திக்கிலும் இல்லாத தெய்வம் ஒன்று உள்ளது என்று சாக்கியர்கள் கூறுகிறார்களே, அதனால் என்ன பயன் உள்ளது?” என்று சம்பந்தர் வினவுகிறார். குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப் படும் ஏனைய பொருள்களும் அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின எனவும் அவர்கள் கணபங்க வாதம் புரிவதாக அவர் கூறுகிறார். சாக்கியர்கள் போதி எனப்படும் அரசமரத்தைப் புனிதமாகக் கருதினர்.

 (தொடரும்)

படங்களுக்கு நன்றி: http://www.webindia123.com/religion/jainism/principl.htm

http://www.chocolate-fish.net/img_-5859

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.