இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (17)
சக்தி சக்திதாசன்
முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்
“சட்டம் ஒரு இருட்டறை” என்றார் அறிஞர் அண்ணா.
இங்கிலாந்தில், பல காலங்களில், இக்கூற்றின் உண்மையை உணர்ந்து நான் வியந்திருக்கிறேன்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் ஒன்றாகக் கருதப்பட வேண்டும் என்பது உண்மை என ஏற்றுக் கொள்ளும் அதேநேரம், சிலசமயங்களில் சூழ்நிலைகளைக் கண்க்கிலெடுத்து அச்சட்டத்தினை அச்சந்தர்ப்பத்தில் மட்டும் தளர்த்துவதற்கு அச்சட்டத்தில் ஏதாவது வழிமுறைகள் இருக்கின்றனவா? என ஆராய மறந்து விடுகிறார்களோ என எண்ணும் வகையில் சட்டமன்றங்களின் சில செயற்பாடுகள் அமைந்து விடுகின்றன.
அப்படி இவன் என்னதான் சொல்ல வருகிறான் என்று நீங்கள் எண்ணத்தலைப்படுவது புரிகிறது.
பிஜி (Fiji) தீவினிலே பிறந்தவர் 32 வயது நிரம்பிய “இசிமெலி பலேவாய் (Isimeli Baleiwai)” எனும் மனிதர். இவரின் மனைவி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த “கிம் ( Kim)” எனும் பெண். இவருக்கு 6 வயதும், 3 வயதும் நிரம்பிய இரு குழந்தைகளுமுண்டு.
பொதுநலவாய நாடுகளில் ஒன்றான பிஜித் தீவினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பிரித்தானிய தேசிய இரணுவத்தில் 13 வருடங்களாகப் பணியாற்றியவர்.
இவரது இராணுவ சேவைக் காலத்தில் இவர் பிரித்தானிய இராணுவத்தின் பணிகளை பொஸ்னியா (Bosnia) , வட அயர்லாந்து (Northern Ireland) , ஈராக் (Iraq) , ஆப்கானிஸ்தான் (Afganistan) எனப் பல்வேறு நாடுகளில் ஆற்றியுள்ளார்.
2012ம் ஆண்டு யூன் மாதம் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ள எண்ணிய இவர் பிரித்தானிய நாட்டுப் பிரஜாவுரிமைக்கான விண்ணப்பத்தை 2012ம் ஆண்டு மார்ச் மாதம் கையளித்திருந்தார்.
தான் ஏற்கனவே தீர்மானித்திருந்த படி 2012 யூன் மாதம் 15ம் திகதி தனது இராணுவ சேவையிலிருந்து தானாக விலகிக் கொண்டார்.
இங்கிலாந்து நாட்டுக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ வேற்று நாட்டினத்தவரோ அன்றி பொதுநலவாய நாடுகளின் பிரஜைகளோ பிரித்தானிய இராணுவத்தில் தொடர்ந்து நான்கு வருடங்கள் பணியாற்றியிருந்தால் இங்கிலாந்து நாட்டில் நிரந்திரமாக வாழ்வதற்கும், ஜந்து வருடங்கள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் பிரித்தானிய நாட்டு பிரஜாவுரிமையைக் கோருவதற்கும் உரிமையுடையவர்களாவார்கள்.
இந்த இரண்டு தகுதிகளையும் பெற்றிருந்த இந்தப் பொதுநலவாய நாட்டுப் பிரஜை, இங்கிலாந்து நாட்டுப் பெண்ணின் கணவர், இரண்டு பிரித்தானிய நாட்டு பிரஜைகளான குழந்தைகளின் தந்தை, விண்ணப்பித்திருந்த ப்ரஜாவுரிமை விண்ணப்பம் 2012, யூன் மாதம் 28ம் திகதி நிராகரிக்கப்பட்டது .
திகைப்பாக இருக்கிறது இல்லையா? காரணம் என்னவென்று அறிந்து கொள்ள மனம் ஆவலாயிருக்கிறது இல்லையா?
பிரித்தானிய நாட்டு பிரகாவுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு செய்யும் “எல்லைக் காப்பக திணைக்களம்
( UK BORDER AGENCY) , இவரின் விண்ணப்பத்தை நிராகரிக்கக் காரணம் இவரின் நடத்தை சம்பந்தமானது என்கிறார்கள்.
13 வருடங்கள் இந்நாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிய ஒருவர், அசாத்திய துணிச்சல் மிக்க அற்புதமான இயற்கையான தலைத் தகுதிகளைக் கொண்டவர் என அவரது அதிகாரிகளால் வர்ணிக்கப்பட்டவர், “லான்ஸ் காப்பிரல் (Lance Corporal) எனும் பதவி வகித்தவர் என இத்தனை தகுதிகளையும் பெற்ற ஒருவரின் நன்னடத்தையில் சந்தேகமா? என்ன விளையாடுகிறீர்களா ? என ஆத்திர உணர்வு மேலிடுகிறது இல்லையா?
இவர் இராணுவத்திலிருந்த போது சக இராணுவ வீரர் ஒருவருடன் சிறு தகராறு ஏற்பட்டு மற்ற வீரருக்கு சிறிய அளவிலான காயம் கைகளில் ஏற்பட்டதாம். இராணுவ விதிகளின் படி இந்நிகழ்வு விசாரிக்கப்பட்டு இவரால் தாக்கப்பட்டவருக்கு இவர் 1000 ஸ்ரெலிங் பவுண்ஸ் அவராதம் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாம்.
சரி அதுதான் அப்போதே முடிந்து விட்டதே பின்னால் ஏனிந்த இழுபறி ? உங்கள் கேள்வி புரிகிறது.
1974ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளின் புனருத்தாரண வாழ்வுச் சட்டத்தின் மீதான ஒரு திருத்தப் பிரேரணை 2010ம் ஆண்டு சட்டமூலமாக்கப்பட்டபோது அச்சட்டத்தின் படி இராணுச சேவையிலிருக்கும் போது புரிந்த குற்றச் செயல்கள் அவர்கள் இராணுவ சேவையிலிருந்து சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பும் போது சராசரி வாழ்வினுக்கும் எடுத்துச் செல்லப்படுவதே இதற்குக் காரணமாம்.
ஆனால் நீதித்துறை வல்லுனர்கள் பலரின் கருத்துக்களின் படி இராணுவத்தில் குற்றமாகக் கருதப்படும் பல நிகழ்வுகள் சராசரி அன்றாட வாழ்வியலில் குற்றமாக கருதப்படுவதில்லை. அதன் அடிப்படையில் இவரது இந்தக்குற்றம் கூட ஒரு குற்றமாக கருதப்பட்டிருக்க மாட்டாது.
ஆனால் எல்லைப் பாதுகாப்புத் திணைக்களம், இல்லை இவர் குற்றமிழைத்தவர் எனவே குற்றவாளியாக கருதப்படும் ஒருவரை இங்கிலாந்து நாட்டின் பிரஜை ஆக்குவதென்பது சட்டப்படி முடியாத காரியம் என்கிறார்கள்.
பெரும்பான்மையாக நியாய உணர்வுகளை உள்ளடக்கிய இங்கிலாந்து மக்களில் பலர் இந்த முடிவைக் கண்டு குமுறுகிறார்கள். ஊடகங்களில் இம்முடிவையெடுத்த எல்லைப் பாதுகாப்புத் திணைக்களத்தின் மீது சராமாரியாக சொற்போர்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றங்களில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பல வேற்று நாட்டினத்தவர்கள் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் பட்டால் அந்நாட்டு அரசாங்கங்களினால் மனித உரிமைக்கு அப்பாற்பட்ட வகையில் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் எனும் காரணத்திற்காக இங்கிலாந்தில் தொடர்ந்து வாழ அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் ஒரு நிலையில், எமது நாட்டின் பாதுகாப்பிற்காக தனது உயிரை பணயம் வைத்து போராடிய ஒரு வீரனுக்கு இங்கே புகலிடம் கொடுக்க முடியாதென்பது எவ்வகையில் மனித உரிமையைக் காப்பதாகும் ? எனக் கேள்வி எழுப்பப் படுகிறது.
அது மட்டுமில்லை அவரின் மனைவியோ இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஒரு ஆங்கிலப் பெண்மணி, அது தவிர அவர்களின் இரு குழந்தைகளும் பிறப்பால் இங்கிலாந்தைத் தமது தாய்நாடாகக் கொண்டவர்கள் அத்தகைய ஒரு குடும்பத்தை பிரிப்பது எவ்வகையில் தர்மமாகும் எனும் கேள்வி ஓங்காரமாக எழுகிறது.
இவர்களது குடும்பம் தமது நிலைமையைத் திரும்ப பரிசீலிக்கும்படி பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்துக் கட்சி பாராளுமன்ற அங்கத்தினர்கள் பலர் எனப் பலரிடம் கோரியுள்ளனர்.
அது தவிர வெகுவேகமாக இவர்களுக்காதரவாக இணையத் தளங்களிலும் வெளியேயும் பொதுமக்களின் கையெழுத்துக்கள் சேகரிக்கப்படுகின்றன.
கட்சி பேதமின்றி எழும் இக்கோஷம் அரசாங்கத்தின் செவிகளுக்குள் எப்படி விழுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளினால் எடுத்த பல முடிவுகளால் மக்களின் மத்தியில் செல்வாக்கிழந்திருக்கும் இக்கூட்டரசாங்கம் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்வார்களா?
சட்டம் எனும் இருட்டறைக்குள் நீதி எனும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்ச அரசியல்வாதிகளின் மனங்களில் திடமிருக்கின்றதா?
பொறுத்திருந்து பார்ப்போம் ….. காலம் பதிலளிக்கும்…….
அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்