தி.ந.இளங்கோவன்

 

தீபாவளி நினைவுகள் என்றாலே நம் எல்லோருக்கும் மகிழ்வைத் தரக் கூடியவை. அதுவும் இளமைக் கால தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிக இனிமையானவை அல்லவா?

இருந்த போதும், எனக்கு கடந்த சில வருடங்களாக தீபாவளி என்றாலே சற்றே சோகமான ஒரு உணர்வு தோன்றுகிறது. சரி, இருக்கட்டும். சந்தோஷமான நினைவுகளை முதலில் பகிர்ந்து கொண்டு அப்புறம் சோகக் கதைக்கு வருகிறேன். சரியா?

இப்போதைக்கு என் இளமைக் கால தீபாவளி நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் இளமைக் காலத்தில், (அதாவது அறுபதுகளின் கடைசி வருடங்கள், எழுபதுகளின் ஆரம்ப வருடங்கள்) பொதுவாகவே ஏழ்மை என்பது கிராம மக்களை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்த காலம். எல்லோர் வீட்டிலும் ஐந்தாறு குழந்தைகள் இருக்கும். குடும்பத் தலைவர் என்பவர் கட்டாயம் வேலைக்குப் போய் சம்பாதிப்பவர் என்பதில்லாமல் இருந்த காலமது. இன்றைய காலங்களில் நிகழ்வது போல் எப்போது நினைத்தாலும் புத்தாடை வாங்குவது, உடுத்துவது என்பதெல்லாம் அப்போது நிகழாது. தீபாவளி அன்று புத்தாடை கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்னரே நினைத்து, நினைத்து குதூகலிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாக இருக்கும். இந்த வருடம் என்ன உடை, என்ன நிறம், என்ன விலையில் அப்பா எடுத்துத் தருவார் என்று ஆயிரம் கற்பனைகள்.

அக்காவை விட எனக்கு விலை உயர்ந்தது வேண்டும் என்று அடம் பிடித்து அழும் தம்பிகள், தங்கைகள். அமைதியாய் இருந்தே சாதிக்கும் அக்காக்கள். அருகில் இருக்கும் ஊரிலேயே துணி எடுப்பதா, இல்லை கொஞ்ச தொலைவு சென்று நகரில் (கும்மோணம், மாயாரம் போல) எடுப்பதா என்று வாண்டுகள் போடும் ரகசியத் திட்டங்கள்.

எந்த்த் திட்டத்தையும் அப்பாவிடம் சொல்லும் திடம் பெரும்பாலான குழந்தைகளிடம் அந்தக் காலத்தில் இருந்த்தில்லை. அதிக பட்சம், அம்மாவிடம் சென்று அழுவதொடு சரி. ஒன்றிரண்டு குடுமபங்களைத் தவிர, பெரும்பாலான குடும்பங்களில் தந்தையே அனைவருக்கும் துணி எடுத்து வந்து விடுவார் கடையிலிருந்து. அதுவும் எடுத்து வந்த பிறகுதான் குழந்தைகளுக்கே தெரிய வரும். அது வரை கண்ட கனவையெல்லாம் க்ஷண நேரத்தில் தூக்கி எறிந்துவிட்டு, தனக்கென எடுக்கப் பட்டிருக்கும் துணிகளின்  நிறத்தைப் பற்றியும், தரத்தைப் பற்றியும் பெருமை பேச ஆரம்பித்து விடும் வாண்டுகள்.

அடுத்த்து எடுத்த துணிகளைத் தைப்பது. ஒவ்வொரு ஊரிலும் ஒன்றிரண்டு அக்காக்கள் தையல் தொழில் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏகப்பட்ட மவுசு தீபாவளிக் காலங்களில்.

பஃப் வைத்த சட்டைகள், ஃப்ரில் வைத்த பாவாடைகள்,  நாய்க் காது கலர் வைத்த சட்டைகள் என்று புதிய புதிய டிசைன்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போகும். நிஜமாகவே, அப்போதெல்லாம் அந்த கிராம தையல் கலைஞர்கள், நிறைய கற்பனைத் திறன் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பது என் அபிப்ராயம்.

“எனக்கு இந்த தீவாளிக்கு ரெண்டு ட்ரெஸ், தெரியும்ல” என்று பீற்றித்திரியும் வாண்டுகளின் கண்ணில் படாதவாறு மறைந்து ஒளியும், ஒரு உடை கூடக் கிடைகாத சில வாண்டுகள். ஏற்றத்தாழ்வு என்றுதான் இல்லை?

உடைக்குப் பிறகு அடுத்த சிறப்பம்சம் பட்சணங்கள். இனிப்பு, காரம் என்று இடைவேளையில்லாமல் வாய் அரைத்தவாறு இருக்கும், தீபாவளிக்கு முன்னும் பின்னும்.

மகளம்பூ (முள்ளுமுறுக்கு), தேந்தலை (தேன்குழல்), அதிரசம், மைசூர் பாக்கு, அல்வா, நாடா (ரிப்பன்) பகோடா என்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஏகப்பட்ட வெரைட்டி. அந்தக் காலத்தில் “அஞ்சு மரக்கா டின்” என்று எங்கள் அம்மா சொல்வார்கள். பிஸ்கட் பாக்கெட்டுகளை அடைத்து வரும் தகர டின்களை மளிகைக் கடையிலிருந்து வாங்கி அரிசி, பருப்பு வகையறாக்களை சேமித்து வைக்க உபயோகப்படுத்துவார்கள். தீபாவளி சமயங்களில் அவற்றில்தான் பட்சணங்கள் பாதுகாக்கப்படும்.

அப்போதெல்லாம், விளையாட்டு என்பது பெரும்பாலும் தெருப் புழுதியில் தான். 10-15 குழந்தைகள் சேர்ந்து கண்ணாமூச்சியில் ஆரம்பித்து கபடி வரைக்கும் நடக்கும். மிகவும் குட்டிச்செல்வங்கள் “ஒப்புக்கு சப்பாணியாய்” சீரியஸாய் கொஞ்ச நேரம் ஓடி, அப்புறம் தங்கள் நிலையை உணர்ந்து அழுது கொண்டே அன்னையரை நோக்கி செல்வார்கள். அவர்களின் அண்ணனோ, அக்காவோ ஓடிச்சென்று சமாதானம் செய்து மீண்டும் விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்கள், பிறரிடம் மெல்ல கண்ணால் ஜாடை காண்பித்தவாறே. இந்த வாண்டுகள் அழுது கொண்டே வீட்டுக்குப் போனால், உடனடியாக் அதன் அக்காவுக்கோ, அண்ணனுக்கோ விளையாடுவத்ற்குக் கொடுக்கப் பட்டிருந்த விசா ரத்தாகிவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தீபாவளியைப் பற்றி பேச ஆரம்பிச்சுட்டு, விளையாட்டை  நோக்கி இழுத்துகிட்டு போயிட்டேனோ? மன்னிச்சுக்கங்க.

இப்படிப்பட்ட விளையாட்டுக்கு நடுவில், வீட்டுக்கு ஒரு லைட்னிங் விசிட் அடித்து (ஒன் பாத்ரூம் போறேன் என் பொய் சொல்லிவிட்டு) உடன் பிறந்தவர்கள் கண்ணை மறைத்து, நிமிஷ நேரத்தில் ஒன்றிரண்டு பட்சணங்களை உள்ளே தள்ளி விட்டு, சுவடு இல்லாமல் திரும்ப வந்து விளையாட்டில் கலந்து கொள்வது ஒரு தனித்திறமை. அந்தத் திறமையில்லாத அசடுகள், அடுத்த வேளை பட்சண டின் திறக்கப் படும்போது, தனக்குத் தெரியாமல் அம்மா யாருக்கோ கொடுத்திருக்கிறாள் என்று எண்ணி, அம்மாக்களிடம் அழுது ஆகாத்தியம் பண்ணுவார்கள்.

அடுத்தது பட்டாசு. ஆஹா, அது வரவழைக்கும் ஆனந்தமே தனி. எவ்வளவு ஏழையாக இருந்தாலும் கொஞ்சமாவது பட்டாசு வாங்காமல் தீபாவளியைத் தள்ள முடியாது. வருஷா வருஷம் பட்டாசுகளில் ஏதாவது ஒரு புது வெரைட்டி வரும். அதை வாங்கியே தீர வேண்டும் என்று ஆண் குழந்தைகள் மனசு அலை பாயும். பெண் குழந்தைகளுக்கு பட்டாசில் அவ்வளவு ஈடுபாடு இருக்காது. இருந்தாலும் சொத்தில் பங்கு பிரிப்பது போல் வீட்டுக்கு வந்த பட்டாசில் தங்கள் பங்கையும் வாங்கி தனியாகக் காய வைத்து தீபாவளி அன்று வெடிக்கும் வரை மெயின்டெயின் பண்ணுவார்கள். அப்போதானே மற்ற குழந்தைகளிடம் மதிப்பு.

பட்டாசு வாங்கும் போது கொஞ்சம் திட்டமிட வேண்டும். சத்தம் அதிகமாகக் கேட்கும் வெடிகள் எவ்வளவு அவசியமோ (நம் பராக்கிரமத்தை பறைசாற்ற) அதே அளவு வெடித்தபின் நிறைய காகிதக் குப்பைகள் நம் வீடு வாசலில் சேர வேண்டும். அதற்கேற்றாற்போலவும் வெடிகள் வாங்கியாக வெண்டிய நிர்ப்பந்தம். இதையெல்லாம் அப்பாக்களிடம் நேரடியாக சொல்ல முடியாது. இதையெல்லாம் பூர்த்தி பண்ணும் விதமான வெடிகளைத் தேர்ந்தெடுத்து, அந்த பட்டியலில் உள்ளபடி வாங்கித்த்ருமாறு அப்பாக்களை நிர்ப்பந்திக்க வேண்டும், அழ வேண்டும், கெஞ்ச வேண்டும் வீட்டுக்கு வீடு இந்த நடைமுறைகள் வேறுபடும். ஆனால் எல்லா முயற்சிகளும் ஒரு இலக்கை நோக்கியே இருக்கும்.

அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவை நச்சரித்து தனியாய் செருவாட்டுப் பணத்திலிருந்து கொஞ்சம் உருவி, பக்கத்திலிருக்கும் டவுனுக்குப் போய், தனியாய் வெடிகள் வாங்கி வந்து, அவற்றை அப்பா வாங்கி வரும் வெடிகளுடன் ஐக்கியப் படுத்தி, அப்பாவியாய் நடித்து, வெடித்து சந்தோஷப்படும் ஜீவன்களும் உண்டு.

எல்லா பணத்தையும் ஒத்தை வெடி வாங்கியே கொண்டாடும் கூட்டமும் உண்டு. வெறும் அணுகுண்டுகளாக வாங்கி ஊரையே அதகளப்படுத்தும் குடும்பங்களும் உண்டு. நிறையப் பொடிசுகளாய் இருக்கும் வீட்டில் , வெறும் மத்தாப்பும், புஸ்வாணமுமாக வாங்கி வெளிச்சத்தில் மகிழ்வார்கள்.

அந்தத் திருநாளின் முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பே, அவரவர் பட்டாசை சரி பார்த்து வைத்துவிட்டு தூங்கப் போகும் வாண்டுகள். எப்படியும் முழுத்தூக்கம் வராது. எப்போது விடியும், எப்போது விடியும் என்று கனவோடு தூங்கி காலை 4 மணிக்கெல்லாம், அம்மாவின் எழுப்புதலில் எழுந்திருக்கும்போது ஒவ்வொரு வருஷமும் ஆச்சரியம். அம்மா அடுப்பங்கரையில் கிட்டத்தட்ட அன்றைக்குத் தேவையான அத்தனை பலகாரங்களும் தயார் செய்து முடிக்கும் நிலையில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். கூடவே உதவிக்கு அக்காவும். எப்படியும் மசால் வடை, பஜ்ஜி (வெங்காயம், வாழைக்காய், கத்தரிக்காய்), சுழியன்(ஒரு வகை இனிப்பு), அப்புறம் வழக்கமாய் செய்யப்படும், இட்லி, சாம்பார், சட்னி என பட்டியல் நீளும்.

பூஜை மாடத்துக்கு முன்பு, எல்லோர் புதுத் துணிகளும், பட்டாசுகளும், சமைத்த உணவுப் பொருள்களும், ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணையும், இன்னொன்றில் கரைத்த சீயக்காயும் படைக்கத் தயாராக இருக்கும். அப்பாதான் எப்போதும் நெய்வேத்யம் செய்து பிறகு, ஒவ்வொருத்தர் தலையிலேயும் எண்ணை வைத்து விடுவார். வெளியில் அதற்குள் சில தொலைதூர வீடுகளிலிருந்து பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டு நம்மை உசுப்பி விடும். அவரவரும் தலையில் வைத்த எண்ணையோடு குளிக்க கொல்லைப் பக்கம் ஓடுவோம். எல்லாம் காக்கைக் குளியல்தான்.

குளித்து முடித்த கையோடு உள்ளே வந்து போய் அப்பாவிடம்  நிற்க வேண்டும். அவரவர் புதுத் துணியை எடுத்து, தலைப்பில் மஞ்சள் குங்குமம் வைத்து அப்பா கையிலிருந்து பெற்று அவசர அவசரமாய் உடுத்தி வேக வேகமாய் ஒன்றிரண்டு பட்டாசுகளை எடுத்து தெருவுக்குப் போய் கொளுத்திப் போட்டு அந்த கும்மிருட்டில் மத்தாப்புகளின் வெளிச்சத்தில் தெரியும் எதிர் வீட்டு, அடுத்த வீட்டு வாண்டுகளின் சந்தோஷ முகங்களைப் பார்க்கும் போது கிடைக்கும் உற்சாகம்.. அதற்கு வானமே எல்லை..

“சாப்பிட்டுட்டுப் போய் பட்டாசு கொளுத்தப்படாதா?”” அம்மாவின் தொடர் கூக்குரல் கேட்டு எல்லோரும் உள்ளே வந்து ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டு..எப்பேர்ப்பட்ட நாட்கள் அவை..

அந்த  நாட்கள் மீட்க முடியாத, அளப்பரிய சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்று உணரப்படாத நாட்கள். எதையுமே இழந்த பிறகுதானே அருமையை உணர்கிறோம்..

புகைப்படலம் கலந்த, பட்டாசு வாசனை செறிந்த அந்த புலர்காலைப் பொழுதுகள்தான் எவ்வளவு மகிழ்ச்சியை எங்களுக்குத் தந்தன! வெளிச்சம் வந்தவுடன், அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு சென்று புத்தாடையைப் பற்றி பறைசாற்றிவிட்டு, அவர்களின் புத்தாடைகளை தர நிர்ணயம் செய்து விட்டு, வீட்டுக்கு எதிரேயும் தெருவில் கிடக்கும் பட்டாசுக் குப்பைகளை கணக்கெடுத்துவிட்டு..அவ்வப்போது ஒன்றிரண்டு பட்டாசு வகையறாக்களை கொளுத்திப் போட்டு..

மிகவும் எதிர்பார்த்து வாங்கிய ஒரு சில பட்டாசுகள், ”புஸ்” என்ற பாம்பு சீறுவதைப் போல் ஆரம்பித்து, லேசாக புகை விட்டு, எப்போது வேண்டுமானாலும் பெருஞ்சத்தத்துடன் வெடிக்கலாம் என்ற பயத்தை ஏற்படுத்திவிட்டு, அப்புறம் அமைதியாய் செத்துப் போகும். ஒரு ரூபாய்க்கு ஒரு பெரிய பாக்கெட் என்று வாங்கப்பட்ட உதிரி வெடிகளில் ஒரு சில வெடிகள், பயங்கர சத்தத்துடன் வெடித்து நம்மை ஆச்சரியமும், அதிர்ச்சியும் கொள்ள வைக்கும்.

நடுத்தெருவில் மணலைக் குவித்து, காலி பாட்டிலை வைத்து, உள்ளே ராக்கெட்டின் அடிப்பகுதி குச்சியை நன்கு நிமிர்ந்த நிலையில் வைத்து செருகி, திரியைப் பற்றவைத்தவுடன் அது பற்றிக்கொண்டு கிளம்பி, பக்கத்து வீட்டுக் கொல்லையை குறி பார்த்து செல்லும்போது, நமக்குள் பரவும் கிலி இருக்கிறதே.. அடடா.. இப்போது கூட அதை உணர முடிகிறது நினைத்துப் பார்த்தால்..

காலை ஒன்பது மணி வாக்கில் கிட்டத்தட்ட அன்று கொளுத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பட்டாசுகளும் தீர்ந்த நிலையில், வெடிக்காமல் வீணாய்ப் போன வெடிகள், தரைச்சக்கரங்கள் போன்றவற்றை தெருவிலிருந்து பொறுக்கி எடுத்து வந்து, அவற்றைப் பிரித்து, வெடி மருந்துப்பொடியை தனியாய் சேகரித்து அவற்றைக் கொண்டு புதிய லோக்கல் அணுகுண்டு தயாரித்து அவற்றையும் வெடித்து முடித்த பின்னர், அவரவர் வீட்டுத் திண்ணையில் படுத்து பகலில் தூங்கிய தீபாவளிகள் என என் நினைவு அந்த நாட்களை நோக்கிப் போகிறது.

 

 

S.V.R.Kalaiselvan

ளமைக் கால தீபாவளி நினைவுகளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போதே, இடையில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.  நானும் என் உற்ற நண்பர் ஒருவரும் ஒரு பகல் வேளையில் சென்னை, மந்தைவெளியில் உள்ள ஒரு கடைக்கு சென்றிருந்தோம். அந்த மளிகைக்கடையின் உரிமையாளர், என் உடன் வந்திருந்த நண்பருக்கு நண்பர். ஏதோ ஒரு வேலையாய் அங்கு சென்ற என் நண்பர், அந்த நேரத்தில் கடை உரிமையாளர் இல்லாததால், அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த உரையாடல்…

“அண்ணாச்சி எங்கப்பா”

“பாரிஸ் வரைக்கும் போயிருக்கார். உக்காருங்க அண்ணே, ரொம்ப நாளாக் காணோம் இந்தப் பக்கம்” இது நண்பருக்கு நன்கு அறிமுகமான கடை ஊழியர்.

“எங்கப்பா, ஆஃபீஸ், வீடுன்னு பொழுது சரியாருக்கு, இந்தப் பக்கம் ஒரு வேலையாய் வந்தேன். அப்படியே அண்ணாச்சியப் பாக்கலாமேன்னு வந்தேன். ஆமாம், நீ, ஒங்குடும்பம்லாம் நல்லா இருக்கீங்களா?”

“இருக்கோம்ணே, புள்ளங்களப் படிக்க வக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுதுண்ணே”

“என்னப்பா சலிச்சுக்கற?”

“ஆமாண்ணே, ரெண்டு பசங்களையும் இந்த சம்பளத்த வச்சு கான்வென்ட்ல படிக்க வைக்கிறேன். ரெண்டு பேரும் நல்லா படிக்கறானுவ. இருந்தாலும் காசு செலவு பண்ண வேண்டி இருக்கே. ஊரைச்சுத்தி கடன்தான். ஒங்களுக்குத் தெரியாதா? இந்த அழகுல நாளைக்குத் தீவாளி வேற. இந்த வருஷம் பசங்களுக்கு புது உடுப்பு கூட எடுக்க முடியல”

“அண்ணாச்சிகிட்ட எதுனா அட்வான்ஸ் கேட்டு பசங்களுக்கு ட்ரெஸ் எடுக்கப் படாதாப்பா?”

“இல்லைணே, கேக்கக் கூச்சமா இருக்கு, ஏற்கனவே நெறைய அட்வான்ஸ் வாங்கிட்டேன். மேல மேல அட்வான்ஸ் கேட்டா அவருக்கும் நம்ம மேல எரிச்சல் தாண்ண மிஞ்சும்”

“சரி, நான் கெளம்புறேன். அண்ணாச்சி வந்தா சொல்லுப்பா, நான் வந்து போனேன்னு. இந்தா, இதை வச்சிக்கோ” பர்சைத் திறந்து கொஞ்சம் பணம் எடுத்து நண்பர் அந்தப் பணியாளரிடம் கொடுத்தார்.

“எதுக்குண்ணே, பரவாயில்ல, விடுங்க” என்று வாங்கத் தயங்கியவரை தோளில் தட்டிக் கொடுத்து அவரின் பையில் பணத்தைத் திணித்து விட்டு புறப்பட்டார் நண்பர்.

ஒன்றும் பேசாமல், நாங்கள் இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்தோம். இருக்கைக்கு வந்ததும் நான் கேட்டேன் “எவ்வளவு பணம் கொடுத்தீங்க அந்த ஆளுக்கு?”

“ஆயிரம் ரூபாய்”

“அந்த ஆள் சொன்னதெல்லாம் உண்மைனு நம்பி ஆயிரம் ரூபாய் கொடுக்கறீங்களே. பயித்தியக்காரத்தனமாத் தெரியலே ஒங்களுக்கே?”

“அப்படி இல்லீங்க. நானோ கிறிஸ்டியன். எனக்கு இந்தத் தீபாவளி புதுத்துணி, கொண்டாட்டம் இதப் பத்தி ஒன்னும் தெரியாது. ஆனா, நீங்க என் கிட்ட ஒங்க இளமைக் காலத்து தீபாவளியைப் பத்தி விலாவாரியா சொன்னதுக்கப்புறம் என்னாலயும் அந்த சந்தோஷத்தை உணர முடியுது, இல்லையா? அவன் சொன்னது உண்மையோ, பொய்யோ, எனக்குத் தெரியல. ஒரு வேளை, உண்மையா இருந்து, அவன் வீட்டு கொழந்தைங்களுக்கு, துணியும், பட்டாசும் இல்லாத ஒரு தீபாவளியா நாளைக்கு ஆயிடக் கூடாது இல்லையா? நான் தீபாவளி கொண்டாடாத ஆள்தான். இருந்தாலும், அவனுக்கு ஒன்னும் செய்யாம இருந்துட்டு,   நாளைக்குக் காலைல எழுந்திருக்கும் போது, ஊரெல்லாம் வெடிச்சத்தம் என் காதுல விழுமில்லையா?

அப்ப, என் மனசு வருத்தப் படுமே, அய்யோ, அந்த வீட்டுல ரெண்டு கொழந்தங்க சோகமா இருக்குமே, இந்தக் கொண்டாட்டத்தில சேர முடியாமன்னு. இருக்குமா, இருக்காதா?” என்று என்னை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி நின்றார் நண்பர்.

“இருக்குந்தான்” என்றேன் பொதுவாக.

“அவன் சொன்னது பொய்யாத்தான் இருந்தா என்ன? இந்த ஆயிரம் ரூபாயிலயா நான் அழிஞ்சுடப் போறேன்?, விடுங்க” என்று முத்தாய்ப்பு வைத்தார்.

அதற்கப்புறம் பல முறை அவருடன் அந்தக் கடைக்கு சென்றிருக்கிறேன். எங்களைக் கண்டவுடன் அந்த ஊழியர், உள்ளே வேலை இருப்பது போல் சென்று விடுவார். தவிர்க்க முடியாமல் கண்ணில் பட்டால் “ என்ன அண்ணாச்சி, சவுக்கியமா” என்று கேட்டுவிட்டு, பதிலுக்குக்கூட காத்திராமல் கண்ணும் கருத்துமாக வேலையைக் கவனிப்பார். அந்தப் பணம் திரும்பி வரவேயில்லை. நண்பரும் அதைப் பற்றி கவலைப் படவில்லை.

ஒரு வகையில், இதுவும் ஒரு தீபாவளி அனுபவம் தானே?

 

ரம்பிக்கும் போது சில வருடங்களாக தீபாவளி என்றாலே சற்றே சோகமான ஒரு உணர்வு தோன்றுகிறது என்று சொல்லியிருந்தேனே? ஏன் தெரியுமா?

என்னுடைய கிறிஸ்துவ நண்பர் என்று ஒருவரைப் பற்றி சொல்லியிருந்தேனே? அவரது பெயர் கலைச்செல்வன். என்னை விட சில வருடங்கள் வயதில் மூத்தவர். கடந்த 2011ம் ஆண்டு, சனவரி மாதம் மத்தியில் ஒரு நாள் காலை 9 மணிக்கு அலுவலகம் வந்தவர், ஒரு மணி நேரத்திலேயே மாரடைப்பால் காலமாகி விட, 11 மணிக்கெல்லாம் பூத உடலாகி வீட்டுக்குக் கொண்டு போனோம்.

இப்போதெல்லாம், தீபாவளியென்றால், முதலில் அவரது நினைப்புதான் வருகிறது. வருத்தம் வராமல் என்ன செய்யும்? இருந்தாலும், “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலாரைப் போன்ற அவரது இளகிய மனமும், மதம் கடந்து மனிதனை நேசித்த அவரது பண்பும் என்னுள் எப்போதும் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

சந்திப்போம், பிறிதொரு வேளையில், வேறொரு தலைப்பில்.

புகைப்படங்களுக்கு நன்றி: 

http://dino-latchmi.tripod.com/adm/interstitial/remote.jpg

http://www.kamalascorner.com/wp-content/uploads/2011/10/Thenkuzhal-230×150.jpg

http://www.thehindu.com/multimedia/dynamic/00281/05MP_MAMPTB_AIDS_281487f.jpg

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தீபாவளி நினைவுகள்

 1. உங்கள் நண்பரின் பரிவும் பிரிவும் மனதை நெகிழ வைத்தன. பகிர்தலுக்கு நன்றி.

 2. great ………. The writter Elango born again… I recall enjoying your short and very soft story in in the tough and iron cabin @BHEL Ranipet in early 80’s.
  Again you triggered memories of my childhood. All the best Elango …… have a good start again…

  thangaraj

 3. நன்றி நண்பனே, உன் வாழ்த்துக்கு!

  */great ………. The writter Elango born again… I recall enjoying your short and very soft story in in the tough and iron cabin @BHEL Ranipet in early 80′s.
  Again you triggered memories of my childhood. All the best Elango …… have a good start again…/*

 4. கலைச் செல்வன் ஒரு கலகல செல்வன். கல்லூரி நாட்களில் அவரைச் சுற்றி இருப்பவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். வகுப்புக்குக் கட் அடித்து விட்டு காந்தி மண்டபம் போவதை அவர் ‘ஜி.எம். லேப்’ என்று குறிப்பிடுவார். முப்பது வருடம் கழித்து கல்லூரி நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர அவர்தான் உதவியாக இருந்தார். எப்படித் தெரியுமா? எஸ்.வி.ஆர். என்று மூன்று இனிஷியல் இருப்பவர்கள் அபூர்வம். ஆன் லைன் டைரக்டரியில் அந்த யுனீக் பெயருக்கு தொலைபேசி எண் கண்டு பிடிப்பது எனக்கு சுலபமாக இருந்தது. என் மகனின் திருமணத்தின் போது அவரை நான் அழைக்க, எல்லா நண்பர்களுக்கும் அவரே தகவல் கொடுத்து விட்டார்.

  http://kgjawarlal.wordpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *