முகில் தினகரன்

 

‘உருவாய்….அருவாய்….உளதாய்….இலதாய்….மருவாய்….மலராய்….மணியாய்….ஒளியாய்.’ அருணகிரிநாதர் வரிகளை ராகத்தோடு முணுமுணுத்தபடி வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து வாசலில் நின்ற லோகநாதன், கேட்டைத்திறந்து கொண்டு தயக்கமாய் உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணையும், அவளுக்குப் பின்னால் மிரண்ட விழிகளுடன் பயந்து பயந்து வந்து கொண்டிருந்த அந்தச் சிறுமியையும் அசூசையுடன் நோக்கினார்.  அவர் பார்வையில் தெரிந்த வெறுப்பைப் புரிந்து கொண்ட அப்பெண், சிறுமியைச் சட்டெனத் தூக்கிக் கொண்டு  பக்க வாட்டில் நடந்து வீட்டின் பின்புறத்தை நோக்கி அவசர அவசரமாய் ஓடினாள்.

அவளின் அச்செயலால் கோபமுற்ற லோகநாதன் வீட்டிற்குள் திரும்பி ‘பார்வதி..ஏய் பார்வதி’ கத்தினார்.  கைகளை முந்தானையில் துடைத்தவாறே எதிரில் வந்த மனைவியின் மேல் எரிந்து விழுந்தார்  ‘உனக்கு எத்தனை தடவ சொல்றது..அந்த முஸ்லீம் பொம்பளையை மொதல்ல வேலையை விட்டுத் தூக்குன்னு..மறுபடியும் வெடிகுண்டு..வெட்டுக்குத்துன்னு ஏதாவது பெரிசா வந்தாத்தான் நீ புரிஞ்சுப்பியா?’

லோகநாதனின் மனத்திரையில் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே கோவையில் நடந்தேறிய அந்த அமங்கல நாடகத்தின் அவல அத்தியாயங்கள் லேசாய்த் தெரிய தலையை வேகமாய் உதறி அந்த அகோர நினைவுகளை அழித்து விட்டு கண்களை இறுக மூடி பெருமூச்சு விட்டார்.

‘அய்யய்யோ..கொஞ்சம் மெதுவாப் பேசுங்க…அவ பினனாடிதான் நிக்கறா’

‘தெரியும்..தெரிஞ்சுதான் பேசறேன்’ என்றவர் பார்வதி ஏதோ சொல்ல வாயெடுக்க அவளைப் பேச விடாமல் கையமர்த்தி ‘உனக்கு வேற வேலைக்காரியே கிடைக்கலியா?..இல்ல இவளை விட மனசில்லையா?’

‘ஏங்க…எப்பவோ…பதினாலு வருஷத்துக்கு முன்னாடி இங்க நடந்த அந்த இந்து முஸ்லீம் கலவரத்த இன்னும் மனசுல வெச்சுக்கிட்டு…’அந்த மதத்துக்காரங்களோட பேசக் கூடாது…பழக கூடாது..வேலைக்கு வெச்சுக்கக் கூடாது’ன்னு சொல்றது என்னங்க நியாயம்?…அதுவும் பொதுப் பணித்துறைல வேலை பார்க்கற அரசு அதிகாரி நீங்க…வெளி வட்டாரத்துல நல்ல செல்வாக்குள்ள மனுஷன்..நீங்களெ இப்படிப் பேசறது….கொஞ்சமும்..சரியில்லைங்க!’

‘ஏய்..உனக்குத் தெரியாது…அந்தப் பிரச்சினை தீராத பிரச்சினை…நீறு பூத்த நெருப்பா இருக்கும.;.திடீர்ன்னு எப்ப வேணாலும் எரியும்’

‘சேச்சே…தப்புங்க…அப்ப..அந்தக் கால கட்டத்துல ஒண்ணுமில்லாத பிரச்சினையப் பெரிசாக்கி..பெருங்கலவரமாக்கிக் குளிர் காய்ஞ்ச ஆளுங்கெல்லாம் அடங்கிப் போய்ட்டாங்க..இப்பத்த இளசுகளும்..சின்னஞ்சிறுசுகளும்..அதையெல்லாம் சுத்தமா மறந்திட்டு..பழைய மாதிரி ஒண்ணாயிட்டாங்க…உங்களை மாதிரி ஆளுங்கதான் இன்னும் அதையே நெனைச்சுக்கிட்டு…..’

‘ப்ச்..நான் சொல்லி எதை நீ கேட்டிருக்க…இதை மட்டும் கேக்கறதுக்கு…’ பற்களை ‘நற..நற’வென்று கடித்தார் லோகநாதன்.

‘அது மட்டுமில்லைங்க..நாம வீடு கட்டி வந்திருக்கறது புற நகர் ஏரியாவுல..இங்க இப்பத்தான் அங்கொண்ணும் இங்கொண்ணுமா ஒண்ணு ரெண்டு வீடுக முளைக்க ஆரம்பிச்சிருக்கு..உண்மையைச் சொன்னா இந்த ஏரியாவுக்கு வீட்டு வேலைக்கு வர யாருமே இஷ்டப்படறதில்லைங்க…ஏதோ இந்த சாயிராபானுதான் போனாப் போகுதுன்னு வந்துட்டிருக்கா..எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நல்லவளாத்தான் இருக்கா…அதையும் இதையும் பேசி அவளையும் வெரட்டி விட்டுடாதீங்க’ சொல்லிவிட்டு கையெடுத்துக் கும்பிடுவது போல பார்வதி அபிநயிக்க,

‘ஹூம்..என்னமோ பண்ணிட்டுப் போ’ என்றபடி அங்கிருந்து நகர்ந்து வீட்டின் பின்புறம் சென்ற லோகநாதன் அங்கே தன் ஆறு வயது மகள் காதம்பரி சாயிராபானுவின் மகள் ஷெரீனுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மேலும் ஆத்திரமடைந்து  நேரடித் தாக்குதலில் இறங்கினார்.

‘ஏம்மா..நீதானே வீட்டு வேலைக்கு வர்றே…அப்புறம் கூட எதுக்கு ஒரு இலவச இணைப்பு?…இங்கிருந்து எதையாச்சும் திருடிக் குடுத்தனுப்பறதுக்கா?’ துளியும் மனிதாபிமானமில்லாமல் அந்த சாய்ராபானுவிடம் ‘வெடுக்’கென்று கேட்டார் லோகநாதன்.

தன் கௌரவத்தின் மேல் எறியப்பட்ட அந்த வார்த்தைச் சேற்றுக்காய் கூனிக் குறுகிய சாயிராபானு சட்டெனத் திரும்பி தன் மகளை நோக்கி ‘ஷெரீன்..நீ வீட்டுக்குப் போம்மா..போய் வாப்பா கூட இரு..அம்மா சீக்கிரத்துல வந்துடறேன்’ என்றாள்.

‘டாடி..டாடி.. ஷெரீன் குட் கேர்ள் டாடி…என்னோட பெஸ்ட் பிரண்ட் டாடி…அவளைப் போகச் சொல்லாதீங்க டாடி’ லோகநாதனின் மகள் காதம்பரி ஓடி வந்து தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்டு கெஞ்ச  விருட்டென அதைத் தூக்கி அதன் காதுகளில் எதையோ சொல்லிக் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றார்.  பிஞ்சு மனசில் நஞ்சு விதைக்கும் முயற்சி.

கணணீர் ததும்பும் விழிகளுடன் சாயிராபானுவின் மகள் ஷெரீன் தன் தாயைத் திரும்பித்  திரும்பிப் பார்த்துக் கொண்டே கேட்டை நோக்கி நடக்க,

‘பாத்துப் போம்மா..’

அது இஷ்டமேயில்லாமல் தலையை ஆட்டியது. முகத்தில் அழுகை வெடிக்கக் காத்திருந்தது.

மாலை 6.00.

வேலைகளை முடித்து விட்டு ‘அப்ப நான் கௌம்பறேன்மா’ பார்வதியிடம் சாயிராபானு சொல்லிக் கொண்டிருந்த போது அவசர அவசரமாய் வந்த லோகநாதன் பதட்டமாய்க் கேட்டார்.

‘பார்வதி…காதம்பரியைப் பாத்தியா?,’

‘ம்..மொட்டை மாடியில் நின்னுட்டிருந்தாளே’

‘ப்ச..நான் மொட்டை மாடியிலிருந்துதான் வர்றேன்..அங்க அவ இல்லை’

‘அட..துணிகளைக் கொடியிலிருந்து எடுக்கப் போன போது நான் பாரத்தேனே.. ‘இங்க ஏண்டி நின்னுட்டிருக்க..கீழ போடி’ன்னு விரட்டி விட்டேன்..அப்புறம் வெலை மும்முரத்துல சரியா கவனிக்கலைங்க’

அவளை முறைத்துப பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்து மகளைத் தேடும் பணியில் முனைப்புடன் ஈடுபட்ட லோகநாதனை ஆரம்பத்தில் சிறிதும் கலக்கமின்றிப் பாரத்துக் கொண்டிருந்த பார்வதிக்கு நேரம் ஆக..ஆக அடிவயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது.

மாலை  7.00.

‘ஏங்க..மணி ஏழாயிடுச்சுங்க…வெளியில் இருட்டிப்போச்சுங்க…புள்ளைய வேற காணோம்…எனக்கு பயம்மாயிருக்குங்க’ அவள் குரலில் நடுக்கம்.

அவளுக்கு பதில் சொல்லும் மனநிலையில் இல்லாத லோகநாதன் முப்பதாவது தடவையாக வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு கைகளைப் பிசைந்தபடி வேக வேகமாக கேட்டுக்கு வெளியெ சென்று தெருவில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தார். தனது முப்பத்திரெண்டு வருட வாழ்க்கையில் இது வரை எந்தவொரு விஷயத்திற்கும் அச்சப்படாத அவருடைய இரும்பு மனம் லேசாய் ஆடத் துவங்கியது.  காரணமேயில்லாமல் அந்த வேலைக்காரப் பெண் மீதும் அவள் குழந்தையின் மீதும் கோபம் கோபமாய் வந்தது.

‘எங்க போயிருப்பா? யாராவது வந்து தூக்கிட்டுப் போயிருப்பாங்களோ?..கழுத்துல..காதுல..நகைக கூட ஏதுமில்லையே…’

‘ஒரு வேளை…தண்ணித் தொட்டில கீது…’ அந்த நினைப்பே ஒரு அதிர்வை உண்டாக்க ஓடினார்.  கையிலிருந்த டார்ச் பீச்சிய ஒளி தொட்டிக்குள் ஊடுருவிச் சென்று அவர் பயந்தது போல அங்கு ஏதுமில்லை என்று பதில் சொல்ல ‘அப்பாடா’ பெரு மூச்சு விட்டார்.

இரவு  8.30.

தெருவில் யாரோ நாலைந்து பேர் ‘கச..கச’வென்று எதையோ பேசிக் கொண்டு போக வேகமாய் வந்து விசாரித்தார் லோகநாதன்.

‘அதையேன் கேக்கறீங்க?..யாரோ ஒரு குழந்தை போர்வெல் குழாய்க்குப் போட்ட துளைல விழுந்து உள்ளார சிக்கிடுச்சு…அங்க ஒரே கூட்டம்’

‘அய்யோ’காலடியில் பூமி நழுவியது.

‘உள்ளாரயிருந்து குழந்தை அழுவற சத்தம் மட்டும் கேட்குது…ஹூம்…எத்தினி ஆழத்துல சிக்கியிருக்கோ..என்ன கருமமோ… அட…போர்வெல் போடுற பன்னாடைகளுக்கு தண்ணி வரலைன்னா அந்தத் துளையை  மூடிட்டுப் போகணும்னு கூடத் தோணாதா?…இவனுகளை எல்லாம் நிக்க வெச்சு சுடணும்ங்க’

வீட்டிறகுள் பாய்ந்தோடி வந்த லோகநாதன் பார்வதியிடம் அதைச் சொல்ல  பெருங்குரலில் கத்தியபடி மயங்கிச் சாய்ந்தாள் அவள்.  பதட்டமும் பரபரப்புமாய் அவளைத் தண்ணீர் தெளித்து எழுப்பி ஆசுவாசப்படுத்தி மெல்ல சோபாவில் படுக்க வைத்து விட்டு இது போன்ற சமயங்களில் சிறிதும் கலங்காது தைரியமாய்..அறிவுப்பூர்வமாய் செயல்படும் தன் நண்பன் முகிலனுக்குப் போன் செயதார் லோகநாதன்.

‘பயப்படாதீங்க சார்..பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்’

இரவு 9.00.

மின்னல் வேகத்தில் வந்திறங்கிய முகிலன் ‘சார்..வர்ற வழியிலேயெ நான் ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்த்துட்டுத்தான் வர்றேன்…அந்த இடம் முழுக்க ஒரே இருட்டு மொதல்ல வெளிச்சத்துக்கு ஏற்பாடு பண்ணணும்’  போனை எடுத்து யாருக்கோ டயல் செய்து எதையோ பேசி விட்டு  ‘பத்து நிமிஷத்துல ஜென்ரேட்டர் வந்துடும்…ம்ம்ம்…அடுத்தது…ஃபயர் சர்வீஸ்!’ தனக்;;;;குத் தானே சொல்லிக் கொண்டு மறுபடியும் போனை எடுத்தான் முகிலன்.

லோகநாதனும் பார்வதியும் முகிலனுடன் அந்த இடத்திறகு; வந்து சேரும் முன்பே ஜெனரேட்டர் வந்து ஒளி வெள்ளத்தைப் பரப்பியிருந்தது.

இரவு  9.30.

‘டண்..டண.;.டண.;.டண்’ மணியோசையோடு ஃபயர் சர்வீஸ் வண்டி வந்து நிற்கும் முன்பே அதிலிருந்து குதித்திறங்கிய தீயணைப்பு வீரர்கள் நிமிட நேரம் கூடத் தாமதிக்காமல் சுறுசுறுப்பாய்க் காரியத்தில் இறங்கினர்.  துளையின் அருகில் கூடியிருந்தவர்கள் அந்த வீரர்களுக்கு வழி விட்டு நகர்ந்தனர்.

‘உள்ளாரயிருந்து இன்னும் சத்தம் வருதா?’ கூட்டத்திலிருந்த ஒருவனிடம் மெல்ல விசாரித்தான் முகிலன்.

‘இல்ல சார்… இத்தனை நேரம் குழந்தை அழுவுற சத்தம் கேட்டது..இப்ப அதுவும் நின்னு போச்சு.

‘ஆண்டவா…நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்?.. எங்களுக்கு ஏன் இப்படியொரு சோதனை?’ தன் பெருங்குரல் அழுகையை பார்வதி மீண்டும் துவக்க லோகநாதன் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் படுத்தினார்.

இரவு  10.15.

தீயணைப்பு வீரர்கள் எதையெதையோ அந்தத் துளைக்குள் லாவகமாக நுழைத்து ஆராய்ந்து விட்டு ‘கிட்டத்தட்ட முப்பதடி ஆழத்துல குழந்தை சிக்கியிருக்கு..குழியோட ஆழம் இன்னும் அதிகம்.. ஆனா முப்பதடில எதுவாலோ தடுக்கப்பட்டு குழந்தை அங்கியே நின்னுடுச்சு …மண்ணு வேற லேசாயிருக்கு நாம ஏதாச்சும் செய்யப் போக மண்ணு சரிஞ்சு  மூடிடுமோன்னு பயம்மா வேற இருக்கு’ என்ற போது லோகநாதன் பாதி மயக்கத்திற்குப் போய் விட்டார்.

‘முகில்..என் குழந்தை எனக்கு உயிரோட கிடைக்குமா முகில்?’ அவர் குரல் ‘கர..கர’த்து ஒலித்தது.

‘கவலைப்படாதீங்க சார்..நம்ம பொதுப்பணித்துறை ஆளுங்களை பொக்லைன் எடுத்திட்டு உடனே வரச் சொல்லியிருக்கேன்…ஆர்.டி.ஓ.கிட்டக்கூடப் பேசிட்டேன்..யாரை வேணும்னாலும் கூப்பிட்டுக்கச் சொன்னார்..என்ன உதவி வெணும்னாலும் கேட்கச் சொன்னார்’

இரவு 11.00.

பொக்லைன் எந்திரம் வந்து விட அந்த ஆழ் துளையின் அருகில் முப்பதடி ஆழத்திற்கு பெரிய அகலமான பள்ளம் தோண்டுவதென முடிவ செய்யப்பட்டு இராணுவ கதியில் பணியும் முடுக்கி விடப்பட்டது.

இரவு  12.30.

நாலைந்து அம்பாசிடர் கார்கள் கட்சிக் கொடிகளுடன் வந்து நிற்க முதலில் வந்த காரிலிருந்து தொகுதி எம்.எல்.ஏ. இறங்கி வந்தார்.  தீயணைப்புத்துறை உயர் அதிகாரி பாயந்து சென்று அவருக்கு சல்யூட் அடித்;து விட்டு,

‘ஆச்சு சார்..ஏறக்குறைய இருபதடிக்கும் மேல பள்ளம் தோண்டியாச்சு…எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துல ..குழந்தைய வெளிய கொண்டாந்துடுவோம்’

‘சும்மா வெளிய கொண்டாந்தாப் பத்தாதய்யா..உயிரோட கொண்டாரனும்…அதான் முக்கியம்’ எம்.எல்.ஏ.பொறுப்பாய்ப் பேச,

‘கண்டிப்பா சார்’என்றார் அந்த தீயணைப்புத்துறை அதிகாரி.

அங்கிருந்தோரிடம் குழந்தையின் பெற்றோர் யார் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு லோகநாதனிடம் வந்து சம்பிரதாயத்தனமாய் ஆறுதல் சொல்லி விட்டு காரில் ஏறி வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றார எம்.எல்.ஏ.

அதிகாலை  3.00.

பத்திரிக்கைக்காரர்களும் தனியார் தொலைக்காட்சிகாரர்களும் அங்கு நடப்பவைகளைத் தங்கள் காமிராக்களில் போட்டி போட்டுக் கொண்டு விழுங்கித் தள்ளினர்.

அழுதழுது ஓயந்து போய். அவளையுமறியாமல் உறங்கிப் போன மனைவியை யாரோ கொடுத்த துண்டை தரையில் விரித்து அதில் படுக்க வைத்து விட்டுஇ உறங்கும் அவளைப் பாரத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதார் லோகநாதன்.

அதிகாலை  4.30.

‘குழந்தையை எடுத்தாச்சு….’ பள்ளத்தின் அடிப் பகுதியிலிருந்து குரல் வர தூங்கிக் கொண்டிருந்த பார்வதி துள்ளியெழுந்தாள்.  நொறுங்கிப் போயிருந்த லோகநாதனின் இருதயப் பகுதியில் ரோஜா பூத்தது.

‘ஏலே..கொளந்தய எடுத்தாச்சாம்லே’ யாரோ ஒருவன் மொத்தமாய்த் தகவல் எறிய, கூட்டம் சுறுசுறுப்பானது.

நான்கைந்து தீயணைப்பு வீரர்கள் குழந்தையை பள்ளத்திலிருந்து நிலப் பகுதிக்குத் தூக்கி வந்து கிடத்தி  முதலுதவியில் மும்முரமாய் இறங்க வேடிக்கை பார்க்க கூட்டம் முண்டியடித்தது.

‘விலகுங்கப்பா..விலகுங்கப்பா..கொழந்தயோட அப்பா அம்மா வர்றாங்க விலகுங்கப்பா’ சொல்லியபடியே முகிலன் முன்னே செல்ல லோகநாதனும் பார்வதியும் மக்களை விலக்கிக் கொண்டு கூட்டத்தின் நடுப்பகுதிக்கு வந்தனர்.

‘உங்க குழந்தைக்கு ஆயுசு கெட்டிங்க’ சொல்லியபடியே தீயணைப்பு வீரர்கள் நகர்ந்து வழி விட,

குனிந்து பார்த்த லோகநாதனும் பார்வதியும் ஒரே குரலில் அலறினார்கள்.  ‘அய்யய்யோ…இது எங்க குழந்தையில்லை’  மொத்தக் கூட்டமும் ஆடிப் போனது.

‘என்ன சார்…என்ன சொல்லறீங்க…இது உங்க குழந்தையில்லையா?..அப்படின்னா இது யாரோட குழந்தை?’ முகிலன் குழப்பத்துடன் கேட்க,

‘இது..எங்க…வீட்டுல..வேலை பாக்கற…சாயிராபானுவோட மகள்…’

‘சரி..யாராயிருந்தா என்ன..மொதல்ல குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் குடுக்கணும்..அதுதான் முக்கியம்’ என்ற முகிலன் அங்கிருந்த சில நல்ல மனிதர்களின் உதவியோடு அந்தக் குழந்தையை பக்கத்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தான்.

‘ஏங்க…அப்படின்னா நம்ம காதம்பரி?’ பாதி அழுகையாய் பார்வதி கேட்க,  பதில் சொல்லத் தெரியாமல் அவர் முகிலனை நோக்க,  யோசனையுடன் தாடையைச் சொறிந்த முகிலன் ‘வாங்க எதுக்கும் வீட்டிலேயே போய் நல்லாத் தேடிப் பார்க்கலாம்’

லோகநாதனையும் பார்வதியையும் ஹால் சோபாவில் அமைதியாய் அமர வைத்து விட்டு நிதானமாய் வீட்டை சல்லடை போட்டான் முகிலன்.  அரை மணி நேரத் தேடலுக்குப் பிறகு  படுக்கையறை கட்டிலுக்கடியில் இரண்டு சிறிய கால்கள் தெரிய ‘திடுக்..திடுக்’ இதயத்துடன் குனிந்து பார்;த்தான்; முகிலன்;.  அடியில்; காதம்;பரி கொட்டு கொட்டென்று விழித்தபடி படுத்திருந்தாள்.  நைச்சியமாய்;ப் பேசி அவளை வெளியெ வர வைத்து, மெல்லக் கேட்டான் முகிலன்.

‘எத்தினி நேரமா இதுக்கடிலே ஒளிஞ்சிட்டிருக்கே பாப்பா?’

‘நேத்திக்கு சாயங்காலத்திலிருந்து’

‘அப்படியா,..அடடே..பரவாயில்லையே.!.அது சரி எதுக்கு இப்படி ஒளிஞ்சிட்டிருக்கே?., யார் கூடவாது கன்னாமூச்சி விளையாடறியா?,’

‘இல்லை’

‘அப்பறம் எதுக்கு,’

‘ஷெரீன் என்னோட பெஸட் ஃபிரெண்ட்…ஆனா எங்கப்பாவுக்கு அவளைக் கண்டாலே பிடிக்காது..நேத்திக்கு எங்கப்பா அவளைத் துரத்தி விட்டார்..அப்ப நானும் எங்கப்பாவுக்குத் தெரியாம அவ கூடவே வெளிய வந்து தூரத்துல போய் விளையாடிட்டிருந்தோம்…அப்ப ஷெரீன் நெலத்துல இருந்த பெரிய ஓட்டைக்குள்ளார விழுந்துட்டா…எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..ஓடி வந்து எங்கப்பாகிட்டச் சொல்லலாம்ன்னு நெனச்சேன்..ஆனா.. அவருக்;கு அவளைப் பிடிக்காது அதனால நிச்சயம் அவளைக் காப்பாத்த மாட்டார்ன்னு எனக்குத் தெரியம்..அதே மாதிரி…ஷெரீனோட அம்மாகிட்டச் சொன்னாலும் அவங்களால எதுவும் செய்ய முடியாது ஏன்னா..அவங்க ஏழை..எங்கப்பா மாதிரி பெரிய பெரிய ஏற்பாடெல்லாம் பண்ணி மகளைக் காப்பாத்தற வசதி அவங்களுக்கு இல்லை…அதனால…அதனால..’

‘அதனால,’

‘ஷெரீன் இடத்துல நான் இருந்தா நிச்சயம் காப்பாத்தப்படுவேன்னு தெரியும்…அதான் நான் வந்து கட்டிலுக்கடில ஒளிஞ்சிட்டு..குழிக்குள்ளார விழுந்திட்டது நான்னு எல்லாரையும் நெனைக்க வெச்சேன், எங்கப்பாவும் அதை நம்பிக்கிட்டு யார் யாரையோ வர வெச்சு..என்னென்னவோ ஏற்பாடெல்லாம் பண்ணி..ஷெரீனைக் காப்பாத்திட்டார். அதுதான் எனக்கு வேணும்’;

முகிலனுக்கு மனசு கனத்து வலித்தது.

‘ஏங்க அங்கிள்..ஷெரீனும் நானும் ஒரே மாதிரிதானே இருக்கோம்..பாருங்க எனக்கும் ரெண்டு கையி அவளுக்கும் ரெண்டு கையி…எனக்கும் ரெண்டு காலு அவளுக்கும் ரெண்டு காலு..அப்புறம் ஏன் இந்தப்பா ‘அவங்கெல்லாம் வேற..நாமெல்லாம் வேற’…ன்னு சொல்லுறார்..எனக்குப் புரியவே மாட்டேங்குது அங்கிள்’

அப்பாவித்தனமாய்க் கேட்ட அந்தக் குழந்தையை இழுத்து நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டு ‘வேண்டாம்மா..அது உனக்கு புரியவே வேண்டாம்மா..உனக்கு மட்டுமல்ல இனி வரும் சந்;ததிகள் யாருக்குமே புரிய வேண்டாம்மா’

காதம்பரியின் பேச்சுக்குரல் கேட்டு வேக வேகமாய் அறைக்குள் நுழைந்த லோகநாதனும் பார்வதியும் மகளைக் கண்டதும் தாவி வந்து கட்டிக் கொள்ள,

‘மிஸ்டர் லோகநாதன்..நீங்க நெறைய கத்துக்க வேண்டியதிருக்கு’

‘என்ன சொல்றீங்க முகிலன்..நான் கத்துக்க வேண்டியிருக்கா?… என்ன கத்துக்கறது.?.யாருகிட்டயிருந்து கத்துக்கறது?..புரியலையே’

‘ம்…உங்க பொண்ணுகிட்டயிருந்து…மனிதாபிமானம்!ன்னா என்ன?ங்கறதை’ சொல்லியபடியே வேகமாக வெளியே சென்ற முகிலனை லோகநாதனும் பார்வதியும் விநோதமாய்ப் பார்த்தனர்.

அதே நேரம்  மருத்துவ மனையில் கண் விழித்த அந்த ஷெரீன் முதல் வார்த்தையாய் ‘காதம்பரி எங்கே,..அவளுக்கு ஒண்ணும் ஆயிடலையே,’ என்று கேட்க,

சொர்க்கத்தில் காந்தி நிமிர்ந்து உட்கார்ந்தார்.

(முற்றும்)     

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *