சர்க்கரை நோய்க்கு ஏற்ற சத்தான சமையல் மற்றும் உணவு வகைகள்-வெஜிடபிள் கூட்டு.
சர்க்கரை நோய்க்கு ஏற்ற சத்தான சமையல் மற்றும் உணவு வகைகள்
சர்க்கரை நோய்.இன்று நம்மில் பலரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நோயாகும். இதனை தடுக்க உடற்பயிற்சிகளோடு, சத்தான உணவும் இன்றியமையாததாகும். தேங்காய் இல்லாமல், அதிக எண்ணெய் இல்லாமல் சமயலை சுவையாக செய்வது என்பது சற்று கடினம்தான்! கவலைப்பட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சமையல் குறிப்புக்களை, அந்தந்த காலங்களில் கிடைக்கும் பச்சைக் காய்கறிகளை வைத்து நீங்கள் செய்து பார்த்தும், சர்க்கரை நோயாளிகளுக்கு செய்து கொடுத்தும் அசத்துங்கள்!
வெஜிடபிள் கூட்டு.
சௌசௌ கூட்டு.
இதற்கு வேண்டிய பொருட்கள் :
சௌசௌ-2
ஒரு சிறிய கரண்டி அளவு பாசிப்பருப்பு.
மல்டி மிக்ஸ் பொடி-தேவையான அளவு.
மல்டி மிக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்
தனியா விதை- 1 கரண்டி
கடலைப்பருப்பு-முக்கால் கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு-முக்கால் கரண்டி
காய்ந்த மிளகாய்-4-6.
. இந்தப் பொடியை ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு வேண்டிய அளவு தயார் செய்து வைத்துக் கொண்டால், காலை வேளை அவசரத்திற்கு எப்போதும் கை கொடுக்கும்.
மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் வெறும் கடாயில் வறுத்து, ஆற வைக்கவும். நன்கு ஆறி பின் மிக்ஸியில் பொடியாக அடித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை பொறியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கூட்டு செய்கையில், மல்டி மிக்ஸ் பொடி வேண்டிய அளவு, ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, சிறிது பச்சை கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிக்க: சிறிது எண்ணெய், கடுகு, மஞ்சள் பொடி-கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்ப்பொன், , பெருங்காயம்-சிறிதளவு, சீரகம்- கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய்- 1,(அவரவர் காரச் சுவைக்கு ஏற்றார் போல்)
செய்முறை:
சௌசௌ காயின் மேல் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காய்கறியையும், பாசிப்பருப்பையும் நன்கு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில், சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள் பொடி, , உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம், காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் போட்டு தாளித்து, வெந்த காய்கறி மற்றும் பாசிப்பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப் பொடியில், ( மல்டி மிக்ஸ் பொடி, பொட்டுக்கடலை, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்தது), சிறிதளவு நீர் சேர்த்து, பேஸ்ட் போல் குழைத்து, அதனை கூட்டில் கலந்து சிறிது கொதித்த பின் இறக்கி வைக்கவும். சௌசௌ, பீன்ஸ், சுரைக்காய் இப்படி எந்தக் காயிலும் கூட்டு செய்து சாப்பிடலாம். சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷாக இருக்கும் இந்த வெஜிடபிள் கூட்டு.