ஜெயஸ்ரீ ஷங்கர்

ஜன்னல்  நுழைந்து
தூதாகத்  தென்றல்
வேப்பமரம் அழைத்த சேதியை
வாசனயாய்ச் சொல்லிப் போக
மூச்சிழுத்து சுவாசித்து மரத்தை
அணைக்கிறேன் மனதோடு..!

குயிலே…நீயும் துரத்து
நமை மறந்த அவளுக்கு
கணினி மீது என்ன மோகம்?
கண்கள் கணினிக்கும்  காது
மட்டும் உனக்கோ? குயிலிடம்
கோள் சொல்ல..

ஆசைக் குயிலும் கூவிக் கூவி
கணினியை மொய்த்த கண்களை
மெல்ல ஜன்னல்வழி கொய்ய..
கண்கள் பட்ட இடம்
யாவும் பச்சையாய் சிரிக்க
மனமெல்லாம் வாசம்..!

மின்வாசத்தை ருசிக்கும்  கணினி
மண்  வாசனை ரசிக்குமா?
நிலை கண்ட வானம்…
ஊர்கோல மேகங்களாய்..
எட்டிப் பார்க்குதே…!

வண்ணமயிலாய் மனமும்
எண்ணத் தோகை விரித்து
மழை வருது…மழை வருது..
ஆடும் போதே..சட சட…
மின்னலும் இடியும் கூடி
கோடையை விரட்டி அடிக்க..!

ஆனந்த மழை பொழிய
பூமி நனைந்து ஈரமண் எழும்ப..!
நிலத்தை உறிஞ்சத் துடிக்கும்
வேகமாய் மன மோகம்…!
கண்கள் மூடி உள்ளிழுக்க
கோடி இன்பம் மேனியெங்கும்..!

உடல் சிலிர்க்கும்  நேரம்
அந்தியும் மயங்கி…மாறி
மாரி கண்டு அருவியாய்
மனமும் …கடலான
இணையத்தில் கவிதையெனக்
கலந்ததுவே…!

படத்துக்கு நன்றி

http://web.ncsu.edu/abstract/science/stop-the-rain-pollution/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மழை வருது…மழை வருது…

  1. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மனிதனின் இயற்கை ரசனையை முற்றிலுமாக மழுங்கடித்து விட்ட ஆதங்கத்தை தங்கள் அற்புதமாக கூறியிருக்கின்றீர்.. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *