அவளின் கேள்விக்கு என்ன பதில்…………
ராஜ்ப்ரியன்
இடித்துவிட்டு புதுசாக கட்டப்பட்டு வரும் அந்த காளி கோயிலின் பின்புறம் பரந்து விரிந்து எனக்கு வயசு ஐம்பது என பறைசாற்றும் வேப்பமரத்தின் கீழ் இருந்த திண்டில் அமர்ந்திருந்தார் முத்தையன். தனக்கு அந்த வேப்பமரத்தை விட வயது அதிகம் என்பதை அவரது உடலே காட்டித் தந்தது. அவர் தான் அந்த ஊர் நாட்டாமை. அவர் அருகே எதிரே என நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் உட்கார்ந்து இருக்க இளவட்டங்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த ஊரில் பெண்கள் பஞ்சாயத்துக்கு வரக்கூடாது என்பதால் வெகு தூரத்துக்கு அப்பால் அங்காங்கு கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர்.
யசோதாவும், மல்லிகாவும் இரண்டு சின்ன பையன்களை அழைத்து என்ன பேசறாங்கன்னு கேட்டு வாங்கடா என அனுப்பிவைத்துவிட்டு அவன்கள் வந்து என்ன சொல்லப்போகிறான்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள். நூற்றுக்கும் அதிகமான ஆண்கள் மத்தியில் புள்ளிமானாய் தனியாக முந்தானியை கசக்கியபடி நின்றிருந்தாள் தேவகி. சற்று தள்ளி அருகே மண் தரையில் உட்கார்ந்திருந்த மாணிக்கம் அவளை முறைத்தபடியே பரிதாபமாக உட்கார்ந்திருந்தான்.
ஏண்டா மாணிக்கம் இப்படி பஞ்சாயத்த கூட்டிட்டு உட்கார்ந்திருந்தா என்னடா அர்த்தம் என்ன பிரச்சனைன்னு சொல்லுடா என முத்தையன் கேட்டதும். எழுந்து நின்று பஞ்சாயத்தார்க்கு மரியாதை தரும் விதமாக தொடை தெரிய கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டவன் நானும் இவளும் விருபப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எல்லா சீர் சினத்தியும் பண்ணாங்க. நானும் இவள நல்லா தான் பாத்துக்கறன். தனிக்குடித்தனம் போகனும்னா அதயும் செய்தன். நான் தான் பத்தாவதுக்கு மேல படிக்கல இவளாவது படிக்கட்டும்னு டீச்சர் டிரைனிங் சேர்த்துவிட்டன். செல்போன் கூட வாங்கி தந்துயிருக்கறன். படிக்கபோறவ படிச்சி முடிச்சதும் குழந்தை பெத்துக்கலாம்ன்னு நான் தான் சொன்னன். அதுக்கும் ஒத்துக்கிட்டா. படிக்க போனவ பஸ்ல போகும்போது நம்ம ஊர்லயிருந்து கம்பெனிக்கு வேலைக்கு போற விநோத்தோட நெருக்கமாகியிருக்கா. ரெண்டு மாசத்துக்கு முந்தி என் வீட்ல ரெண்டு பேரும் ஒன்னாயிருந்தத பாத்தன். அப்பவே அவள அடிச்சி சத்தம் போட்டன். திரும்பவும் அதே தப்ப பண்ணா அவுங்க வீட்டுக்கும் சொல்லி அனுப்பனன். என்னோட மாமனார், மாமியார் வந்து எவ்ளோ சொல்லி பாத்தாங்க அப்படியும் கேட்கற மாதிரி தெரியலைங்க. அதான் பஞ்சாயத்து வச்சியிருக்கன். நீங்க பாத்து எது சொன்னாலும் சரிங்க என்றான் பரிதாபமான குரலில்.
நீ என்னம்மா சொல்ற என தேவகியை பார்த்து முத்தையன் கேட்டதும், “இந்த தெவுடியாக்கிட்ட என்னத்த கேட்கறிங்க” என கத்தியபடி எழுந்து தேவகியை எட்டி உதைத்தான் முருகேசன். தேவகி தூரமாக போய் விழுந்தாள்.
“செருப்பால அடி நாய. பஞ்சாயத்துல வந்து பொட்டச்சிய அடிக்கறத எங்கடா கத்துக்கிட்ட. கூடப்பொறந்தவள அடிக்கறதா இருந்தா உன் வீட்ல வச்சிக்க” என திட்டினார் முத்தையன்.
“மானத்த வாங்கிட்டாளேங்க” என முருகேசன் அழ,
“நடந்தது நடந்து போச்சி அடிச்சா போன மானம் திரும்பி வருமாடா” என கூட்டத்திலிருந்த ஒருவர் சொல்ல. கண்ணீரை துடைத்துக்கொண்டு சத்தம்மே வராமல் அழுதான்.
“அவன் அந்த மாதிரி புகார் சொல்றான் நீ என்னடா சொல்ற” என மற்றொரு பக்கம் கைகட்டிக்கொண்டு நின்றிருந்த விநோத்திடம் முத்தையன் கேட்டபோது பதிலேதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான்.
“அவனுக்கென்ன கரும்பு தின்னகூலியா” என முனியன் சத்தமாக சொன்னார்.
அவரை பார்த்து “கம்முனுயிருய்யா” என்றான் முத்தையன். கீழே விழுந்த தேவகி அவளாகவே எழுந்து நின்றாள். அவளிடம் :ஏம்மா தேவகி நீ என்னம்மா சொல்ற “என கேட்டார் முத்தையன்.
மவுனமாகவே நின்றிருந்தாள்.
“செவப்பா இருக்கறாயில்ல. அந்த திமீர். அதான் எவன் கிடைப்பான்னு அலைஞ்சிருக்கா” என யாரோ கூட்டத்தில் சத்தமாக சொல்ல, “ஏய் சும்மா இருங்கய்யா ஆளாளுக்கு பேசிக்கிட்டு” என சலிப்பான குரலில் சொன்னார் முத்தையன்.
நீ வாய்மூடிக்குனு இருக்கற வரைக்கும் இப்படி யாராவது எதையாவது சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க. வாயை தொறந்து ஏதாவது சொன்னாதான் எங்களுக்கு தெரியும். உன் புருஷன் நீ தப்பு பண்ணன்னு சொல்றான் நீ கம்முனுயிருந்தா நாங்க என்னத்த நினைக்கறது. அவன் சொல்றது உண்மையா?. பொய்யா? ஏதாவது சொல்லும்மா.
அமைதியாக நின்றிருந்த தேவகி “என் வீட்டுக்காரர் மேல எந்த தப்பும்மில்ல. அவர் என்னை நல்லா தான் வச்சியிருக்காரு” என நிறுத்தினாள்.
அவன் நல்லா வச்சியிருக்கான்னு ஒத்துக்கற. அவன் சொல்ற தப்ப நீ செய்தியா?.
“விநோத்த புடிச்சியிருந்தது அதனால அவரோட தப்பு பண்ணிட்டன்” என்றாள் கம்மிய குரலில்.
“என் குடும்ப மானத்தையே வாங்கிட்டா” என முருகேசன் மீண்டும் கோபமாக எழுந்திருக்க.
“டேய் பேசாமயிரு” என முத்தையன் அதட்ட அப்படியே உட்கார்ந்தான்.
“தப்பு பண்ணிட்டன்னு சொல்ல தெரியுதுயில்ல. அப்பறம் எதுக்கு அவன் கூட சவகாசம் வேண்டிகிடக்கு. உன் வீட்டுக்காரன் டெய்லி குடிச்சிட்டு வந்து அடிக்கறான். என்னை ராத்திரியில சரியா கவனிக்கறதில்ல. அதனால வேற ஒருத்தனை பாத்தன்னு சொல்லியிருந்தா பரவாயில்ல. அப்படியும் கிடையாது. அப்பறம் எதுக்கு இந்த மானங்கெட்ட வேலை?. ஏதோ தப்பு பண்ணிட்ட. உன் வீட்டுக்காரன், ஆத்தா அப்பன் வந்து சொன்னாங்கயில்ல, விட்டுட வேண்டியதானே? அப்பறம் எதுக்கு திரும்ப அந்த கேவலத்த செய்யற” என திட்டியவர், மாணிக்கம் நின்றிருந்த பக்கம் திரும்பி “தப்பு பண்ணிட்டன்னு சொல்லுது. நீ என்னடா சொல்ற?”.
அவ இனிமே ஒழுங்கா இருக்கறன்னு சொன்னா அவளோட வாழறங்க.
“வேலை பாக்க போடான்னா இந்த வேலையத்தான் பாக்க போறியா நீ. உன்னயெல்லாம் தெரு முக்குல நிக்கவச்சி செருப்பால அடிக்கணும்டா. அப்பத்தான் அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப்படமாட்டிங்க” என ஆவேசம் காட்டினார்.
“தெரியாம தப்பு பண்ணிட்டன் மன்னிச்சிடுங்க” என சாஸ்டாங்கமாக பஞ்;சாயத்தார் காலில் விழுந்தான் விநோத்.
“ஏய் எந்திரிடா எதுக்கு எங்க கால்ல விழற. ஆத்தா முன்னாடிப்போய் விழு. மன்னிக்கறாளான்னு பாப்போம் ” என்றவர் “டேய் மாணிக்கம், உன் பொண்டாட்டிய கூப்டும் போய் கொஞ்ச காலத்துக்கு பம்புசெட்ல குடும்பம் நடத்து. ஒரு ஆறு மாசம் பொறுத்து ஊர் வாய் மூடனதுக்கப்பறம் ஊருக்குள்ள வா”, என முத்தையன் சொல்லும்போதே,
“நான் பம்பு செட்ல எல்லாம் போய் குடும்பம் நடத்த விரும்பலைங்க” என மெல்லிய குரலில் தேவகி சொன்னதும்,
“வேற எங்க போறியாம்” என குரலை உயர்த்தினார் முத்தையன்.
நான் ஊருக்குள்ளயே தான் இருக்க விரும்பறன்.
“ஊர்ல வேற எவனை பாக்க போற” என கூட்டத்தில் இருந்து குரல் வர, “நாயே எவன்டா அது திரும்ப திரும்ப பேசிக்கிட்டு” என கத்திய முத்தையன் கோபமாக தேவகி பக்கம் திரும்பி “உன் முடிவு தான் என்ன ?”.
நான் ஊருக்குள்ள இருக்கத்தான் விரும்பறன்.
ஏன் அவன்கூட ஜோடி போட்டு சுத்தவா?
“அதலயென்ன என்ன தப்பு. ஆம்பளைங்க. பொண்டாட்டிய தவிர, ஊர்ல சின்னவீடு வச்சிக்கிட்டு அவ வீட்ல யாரும் இல்லாதப்ப அவ வீட்டுக்கு அப்பப்ப போய் வரலாம். டவுன்க்கு கூப்ட்டும் போய் சினிமா பாக்கலாம். இரண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டு ஒரே வீட்ல குடும்பம் நடத்தலாம். அதையே பொம்பள பண்ணா தப்பா?. இங்க உட்கார்ந்துயிருக்கறவங்கள்ல எத்தனை பேர் சின்னவீடு வச்சியிருக்கிங்கன்னு எனக்கும் தெரியும். நீங்க பண்றத்து தப்புயில்ல. இதே ஒரு பொம்பள பண்ணிட்டா தப்பா” என கேட்க கேட்க முத்தையன் முகம் மாறியது. யாரும் பதில் பேசாமல் அமைதியாக இருக்க “ஆம்பளைங்க பண்றது தப்பில்லைன்னா, நான் பண்றதும் தப்பில்லை. நீங்க பண்றது தப்புன்னா நான் பண்றதும் தப்புன்னு ஏத்துக்கறன்” என பேசப்பேச அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
“ஏய்……. உனக்கென்ன மூளை கீளை கெட்டுப்போச்சா” என்ற முத்தையன் “இங்க பாரு, ஆம்பளை கல்யாணம் பண்ணாம ஒருத்திக்கு புள்ளை தந்தான்னா கூட அவனை அப்பான்னு அழைக்கும். ஆனா இரண்டு ஆம்பளைக்கூட வாழ்ந்து புள்ள பெத்தன்னா யாரை அது அப்பான்னு கூப்டும்? அப்பன்னு யாரை கைகாட்டுவ? பள்ளிக்கூடத்தல யார் பேரை தலைப்பெழுத்தா போடுவ? நீ பேசறது வீம்புக்கு நல்லாயிருக்கும் வாழ்கைக்கு நல்லாயிருக்காது புரிஞ்சிக்க.”
“சின்னவீடு வச்சியிருக்கற எத்தனை பேர் உங்களுக்கு பிறந்த புள்ளைய என் புள்ளைன்னு ஒத்துக்கிட்டு இருக்கிங்க. சொத்துல பங்கு தந்துயிருக்கிங்க. எந்த ஆம்பளையும் ஒத்துக்கிட்டதுயில்ல. புள்ளைக்கு அம்மா பேரை தலைபெழுத்தா போட்டுக்கலாம்ன்னு கவர்மென்ட் சொல்லியிருக்கே. நான் பெத்துக்கற புள்ளைக்கு என் பேரை இன்சியலா வச்சிட்டு போடறன். விருப்பப்பட்டன் அவனோட சேர்ந்துட்டன். அதுக்காக பம்புசெட்ல போய் குடும்பம் நடத்த சொல்றது எந்த விதத்தலைங்க நியாயம். தப்பு பண்ற ஆம்பளைங்க வீட்ல பஞ்சு மெத்தையில இருக்கலாம். பொம்பளை மட்டும் கழனி காட்டுல இருக்கனம்ன்னு சொல்றது நல்லாயில்ல. நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது. இதான் என் முடிவு. நீங்க அங்கத்தான் போய் வாழனம்ன்னு உத்தரவு போட்டீங்க நான் நீங்க பஞ்சாயத்து பண்றிங்கன்னு கலெக்டர்க்கிட்ட புகார் தருவன்” என்றதும் பஞ்சாயத்தில் இருந்த முத்தையன் உட்பட எல்லோரும் அதிர்ச்சியானார்கள்.
“குடும்பம் நடத்தறவ மாதிரியா பேசற?” என தேவகி கேட்ட கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தூற்றுவதிலேயே குறியாக இருந்த சிலர் “நல்லது சொல்ற நம்ம மேல புகார் தருவாளாம். இவ பஞ்சாயத்த நாம விசாரிக்க வேணாம் கிளம்புங்க” என்றபடி சிலர் அந்த பஞ்சாயத்தை கலைத்தார்கள்.
“மாணிக்கம், நீ கோர்ட்ல போய் இத பாத்துக்கடா” என சொல்லிவிட்டு முத்தையன் எழுந்து நடந்தபோது, தேவகி கேட்ட கேள்விக்கு மட்டும் அவரால் பதில் சொல்லாமலே அல்லது சொல்ல விரும்பாமலே எழுந்து சென்றார்.
//ஆனா இரண்டு ஆம்பளைக்கூட வாழ்ந்து புள்ள பெத்தன்னா யாரை அது அப்பான்னு கூப்டும்//
இந்த கேள்விக்கு தேவகி பதில் சொன்னால் நிறைய சிக்கல்கள் விடுபடுமென்பது என் கருத்து.அறிவியலின் துணையின்றி இந்த கேள்விக்கு யாராலும் விடை கூற முடியுமா.அப்படியே ஒருவேளை மாணிக்கம் தேவகியின் முடிவிற்கு சம்மதித்தாலும் சுற்றியுள்ள மனிதர்கள் மாணிக்கத்தை மனிதனாக வாழவிடுவார்களா? என எத்தனையெத்தனை கேள்விகள் எழுகின்றன.