திவாகர்

மிதமான மழையை யாருக்குத்தான் பிடிக்காது.. எனக்கு மிகவும் பிடித்தமானது மழை.. (ஒருவேளை சென்னையில் பிறந்ததாலோ என்னவோ) அதுவும் சரசரவென மேலிருந்து அது முகத்தில் படும்போது அந்த மழை கொடுக்கும் இன்பம் தனிதான். குடையை வேண்டும்,என்றே கொஞ்சம் பின்பக்கம் சாய்த்து, வானத்தை அண்ணாந்து பார்க்கும் வழக்கம் கூட எனக்கு உண்டு.. என்னுடைய கதைகளில் மழைக்கும் நிச்சயம் ஒரு பங்குண்டு.  

என்னுடைய நாவல் ஒன்றில் திருமலையில் பெய்யும் மழையைப் பற்றி இந்த மாதிரி சொல்லியிருப்பேன்.

‘கடலில் புகுந்து சுழன்று ஊர்த்து ஊழி முதல்வனான கண்ணன் உடல் போல கறுத்து அவன் சங்கு போல நின்று அதிர்ந்து சக்கராயுதம் போல மின்னி அவன் சார்ங்க வில்லிலிருந்து பாயும் சரங்களைப் போல பலத்த மழையாகப் பொழிந்து உலகை வாழ்விக்கிறது – என்று கோதை நாச்சியார் மழையை ஆன்மீகமாகவும் அறிவியலாகவும் ஒப்பிட்டுப் பாடினாள். பின்னாளில் ராமாயணத்தைத் தமிழில் பாடிய கம்பர் சரயு நதியின் மேல் படர்ந்த மேகமானது சிவபெருமானின் வெண்மை நிறமாக திரிந்து கடலுள் புகுந்து திருமாலின் கருவண்ணத்தைப் பெற்று மழையாக பூமியில் பொழிகின்றது என்று மழையைப் பற்றி வர்ணித்தார். அப்படிப்பட்ட மழை மேகங்கள் எப்படித்தான் இத்தனை நீரையும் தம் மடியில் சுமந்து அருவி போல கீழே சாய்க்கிறதோ..”

மிதமான மழையில் இதமான குளிரில் நனைந்து கொண்டே வரும்போது, மனம் கூட கொஞ்சம் பரிசுத்த்மாகிறதோ என்று கூட தோன்றும். எந்தக் கவிஞனுக்கும் மனதில் பாடல் சங்கமிக்கும் சமயம் வந்துவிடும்.  அதுவும் பெய்யும் மழை பருவத்தின் முதல் மழையாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். முதலில் வரும் ஈரமண் வாசனையே நம் சூழ்நிலையை சந்தோஷப்படுத்தும்.  மழை மனதைக் குளிர்விக்கிறது என்பதை அழகான கவிதையால் கவிதாயினி ஜெயஸ்ரீ சங்கர் அவர்கள் அழகான தமிழில் கொடுத்திருப்பதைப் படியுங்கள்.

ஜன்னல்  நுழைந்து
தூதாகத்  தென்றல்
வேப்பமரம் அழைத்த சேதியை
வாசனயாய்ச் சொல்லிப் போக
மூச்சிழுத்து சுவாசித்து மரத்தை
அணைக்கிறேன் மனதோடு..!

குயிலே…நீயும் துரத்து
நமை மறந்த அவளுக்கு
கணினி மீது என்ன மோகம்?
கண்கள் கணினிக்கும்  காது
மட்டும் உனக்கோ? குயிலிடம்
கோள் சொல்ல..

ஆசைக் குயிலும் கூவிக் கூவி
கணினியை மொய்த்த கண்களை
மெல்ல ஜன்னல்வழி கொய்ய..
கண்கள் பட்ட இடம்
யாவும் பச்சையாய் சிரிக்க
மனமெல்லாம் வாசம்..!

மின்வாசத்தை ருசிக்கும்  கணினி
மண்  வாசனை ரசிக்குமா?
நிலை கண்ட வானம்…
ஊர்கோல மேகங்களாய்..
எட்டிப் பார்க்குதே…!

வண்ணமயிலாய் மனமும்
எண்ணத் தோகை விரித்து
மழை வருது…மழை வருது..
ஆடும் போதே..சட சட…
மின்னலும் இடியும் கூடி
கோடையை விரட்டி அடிக்க..!

ஆனந்த மழை பொழிய
பூமி நனைந்து ஈரமண் எழும்ப..!
நிலத்தை உறிஞ்சத் துடிக்கும்
வேகமாய் மன மோகம்…!
கண்கள் மூடி உள்ளிழுக்க
கோடி இன்பம் மேனியெங்கும்..!

பாருங்கள், இந்த மழைதான் எப்படியெல்லாம் மனதை அலைக்கழித்து விட்டது. மழை சும்மா வராமல் வரும்போதே மின்னலையும் இடியையும் சேர்த்துக்கொண்டு பயமுறுத்தி கோடையை விரட்டி அடிக்கிறதாம்.. ஆமாம், மழையின் இன்பம் கோடையில்தான் ஆழமாகத் தெரியும்.. இந்த ஆனந்தமான மழைக் கவிதையை அளித்த ஜெயஸ்ரீ சங்கர் அவர்களை இந்த வார வ்ல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பாக அறிவிப்பதில் மழையில் நனைந்த சந்தோஷமாக உணர்கிறேன். அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா:  *இராமகிரி* என வழங்கும் **காரிக்கரை** ஓர் *தேவார(வைப்பு)த்தலம்*    எனும் பயன்மிக்க கட்டுரை எழுதிய திரு  நூ.த.லோகசுந்தரம்    அவர்களுக்கு இந்தக் கட்டுரைக்காக நம் நன்றிகள் உரித்தாகுக. இவரது வேறு சில கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். ஆழ்ந்த ஆராய்ச்சி வளம் உள்ளவை. தேவாரத் தலங்கள் என்றில்லாமல் திவ்ய தேசங்களும் ஏராளமான அளவில் கண்டு தரிசனம் பெற்ற பெரியவர் நூ.த. லோ. சு அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களையும் இந்தக் கடைசி பாராவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்..                                            
               

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “வல்லமையாளர்!

  1. Recently we were effecting oil-bunkering  at mid see while raining,  and I immediately got remembered of Noble waiting at coal bunker and pouring rain there and your writing on both rain and Noble.   (என்னுடைய கதைகளில் மழைக்கும் நிச்சயம் ஒரு பங்குண்டு).  just sharing with you here. Those days how difficult to shift fuel or coal, I felt.

    Can any one explain for this line மின்வாசத்தை ருசிக்கும்  கணினி
    மண்  வாசனை ரசிக்குமா?  (min vasam means does she mean the stay of power over computer  or just  smell of power?)
    idhu mattum puriyavillai. But I go with you by wishing Madam Jayashree Shankar.

    V.M.Dhevan

  2. ஒரு உண்மையை ஒத்துக்கொள்கிறேன். நான் மதிப்பீடு செய்த காலத்தில், ஒரு மயிரிழையில் ஜெயஶ்ரீக்கு விருது தவறிப்போனது. அவருக்கு வாழ்த்துக்கள்.

    கவிதையென்றால், வாசகர்களும் அர்த்தம் கற்பிப்பார்கள்.

    ‘மின்வாசத்தை ருசிக்கும்  கணினி
    மண்  வாசனை ரசிக்குமா?’

    கணினி பெரிது. அது காலகட்டம். விமானத்தில் பறக்கும் போது மேகங்கள் கீழே. அவற்றின் வாசத்தை கற்பனையில் ருசிக்கிறோம். அது மண்னை அடைந்த போது ஒரு தூறல் வாசனை நுகர்வோம். இனிமை தான். ஆனால் மின்வாசனை பற்றி ஒரு ஏக்கம்.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.