ஜெயஸ்ரீ ஷங்கர்


பட்டாம்பூச்சி மனசோடு நீ….
என் மனம் நிறைக்க ..
நித்தம் நீ வரும் வழியில்
விழிக்கணை எறிந்து
காத்திருந்தேன்.. என்றாவது….
கனியுமென…!

காலங்கள் கழிய ..உந்தன்
மோகன மனம்
காத்திருந்த எனை
ஏற்ற தருணம்..!
புதிதாய்ப் பிறந்ததாய்ப்
பூரித்துப் போனேனே..!

ஆசைகள் ஏதுமின்றி
நினைவால் நீயே
உலகமாய்ச் சுற்றியது
என் மனது…!
ஆதவன் கரம் தீண்டும்
தாமரையாய்…நெஞ்சினில்
ஏற்றி வைத்தாய் என் வரவை…!

உன் வெள்ளை மனந்தனில்
முதல்வனாய் அமர்ந்த தருணம் அது..!
நின் சேயாக்கி எனை ரசித்த
வேளையெல்லாம்..
நெகிழ்ந்து போனேன்..நான்..!

துன்பமெலாம் தூரம் போனது
தேவதை உன் உறவால்..!
மனையாள் எனும் ஒற்றை சொல்
செல்லாது உன்னிடத்தில்…!
மங்கையவள் மாசற்ற அன்போடு
யாம் பெற்ற வரம்.. ஒன்றாக
உனையன்றி வேறில்லை…!

பூரணத்தை உணர்ந்தழுதேன்..வாழ்விலே..!
சிரித்தோம்…சிலிர்த்தோம்….
சிந்தித்தோம்..சிநேகமாய்..
இல்லறத்தில்.. ஏற்றமும்..இறக்கமும்..
அன்பிற்கு விதிவிலக்கு  
எனும் விதி கண்டு மகிழ்ந்தோம்..!
சமமாய் நின்றது அன்பின் தராசு..!

கண்டோம்…உலகமே.. ஓவியமாய்..!
வரமென பெற்றோம்..செல்வங்களை
மழலைகளாய்…! மனங்கள்  ஒன்றாய்..
பயணிக்கும்..தண்டவாளம் போல்..!
விட்டுக் கொடுக்காது…அடங்கிப் போகாது…
யதார்த்தமாய்…உன்னத வாழ்க்கை..!

ஆண்டுகள் நமையாள…! நாம்
வாழ்ந்ததாய்… நினைவேயில்லை…
மீண்டும் மீண்டும் புதியதாய்..
பொலிவோடு வலம் வர…
விசித்திரமான வாழ்வு..
சித்திரமாய் கைவர…!

கடந்து சென்ற காலச் சுவடுகள்..
நம் பெயர் சொன்ன வாரிசுகள்
அவர்தம் வாழ்வு தேடி பறந்து விட்டாலும்…
“தாத்தா…பாட்டியாய்..” நம் பேரக்குழந்தைகள்
நமதன்பு கண்டு மலைத்து நின்றாலும்…

நம் பெயர் நமக்கே
மறந்து போனது..அதிசயம்..!
கண் பார்த்து காரியம்
முடிக்கும் உனது புரிதல்..
உன் ஒற்றை இருமலில்
பதைத்துப் போகும் என் பரிவு..!
எவர்க்குமே வாய்த்திடாதிதுபோல்…
இனிய தாம்பத்யம்…!

திரும்பிப் பார்க்கிறேன்….இளமைகள்
உதறிப் போன முதிர்ந்த முகம்..!
முழுதும் படிந்ததுன்  அன்பு..
விரலின் ரேகைகள்..!

நாம் ஆசையாசையாய்…
சேகரித்த பொருட்கள் யாவும்
ஆண்டு பல கண்டதால்…நமைவிட்டுப்
பிரிய மனமில்லாமல் அங்கவீனமாய்..
ஆடிக்கொண்டும்…பொலிவிழந்தும்…!

சலிப்பில்லா நம் மனங்கள் மட்டும்…
என்றும் நேற்றாக..!
நெஞ்சம் நிறைந்த பாசத்தோடும்..
கண்களில் வழியும் நேசத்தோடும்..!
முதுமை தீண்டாத மனதோடு..!

மீண்டும் வந்த அதே நாள்..!
உலக ஆசைகள் அற்றதாய்….
ரசனைகள் என்றும் போல் ஊற்றாகி..
ஒருவருக்கொருவர் ஊன்றுகோலாய்…
வானத்துச் சந்திரனைக்
கண்ணுக்குள் மறைத்தபடி
பட்டாம்பூச்சி மனசோடு…நாம்..!

 http://photography-dawn2breeze.blogspot.in/2011/10/butterflies-photography.html

படத்துக்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஊன்றுகோல்…..

  1. உலக ஆசைகள் அற்றதாய்…. போகவேண்டாம், ஜெயஶ்ரீ. அது தனதாக நிகழும். ஒரு பெண்ணின் மனதில் புகுந்ததாக ஆண்கள் எழுதுவார்கள். இது ஆண் மனத்தில் புகுந்த பெண்ணின் கவிதை. அப்பட்டமான கவிதை வாழ்த்துக்கள்.
    இன்னம்பூரான்

  2. திருவாளர் இன்னம்பூரான் அவர்களுக்கு,

    வணக்கங்கள்.

    தங்களின் மேலான நல்வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  3. KARPANAIYAA?…..KADANTHA -KANDAKKAVIRUKKUM   VAAZHKAIYAA…….AMAINTHUVITTAAL  ARUMAI ..YELORUKKUM AMAIYA VENDUM ….NANDRAVE IRUNTHATHU  KAVITHAI 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *