உடையிலார், சீவரத்தார்- இரண்டாம் பகுதி

0

சு.கோதண்டராமன்

இரு சமயத்தாரின் இயல்புகளையும் சம்பந்தர் மிக ஆவேசமாகத் தாக்குகிறார். உணவைப் பெரிதாகக் கருதுபவர், வஞ்சகர், நற்குணங்கள் இல்லாதவர், நீதியறியாதவர், அறிவற்றவர், நெறியற்ற கீழ்மக்கள், இழிதொழில் புரிபவர், தந்திரசாலிகள், மயக்க அறிவினர், குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவர், அஞ்சத் தகுந்த சிரிப்பு உடையவர், தம் தவறான கொள்கையில் வழுவார், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவர், நேயமற்றவர், பித்தர், ஒன்றுமுணரா ஊமர், நல்லதை அறியாதவர், வாதுசெய்பவர், நல்வினை நீக்கிய வல்வினையாளர், ஓதியுங் கேட்டும் உணர்வினையிலாதார், உள்கலாகாததோர் இயல்பினையுடையார், குறிக்கோள் இல்லாதவர், பேய் போன்றவர், செருக்குடையவர், ஒரு பயனும் அறியாதவர், முரட்டுத்தன்மை உடையவர், சான்றோர் நெறி நில்லாதவர், தம் மனதுக்கு ஒத்தது மட்டும் சொல்பவர், போலியான தவம் செய்பவர், பொருளல்லாதன பேசுபவர், ஆசி மொழியாதவர், ஏசுபவர், ஈரமிலாதன பேசுபவர், குணமல்ல கூறுவார், போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர், குற்றப்பட்ட சமயநெறியை உடையவர், பெருக்கப் பிதற்றுவோர், தடுமாற்றமுறுபவர், அற்பமானவர், அழிதலில் வல்லவர், வாய்த்திறனால் புறங்கூறுபவர், பல்வகை விரதங்களை மேற்கொள்பவர், கைகூப்பி வணங்காதவர், வம்பு செய்யும் இயல்பினர், வீண் தவத்தர், புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திரார், கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு, “பொருள் இது அன்று, அதுதான்” என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவர், பூமியின் கண் நுகரத் தகுவன நுகராதே, துன்பத்தைத் தாமே தேடிக்கொண்டு வருந்துபவர்கள் என்று பல இகழ்மொழிகளால் தூற்றுகிறார்.

சமண சாக்கியர்களின் புற ஒழுக்கங்களைச் சம்பந்தர் கடுமையாகத் தாக்குவதற்குக் காரணம் என்ன? சமணர்கள் ஆடை இல்லாதிருப்பதையும் சிலர் நால்விரல் கோவணம் அணிந்திருந்ததையும் ஏசும் சம்பந்தர் சிவனின் நக்கத் தோற்றத்தையும் துன்னம் சேர் கோவணத்தையும் மட்டும் புகழுவது ஏன்? சிவன் பலி ஏற்றுத் திரிவதைப் போற்றுதலுக்கு உரிய பண்பாகப் பேசும் அவர் சமண சாக்கியர்களின் பிச்சை எடுத்துண்ணலைக் குறை கூறுவது ஏன்? காரணம் அவர்களது நாத்திக வாதம் தான். அவர்கள் சிவனை அறியார். இறைவன் பாதம் வணங்கல் அறியார். சிவனைக் கண்டு நடுக்கம் உறுவர். வேதவேள்வியை நிந்தனை செய்துழல்வர். “ஆதமில் (அறிவற்ற) அவுணரது பொய் உரைகளைக் கேட்காதீர், அவர்களோடு பேசவும் செய்யாதீர், தர்க்க சாத்திரத்தவர் சொல் இடுக்கண்வரு மொழி, அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர், இவர்களுடன் பெரியோர் நட்புக் கொள்ளார், உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாதீர், அவர்கள் கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன, மக்களைத் துன்பநெறியில் செலுத்தும், பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்புவோர் இவர்களது ஞானம் நீங்கிய பொய்மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் கோலத்தை வணங்குவீர்களாக, அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், இழிந்த சமணக் குண்டர்களும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்குவர், அவர்கள் கூறும் மடமையை விரும்பி மயங்கியோர் கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர், அவ்வாறு சென்றவர் செல்லட்டும், ஏனையோர் விழிப்புப் பெறுக” என்று அறிவுறுத்தும் சம்பந்தர் “அவர்களை அவ்வாறு புறச்சமயத்தில் இருத்திவைப்பவனும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவனும் சிவனே” என்று கூறி இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றெனக் குறிப்பால் உணர்த்துகிறார்.

மாற்றுக் கருத்துகளைச் சகித்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் வேதத்தின் அடிப்படைப் பண்பு. அப்படி இருக்க வேதநெறியில் வந்த சம்பந்தர் சமண சாக்கிய சமயங்களை ஏன் பகைமை பாராட்டி வேரறுத்தார்?

இச்சமயங்களின் சிறந்த கொள்கைகளாகிய கர்மாக் கொள்கை, மறுபிறப்புக் கொள்கை, அஹிம்சை ஆகியவற்றை வைதிக சமயம் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அதை அவர்களை விடத் தீவிரமாகக் கடைப்பிடித்தது. ஏனெனில் அவை வேதத்தில் கூறப்படாதிருப்பினும் அதன் அடிப்படைக்கு மாறானவை அல்ல. ஆனால் இறை மறுப்பு என்பது வேதநெறிக்கு முரணானது. இறைவன் இருப்பதை ஒப்புக் கொண்டு அவருடைய தன்மை இத்தகையது என்று புது வகையான விளக்கம் கொடுத்திருக்குமானால் சமண சாக்கிய சமயங்களும் வைதிக சமயத்தின் உட்பிரிவாக ஆகியிருக்கும். திருமாலும் பிரமனும் சிவனை வணங்குவதாகப் புராணங்கள் தோற்றுவித்ததைப் போலச் சாக்கியக் கடவுளும் சிவனைப் போற்றுவதாகக் கதைகள் எழுந்திருக்கும். சிவலிங்கத்தின் மேல் கல் எறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் சாக்கியர் ஒருவர். இதுவும் ஒரு வகையான வழிபாட்டு முறை என்று ஏற்றுக் கொண்ட மக்கள் அவரை நாயனாராக ஆக்கியதை நோக்குக.

சமணர்களுடன் சம்பந்தர் செய்த வாதம் தான் எத்தகையது? அவர் தன் கொள்கையாக வலியுறுத்தியது இறைவன் உண்டு என்னும் கருத்தை மட்டுமே. திரும்பத் திரும்ப சிவபெருமானின் விந்தைச் செயல்களை மட்டுமே துணையாகக் கொண்டு வாதம் புரியும் அவரது கூற்றை நாத்திகர்களாகிய சமணர்கள் எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்? இவை எல்லாம் புராணப் புளுகுகள், கட்டுக் கதைகள் என்று அவர்கள் தள்ளியிருக்கக் கூடும். அனல் வாதமும் புனல் வாதமும் அறிவுக்குப் பொருத்தமான வாத முறைகள் அல்ல. பின் எப்படி அவர் வாதத்தில் வென்றதாக அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்? நடுநிலையோடு தீர்ப்பு வழங்க வேண்டிய அரசனோ, பார்வையாளர்களான பொது மக்களோ இதை எப்படி ஒப்புக் கொண்டார்கள்?

உண்மை என்னவெனில் சைவர்களும் வைணவர்களும் பிற சிறு தெய்வ வழிபாட்டினரும் தனித்தனியே பிரிந்து புராணக் கதைகளின் அடிப்படையில் ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொண்டிருந்த நிலையில் இவர்களின் முரண்பாடுகளைக் காட்டியே இவை அனைத்தும் பொய் என்று நிரூபித்து வந்த சமண சாக்கியர்களுக்கு எதிராக மக்களை ஒன்று படுத்தினார் சம்பந்தர். புராணக் கதைகள் ஒவ்வொரு தெய்வத்தை உயர்த்தியும் ஒவ்வொன்றைத் தாழ்த்தியும் பேசுகின்றன. சிவனை உயர்த்தும் புராணக் கதைகளை அவர் போற்றினாலும் வேதம் ஒன்றே இவை அனைத்தையும் ஒன்று படுத்தும் என்பதால் வேத நெறியையே அதிகம் வலியுறுத்துகிறார்.

சாக்கிய, சமணக் கொள்கைகள் தான் வடநாட்டிலிருந்து வந்தனவே தவிர இங்கு அதைப் பின்பற்றியவர்கள் யாவரும் தமிழர்களே. அவர்களில் பிராமணரும் உண்டு. இவ்விரண்டு சமயங்களும் தர்க்க வாதத்தின் அடிப்படையில் அமைந்ததால் அவர்களை வாதத்தில் தோற்கடிப்பது எளிதல்ல. “உங்கள் வேதத்தில் சிவனைப் பற்றிய குறிப்பே இல்லையே, எந்த அடிப்படையில் நீங்கள் சிவனை வேத முதல்வன் என்று புகழ்கிறீர்கள்?” என்று அவர்கள் வாதம் செய்திருக்கக் கூடும். எப்பெயரிட்டு அழைப்பினும் இறைவன் ஒன்றே என்ற வேதக் கருத்தை முன் வைத்துத் தான் ஞானசம்பந்தர் அவர்களிடம் எதிர்வாதம் புரிந்திருக்க வேண்டும்.

திருவாழ்கொளிபுத்தூர் பதிகத்தில் சம்பந்தர் முடியும் ஆயிரம் உடையார், கண்ணும் ஆயிரம் உடையார், வடிவும் ஆயிரம் உடையார், பெயரும் ஆயிரம் உடையார் என்று கூறுவது ருக் வேதம் 10 ஆவது மண்டலம் புருஷ சூக்தக் கருத்தே. அதே பதிகத்தில் சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார் என்று கூறித் தன் கருத்துகளுக்கு வேத ஆதாரம் உண்டு என்பதைப் புலப்படுத்துகிறார்.

வேள்விகளைப் பொறுத்தவரை சமண சாக்கியர்களின் குற்றச்சாட்டு, அவை உயிர்க் கொலையைக் கொண்டுள்ளன என்பதே. வேதத்தில் பல பகுதிகள் இரண்டு கால் பிராணிகள் நலமாக வாழட்டும், நான்கு கால் பிராணிகள் நன்றாக வாழட்டும் என்று வேண்டுகிறது. அப்படி இருக்க, ஏன் பிராணிகளைப் பலி கொடுத்து வேள்வி இயற்றினர்? பலி இடப்பட்ட பிராணிகள் நற்கதி அடையும் என்று நம்பியதால் தான். புத்த மதப் பிரசாரம் நடைபெற்ற காலத்தில் அவர்களது அறிவு தூண்டப்பட்டது. உயிர்ப் பலியைத் தவிர்க்க வேண்டி வேள்விகளையே புறக்கணிக்கத் தேவை இல்லை, உயிர்ப் பலி இல்லாமலும் வேள்விகள் செய்ய முடியும் என்பதை உணர்ந்தனர். மற்றவர் கூறும் குற்றச்சாட்டுகளின் நியாயத்தை உணர்ந்து அதற்கேற்பத் தன்னைத் திருத்திக் கொள்ளும் வைதிகப் பண்பு சைவத்தில் இயல்பாகவே இருந்தபடியால் புறச் சமயத்தாரின் தாக்குதல் வலுவிழந்து போயிற்று.

இவ்வாறு சைவத்தின் எழுச்சியும் புலால் மறுப்புக் கொள்கையும் ஒரே காலத்தில் தோன்றியதால் மரக்கறி உணவு தமிழ்நாட்டில் சைவ உணவு என்று பெயர் பெறலாயிற்று. வட இந்தியாவில் வைணவக் கொள்கையுடன் பரவியதால் அது அங்கு வைணவ உணவு எனப்படுகிறது.

மக்கள் சம்பந்தரின் கருத்துகளை ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறிய சமண சாக்கியர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவுக்கு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கவில்லை. மனித வாழ்வு என்பது அறிவு உணர்ச்சி இரண்டின் கலவை அன்றோ? உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வறட்டுத்தனமான தர்க்க ரீதியாக வாழ்க்கைப் பிரச்சினைகளை அணுகிய சமண சாக்கியர்களின் போக்கினால் அலுப்படைந்திருந்த மக்களுக்கு அம்மையாரின் வழிநின்ற ஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரின் உணர்ச்சிமயமான அணுகுமுறை ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அன்றாடம் சிறிது நேரம் அறிவைப் புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு புராணக் கதைகளை நம்பி இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல் மக்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அது ஆறுதலாகவும் இன்பமாகவும் இருந்தது. அதனால் தான் அவர்கள் புறச் சமயங்களைப் புறக்கணித்துச் சைவத்துக்குத் திரும்பினர். சம்பந்தரின் இசைத் திறனும் அதில் முக்கிய பங்கு வகித்திருக்க வேண்டும். பயமறியாச் சிங்கக் கன்று போன்ற இந்தச் சிவக்கன்றின் காட்டமான தாக்குதலும் அவருடைய இளமையும் மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும்.

சமணர்களால் அழிய இருந்த சைவம் இவரால் புதிய வலுவுடன் வீறுநடை போடத் தொடங்கியது. எனவே தான் சம்பந்தர் சைவசமயக் குரவர்களில் முதலானவராகப் போற்றப்படுகிறார்.

புத்தரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகள் சம்பந்தர் வர்ணித்தது போன்ற நாகரிகமற்ற வாழ்க்கை முறையைப் போதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் போன போக்கில் வாழ விரும்பிய சிலர் இச்சமயங்களைப் போர்வையாகப் பயன்படுத்தி அவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும். உழைக்க விருப்பம் இன்றிப் பிச்சை எடுத்து உண்பதும், ஆடையின்றித் திரிவதும், உடல் தூய்மை பற்றிக் கவலைப்படாமல் இருப்பதும், தவம் என்ற பெயரில் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான குறிக்கோள் இல்லாத வாழ்க்கை அண்மைக் காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ஹிப்பி இயக்கத்தைப் போன்று இருப்பதை அறிய முடிகிறது. சமணத்தில் சில காலம் உழன்ற அப்பர் குறிக்கோள் இலாது கெட்டேன் என்று வருந்தியதை நினைவு கூர்க. இந்தக் கலாசாரம் பரவினால் சமுதாயம் முழுமையும் நாகரிகத்தில் பின்னடைவு கொள்ளும் அல்லவா? எனவே இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு சமுதாயக் கட்டாயமாக இருந்தது. சமயத்தின் பெயரால் ஏற்பட்ட இந்தத் தவறுகளை மற்றொரு சமயத்தின் பெயரால் ஒழித்துக் கட்டிய சம்பந்தர் ஒரு சமூக சீர்திருத்தக்காரராகவும் விளங்கினார். அமெரிக்காவில் ஹரே கிருஷ்ணா இயக்கமும் யோகமும் பரவிய பின்னர் ஹிப்பிக் கலாசாரம் அழிந்ததை நாம் அறிவோம்.

(முற்றும்)

படத்திற்கு நன்றி: http://www.indianstampghar.com/2009/01/special-cover-_-buddha-and-mahavira/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *