திவாகர்

ஒரு பழைய ஜோக் ஒன்று ஞாபகத்துக்கு வ்ருகிறது. ஒரு பிரபல சங்கீத வித்வான் மிக அழகாகப் பாடி அந்த பாடல் முடிந்த கையோடு பலத்த கரவொலி கிடைக்கப்பெற்றார்.. முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அப்பாவி ரசிகரும் பலத்த கைதட்டல் தட்டி விட்டு அந்தப் பாடகரிடம் ஒரு விண்ணப்பமும் போட்டு வைத்தாராம்.. ‘அப்படியே இந்தத் தோடி ராகத்திலும் ஒரு நல்ல பாட்டு பாடிடுங்க..; இதைக் கேட்டதும் மேடையில் உட்கார்ந்த பாடகருக்கு மட்டுமல்ல, அங்கு இசைநுட்பம் தெரிந்த அத்தனை பேருக்கும் கோபம் வந்ததாம்.. பாடகர் நேரடியாகவே சொல்லிவிட்டார் அந்த அப்பாவியிடம்.. நான் இப்போ பாடி நீங்க கைதட்டியது தோடி ராகத்துப் பாடலுக்குத்தான் சுவாமி” என.    

நான் இந்தக் கர்நாடக சங்கீத விஷயத்தில் அந்த அப்பாவியைப் போலத்தான். என்னைப் போன்றவர்களுக்கு ஏதோ கேட்கும் ஞானமாவதாவது உள்ளது என்பதோடு திருப்தியடைய வேண்டுவதுதான்.. ஆனால் கர்நாடக சங்கீதத்தில் பாடகர்களை விட இசைக் கருவிகளால் இசைக்கப்படுவது மிக மிகப் பிடிக்கும். புல்லாங்குழல் இசைக்கு மயங்காதவர் யாருமே இருக்கமுடியாது என்றுதானே கண்ணனே அந்த இசைக் கருவியைப் பயன்படுத்தினான்.

அதே சமயத்தில் புல்லாங்குழலினும் பிடித்த இசைக் கருவி என்ற ஒன்று உண்டென்றால் அது எனக்கு நிச்சயமாக நாதஸ்வரம் மட்டுமே. எங்கள் ஊர்க் கோயில் நாதஸ்வரப் பார்ட்டியின் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு அவர்கள் ஊதும்போதெல்லாம் ஆ வென பார்த்துக் கொண்டிருக்கும் சிறு வயதுக் காலங்கள் உண்டு.. அவர்கள் எந்தப் பாடலையும் பாடகர்கள் பாடுவது போலவே எப்படித்தான் இந்தப் பெரிய குழலைக் கையில் தூக்கிக் கொண்டே இசைக்கிறார்களோ என்ற ஐயம் அவ்வப்போது வருவதுண்டு. மந்திரம் மாயம் ஏதேனும் செய்கிறார்களோ என்ற ஐயப்பாடும் வருவதுண்டு.

பிற்காலத்தில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தையும் பார்த்ததிலிருந்தும் கொத்தமங்கலம் சுப்புவின் அருமையான அந்தக் கதையைப் படித்ததிலிருந்தும் அந்த நாதஸ்வரம் மேலே ஒரு காதலே ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். நாதஸ்வரக் கச்சேரிகள் என்றாலே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஆஜராகிவிடுவது வழக்கமாகிப் போன ஒன்று. இந்த வார வல்லமையில் நாதஸ்வரம் பற்றிய் கட்டுரையை விசாலம் அம்மையார் எழுதி இருக்கிறார். மிக நேர்த்தியான கட்டுரை. ஆரம்பத்திலேயே ஒரு எச்சரிக்கை மணியோடு ஆரம்பித்திருக்கிறார் https://www.vallamai.com/paragraphs/25097/

“இப்போதெல்லாம் நாதஸ்வரத்திற்கு, என் தாத்தா காலத்தில் அல்லது அப்பா காலத்தில் இருந்த மவுசு கிடைக்கவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. கும்பகோணத்தில் ஒரு கோயிலுக்குப் போயிருந்தேன். மாலை நேரம்.   பெருமாள் பிரகாரத்தைச் சுற்றி வந்தார். முன்னால்  இருவர்   நாதஸ்வரம் வாசித்துக்கொண்டு சென்றனர். ஆஹா என்ன  அருமையான  சங்கீதம்! “மாமவ பட்டாபி ராமா “ என்ற பாடல். மணிரங்கு  ராகத்தை இழைத்து  இழைத்து வாசிக்க,  நான் அந்த இசையில் லயித்தேன். ஒரு அரைமணி நேரம் தான் அந்த வாசிப்பு இருந்தது.  கூட்டமும் இல்லை. நான் அவர்களிடம் போய்  “அருமையாக வாசித்தீர்கள்  ரேடியோவில் வாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“இல்லை  இந்தக்கோயிலில் மட்டும் தான் வாசிக்கிறோம். சில  நேரம், கல்யாணத்தில் வாசிப்போம்”

“ஏன் இப்படி ?”

“தற்போது பலர்  சினிமா பாடல்கள் பாடும் குழுவை அழைத்து  விழாவை நடத்திவிடுகிறார்கள். அதற்குத்தான்  இந்தக்காலத்தில் வரவேற்பு    அதிகம்”

ஆம் அவர் சொன்னதும் சரிதான். இந்தக்காலத்தில் பலரும் லைட் கிளாசிகல்  என்று சொல்லப்படும் மெல்லிசையையே விரும்புகின்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். நாதஸ்வரம் ஒரு அருமையான  வாத்தியம். பின்னால் சட்ஜமம் கொடுத்தபடி ஒருவர்  ஒத்து  ஊதிக்கொண்டிருக்க    “பிப்பீ   பிப்பீ” என்று  அதற்குத் தகுந்த ஓலையைப்பொருத்தி ஒலியை  ஆரம்பிக்க,     கூட தவிலின் சத்தமும் கூட,  அங்கு  ஒரு மங்கலமான, ஆன்மீக அலைகள் கிளம்பி  ஒரு புத்துணர்ச்சி கொடுப்பதை     நம்மால் உணரமுடிகிறது.

— இப்படியெல்லாம் மங்கலம் ஒலிக்கும் நாதஸ்வரக் கலையை நாம் அழிய விடக்கூடாது என்பதில் நான் விசாலம் அம்மையாரோடு கொஞ்சம் ஸ்ட்ராங்காக சேர்ந்துகொண்டு குரல் கொடுக்கிறேன். நாதஸ்வரக் கலை நம் தமிழகத்துக்குச் சேர்ந்த, தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும், தமிழ் சார்ந்த கலை ஆகும். தற்சமயம் பெண்கள் கூட கற்று சற்றுப் பிரபலமாகி வருகிறார்கள் எனப்து மிக நல்ல விஷயம் என்பதோடு இன்னும் ஏராளமானோர் இதைக் கற்று எல்லோரையும் எந்நேரமும் மகிழ்விக்க வேண்டும். சரியான சமயத்தில் எச்சரிக்கை மணியோடு நேர்த்தியான கட்டுரையும் எழுதிய திருமதி விசாலம் அம்மையாரை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழு சார்பாக தேர்வு செய்து அவரை வாழ்த்த வாய்ப்பளித்ததில் ஒரு பெருமையும் எனக்கு  உண்டு.

க்டைசி பாரா: கவிநயா இந்த இ-மெயில் விஷயத்தில் சொன்ன எச்சரிக்கை வகைகள் அனைத்தும் கடைபிடிக்க வேண்டியவைதான். கவனக்குறைவுகள் நம்மை வேறெங்கோ கொண்டு போய்விடும் என்பதும் உண்மைதான். இ மெயிலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என இன்னொரு எச்சரிக்கை மணி ஒலித்த கவிநயாவுக்கு இந்தக் கடைசிப் பாராவில் நன்றியும் பாராட்டுதல்களும்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வல்லமையாளர்!

  1. நாதஸ்வரம் எனக்கும் பிடித்த இசைக் கருவி. அருமையான கட்டுரைக்கும், வல்லமையாளரானமைக்கும், வாழ்த்துகள் விசாலம் அம்மா!

    கடைசி பாராவில் என்னை சேர்த்துக்கிட்டதுக்கு திவாகர் ஜிக்கு மிக்க நன்றி 🙂

  2. அனுபவங்களைப் பதிவு செய்வதை மிக நேர்த்தியாக செய்பவர் விசாலம் அம்மா. வயதை ஒரு தடையாக எண்ணாமல் தன் பணியை செய்து வரும் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது எனக்கு மனமகிழ்வையும், நிறைவையும் தருகிறது. வாழ்த்துக்கள் அம்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *