காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: நெருக்கடியான சூழலிலும் பெண்கள் புன்னகையே பதிலாகத் தந்து வாருங்கள். குடும்ப ஒற்றுமை குலையாமல் இருக்கும். பணி புரியும் இடங்களில் அவசரமாய்ச் செயல்படுவதைத் தவிர்த்து, தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், எவரும் உங்களை குறை கூற மாட்டார்கள். பண விஷயங்களில் எவருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் மாதத் தேர்வுகளை அலட்சியமாக எண்ணாமல் கவனத்துடன் எழுதுவது அவசியம். வியாபாரிகளுக்கு, நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் நிறுவனத்திலிருந்து விலகிச் செல்லும் சூழல் உண்டாகும். வாகனப் பராமரிப்பிற்கென்று சில்லறைச் செலவுகளைச் செய்வீர்கள்.

ரிஷபம்: கலைஞர்கள் வெளி இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பொருட்களில் கவனமாக இருந்தால், கலை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாய் அமையும். பெண்கள் மின்சாதனப் பொருட்களைக் கவனமாய்க் கையாளுங்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பை அதிகப்படுத்தினால், கடன் தொல்லைகளைக் குறைத்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் சற்றே பொறுப்புக்கள் அதிகரிக்கும். மாணவர்கள் சிறிய காரியத்தையும் சிரத்தையுடனும் செய்தால் சிறப்பான பலனைப் பெறலாம், அடிக்கடி வெளியூர்ப் பயணம் செல்பவர்கள் சளித் தொந்தரவுக்கு ஆளாக வேண்டி வரும். வியாபாரிகள் ஒப்பந்தங்களைப் பெற அங்கும், இங்கும் அலைந்து திரிவர்.

மிதுனம்: பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தைக் குறைத்துக் கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது. மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் தராமல், படிப்பில் கவனம் செலுத்தி வாருங்கள். அதிக நேரம் பணியில் ஈடுபடுபவர்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டிய வாரமிது. நீங்கள் எங்கு பணி புரிந்தாலும், சொல்,செயல் ஆகிய இரண்டிலும் நிதானத்தைக் காட்டி வந்தால், எந்த நிலைமையையும் சமாளித்து விடலாம். வியாபாரிகள் வாக்குறுதிகளை வழங்குவதைக் காட்டிலும் அதை நிறைவேற்றி வைப்பதில் கவனமாய் இருந்தால், சிக்கல்கள் ஏதும் வராது. அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் கலைஞர்களுக்கு ஆதாயம் இரட்டிப்பாகும்.

கடகம்: உங்களின் நிதி நிலைமைக்கேற்றவாறு காசோலைகளைப் பயன்படுத்துவது நல்லது. புதிய நபர்களிடம் வியாபார ஒப்பந்தம் செய்யும் முன்பு, அவர்களின் பொருளாதாரம், முன் அனுபவம் ஆகியவற்றை அறிந்து செயல்படவும். பணியில் பொறுமையைச் சோதிக்கும் சந்தர்ப்பங்களையும், லாவகமாகக் கையாண்டால், மன அமைதிக்குப் பங்கம் வராது. சுய தொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் நாவடக்கம் நன்மையைத் தரும் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால், நற்பெயரை எளிதில் தக்க வைத்துக் கொள்ள இயலும்.

சிம்மம்: சிலருக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழும் வாய்ப்பு கிட்டும். கர்ப்பிணிப் பெண்கள் உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்துகளை உட்கொண்டால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியில் இருப்பவர்களைக் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை அலைக்கழிக்கும். மாணவர்கள் வெளி வட்டாரப் பழக்கங்களில் தராதரமறிந்து பழகி வந்தால், வீண் சங்கடங்கள் உங்களை அண்டாது. கலைஞர்கள் அபவாதங்களுக்கு இடமளிக்காதவாறு உறுதியாய்ச் செயல்படுங்கள். வியாபாரிகள் ஏனோதானோவென்று பணிகளைச் செய்யாமல், தகுந்த திட்டப்படிச் செய்தால், குழப்பங்களைத் தவிர்த்து விடலாம்.

கன்னி: உயர்ந்த பதவியில் இருப்போர்கள், பிறரின் குற்றம் குறைகளை இதமாக சுட்டிக் காட்டினால், வேலைகள் தேங்காமல் முடிந்து விடும். இந்த வாரம் பெண்கள் உறவுகளிடமிருந்து அதிகச் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் பொதுப்பிரச்னைகளைத் தீர்க்க, புத்திசாலித்தனமும், பொறுமையுமே உதவும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் தகுதிக்கேற்ற நட்பைத் தேடிக் கொண்டால், வீண் தலைவலியைத் தவிர்த்து விடலாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளுக்குத் தேவையான பக்கபலத்துடன் களம் இறங்கினால், நினைத்ததைச் சாதிக்க இயலும்.

துலாம்: பணி புரிபவர்கள் உடனிருந்தே காலை வாருபவர்களிடம் உஷாராக இருந்தால், உங்கள் உழைப்பு வீணாகாமலிருக்கும். பெண்கள் உபத்திரவம் தரும் அண்டை அயலாரை அருகில் சேர்க்காதீர்கள். உங்களின் விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்தால், வீண் கலக்கத்தைத் தவிர்த்து விடலாம். உங்களின் பழைய அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றின் உதவி கொண்டு வியாபார சிக்கலைத் தீர்க்க இது ஏற்ற வாரம். கலைஞர்கள் சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகள் செய்ய வேண்டிய சுழலுக்குத் தள்ளப்படுவர். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் அதிகக் கவனம் தேவை.

விருச்சிகம்: வியாபாரிகள் உங்கள் சேவையை விமர்சனம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில், உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். புதிய வீடுகள் மற்றும் மனைகளை வாங்கும் முன் பத்திரங்களைச் சரி பார்ப்பது அவசியம். வீண் ஜம்பம், வேண்டாத பெருமை இரண்டையும் விலக்கி விட்டால், கலைஞர்கள் நிம்மதியாய் வேலை செய்யலாம். பணியில் இருப்பவர்கள் பதற்றமின்றிப் பொறுமையுடன் செயல்பட்டால், உயரதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக முடியும். பெண்களுக்கு வேலைப் பளு கூடலாம்.

தனுசு: கடன் தொல்லைகளினால் சிறிது மனச்சஞ்சலம் ஏற்பட்டாலும், சிக்கல் வராமல் இந்த வாரம் சமாளித்து விடுவீர்கள். பங்குதாரார்களின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கலைஞர்கள் அதிகப் புகழ்ச்சி எனும் வலை விரிப்பவரிடம் மாட்டிக் கொள்ளாமல் விலகியே இருங்கள். பணியிடத்தில் பிறர் கூறும் குற்றம், குறைகளுக்காக அவர்களிடம் வாக்கு வாதத்தில் இறங்குவதைத் தவிர்த்து விடவும். சில சந்தர்ப்பங்களில், நண்பர்களே உங்களை எதிரியாய்க் கருதி உங்களோடு மோதும் நிலை உருவாகும். தேவையில்லாமல் பெண்கள் தங்கள் அலுவலக ரகசியங்களைப் பிறரிடம் கொட்ட வேண்டாம்.

மகரம்: எதிரும் புதிரும் இருந்த உறவுகள், நெருங்கி வருவதால், பெண்கள் மகிழ்ச்சியுடன் திகழ்வார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்கள் சின்னச்சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம். தம்பதிகளுக்குள் அனுசரணையும், புரிதலும் இருந்தால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். பணியில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகளை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வவதால், நல்ல பெயரோடு பதவி உயர்வும் வந்து சேரும். தொழிலாளர்கள் இடையே தோன்றும் மன வேறுபாடுகள் பெரிதாகாமல் இருக்க அவர்களைத் தட்டிக் கொடுத்துச் செல்லுங்கள். வியாபாரம் சீராக இருக்கும்.

கும்பம்: வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து செயல்படுவது நலம். பெண்கள் பிள்ளைகளின் கூடாத நட்பினால் தோன்றும் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளுவது புத்திசாலித்தனமான செயலாகும். நீங்கள் எதிர்பார்த்தவகைகளில் வரும் அதிக வரவால் பழைய கடன்களைத் தீர்க்கத் தேவையான பணம் கிடைக்கும். சுய தொழிலில் தோன்றும் கஷ்டங்களைக் கடக்க உங்கள் உழைப்பும், சாமர்த்தியமும் கை கொடுக்கும். கலைஞர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும் வரை பொறுமையாய் இருப்பது அவசியம்.

மீனம்: எதிலும் முனைப்புடன் ஈடுபடும் மனப்பாங்கால், வியாபாரிகள் எடுக்கும் முயற்சியெல்லாம் லாபமாய் மாறும். மாணவர்கள் புதிய இடங்களில் எவரை நம்பியும் உங்கள் உடைமைகளை ஒப்படைக்க வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நிதானமாகக் கையாள்வது நல்லது. பெண்கள் முன் கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டுச் செயலில் இறங்கினால், குடும்ப முன்னேற்றமான நிலைக்கு செல்வது உறுதி. கலைஞர்கள் பெரிய மனிதர்களின் சந்திப்பினால் பெரிய செலவுகளைச் சந்திக்க நேரிடும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய சச்சரவுகளைப் பெரிது படுத்த வேண்டாம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.