தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-8)
முகில் தினகரன்
மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரைத் தாழ்ந்த பந்தல் கீழ்,
தேவியின் கைத்தலம் பற்றினான் ரத்னவேல்.
அட்சதைகள் தலை மேல் ஒட்டியிருக்க, ஆனந்தம் முகத்தில் பொங்கி வழிய, சிரித்த முகத்துடன் தன் காலில் விழுந்து நமஸ்கரித்த மணமக்களை ஆனந்தக் கண்ணீருடன் ஆசிர்வதித்தான் சுந்தர்.
புகுந்த வீட்டிற்குப் போகும் முன் தன்னிடம் சொல்லிக் கொள்ள வந்த தங்கையிடம், பேச முடியாமல் பேசி, சிரிக்க முடியாமல் சிரித்து, பொங்கி வந்த அழுகையைப் பொத்தி வைக்க முடியாமல் ‘பொசுக்‘ கென்று பெண் பிள்ளையைப் போல் பீறிட்டழுதான் சுந்தர்.
உறவுக்காரப் பெரியவர் ஒருவர் அவனை நெருங்கி வந்து, “ச்சூ.. தம்பி.. உணர்ச்சி வசப்படாதப்பா.. நல்ல காரியம் நடக்கும் போது இப்படியா ஆண்பிள்ளை அழுவாங்க?.. அப்பா ஸ்தானத்துல இருக்கே.. அதை மறந்திடாத!.. நீயே இப்படி அழுதின்னா.. பாவம் அந்தப் பொண்ணு அது எப்படித் தாங்கும்?” காதுக்குள் கிசுகிசுக்க,
சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான் சுந்தர்.
அவன் உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் வயிற்றில் அந்தத் தையல் ‘சுருக்‘கென்று வலிக்கின்றது. “ஏன் இப்படி?.. ஏதாச்சும் பிரச்சினை ஆகின்றதோ?.. டாக்டரிடம் செக் பண்ணலாமா?”
ஒரு மாதத்திற்குப் பிறகு,
கல்யாண அமளியெல்லாம் ஓய்ந்து வீடு நார்மலுக்கு வந்திருந்தது.
“ஹூம்.. அந்தப் பொண்ணு இல்லாம வீடு வீடு மாதிரியே இல்லை!.. வெச்ச பொருளெல்லாம் வெச்ச எடத்துல வெச்ச மாதிரியே இருக்கு!.. அவ இருந்தா இதைத் தூக்கி அங்க வெப்பா!.. அதைத் தூக்கி இங்க வெப்பா!.. கடைசில எதை எங்க வெச்சோம்னு தெரியாம தேடுவா!.. கத்துவா!.. என் கூட சண்டைக்கு வருவா!.. என்ன இருந்தாலும் வீட்டுக்கு ஒரு பொட்டப் புள்ள கண்டிப்பா வேணும்!.. கூடமாட உதவிக்காக இல்லாட்டியும்.. ஒரு பேச்சுத் தொணைக்காவது வேணும்!” முறத்திலிருந்த அரிசியில் கல்லைப் பொறுக்கிக் கொண்டே புலம்பினாள் சுந்தரின் தாய் லட்சுமி.
“அது செரி.. அதுக்காக வயசுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி அனுப்பாம.. அப்படியே வீட்டோட வெச்சுக்க முடியுமா?”
“அட..முட்டாப்பயலே!.. நான் சொன்னதுக்கு அர்த்தம் அது இல்லைடா.! இன்னொரு பொண்ணை இந்த வீட்டுக்குச் சீக்கிரமே கொண்டாந்துடணும்ன்னு அர்த்தம்!” மகனின் வெகுளித் தனத்தை ரசித்தவாறே சுந்தரின் தாய் பதில் சொல்ல,
“ம்ம்.. கொண்டாரலாம்.. கொண்டாரலாம்!” என்றபடியே துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு குளியலறையை நோக்கி நடந்தான் சுந்தர்.
“என்னடா.. குளிக்கப் போறியா?”
நின்று, திரும்பி, “ஆமாம்!” என்றான்.
“நான் வேற மளிகைக்கடை வரைக்கும் போவணுமே..! சரி.. பரவாயில்லை நீ போய்க் குளி.. நான் வெளிப் பக்கமா தாழ்ப்பாள் போட்டுட்டுப் போறேன்!”
“சரிம்மா!” குளியலறைக்குள் புகுந்த சுந்தர் அடுத்த பத்தாவது நிமிடம் குளித்து முடித்து வெற்றுடம்புடன் வெளியே வந்தான்.
உள் ரூமிற்குள் நுழைந்து அலமாரியில் பனியனைத் தேடிக் கொண்டிருந்த போது,
“ப்ப்பேஏஏஏஏஏஏஏ” என்று கத்திக் கொண்டே அந்த அறைக் கதவிற்குப் பின்னாலிருந்து வெளியே வந்தாள் மைதிலி.
ஒரு கணம் மிரண்டு துள்ளி விழுந்தவன், “ச்சீய்.. பிசாசே.. .கொழுப்பா?” என்றான் செல்லக் கோபத்தில்.
“ஆமாம்!.. கொழுப்புத்தான்.. திமிருதான்.. என்ன பண்ணப் போறே?.. அடக்கப் போறியா?.. அடக்கு!. இதா இந்தக் கழுத்துல ஒரு மஞ்சக் கயித்தைக் கட்டிட்டு.. எல்லாத்தையும் அடக்கு!.. .நானா வேண்டாங்கறேன்?.” என்று சிரித்தபடி சொன்னவள், “ஏய்.. ஏய்.. அப்படியே கொஞ்சம் நில்லு!” என்றவாறு அவனருகில் வந்து அந்த வயிற்றுத் தழும்பைத் தொட்டாள்.
“இதென்ன.. இது?” கேட்டாள்.
ஆடிப் போன சுந்தர், சட்டெனத் துண்டை எடுத்து அதை மறைத்துக் கொண்டு, “அது.. வந்து.. த.. தழும்புதான்!” என்றான் குழறும் குரலில்.
“இல்லையே.. இதுக்கு முந்தி இந்த மாதிரி ஒரு தழும்பை நான் பார்த்ததேயில்லையே?” அவள் கேள்வியில் ஏராளமான சந்தேகம் கலந்திருந்தது.
”இல்லையே.. நீ சரியாக் கவனிச்சுப் பார்த்திருக்க மாட்டே!” என்றவன் அவசர அவசரமாய் ஒரு சட்டையை எடுத்து அணிந்து கொண்டு, அந்தப் பேச்சை மாற்றும் விதமாய், “சரி.. என்ன திடீர்னு இந்த நேரத்துல.. வந்திருக்கே?.. என்ன விஷயம்?”
“மொதல்ல நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு.. இது என்ன தழும்பு?.. எப்படி இந்தக் காயம் ஆச்சு?”
வாயடைத்துப் போய் நின்றவனுக்கு உலகமே வேகமாய்ச் சுழலுவது போலிருந்தது. “என்ன சொல்லலாம்?.. எப்படித் தப்பிக்கலாம்?.” தவிப்பாய் யோசித்தான்.
“இவ கிட்ட உண்மையைச் சொல்லி விட்டால் என்ன?.. எப்படியும் நாளைக்குப் பொண்டாட்டியா வரப் போறவதானே?”
மறு நிமிடமே அந்த எண்ணத்தை மின்னல் வேகத்தில் அழித்தான். “ம்ஹூம்.. அதை விட முட்டாள்தனம் வேற எதுவுமேயில்லை!.. இவ ஒரு ஓட்டை வாய்!.. உடனே போய் அம்மாகிட்டேயும் தேவி கிட்டேயும் சொல்லிடுவா!”
“என்ன சுந்தர்.. என்னாச்சு உங்களுக்கு?.. நான் பாட்டுக்குக் கேட்டுட்டே இருக்கேன்.. நீங்க பாட்டுக்கு எங்கியோ யோசனை பண்ணிட்டு இருக்கீங்க!” அவள் அவனை உலுக்க,
“ம்.. அது.. பெங்களுர்.. போயிருந்தப்ப.. ”என்றவன், சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு, “இல்லை.. இல்லை.. கோயமுத்தூர் போயிருந்தப்ப.. அங்க ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்!” பொய் பேசி அறியாத சுந்தருக்கு அந்தப் பொய்யைச் சொல்லுவதற்குள் வியர்த்துக் கொட்டியது.
அவன் பதிலைக் கேட்டும் இடவலமாய்த் தலையாட்டிய மைதிலியை மிரட்சியாய்ப் பார்த்தான்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி: http://digitaljournal.com/image/46778