நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-15

2

பெருவை பார்த்தசாரதி

சென்ற இதழின் தொடக்கமாக, நண்பர்களைப் பற்றிப் நாம் சரியாகப் புரிந்து கொண்டால்தான், நண்பர்கள் நமக்கு வழிகாட்டுபவர்களாக இருப்பார்கள் என்பதை இந்த இதழிலும் காண்போம். அன்றாட அலுவல்களில் மின் அஞ்சல் அனுப்புவதும், பெறுவதும் அத்தியாவசியமாகி விட்ட நமக்கு, நண்பர்கள் அனுப்புகின்ற ஆங்கில மின் அஞ்சல்களில் பெரும்பாலானவை நமக்கு அறிவுரை (Advice) சொல்லுகின்ற விதத்தில் அமைந்து இருக்கின்றன. அஞ்சல் என்கிற பெயரில் நமக்கு வருகின்ற நண்பர்களின் அறிவுரைகளையெல்லாம் நாம் பின்பற்ற முடியுமா?…என்பது சற்றுக் கடினம்தான். அவற்றில் தேவையான சிலவற்றை, உண்மைச் சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால், நண்பர்களின் முக்கியத்துவம் புரியும். “எனக்கு நிறைய நண்பர்கள் வட்டாரம் உண்டு’ என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ளும் அதேசமயத்தில், “நண்பர்கள் பலவிதம் அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம்’ என்பதைச் சற்று ஆராய்வோம்.

There are three types of friends:

“those without which you can’t live’
“those like medicine which you need occasionally’
“those like illness, which you never want’

– Solomon Ben Gabriel (1021-1088) – Hebrew poet and aphorist

மனோதத்துவத்தின் அடிப்படையில், பெரும்பாலும் ஒத்த கருத்துடையவர்களே நண்பர்களாக இருக்க முடியும் என்று சொல்வதுண்டு. இருவருக்கிடையே ஒருமித்த கருத்து மட்டும் இருந்தால் போதுமா?…. வாழ்க்கைத் தரம் இருவருக்குள்ளும் வேறு பட்டிருந்தாலும், அவர்கள் ஒன்று பட்டு நண்பர்களாக இருந்தால் போற்றத் தக்கது. ஒன்றாகப் படித்த நண்பர்கள் இருவரில், ஒருவர் உயர்பதவியிலும், மற்றவர் சாதாரணமான பதவியில் இருந்து அவர்களிடையே இருக்கும் நட்புறவு தொடர்ந்தால், அது ஆச்சர்யப்படக்கூடியது. படிப்பாலும், பொருளாதார வசதியாலும், நம்மைவிட வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்திற்குச் சென்ற நம்முடைய நண்பர்களுடன் தற்போது நமக்கு இருக்கின்ற நட்புறவு எவ்வாறிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தோமானால், உண்மையான நட்பைப் பற்றிய ஐயங்கள் தீரும். இதற்கு உதாரணமாக நாம் ஒருவரின் பரந்த மனப்பான்மையுடைய நட்பைப் பற்றி இங்கே காண்போம்.

வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். படிக்கும் போதும், விளையாடும் போதும் பணியாற்றும் போதும், வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தார்கள். அவர் மிக உயர்ந்த பதவி வகித்த போதிலும், தன்னுடன் பணியாற்றுபவர்களை ஒரு பணியாளரைப் போலப் பார்க்காமல், நண்பர்களாகப் பாவித்தார் என்று படித்திருக்கிறேன். நண்பர்களுடன் இவர் ஒரு முறை ஒரு ஓட்டலுக்குச் சென்றபோது, அங்கு பரிமாறப்பட்ட உணவுகள் எதுவுமே சரியில்லை. சாப்பிடுவதற்கு ஏற்றவாறு உணவில் போதிய சுவையில்லை. மிகவும் சலிப்புடன் அங்கிருக்கும் ஊழியரைக் கூப்பிட்டார். சர்ச்சிலுக்கு ஒரே ஆச்சர்யம், அந்த ஊழியர் அவருடன் பள்ளியில் படித்தவர். அவரிடம்…….

என்னப்பா?..இங்கேயா வேலை செய்கிறாய். இந்த ஓட்டலில் சமைத்த உணவையா சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?… என்று கேட்டாராம்.

இல்லை, இல்லை, நான் இதுவரை இங்கு சாப்பிட்டது இல்லை. பணி செய்வதோடு சரி………என்றார் நண்பர்.

பழைய நட்பை மறவாத சர்ச்சில், அவருடைய நண்பருக்கு மாற்று வேலைக்குச் சிபாரிசு செய்து வேறு ஒரு பெரிய ஓட்டலில் வேலை வாங்கிக் கொடுத்தார், அவரும் தனது உழைப்பால், பின்னாளில் ஒரு ஓட்டலுக்கே முதலாளி ஆனாராம்.

நண்பனின் திறமையைத் தெரிந்து கொண்டு, அவனது திறமை வெளிப்பட வேண்டும் என்ற ஆர்வமுடைய “வின்ஸ்டன் சர்ச்சிலைப்’ போன்ற நண்பர்கள் எல்லோருக்கும் அமைந்து விட்டால், ஒவ்வொருவரது வெற்றிக்குப் பின்னாலும் ஒரு நண்பன் ஒளிந்து கொண்டிருப்பான். “என் வெற்றிக்குக் காரணம் என் நண்பன்தான்” என்று தங்கள் வெற்றியின் ரகசியத்தைப் பற்றிப் பிரபல தொழிலதிபர், பிரபல நடிகர், பல பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் இவர்களெல்லாம் பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும், தாங்கள் அடைந்த வெற்றிச் செய்தியை வெளியிடும்போது, நட்பின் மகத்துவத்தை உணர முடியும்.

சில நண்பர்களின் குணாதியங்களைப் பற்றி நாம் சிந்திக்கின்ற போது, நல்ல குணமும், அறிவும், உதவி செய்கின்ற மன பக்குவமும் உடைய நண்பர்களாக இருந்தால், அவர் மற்ற நண்பர்கள் கேட்கும் அனைத்து உதவிகளையும் பிரதிபலன் பாராமல் செய்து விடுவார். ஆனால் அவரிடம் மற்ற நண்பர்களின் பெருமை பற்றிப் பேசினால் அவருக்குப் பிடிக்காது. அவரிடம் பேசும்போது “தங்கள் தயவால்தான் எல்லாமும் நடந்தது” என்று சொன்னால் போதும், உயிரைக் கொடுத்தாவது உங்களுக்கு உதவுவார். பிடிவாதம் என்ற வகையில், வித்தியாசமான அவருடைய மனோபாவம் அவரிடம் ஒட்டிக்கொண்டிருக்கும். நமக்கு நண்பரிடத்தில் காரியம் ஆக வேண்டுமென்றால் அவருடைய பிடிவாதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். சில நண்பர்களோடு நாம் பழகும் போது நம் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை நமக்கு உருவாகும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நமது மனோபாவத்தை நாம் மாற்றிக் கொள்ள இயலாவிட்டால் மனோபாவம் நம்மை மாற்றி விடுமாம். ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட மனோபாவம் இருக்கும், எல்லோருக்கும் ஒரே மாதிரியான மனோபாவம் இல்லாமல், ஒவ்வொருவருக்கும் இது வேறுபடும். மானிடத்தின் மனோபாவத்தைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்ள இதிகாசங்களிலிருந்து ஒரு உதாரணத்தைக் காண்போம்.

ஒரு குருவாக இருப்பவர் தனது சீடர்களிடத்தில் இருக்கும் மனோபாவத்தை அறிந்து கொண்டால்தான் அவரால் முழுமையாகச் செயல்பட முடியும் என்கிறது இதிகாசம். மகாபாரத்தில் பாண்டவர்களுக்கும், துரியோதனாதியர்களுக்கும் குருவாக இருந்த துரோணாச்சார்யர், இருவரது மனோபாவங்களை அறிந்து கொள்ள இருவருக்கும் ஒரு தேர்வு வைத்தார். பாண்டவர்களின் சார்பாக தர்மரையும், துரியோதனாதியர்களின் சார்பாக துரியோதனனையும் அழைத்து, அவர்களுக்கு ஒரு கால அவகாசம் அளித்து, உலகில் உள்ள அனைவரையும் சந்தித்து மக்களின் மனதை அறிந்து வருமாறு கட்டளை இட்டார்.

“இந்த உலகம் மிகவும் கொடியது, இங்கே வசிப்பவர்கள் யாரும் நல்லவர்களாகத் தென்படவில்லை” என்றான் துரியோதனன்.

“கடவுள் அற்புதமான உலகத்தைப் படைத்திருக்கிறார். இந்த உலகத்தில் வாழுபவர்கள் தத்தம் திறமைக் கேற்றவாறு உழைத்து வாழ்கின்றனர்”. “நான் அறிந்த வரையில் எனக்கு எல்லோரும் நண்பர்களாகவும், நல்லவர்களாகவும் தென்படுகின்றனர்’……என்று சொன்னார் தருமர்.

எல்லோரையும் நண்பர்களாகவே பாவித்த தருமரைப் போல நமக்கும் நண்பர்கள் அமைந்து விட்டால், நட்பில் குறையொன்றும் இருக்க வாய்ப்பில்லையே!…..இரு ஒரு தர்ம சங்கடமான சிந்தனைதான்!……….

நாம் உயிருக்கு உயிராகப் பழகக்கூடிய ஒரு சில நண்பர்களோடு உரையாடும் போது, என்றோ ஒருநாள் ஒரு சில வாரத்தைகள் நம்மை பெரிதும் பாதிக்ககூடியதாக அமைந்து விடும். அதை நினைத்து, நினைத்து வருந்தாமல் அவரை மன்னித்து விடும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மன்னிப்பு என்பதைப் பற்றி விவரிக்க வேண்டுமானால், அஞ்சலில் இடம் இல்லை. சில சமயம் மன்னிப்பைப் பிறருக்கு வழங்கினால் மட்டும் போதாது. சில சமயம் உங்களை நீங்களே மன்னிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் நல்ல நண்பர்களைப் பெற முடியும் என்கிறது ஒரு ஆங்கில வாசகம்.

இது எல்லாவற்றையும் விட, ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தோடு நம் நண்பர்களை அணுகினால், எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. நண்பர்களை எடைபோட்டு, அவர்களோடு பழகும்போது, அவரவர்குரிய குணாதிசயங்களை மாற்ற எண்ணாமல், நம்மை நாமே அவர்களுக்கு ஏற்றவாறு அனுசரித்துப் பழகினோமானால் நட்புறவு நீடிக்கும். “நான் சரியாகத்தான் பழகிக்கொண்டிருக்கிறேன்’, “அவனும் சரியாகத்தான் பழகிக்கொண்டிருக்கிறான்’ என்ற கண்ணோட்டத்தில் எண்ணத்தை வளர்க்க வேண்டும். மேலோட்டமாக, யாரைப் பார்த்தாலும் சந்தேகப்படுவது, குறை காண்பது என்று வந்தாலும் நண்பர்கள் விலகி ஓடி விடுவார்கள். நண்பரைப் புரிந்து கொள்ளுகின்ற விதமும், பார்க்கும் கண்ணோட்டமும் சரியாக இருக்க வேண்டும் என்பதே நான் சொல்ல வந்த கருத்து. நண்பர்கள் நமக்கு உதவிகள் அல்லது உபத்திரவங்கள் செய்யா விட்டாலும், பாசமான நட்பு தொடராமைக்கும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ்வதும் இயலாமையாகி விடும்.

அதே போல், நாம் யாரிடம் பேசினாலும், சக ஊழியர்கள், சுற்றத்தார், உறவினர்கள், எதிர்பாராத விதமாகச் சந்திக்கும் சில நபர்கள் இப்படி யாராக இருந்தாலும், எப்பொழுதுமே இனிமையாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டுமாம். ஏனென்றால் நண்பர்களுடன் நாம் பேசிய அந்த இனிமையான வார்த்தைகள் கடைசி வார்த்தையாக அமைந்து விட வாய்ப்பு உண்டு. இனிமையாகப் பேசும் போது, நமக்குச் சில அனுகூலங்கள் கிட்ட வாய்ப்பும் உண்டு. ஒருவருக்குக் கண்களில் சில குறைபாடுகள் இருந்தது. அவர் பல வருடங்கள் மருத்துவம் பார்த்த பிறகும், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் விரக்தியான நிலையில், இனிமேல் சிகிச்சை எதுவும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். இந்த விஷயத்தை அவருடைய மனைவி, அவரின் நெருங்கிய நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்ட போது, நண்பர் அவருக்கு உதவ முன்வந்தார். முதலில் அவருக்கு அன்பான ஆறுதல் வார்த்தை சொல்லி, விரக்தி நிலையில் இருந்த அவரை மீண்டும் சிகிச்சைக்கு இணங்க வைத்தார். பாண்டிச்சேரி அரவிந்தர் கண்சிகிச்சை முகாமுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததில், கண்பார்வை இழக்க வேண்டிய நிலையில் இருந்த நண்பர், சிகிச்சை பலனளித்த போது கண்களில் இருந்த குறைபாடு நீங்கி விட்டது. தக்க சமயத்தில் நண்பனின் இனிமையான பேச்சுக்கூட இன்னொரு பிடிவாதம் என்ற இருளை அகற்றி வாழ்க்கைக்கு ஒளி ஊட்டியது.

உற்ற நண்பர் என்று சொல்லிக்கொண்டு, உயிருக்கு உயிராகப் பழகிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காரணத்திற்காக (பல முறை முயன்றாலும் என்னவென்று புரியாது) ஒரு சில நண்பர்கள் திடீரென்று நம் மீது வெறுப்பை அள்ளி வீசுவதையும் நாம் அனுபவத்தில் காணலாம். திடீரென்று நிகழுகின்ற இம்மாதிரிச் சம்பவங்கள், நாம் வாழும் காலம் முழுவதும் நம் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும். பல வருடங்கள் ஒரே இலையில் ஒன்றாகச் சாப்பிட்ட அருமை நண்பர்கள், அற்ப விஷயத்திற்காக, ஒரு சில நொடியில் பிரிய நேரிடுவதும் உண்டு. அதே போல் சற்றும் அறிமுகமில்லாத ஒரு நபர், எதிர்பாராவிதமாக ஒரு சில நொடிகளில் நம்முடைய கவனத்தை எல்லாம் கவர்ந்து, நம்முடைய பழக்க வழக்கங்களையே முற்றிலுமாகக் மாற்றக் கூடிய சம்பவங்களும் நிகழ்வதுண்டு.. இந்த மாதிரியான நண்பரைத்தான் நாம் என்றுமே தேர்வு செய்து கொள்ளப் பழக வேண்டுமாம்.

சக ஊழியர்கள், சுற்றத்தார், உறவினர்கள், எதிர்பாராத விதமாகச் சந்திக்கும் சில நபர்கள் கூட, பழகுவதைப் பொறுத்து உற்ற நண்பர்கள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதற்குமுன் அவர்களை நாம் அமிலச்சோதனை செய்த பிறகுதான், இவர் நமக்கு உற்ற துணைவனாக முடியுமா?… என்பதை தேர்வு செய்ய முடியும்.

எல்லோரிடமும் நாம் சுமூகமாகப் பழகுவதாக நினைத்துக் கொண்டு நண்பர்களிடமோ, சக ஊழியர்களிடமோ சில சாதாரண விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோமானால், அந்த நபர் கருத்து வேற்றுமை காரணமாக மற்றொரு நண்பரிடம் வேறுவிதமாகச் சொல்லிப் பிரச்சினைகளை உண்டு பண்ணவும் வழி வகுக்கும். அதனால் நம்முடைய நண்பர்வலை (Network) அறுபட வாய்ப்புகள் அதிகம். ஆக நண்பர்களின் தராதரத்தைத் தனித்தனியே எடை போட்டு மனதில் இருத்திக் கொண்டு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், அவரவர்க்கு ஏற்றார்ப்போல் செயல்பட்டோமானால் நண்பர்வலை அறுபடாது, பல தரப்பட்ட நண்பர்களையும் நழுவ விடாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.

ஏதாவதொரு இக்கட்டான சூழ்நிலையில் நண்பன் என்கின்ற முறையில் அவரோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கும் போது, அவர் அந்த விஷயத்தை மற்ற நண்பர்களிடத்தில் திரித்துச் சொல்லி நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்தி விடுவர். இவரைப் போன்ற குணங்களையுடைய நண்பர்களையும் நாம் புரிந்து கொள்வது சற்றுக் கடினம். ஒருவர் தன் நண்பரிடத்தில் “நான் காசிக்குச் செல்லலாம் என இருக்கிறேன், அங்கு சென்று ஒரு மாத காலம் தனியாக இருந்து தனிமையை அனுபவிக்க வேண்டும் என்பது என் “வாழ்நாள் ஆசை’ என்றார். அந்த நண்பரும் அவருடைய பிரயாணத்துக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். இந்த விஷயத்தில் நண்பருக்கு மிகவும் உதவிகரமாகவும் இருந்தார். நண்பனுக்கு உதவி செய்வது போல் உபத்திரவம் செய்ததை அறிய முடிந்தது. காசிக்குச் சென்ற நண்பனைப் பற்றி மற்ற நண்பர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா?….“அவனுக்குக் குடும்பத்தில் ஒட்டுதல் இல்லை, மனைவியையும் குழந்தைகளையும் வெறுக்கிறான், அதனால் காசி சென்று விட்டான், இனி திரும்புவானா?….என்பது சந்தேகம்தான்” என்று கதை கட்டி விட்டார். மற்றொரு நல்ல நண்பர் மூலம் அனைத்தையும் அறிந்த அவர், தனக்கிருந்த வில்லங்கமான நண்பனிடம் இருந்த “நட்பை’ காசியில் கங்கையிலேயே விட்டு விட்டு வந்து விட்டார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், நண்பர்களின் வழிகாட்டுதல் அவசியம் என்றாலும், சில சமயம் தவிர்க்க வேண்டிய நண்பர்களின் செயல்பாடுகளையும் நாம் ஆராய வேண்டியிருக்கிறது. அனுபவம் என்ற ஒன்றை முன்வைத்து, நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ள, பலதரப்பட்ட நண்பர்களின் குணாதிசயங்களைத் தெரிந்து கொண்டால், நிச்சயம் நண்பர்கள் நமக்கு வழிகாட்டுபவர்களாக அமைவார்கள் என்பதில் ஐயமில்லை.

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-15

  1. nalathoru natpu elorukum vendum . Arujunan, &Krishnan , Mr.Karunanithi & SAVI , MA.PO.SI&A.SA.GA many others.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.