மலர் சபா

புகார்க்காண்டம் – 05, இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

ஐவகை மன்றங்களில் அரும்பலி இடுதல் – பகுதி 2

கூனர் குள்ளர் ஊமையர் செவிடர்
அழுகும் நிலையிலுள்ள
உடலையுடைய தொழுநோயாளர்
மூழ்கி எழுந்த நிலையிலேயே
உடற்பழுது இல்லாமல் நீங்கி
பார்ப்பதற்கு இனியவராய்க் காட்சியுற்று
ஊர்வலம் வரச் செய்யும்
பொய்கையைக் கொண்ட மன்றம்
இலஞ்சி மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

பிறரின் வஞ்சனையதன் காரணமாய்
அவரால் மருந்தூட்டப் பெற்று
மனதில் பித்து ஏறியவர்கள்,
நஞ்சினை உண்டு
நடுங்கவைக்கும் துயர் உற்றவர்கள்,
நெருப்பு நிகர்த்த நஞ்சுடைய
பாம்பின் கூரிய பற்கள்
நன்கு அழுந்தக் கடிப்பட்டவர்கள்,
முழி பிதுங்கிக் காணப்படும்
பேயினால் பிடிக்கப்பட்டுக்
கடுந்துன்பப் பட்டவர்கள் —

இவர் அனைவரும்
ஒருமுறை சுற்றி வந்து
தொழுது நின்|ற அளவிலேயே
அவர்தம் துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பெருகும்பொருட்டு
ஒளிவீசும் நெடிய கல் நாட்டி நின்ற மன்றம்
நெடுங்கல் மன்றம் என்றே அழைக்கப்பட்டது.

தவக்கோலத்தில் மறைந்து திரியும்
தகாத தன்மையுடைய போலித்துறவிகள்,
கணவன் அறிந்திடா வண்ணம் மறைந்து
தீய ஒழுக்கத்தில் ஈடுபடும்
ஒழுக்கங்கெட்ட பெண்கள்,
தம் அரசனுக்கே உட்பகை
விளைவிக்க எண்ணும் அமைச்சர்கள்,
பிறர் மனைவியை விரும்புபவர்கள்,
பொய்சாட்சி சொல்பவர்கள்,
புறங்கூறித் திரிபவர்கள் —

“இவர்கள் யாவரும் நான் வீசும்
என் கைக்கயிற்றுக்குள் அகப்படுவர்”
என நாற்காததூரமும் கேட்கும்படிக்
கடுங்குரலில் எச்சரித்து,
அவரைத் தரையில் அறைந்து கொன்று உண்ணும்
பூதம் நின்ற மன்றம்
பூத சதுக்கம் என்றேதான் அழைக்கப்பட்டது.

அரசனவன் செங்கோல்
சற்றே தவறிடினும்
அறமது உரைக்கப்படும் அவைதனில்
நீதிநூல் நெறி வழுவ
ஒரு பக்கம் சார்ந்த தீர்ப்பு கூறப்படினும்
தன் நாவால் அத்தவறுகளை நவிலாது
தன் கண்களில் நீர் உகுத்து வருந்தியே
பாவை ஒருத்தி நின்று அழுகின்ற மன்றம்
பாவை மன்றம் என்றேதான் அழைக்கப்பட்டது.

உண்மையான வாழ்வியல் நெறியை
உணர்ந்த சான்றோரால் போற்றப்படும்
ஐவகை மன்றங்களிலும் அரும்பலி இடப்பட்டது.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 118 – 140
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram12.html

படத்துக்கு நன்றி:
http://newindiantourism.blogspot.in/2010_03_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.