மலர் சபா

புகார்க்காண்டம் – 05. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை

விழாவின் தொடக்கமும் முடிவும் முரசறைந்து அறிவித்தல்

விழாவின் தொடக்கமும்
என்று எப்போது என்ற விளக்கங்களை
வள்ளுவன் முரசறைந்து அறிவிப்பது வழக்கம்.

அம்மரபதன்படி
வச்சிரக்கோட்டத்து மங்கல முரசை,
அலங்காரம் செய்த கச்சினையணிந்த
யானையின் பிடரியில் ஏற்றி,
தூய வெண்மையான யானை நிற்கும்
இந்திரன் தோட்டத்துச் சென்று
அங்கிருந்தபடியே
விழாவின் தொடக்க நாளும்
முடியும் நாளும்
முரசறைந்து முறையே அறிவிக்கப்பட்டது.

கொடியேற்றம்

இப்பூமியில் இந்திரன் வந்து
தங்கிய இடம் என்ற பெருமை உடைத்து
கற்பகத்தரு நின்ற கோட்டம்;
அக்கோட்டத்துக்குச் சென்று
ஐராவதம் எழுதிய
மங்கல நெடுங்கொடியை
வானின் உயரத்துக்குப்
பறக்குமாறு ஏற்றினர்.

வீதியின் மங்கலத் தோற்றம்

பசும்பொன்னால் அமைக்கப்பட்டிருந்தன
விழாவீதிகளில் இருந்த
பெரிய மாளிகைகளின் திண்ணைகள்.

மரகதமணிகள் வைரமணிகள் இழைத்திருந்த
பவளத்தூண்கள் நின்றிருந்தன
அத்திண்ணைகளில்.

கிம்புரி எனும் பூணுடன் கூடிய கொம்பையும்
முத்துச் சிப்பிகளைப் பிளந்து பெற்ற
ஒளிபொருந்திய முத்துக்களையும்
மங்கலம் பொருந்திய அழகிய ஓவியங்களையும்
மாலை வடிவில் வளைத்து அமைக்கப்பட்ட
மகரத் தோரணங்கள் அலங்கரித்தன
அம்மாளிகைகளின் வாயில் தோறும்.

மாசற்ற பசும்பொன்னால் ஆன
பூரண கும்பங்கள்,
பொலிந்து விளங்கும்
முளைப் பாலிகைகள்,
பாவை விளக்கு,
பசும்பொன்கொடி,
வெண்சாமரம்,
சுந்தரமான சுண்ணம் —
இவையனைத்தும் நெருக்கமாக
வீதியெங்கும் வைக்கப்பட்டு
இந்திரனை வரவேற்கக் காத்திருந்தன.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள்: 141 – 150
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram12.html

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள்: 151 – 156
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram13.html

படத்துக்கு நன்றி:
http://thamizhan-thiravidana.blogspot.in/2011/10/76-1.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *