இந்த வார வல்லமையாளர்!

திவாகர்

இந்த வாரம் ஒரு உருப்படியான கேள்வியை உங்கள் முன் வைக்கப்போகிறேன். நீங்கள் கருணைக் கொலையை ஆதரிக்கிறீர்களா  இல்லை அது கூடவே கூடாதா..

அமெரிக்காவில் இப்படி ஒரு கருணைக் கொலை செய்து வந்த டாக்டர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். முதுமை மிக மிக அதிகமான நிலையில் உயிர் வாழ சிரமம் என்றும், தீர்க்கப்படமுடியாத நோயால் அதற்கு முடிவு காண விரும்பி உயிரைத் துறப்பதற்கு அவர்களது முழு சம்மதத்துடன் முன்வந்தோர்களைக் கருணைக் கொலை செய்தார் என்பதுதான் அந்த மருத்துவரின் மீது குற்றச்சாட்டு. இந்த கோமா நிலையில் போய்விட்டவர்கள், நினைவு முழுவதும் மழுங்கி என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் வாழ்பவர்கள் கூட இந்த மருத்துவரின் கருணைக் கொலையில் அடங்குவர்.

ஆனால் இந்த வாரம் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், திரு சக்தி சக்திதாசன் அவர்களால் இப்பேர்ப்பட்ட நிகழ்ச்சி ஒன்று நம் அனைவரின் பார்வைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

”மனித வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம். இன்பம், துன்பம் மாறி, மாறி வாழ்க்கையில் வந்து போகின்றன. சில நேரங்களில் அழுகை, சில நேரங்களில் சிரிப்பு, சில நேரங்களில் கொதிப்பு, சில நேரங்களில் வெறுப்பு என எமது மனம் மாறி மாறி வித்தியாசமான உணர்வலைகளினால் பாதிக்கப்படுகின்றன.எத்தனையோ விதமான சவால்களையும் சந்தித்து வாழ்க்கையில் வெற்றியடைவோர் பலருண்டு. ஆனால் வேறு சிலரோ காலம் தம்மீது வீசும் துன்பச்சுழலைத் தாங்க முடியாது தமது உயிரைத் தாமே பறித்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.கடந்த வாரம் இங்கிலாந்தில் இத்தகைய ஒரு சூழல் காரசாரமான விவாதத்தைக் கிளப்பி விட்டிருக்கின்றது. அது என்ன என்பதுதானே உங்கள் கேள்வி ?

என்னுடைய உயிரை நானே எடுத்துக் கொள்ளும் தீர்மானத்திற்கு துணை போகிறவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கணிக்கப்பட வேண்டுமா? என்னும் வாதப் பிரதிவாதங்கள் கிளப்பி விட்ட சர்ச்சைதான் அது.”/ https://www.vallamai.com/paragraphs/25489/

இந்தக் கடிதத்தை முழுதும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் சிந்தனைகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அதே சமயத்தில் மிக அருமையான சிந்தனைக்குரிய விஷய்த்தை இங்கு கொண்டு வந்தமைக்கு திரு சக்தி சக்திதாசனை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு சார்பாக மிக மகிழ்ச்சியாக தேர்ந்தெடுக்கிறோம். திரு சக்தி சக்திதாசன் அவர்களுக்கு எங்கள் பாராட்டுதல்களும் உரித்தாகுக.

கடைசி பாரா: இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி? என்று கட்டுரை எழுதி சிறப்புப் பரிசு பெற்ற கட்டுரை இணையத்தினைப் பற்றிய பல  விஷயங்களை நமக்குச் சொல்கிறது. திருமதி  .ஹூசைனம்மா அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வல்லமையாளர்!

 1. அன்பினிய வல்லமை நிர்வாகத்தினருக்கும், அருமை வாசக அன்பர்களுக்கும் எனது பணிவு கலந்த அன்பான நன்றிகளுடன் கூடிய வணக்கங்கள். .

  உங்கள் அன்புடன் கூடிய இந்த விருதுக்கு நான் ஏற்றவன் தானா என்பது ஒரு புறமிருக்க , இவ்வழகிய இதழினை சுவை குன்றாது வழிநடத்தி வரும் அன்பினுமினிய நிர்வாகத்தினருக்கும், சுவையுடன் கூடிய பல பதிவுகளைப் பலகோணங்களிலிருந்து படைத்து வரும் அனைத்து அன்புப் படைப்பாளிகளுக்கும் உங்கள் அனைவரினதும் உழைப்பின் வெற்றியே இத்தகைய விருதுகள் என்பதனை நான் மறந்து விடவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
  நான் லண்டனுகு வந்த நாள் முதல் மிகவும் ரசித்து, அனுபவித்து கேட்டு வந்த ஒரு பி.பி.ஸி வானொலி நிகழ்வு அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஒரு இங்கிலாந்து நாட்டவரான “அலிஸ்டர் குக் (Alister Cook)” என்பவர் அளித்து வந்த ” எ லெட்டர் வுரம் அமெரிக்கா (A letter from America) எனும் நிகழ்வாகும். அந்த நிகழ்வில் அவர் அமெரிக்க நிகழ்வுகளை உண்மை குன்றாது சுவைபடத் தரும் வகை என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டிருந்தது. அந்த வகையில் நான் இங்கிலாந்தின் நிகழ்வுகளை எனது இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியதின் விளைவே “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்” பிறந்த கதையாகும். எனது மனதில் ஒரு மாபெரும் இடத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் மகாகவி பாரதியார் அவர்கள் தனக்கு தெரிந்த ஒருவருக்கு இறுதி நாட்களில் எழுதிய மடலில் “தம்பி உன் உள்ளத்தில் உண்மையிருந்தால் எழுதுகோலை எடு, எழுது ” என்று குறிப்பிட்டிருந்த வாசகம் எனது உள்ளத்தில் பசுமரத்தாணி போல பதிந்து விடடது. இதை அடிப்படையாக வைத்தே எனது படைப்புக்களை நான் தொடர்ந்து வருகிறேன். இன்று நேற்றல்ல நன்பர் எழுத்தாளர், கல்கி நிர்வாக ஆசிரியர் திரு வெங்கடேஷ் அவர்கள் தமிழ் சிபி.காம் இணையத்தளத்தில் எழுதுங்கள் என்று அழைப்பு விடுத்த நாளிலிருந்து இவ்வகையான இணையத்தளத்திற்கு எழுதிக் கொண்டேயிருப்பது எனது மனதுக்கு ஒரு இதமான சுகத்தைத் தருகிறது. நண்பர் வெங்கடேஷைத் தொடர்ந்து அதே பாணியில் தம்பி அண்ணாகண்ணனின் நிர்வாகத்தில் சென்னை ஆன் லனிலும் வல்லமை இதழிலும் எனக்கு தொடர்ந்த ஆதரவைத் தந்தார்கள், தற்போது வல்லமையின் நிர்வாகக் குழுவினரும், ஆசிரியர் பவள சங்கரியும் அனைத்திற்கு மேலாக படைப்புகளைப் படித்து ஆதரவு தரும் அன்பு நெஞ்சங்களும் என் நெஞ்சில் கொழுந்து விட்டேறியும் எழுத்துத் தாகத்தை தணிய விடாது காப்பாற்றி வருகிறீர்கள்.
  நான் அடிக்கடி சொல்வது போல என் கைவிரல்கள் வளைந்து கொடுக்கும் வரை, அவற்றின் வலு குறையாதவரை, தமிழன்னை என்னை அணைத்திருக்கும் வரை எழுதிக் கொண்டேயிருப்பேன் என்பதே எனது இலட்சியம். எனக்கு நீங்கள் கொடுத்த இந்த விருதை இந்த இணையத்தளத்தையும், இது போல இன்னும் பல இணையத்தளங்களையும் ஒளிரச் செய்து கொண்டிருந்த, செய்து கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்.
  “தமிழைப் பாடுவேன், தமிழைப் பாடுபவர்களைப் பாடுவேன்”
  அன்புடன்
  சக்தி சக்திதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *