மனோகரன்

ஆபீஸ் வந்து சீட்ல உக்காந்து ஒரு மணி நேரமாச்சு. வேலையே ஓடல. நேத்து ராத்திரி நடந்ததுதான் அப்படியே கண் முன்னாடி ஓடுது. சாப்டுட்டு கொஞ்ச நேரம் டிவி முன்னாடி உக்காந்து கண்ணீர் சிந்திட்டு படுக்க வந்தேன். அப்பதான் என் மனைவி பத்மா ஆரம்பிச்சா.

ஏங்க நாளைக்கு அடுத்த நாள் ஆபீஸ்க்கு லீவ் சொல்லிட்டீங்கில்ல?

இப்பத்தானடி 4 நாள் முன்னால் லீவு போட்டேன். இப்ப சரியில்லை
எதுக்கு லீவு?

என்ன மறந்துட்டீங்களா? என் பெரியம்மா பொண்ணோட பேத்திக்கு நாளைக்கு காதுகுத்தல் செங்கல்பட்டு போகனும்னு போன மாசமே சொன்னேல்ல?

ஏண்டி இப்படி ஒவ்வொன்னுக்கும் நான் வரணும்னா எப்படி? ஆபீஸ் என்ன உங்க பாட்டனோடதா? அடிக்கடி லீவ் லீவ்னா ஒரேயடியா அனுப்பிச்சுருவானுங்க. பேசாம நீ மாத்திரம் போயிட்டுவா. அவ்வளவுதான்.

சொல்லிட்டு திரும்பி படுத்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பி படுத்தா தூங்காம உக்காந்து கண்ண கசக்கிக்கிட்டிருக்கா!

என்னடி இது – அப்படின்ன உடனே ஆரம்பிச்சுட்டா

ஏங்க நான் உங்களை அது வேணும் இது வேணும்னு கேக்கறேனா? ஒரு நாள் லீவபோட்டுட்டு கூட வாங்கன்னு கூப்புடறேன் அது கூட முடியாதா?

அது இல்லடி அடிக்கடி லீவ் கேக்க முடியாது. முன்ன மாதிரி இல்ல இப்ப ஆபீஸ்.

ஆமா நீங்க போகாலைனா அப்படியே நின்னுடபோகுதாக்கும் ஆபீஸ்?

சரி பாக்கலாம் இப்ப தூங்கவுடு அப்படின்னு கட் பண்ணிட்டு தூங்கிட்டேன். காலைல எந்திரிச்சு புறப்படும்போது ‘ஏங்க லீவ் ஞாபகம் இருக்கில்ல?’ அப்படின்னு உண்மையிலேயே நான் மறந்து போன விஷயத்தை ஞாபகப்படுத்தினா. சரி சரின்னுட்டு வந்துட்டேன்.

இப்ப ஆபீஸ்ல எப்படி கேக்கறதுன்னு புரியலை. இதோ யோசிச்சிக்கிட்டே மணி 4 ஆச்சு. இந்த மாசம் ஏற்கனவே 3 நாள் லீவ் போட்டாச்சு. சரி ஆனது ஆகட்டும் கேக்கலாம்னு மேனேஜர் கிட்ட போனேன்.
‘சார் எனக்கு அர்ஜென்டா நாளைக்கு ஒரு நாள் லீவ் வேனும்.’

எதுக்கு?

அது வந்து பாட்டிக்கு உடம்பு சீரியஸா இருக்கு. அதுதான் சார்.

ஏன்யா 10 நாளைக்கு முன்னாடி தாத்தாவுக்கு 3 நாள் முன்னாடி பொண்டாடிக்கு இப்ப பாட்டிக்கா? ஏன்யா இப்படி பொய் சொல்றீங்க? போய் வேலையப் பாருங்கையா..

நான் கெஞ்சி கூத்தாடி இன்னும் ஒரு மாசத்துக்கு லீவே போடமாட்டேன்னு சத்தியம் பண்ணி லீவ் வாங்கிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்து காபி குடிச்சிட்டு டிவி பாத்திட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு பத்மாவோட குரல் சத்தமா கேட்டுச்சு.

‘லீவ்வெல்லாம் கிடையாது இப்பத்தான போனமாசம் ஒரு நாள் வரல?’

யார்கிட்ட கத்தறான்னு புரிஞ்சிடுச்சு. வேலைக்காரிகிட்டத்தான்.

‘அம்மா எங்க பாட்டிக்கு உடம்பு சீரியஸ்ன்னு இப்பதான் போன் வந்திச்சம்மா அதான்’

யாரோ மண்டைல அடித்தது போல இருந்தது. நாம் காலையில சொன்னத இவ சாயிந்தரம் சொல்றா.. அவ்வளவுதான்.

அந்த தலைப்பாக்கட்டு மீசைக்காரன் பாட்டுத் தான் ஞாபகம் வந்திச்சு

”கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாந் தான் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்.
ஏனடா நீ நேற்றைக்(கு) இங்கு வரவில்லை யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்.
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்.
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.
ஓயாமற் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்கவொன்று செய்வார்.
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்.
உள் வீட்டுச் சேதியெலாம் ஊரம்பலத்(து) உரைப்பார்.
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.”

நம்ம எல்லாருமே சேவகர்கள் தானே!!!!!!!!!!!!

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பாட்டிக்கு உடம்பு சரியில்லை

  1. அருமையான் ஈற்றடி: ‘நாம் எல்லோருமே சேவகர்கள் தானே!’ சாமான்ய மனித இயல்பின் அழகான பிரதிபலிப்பு.
    அன்புடன்
    ஸம்பத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *