தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-9)
முகில் தினகரன்
“ம்ஹூம்… நீங்க எதையோ மறைக்கறீங்க!….சரி…பரவாயில்லை…இந்த ஆக்ஸிடெண்ட் சமாச்சாரம் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் தெரியுமா?”
“தெரியாது!…கல்யாண சமயத்துல அவங்க இதைப் பெரிய விஷயமாக்கி வீண் களேபரம் பண்ணிடுவாங்க!…அதான் மறைச்சிட்டேன்!”
“இப்ப சொல்லிடலாமல்ல?”
“அதான்…எல்லாம் சரியாயிடுச்சே!….இனிமே எதுக்கு சொல்லணும்?”
“சரி…இப்ப என்கிட்டயாவது…சொல்லுங்க…எப்படி ஆச்சு இந்த ஆக்ஸிடெண்ட்?” விடாமல் கேட்டாள்.
இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக்குவோமென்று முன்னமே தெரிந்திருந்தால் ஒரு ஆக்ஸிடெண்ட் சீனை கற்பனையாவது பண்ணி வெச்சிருந்திருப்பான்.
“அது…வந்து…அதான்..ஒரு ஸ்கூட்டர்க்காரன் வேகமா வந்து இடிச்சிட்டான்!…ஹேண்டில் பார் வயித்துல குத்திடுச்சு…” திக்கித் திணறி ஒரு பொய்யைச் சொல்லி முடித்தான்.
“த்சொ…த்சொ!…இப்ப எப்படியிருக்கு?…சரியாயிடுச்சுதானே?” நிஜ அக்கறையுடன் கேட்டாள்.
“ம்…ம்..அதான் ஆறிடுச்சு சொன்னேனே!” என்றவன், சட்டென சுதி இறங்கி தணிவான குரலில், “மைதிலி…மைதிலி…இதை அம்மாகிட்டேயும்…தங்கச்சிகிட்டேயும் தயவு செய்து சொல்லிடாதம்மா!” கொஞ்சலாய்க் கெஞ்சினான்.
தலையைச் சாய்த்து சிரித்தவள், “கவலைப்படாத…சொல்ல மாட்டேன்!” என்று சொல்லிவிட்டு, போகிற போக்கில் அவன் மூக்கைப் பிடித்துத் திருகி விட்டுப் போனாள்.
“ஏய்…ஏய்…வலிக்குதல்ல?” கத்தியபடியே மூக்கைத் தேய்த்தவன், அவள் வெளியேறியதும், “அப்பாடா!…எப்படியோ இன்னிக்குச் சமாளிச்சாச்சு…ஹூம்…என்னிக்கு மாட்டப்போறேனோ தெரியலை!”
—–
சுந்தர் வீட்டிலிருந்து திரும்பி வந்த மைதிலி, அந்தச் சந்தோஷத்தின் தாக்கத்துடனேயே வேக வேகமாகத் தன் வீட்டிற்குள் நுழைந்தாள். வந்த வேகத்தில் கதவருகே நின்று கொண்டிருந்த தன் தாயாரைக் கவனிக்காமல் படாரென்று மோதினாள்.
இவள் மோதிய வேகத்தில் தன் கைகளிலிருந்த பொருட்களை நழுவ விட்டு விட்ட அவள் தாயார், “அடக் கர்மம் பிடிச்சவளே!…உனக்கு கண்ணு என்ன முதுகிலேயா இருக்கு?…” திட்டிக் கொண்டே தரையில் கிடந்த மண்ணெண்ணைக் கேனை குனிந்து எடுத்தாள்.
“அய்யய்யோ….கவனிக்கலைம்மா!….”என்றவாறு அம்மாவின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டி, சமாதானப்படுத்த முயன்றாள் மைதிலி.
“சரி…சரி…ஐஸ் வெச்சது போதும்…போ…போய் ரேஷன்ல இன்னிக்கு கெரஸின் ஊத்தறாங்களாம்…வாங்கிட்டு வா!”
“போம்மா…நான் மாட்டேன்!”
“அப்ப சமையல் வேலைய நீ பாரு!…நான் போய்க் கெரஸின் வாங்கியாறேன்!”
யோசித்த மைதிலி, “சமையல் வேலையா?…அய்யோ எனக்கும் அதுக்கும் காத தூரமாச்சே…அதுக்கு பேசாம ரேஷன் கடைக்கே போயிடலாம்!…கொண்டா…நானே போயிட்டு வர்றேன்!”
—–
ரேஷன் கடையில் அன்று எக்கச்சக்க கூட்டம்.
வரிசையில் நின்று கொண்டிருந்த மைதிலிக்கு எரிச்சலாயிருந்தது.
ஆண்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த ரெண்டு பேர் இவளை அடிக்கடி விஷமமாய்ப் பார்ப்பதும், பிறகு அவர்களுக்குள்ளாகவே எதையோ பேசிச் சிரிப்பதுமாயிருந்தனர்.
“சில்லரை நாய்க!…சீமெண்ணை வாங்கினதும் அப்படியே அதைய இவனுக தலையில ஊத்திக் கொளுத்தணும்!” உள்ளுக்குள் புழுங்கினாள்.
அந்த ரெண்டு பேருக்கும் முன்னால் சட்டையணியாமல் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் அவர்களின் சேட்டையைப் புரிந்து கொண்டு, “ஏம்பா…நீங்க ரேஷன் கடைக்கு கெரஸின் வாங்க வந்தீங்களா?…இல்லை…பொட்டைப் புள்ளைகளை
நோட்டம் போட வந்தீங்களா?” என்று மைதிலியின் சார்பில் குரல் கொடுக்க,
அந்த ரெண்டு பேரும் கொஞ்சம் அடங்கினார்கள்.
நன்றியுடன் அந்த நடுத்தர வயதுக்காரரைப் பார்த்துச் சிரித்த மைதிலி அப்போதுதான் கவனித்தாள் அந்த மனிதரின் வயிற்றின் ஓரத்தில் இருந்த அந்தத் தழும்பை. “அட…இதென்ன இந்தாளுக்கும் சுந்தர் மாதிரியே வயத்தோரத்துல தழும்பு?…இவன் மேலேயும் எவனாவது ஸ்கூட்டர்க்காரன் மோதிட்டானா?”
தன் முறை வந்ததும் கெரஸினை வாங்கிக் கொண்டு, தெருவில் இறங்கி நடந்த மைதிலி முன்னே அந்த நடுத்தர வயதுக்காரரும் நடந்து சென்று கொண்டிருக்க, “அண்ணே…அண்ணே!” அழைத்தாள்.
அவர் நின்று, திரும்பிப் பார்த்தார்.
வேக வேகமாய் எட்டு வைத்து அவரை நெருங்கியவள், “அண்ணே…உங்களை ஒண்ணு கேட்கலாமா?”
மெலிதாய் முறுவலித்தவர், “என்னம்மா?…என்ன கேட்கப் போறே என்கிட்ட?”
“வந்து…வந்து…இது என்னண்ணே…தழும்பு?….ஸ்கூட்டர்க்காரன் இடிச்சிட்டானா?” அவரின் வயிற்றுத் தழும்பைக் காட்டி அப்பாவித்தனமாய்க் கேட்டாள்.
“இதுவா?….இது ஒரு பெரிய கதைம்மா…!” என்றார் அவர் தன் தழும்பைத் தேய்த்தபடி.
“கதையா?…என்னண்ணே சொல்றீங்க?”
(தொடரும்)
படத்திற்கு நன்றி: http://www.thehindubusinessline.com/news/states/article3798827.ece