நூ. த. லோகசுந்தரம்

சைவத்தின் முதுபெரும் குரவன்மாரில் திருவஞ்சைக்களம் வரை சேர நாட்டிற்குச் சென்று தேவாரம் பாடியவரும் சேரமான் பெருமானுடன் கயிலாயமும் சென்றவரான 8 ம் நூற்றாண்டினர் சுந்தரமூர்த்தி நாயனார் குறித்த வைப்புத் தலங்களில் ஒன்று *குரக்குத்தளி*. இன்றைய கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கிய கொங்கு நாட்டில் திருமுருகன்பூண்டி அவிநாசி, எனும் தலங்களுக்குத் தேவாரம் பாடியவரும் கோவை மாநகர் மேற்குள்ள பேரூர் தலத்தை மீண்டும் குறித்தவரும் அந்நாயனாரே.

குரக்குத்தளிக் கோயில், அவிநாசி பூண்டி போன்று *திருப்பூர் நகருக்கு மிக அணித்தே* நொய்யல் ஆறு வடக்கே ஊத்துக்குழிச் சாலையில் 5 கிமீ தூரம் (சர்க்கார்) பெரியபாளையம் என இந்நாள் வழங்கும் ஊரின் மேல் வளாகத்தில் உள்ளது.

தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வர, வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கல்வெட்டுகள் பல உள்ள கோவிலுமாகும். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் படிமம் அமைத்து அதன் முன் விளக்கு எரிக்க சுந்தரபாண்டியன் காலத்தில், இவ்வூரின் வடுக செட்டி அளித்த நிவந்தம் குறிக்கப்படும் ஓர் கல்வெட்டும் உள்ளது. வடுகநாட்டிலிருந்து வந்தோர் வழி வந்தவராதலால் அவர் *வடுகபிள்ளை*ஆனார். ஞானசம்பந்தரை ஆளுடையபிள்ளை என்பார் நம்பியாண்டார் நம்பி. நாற்பெரும் குரவர்களில் ஏனைய இருவரை ஆளுடை அரசு (அப்பர்) ஆளுடைய நம்பி (சுந்தரர்) என வழங்கும் சைவமரபு.

“முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன்பூண்டி மாநகர்” என வடுகர் பெருது வாழ்ந்த ஊராக சுந்தரரின் திருமுருகன்பூண்டிப் பதிகம் குறிக்கும்.

சுந்தரமூர்த்தி நாயனார் தன் ஊர்த்தொகைப் பதிகத்தில் குரக்குத்தளியை இவ்வாறு குறித்துள்ளார்

“கொங்கில் குறும்பில் *குரக்குத்தளி*யாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குல் புறங்காட்(டு)ஆடீ அடியார் கவலை களையாயே” 7.47.2

இத்தலம் கொங்கு மண்டலத்தில் அப்பழங்காலத்தே குறும்பர் மிக்கு வாழ்ந்த இடத்தமைந்தமை காட்டப் படுகின்றது. குறும்பு செய்யும் வேட இனத்தவர் ஆறலைப்பதை திருமுருகன்பூண்டி பதிகப்பாடல்களில் பெரிதும் குறிக்கக் காணலாம். (இக்காலத்தும் குறும்புகள் செய்த வடுக இன வீரப்பன் வாழ்ந்த பகுதி)

“கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்(டு) ஆறலைக்கு மிடம்”

“வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளுமிடம்”

“பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவமொன் றறியார்
உயிர்க்கொலை பல நேர்ந்து நாடொறும் கூறை கொள்ளுமிடம்”

“பீறல்கூறை உடுத்(து)ஓர் பத்திரம்கட்டி வெட்டனராய்ச்
சூறைப் பங்கியராகி நாடொறும் கூறை கொள்ளு மிடம்”

“தயங்கு தோலை உடுத்த சங்கரா வேடுவர் கூறை கொள்ளும்” (7.49)

குரக்கு = குரங்கினைக் குறிக்கும் பழஞ்சொல். தேவாரத்தில் *குரக்குக்கா* ஓர் சோழநாட்டுத்தலம்.அடி குறுகிய பாடல்கள் பத்துப் பத்துக் கூறுகளாக வைக்கப்பட்டுள்ள சங்கநூல் ஐங்குறுநூறு. அதனில் ஓர் தலைப்பு *குரக்குப்பத்து*.அப்பாடல்களில் குரங்கினம் குறிக்கக் காணலாம்.

இந்நாள் மக்களோடு இணைந்து அவர்கள் மனங்களைக் கவர எழுந்த புராணங்கள் வழி குரக்குத்தளி *சுக்கிரீசுவரர்கோயில்* எனப் பெயர் கொண்டது. பெரும் தொழில் நகரமாம் ‘திருப்பூர்’ நகர எல்லைக்குள் இருப்பதால் மக்களால் நாளும் சென்று வழிபட்டு நன்கே போற்றப்பட வேண்டிய கோயிலாக மாற்றப் பட வேண்டும். முதற்கண் பூண்டி, அவிநாசி போன்று தேவாரத் தொடர்புடையத்தலம் *(சர்க்கார்)பெரிய பாளையத்தில்* உள்ளது என நன்கே விளம்பரப்படுத்த வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும். ஏனெனில் திருப்பூரிலேயே வாழும் இறைவழிபாட்டில் நாட்டமுடைய பழங்குடிகள் பலருக்கு இத்தலத் தொன்மைப் பெருமை அறியாத ஒன்றாக உள்ளது.

திருவாசகம் பாடிப் புகழ் பெற்ற மாணிக்கவாசகரை சுந்தரபாண்டியன் காலத்து, *பாளைநல்லூர்* மக்கள் நன்கே போற்றியது போல் இன்றும் பெருநகராம் திருப்பூர் மக்கள் நாயனாருக்கு மீண்டும் பெருமை சேர்க்க வேண்டும். அருகில் மேற்கே ‘கூலிப்பாளைய’ நீத்தேக்கமும் உள்ளது. இதனுடன் இணைத்து நகர மக்களுக்கு விடுமுறை மகிழுலாத் தலமாக, தக்கோர் ஆவன செய்து, சிறப்பிக்கவும் கூடும்

 

(முதல்பகுதி முடிவு)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க