துளியில் மலர்ந்த பூக்கள்

சாந்தி மாரியப்பன்

மலர்தலும் உதிர்தலும்
இயல்பெனினும்
காலக்கணக்கில் கட்டுண்டு நிகழாமல்
சிறு தூறலிலும்
உடன் மலர்ந்து விடுகின்றன
சாலைச்சோலையில்
பூக்கள்… குடைகளாய்;
தேனருந்தும் வண்டுகள்தாம்
மூக்குடைந்து திரும்புகின்றன
முயற்சியில் தோற்று.

ஊன்றுகோலாகவும் ஒத்தாசை செய்யும்
முதுகு வளைந்த
முதிய தலைமுறையினர் முன்
வெட்கிப் பதுங்கிய
நாகரீக இளைய தலைமுறையினர்
அடைக்கலம் தேடுகின்றனர்
கைப்பைகளுக்குள்,
மூன்று சாண் உடம்பை
ஒரு சாணாய்க் குறுக்கியபடி.

ஆரவாரத்துடன் நாட்டு வளம் காண
பாய்ந்து வந்த நொடியில்
சரேலென்று பறந்த
கறுப்புக்கொடிகள் கண்டு
திரும்பி விட எத்தனித்தாலும்
குடை மடக்கி உடல் நனைத்து
நா நீட்டி மழை ருசித்த
ஒரு ஈர மனதை மேலும் குளிர்விக்கத்
திரும்பி வருகிறான்
வருண தேவன்.

 

படத்திற்கு நன்றி: http://theghettogurls.blogspot.in/2010/06/shopping-for-rainy-days.html

4 thoughts on “துளியில் மலர்ந்த பூக்கள்

 1. /* சிறு தூறலிலும்
  உடன் மலர்ந்து விடுகின்றன
  சாலைச்சோலையில்
  பூக்கள்… குடைகளாய்; */   அருமை..அருமை..

 2. வண்டுகளின் மூக்குடைத்தாலும்,
  வருணபகவானை வரவேற்கும்
  தொண்டுளம் கொண்ட
  தங்களின் கைக்குடை
  நல்ல கவிக்கொடை…!
           -செண்பக ஜெகதீசன்…

 3. இயற்கை நம் மீது கொண்ட பெருங்கருணையாலும், இவ்வியற்கையை கண்கள் விரிய ரசித்து சிலாகிக்கும் கவிமனங்கள் இருப்பதாலும் தான் வாழ்க்கை இனிதாகின்றது.

  மென்மையான, அழகிய கவிதை. வாழ்த்துக்கள் தோழி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க