சு.கோதண்டராமன் 

தினந்தோறும் மாலை 5, 5 1/2 மணிக்கு மேல் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு சுற்றிலும் நாற்றம். இது 10 நிமிடத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை நீடிக்கிறது. எங்கிருந்து தோன்றுகிறது என்பது தெரிந்தால் தானே அதை நிவர்த்திக்க வழி தேட முடியும். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை. இதைப் போல நூற்றுக் கணக்கான புகார்கள் தினமும் வருகின்றன. அவர்கள் எதை என்று கவனிப்பார்கள் ?      

அந்தி நேரத்தில் வீட்டில் அடைந்து கிடக்காதே. கோவிலுக்குப் போ என்று இறைவன் தடுத்தாட் கொள்வதாக எடுத்துக் கொண்டு அருகிலுள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றேன். கோவில் வாசலில் ஒரு திறப்பிலிருந்து நாற்றம் பெருமளவில் வந்து கொண்டிருந்தது. ஜகன்மாதாவின் இருப்பிடம் தான் நாற்றத்திற்கும்  பிறப்பிடமா? உலகிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவள் அன்னை காமாட்சி என்பதற்குப் புதிய விளக்கம் கிடைத்தது.

மறுநாள், சற்றுத் தொலைவிலுள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். கோயில் வாசலில் பாதாள சாக்கடையின் இரும்பு மூடியைத் தூக்கிக் கொண்டு துர்நாற்ற வாயு வெளியேறிக் கொண்டிருந்தது. அடுப்பின் மேல் வைக்கப்பட்ட வெந்நீர்ப் பாத்திரத்தின் மூடி படபடவென்று அடித்துக் கொள்வது போல அந்தக் கனமான மூடி மூடுவதும் திறப்பதுமாக இருந்ததை ஜேம்ஸ் வாட்டோ, ஜார்ஜ் ஸ்டீவன்ஸனோ பார்த்திருந்தால் அந்த வாயுவைக் கொண்டே மெட்ரோ ரயிலை ஒட்டுவதற்கான திட்டம் தீட்டியிருப்பார்கள்.

அம்மையும் அப்பனுமே நாற்றத்தின் பிறப்பிடமாகவும் நாற்றத்தைச் சகித்துக் கொள்பவர்களாகவும் இருக்கும் போது நாமும் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதும் ஸ்திதப் ப்ரக்ஞனாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.       

என் வீட்டைச் சுற்றியுள்ள பகுதி தான் நாறுகிறது என்று முதலில் நினைத்தேன். ஒரு முறை நகர் வலம் வந்த பிறகு தெரிந்தது, சிங்காரச் சென்னை நகரின் எல்லாப் பகுதிகளும் அப்படித்தான். சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா நகரங்களின் நிலையும் அது தான் என்பதும் அந்தந்த ஊர்ப் பேருந்து நிலையங்களில் நிற்கும்போது தெரிய வந்தது.

என்ன காரணம்? மக்களின் தூய்மை உணர்வுக் குறைவும், கழிவுகளை அகற்றுவதில்  நகர நிர்வாகங்கள் போதிய முனைப்புக் காட்டாமையும் தான். நிர்வாகத்தையும், மற்ற மக்களையும் குறை கூறுவதைத் தவிர இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேறு என்ன செய்யலாம்?

குப்பைகளும் நாற்றத்துக்குக் காரணம் என்றாலும் நாற்றத்தின் பெரும் பகுதி பாதாள சாக்கடைகளிலிருந்து தான் என்பதை அறியலாம். ஆரோக்கிய வழியாகப் பேசப்பட்ட இது நோய்க்குக் காரணமாக அமைந்து விட்டது. கொசுக்களின் பிறப்பிடமே இந்தப் பாதாள சாக்கடைகள் தாம். குடிநீர்க் குழாய்களும் கழிவுநீர்ப் பாதைகளும் நிலத்தடியில் ஒன்றை ஒன்று ஊடுருவிச் செல்வதால் குடிநீரும் அடிக்கடி கெட்டுவிடுகிறது. இந்தத் திட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டதோ அதில் முழுமையாகத் தோற்றுவிட்டது.

கழிவுப் பிரச்சினை உள்பட எல்லாப் பிரச்சினைகளையும்   ஆங்காங்கு சிறுவட்டங்களில் தீர்ப்பதற்குப் பதிலாக பெரிய வட்டத்தில் மையப்படுத்துகிறோம். நகரங்கள் பெரிதாகப் பெரிதாகப் பிரச்சினைகளின் அளவும் சிக்கலும் பெரிதாக வளர்ந்து கொண்டு வருகின்றன.

நகரங்கள் பரப்பளவில் மட்டுமன்றி உயரத்திலும் வளர்ந்துகொண்டு வருகின்றன. ஒரு குடும்பம் இருந்த இடத்தில் ஒருவர் தலை மேலே ஒருவராக நான்கு குடும்பங்கள் வாழ்கின்றன. நாற்றமும் நெரிசலும் வாகனப் புகைகளும் இரைச்சலும் பழைய அமைதியான கிராம வாழ்க்கையை எண்ணி ஏங்க வைக்கின்றன. காந்தி சொன்னபடி இனியாவது கிராமங்களை உயர்த்தலாம், மேலும் நகரங்கள் பூதாகாரமாக வளர்வதைத் தடுக்கலாம். உருவாகிவிட்ட நகரங்களைச் சிறியதாக ஆக்க முடியாது. இந்தச் சாக்கடைப் பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி? காந்திய வழி இதற்குப் பயன்படுமா?

விடை தேடுமுன் என்னுடைய பழைய அனுபவம் ஒன்றைச் சொல்வதற்காக ஒரு சிறிய இடைவேளை.

1970 இல் வேலை நிமித்தம் ஒரு கிராமத்தில் குடியேற நேர்ந்தது. 25 ரூபாய் வாடகையில் ஒரு புது பங்களா வாடகைக்குக் கிடைத்தது. வீட்டைத் திறந்து காட்டிய உரிமையாளரிடம் கேட்டேன், “வீட்டை ஆடம்பரமாகக் கட்டி இருக்கிறீர்கள். கழிவறை எங்கிருக்கிறது? கண்ணில் படவில்லையே? ” என்றேன். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். “ஓ நீங்கள் நகர வாசியா? அது தான் உங்களுக்குத் தெரியவில்லை. நாற்றத்தை வீட்டுக்குள் பாதுகாக்கும் அநாகரிகம் கிராமங்களில் கிடையாது” என்றார்.

“பின் என்ன வழி? ”

“தெருக் கோடியில் உள்ள சவுக்கைத் தோப்பு ஆண்களுக்கானது. எதிர்த் தரப்பில் உள்ளது பெண்களுக்கானது. தெரு மக்கள் எல்லோரும் அங்கு தான் செல்வார்கள். ”

எங்கள் வீட்டுப் பெண்களுக்கு இது சரிப்பட்டு வராது. எனவே காந்திய முறைக் கழிவறை ஒன்று கட்டத் தீர்மானித்தேன். அருகில் நின்று கொண்டிருந்த ஒரு மாணவன் உதவ முன் வந்தான். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போய் எங்கிருந்தோ 100 பனை மட்டைகளை வாங்கிக் கொண்டு போட்டான். வேலிக்காலில் இருந்த ஒதிய மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி நட்டான். மட்டைகளை வரிசையாக அமைத்துக் கட்டினான். உள்ளே ஒரு அடி ஆழம் முக்கால் அடி அகலத்தில் நீளமாக ஒரு பள்ளம் வெட்டச் செய்தேன். அவனுக்குக் கொடுத்த அன்பளிப்பு உள்பட 15 ரூபாயில் ஒரு மணி நேரத்தில் பத்துக்கு எட்டடி  அளவில் கழிப்பறை தயார். இதை நாங்கள் அங்கிருந்த ஆறு ஆண்டுக் காலம் பயன்படுத்தினோம். கழிவுகளை உண்டு வாழும் ஒரு வகை வண்டுகள் மறு நாளுக்குள் அதை மண்ணாக்கிவிடும். இம்முறை நிலத்தை வளப்படுத்தக் கூடியது. நிலத்தடி நீரைக் கெடுக்காதது.   

ஒரு துளசிச் செடி வைக்கக் கையளவு மண் கூட இல்லாத நகரக் கட்டிடங்களில் இந்தக் காந்திய வழி சரிப்படுமா? கூகுளாண்டவரைக் கேட்டதற்கு மாற்று வழி உண்டு என்று சொன்னார்.

எகோசான் என்பது காந்தியத்தின் 21 ஆம் நூற்றாண்டு அவதாரம். இதில் ஒரு பிளாஸ்டிக் வாளியில் மலம் சேகரிக்கப்படுகிறது. சிறு நீரும் கழுவும் நீரும் வேறு வேறு பாதைகளில் செல்கின்றன. வாளியின் மேல் ஒரு ஓட்டையுள்ள ஸ்டூல் நாம் அமர்வதற்காக வைக்கப்படுகிறது. வாளியில் சேரும் மலத்தின் மீது உடனே சாம்பல் தூவ வேண்டும். இதனால் நாற்றம்  வெளிவராமல் தடுக்கப்படுவதோடு அது உடனே மக்கவும் தொடங்குகிறது. இப்படி வாளி நிரம்பும் வரை, எத்தனை நாள் வேண்டுமானாலும், வைத்திருக்கலாம். அதன்பின் அடுத்த வாளியை வைக்க வேண்டும். இரண்டாவது வாளி நிரம்புவதற்குள் முதல் வாளியில் உள்ளது மடித்து மண்ணாகி விடும். அப்போது (சுகாதாரத் துறையிலோ கிராம முன்னேற்றத் துறையிலோ) செயலராக இருந்த சாந்தா ஷீலா நாயர் அந்த மண்ணைக் கையால் எடுத்து முகர்ந்து பார்ப்பதை பத்திரிகைகளில் படத்துடன் வெளியிட்டிருந்தார்கள். நாற்றம் இருக்காது. தொற்று நோய்க் கிருமிகள் இரா. மண்ணைச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். நம் வீட்டில் பயன்படுத்த முடியவில்லை எனில் தேவைப்படுவோருக்கு விற்கலாம். வாளியை மீண்டும் கழிவறையில் பயன்படுத்தலாம்.

எல்லா வீடுகளிலும் காஸ் அடுப்பு வந்து விட்ட நிலையில் சாம்பலுக்கு எங்கே போவது? கவலை வேண்டாம். அரிசி அறவை ஆலைகளில் எரி பொருளாகப் பயன்படுத்திய உமியின் சாம்பல் மலையாகக் குவிந்து கிடக்கும். அதை இலவசமாகவே கொடுப்பார்கள் அல்லது குறைந்த விலைக்கு வாங்கலாம். சுமை கூலி தான் செலவு. பத்துப் பேர் சாம்பல் தேவை என்று கேட்க ஆரம்பித்து விட்டால் தெரு முனைக் கடைகளில் தற்போது தண்ணீர்க் குடுவைகள் விற்பது போல சாம்பல் மூட்டைகளும் விற்கத் தொடங்கி விடுவார்கள். சாம்பலுக்குச் செய்யும் செலவை உர விற்பனை மூலம் சரிக்கட்டி விடலாம்.  

இம்முறை அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கும் ஏற்றது. இதனால் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் சுமை குறையும், நாற்றம் நீங்கும். கொசுத் தொல்லை குறையும். ஒரு குடும்பம் ஆண்டு ஒன்றுக்கு 50 லிட்டர் கழிவை ஏற்படுத்துவதாகவும் இதை பாதாள சாக்கடையில் கொண்டு சேர்க்க 15000 லிட்டர் நீர் செலவாகிறது என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்தத் தண்ணீர்ச் செலவு கணிசமாகக் குறையும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, நிலத்தடி வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காக அந்த அசுத்த நீரில் ஒரு மனிதனை முழுக வைக்கிறோமே அந்தக் கொடுமை நீங்கும்.

பாதாள சாக்கடை இல்லாத ஊர்களில் நிலத்தடி அறைகளில் சென்றடையும் கழிவு நீர் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீரைக் கெடுத்து விடுகிறது. எகோசான் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் தொல்லை நீங்கும்.

இதே போல, சிறுநீரைப் பத்துப் பங்கு நீருடன் கலந்து சிறந்த உரமாக்க முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை வீட்டளவில் எப்படிச் செய்வது என்பதைப் பின்னர் திட்டமிடலாம்.  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.