நாகேஸ்வரி அண்ணாமலை

போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பன். போர்ச்சுகலில் நாங்கள் தங்கியிருந்த நாட்களில் லிஸ்பனையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும்தான் பார்க்க முடிந்தது. லிஸ்பன் பழமையும் புதுமையும் நிறைந்த அழகிய நகரம். லிஸ்பனில் நிறையச் சதுக்கங்களும் பிளாஸாக்களும் இருக்கின்றன. இங்கு நிறையத் தொன்மை வாய்ந்த கட்டடங்கள், தேவாலயங்கள் உண்டு. ரோமானியர்களும் மூர்களும் போர்ச்சுகலை ஆண்ட அடையாளங்கள் ஆங்காங்கே தெரிகின்றன. ஓடுகள் வேய்ந்த பழைய கட்டடங்கள் நிறைய இருக்கின்றன. மலைப்பங்கான பிரதேசத்தில் அமைந்திருக்கும் லிஸ்பனின் உயரமான பகுதியிலிருந்து பார்த்தால் பழைய லிஸ்பன் சிவப்பு மயமாகத் தெரிகிறது. துவக்க கால்த்தில் ரோமிலிருந்து வந்த ரோமானியர்களும் பின்னால் வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மூர்களும் போர்ச்சுகலை ஆண்ட அடையாளங்கள் ஆங்காங்கே தெரிகின்றன

லிஸ்பன் தேஜோ ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் இருக்கிறது. லிஸ்பனின் மேடும் பள்ளமுமாக இருக்கும் குறுகிய தெருக்களில் ஓடும் மஞ்சள் நிற ட்ராம்கள் ஊரின் அழகிற்கு அழகு சேர்க்கின்றன. 28 இலக்கமுள்ள ட்ராம் ஊரின் உயர்ந்த பகுதிக்குச் செல்லுகிறது. அந்தப் பகுதியில் மலை மேல் இருக்கும் பழைய கோட்டை ஒன்றிற்கு இந்த ட்ராமில் சென்று பார்க்கலாம். பல இனத்தவர்களும் போர்ச்சுக்கல்லில் வாழ்ந்திருந்ததால் இப்போதுள்ள போர்ச்சுகல் ஜனத்தொகையில் பல இனத்தவர்களின் சாயல்களைப் பார்க்கலாம். வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மூர் இனத்தைச் சேர்ந்தவர்கள், ஐரோப்பவிலிருந்து வந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பல நூற்றாண்டுகளாகச் சேர்ந்து வாழ்ந்திருப்பதால் பல சரும நிறம் கொண்டவர்களை இங்கு பார்க்கலாம்.

நாட்டின் தேசிய மொழி போர்ச்சுகீஸ். தேசிய மதம் கத்தொலிக்கக் கிறிஸ்தவ மதம். லிஸ்பனின் எல்லாப் பொது இடங்களிலும் கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவையைப் பார்க்கலாம். லிஸ்பனின் தெருக்களின் நடைபாதைகள் காபள் ஸ்டோன் (cobble stone) என்னும் ஒரு வகைப் பெரிய கூழாங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

லிஸ்பனை இரண்டு கம்பெனிகள் தங்கள் மாடி பேருந்துகளில் சுற்றிக் காட்டுகின்றன. ஊரைச் சுற்றுவதற்கு இவை எடுக்கும் நேரம் கிட்டதட்ட ஒன்றே முக்கால் மணி நேரம். வழியில் பதினைந்து முக்கிய இடங்களைப் பற்றி, சர்ச்சுகள், காட்சியகங்கள் உட்பட, விளக்குகிறார்கள். இந்த விளக்கங்களை நம் காதிற்குள் பொருத்திக்கொள்ளும் ஒலிக்கருவிகள் மூலம் கேட்கலாம். இந்தப் பதினைந்து இடங்களில் பேருந்து நிற்கும்போது எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். ஒவ்வொரு இடத்திற்கும் இருபது நிமிஷத்திற்கு ஒரு முறை இந்த பேருந்துகள் வருகின்றன. ஒரு இடத்தில் இறங்கி அந்த இடத்தைப் பார்த்துவிட்டு நம் வசதிக்கேற்ப அடுத்துவரும் பேருந்தில் ஏறிக்கொள்ளலாம். இந்தப் பேருந்துகளில் செல்வதற்கு ஒரு முறை டிக்கெட் வாங்கிவிட்டால் அது நாம் கொடுக்கும் கட்டணத்தைப் பொறுத்து 24 மணி நேரத்திற்கோ அல்லது நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கோ செல்லுபடியாகும். அதனால் ஒரு நாள் சாயங்காலம் பயணத்தை ஆரம்பித்தால் மறு நாள் சாயங்காலம் வரை அந்த டிக்கெட்டை உபயோகிக்கலாம்.

நகரசபையால் இயக்கப்படும் லிஸ்பனின் மெட்ரோ ரயில்கள் மிகவும் வசதியானவை. இவை மூலமும் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம். அதே மாதிரி ஊரை இணைத்துக்கொண்டு நகரசபை பேருந்துகளும் உண்டு.

லிஸ்பனில் சதுக்கங்களையும் பிளாஸாக்களையும் சுற்றி நிறைய உணவகங்கள். இவர்கள் உணவில் மீனிற்கு முக்கிய இடம் உண்டு. காட் (cod) என்னும் மீனைக் கருவாடாக்கி உபயோகிக்கிறார்கள். இன்னொரு முக்கிய அம்சம் ஒயின்.

போர்ச்சுக்கீஸியர்கள் 1147-லிருந்து 1947 வரையிலான தங்கள் எண்ணூறு ஆண்டுச் சரித்திரத்தைக் குறிக்க லிஸ்பனின் உயரமான மலையிலுள்ள கோட்டையில் நினைவுச் சின்னம் எழுப்பியிருக்கிறார்கள். கிழக்காசிய நாடுகளோடு போர்ச்சுகலுக்கு ஏற்பட்ட தொடர்பை விளக்கும் காட்சியகம் ஒன்று லிஸ்பனில் இருக்கிறது. இந்தியா, ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளோடு அவர்கள் கொண்ட தொடர்பால் விளைந்த விளைவுகள், அந்த நாடுகளால் இவர்கள் வாழ்வில் விளைந்த மாற்றங்கள் ஆகியவை விளக்கப்பட்டிருந்ததோடு அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேயர்கள் இந்தியா உட்பட கிழக்காசிய நாடுகளுக்கு வருவதற்கு முன்பே இவர்கள் தங்கள் கடல் பிரயாணம் செய்யும் திறமையால் வந்திருக்கிறார்கள். இந்த நாடுகளிலிருந்து நிறைய மசாலாச் சாமான்கள் (spices), தங்கம், நவரத்தினக் கற்கள், ஆபரணங்கள், பட்டு ஆகியவற்றில் வணிகம் புரிந்து பெரிய பணக்கார நாடாக போர்ச்சுகல் விளங்கியதை இந்தக் கண்காட்சியகத்தில் பார்க்கலாம். யானைகளைக் கொண்டு வந்து அரசர்களுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து நாங்கள் சென்றது லிஸ்பனின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் பெலெம் என்னும் பகுதி. இங்குள்ள மதகுருமார் பள்ளியில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு மத குருமார்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாம். மேலும் மாலுமிகள் கடல் பயணத்தை மேற்கொள்ளும்போது அவர்களின் பாதுகாப்பிற்காக இங்கு பிரார்த்தனை செய்வார்களாம்.

இந்தப் மதப்பள்ளியை ஒட்டி ஒரு பழைய தேவாலயம் இருக்கிறது. அதன் நுழைவாயிலில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சமாதிகள் இருக்கின்றன. இடது பக்கம் இருப்பது வாஸ்கோ ட காமாவின் சமாதி. வாஸ்கோ ட காமா இந்தியாவிற்கு கடல் வழியாக 1497-98-இல் ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு கொச்சி வந்தடைந்தார். இவர்தான் இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக முதல் முதல் வழி கண்டுபிடித்தவர். இவரைப் பலவாறாகப் போர்ச்சுக்கீஸியர்கள் போற்றுகிறார்கள். இவர் இரண்டாவது முறை இந்தியாவிற்கு வந்த போது கள்ளிக்கோடையில் இறந்து விட்டார். அங்கு அவருக்கு ஒரு சமாதி எழுப்பப்பட்டது. அதன் பிறகு பதினாலு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் உடலைத் தோண்டி எடுத்து வந்து இந்த தேவாலயத்தில் வைத்து சமாதி எழுப்பியிருக்கிறார்கள். வலது பக்கத்தில் அப்போது போர்ச்சுகலின் கடல் வெற்றிகளை எழுதிப் பிரபலமாக விளங்கிய ஒரு கவிஞரின் சமாதி இருக்கிறது. இரண்டு சமாதிகளின் மேலும் அவர்களின் உருவச் சிலை கைகளைக் கூப்பிக்கொண்டு படுத்திருக்கும் கோணத்தில் இருப்பது போல் அமைந்திருக்கிறது.

வாஸ்கோ ட காமா போர்ச்சுகீஸியர்களைப் பொறுத்த வரை ஒரு பெரிய கடல் வழி கண்ட வீரர் என்றாலும் இந்தியாவிற்கு வந்த பிறகு நிறைய அட்டூழியங்கள் புரிந்திருக்கிறார். முதல் தடவை அவர் இந்தியாவிற்கு வந்த போதே அரேபியர்கள் இந்தியாவோடு வணிகம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது கொச்சியில் இருந்த மன்னரை அரேபியர்களோடு செய்யும் வணிகத்தை நிறுத்தி விடும்படி வாஸ்கோ ட காமா வற்புறுத்தியிருக்கிறார். இரண்டாவது தடவை வந்த போது அரேபியர்களின் ஒரு கப்பலை ஆட்களோடு தீ வைத்துக் கொளுத்தி அப்போது கப்பலில் இருந்த அனைவரும் இறக்கும்படி செய்திருக்கிறார். கொச்சி மன்னனோடு உடன்படிக்கை செய்து கொண்டு அங்கேயே ஒரு தனிக் கோட்டையையும் கட்டிக்கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பித்த இந்தத் தொடர்பு பின் பல நூற்றாண்டுகள் போர்ச்சுகல் இந்தியாவோடான தொடர்பை தக்க வைத்துக்கொள்ள உதவி இருக்கிறது. இதனால் போர்ச்சுகல் இவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது.

இந்தத் தேவாலயம் இன்றும் மக்கள் வழிபடும் இடமாக விளங்குகிறது. இங்கு சுவர்களில் உள்ள சிற்பங்களில் ஆசிய நாடுகளின் தாக்கம் வெகுவாகக் காணப்படுகிறது. பல அரியணைகளின் கால்களில் இரண்டு யானைகள் அவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பதாகச் சித்தரித்திருக்கிறார்கள். இந்தியாவைப் பற்றிய ஆர்வம் இன்னும் இருக்கிறது. அந்தத் தேவாலயத்தில் நாங்கள் சந்தித்த பக்கத்து நாடான ஸ்பெயினிலிருந்து வந்திருந்த ஒரு பெண் எங்களை வெகுவாகப் புகழ்ந்து விட்டு, தனக்கு இந்தியாவிற்கு வர அதிக விருப்பம் இருப்பதாகவும் எப்படி வரலாம் என்பதையும் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களையும் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

போர்ச்சுகலின் கால்னியாக இருந்த அங்கோலாவிலிருந்து வந்திருந்த ஒரு 83 வயது மூதாட்டியை அங்கு சந்தித்தோம். அங்கோலாவில் உள்நாட்டு யுத்தம் நடந்தபோது பலர் போர்ச்சுகலுக்கு அகதிகளாக ஓடி வந்தார்களாம். அவர்களில் பலர் இப்போது போர்ச்சுகல் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். இந்த மூதாட்டியும் இப்படி வந்தவர்தானாம். இவர் லிஸ்பனின் புறநகர்களில் ஒன்றான சின்ட்ரான் என்னும் ஊரில் வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் படிக்கும் இவருடைய பேரன் தன்னுடைய காதல் தோழியோடு பாட்டியைப் பார்க்க வந்தவன் பாட்டியை இந்தத் தேவாலயத்திற்குக் கூட்டி வந்திருக்கிறான். வயது 83 என்றாலும் இன்னும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார். ‘நான் இன்னும் நன்றாக நடனம் ஆடுவேன். இது பிரார்த்தனைக்குரிய இடமாதலால் உங்களுக்கு ஆடிக் காட்ட முடியவில்லை’ என்றார். அங்கோலா நாட்டு உடையான நீண்ட அங்கி போன்ற ஒரு ஆடையை உடுத்திக்கொண்டு வந்திருந்தார். அங்கோலா போர்ச்சுகலின் கீழ் இருந்தபோது கிறிஸ்தவ மதத்தை அங்கு பரப்பியிருப்பார்கள் போலும். அந்தப் பெண் மிகுந்த பக்தி சிரத்தையோடு ஏசுவை வழிபட்டார்.

இந்தத் தேவாலயத்தை அடுத்து உள்ள காட்சியகத்தில் கடலில் சென்ற வீரர்கள் கப்பல்களில் உபயோகித்த பொருள்கள், அவர்களின் உடைகள் ஆகியவற்றோடு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தையும் கொடுத்திருந்தார்கள். கடலில் சென்ற வீரர்களைப் பற்றிப் போர்ச்சுகீஸியர்களுக்கு மிகவும் பெருமை. நாட்டை அப்போது வளமாக்கிய அவர்களை இன்னும் போற்றுகிறார்கள்.

இந்தக் காட்சியகத்தில் இவர்கள் கடலில் சென்ற கப்பல்களின் மாடல்கள் நிறைய இருந்தன. வாஸ்கோ ட காமா பயணம் செய்த கப்பலின் மாடலும் அதில் அவர் பிரார்த்தனை செய்த அறையின் மாடலும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு முறை மிளகு மற்றும் பல மசாலாச் சாமான்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்று மூழ்கி விட்டதாம். அதிலிருந்து பின்னால் மீட்கப்பட்ட கப்பலின் பாகங்களும் அதில் ஏற்றிவந்த அழிந்து போகாத மிளகும் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் காட்சியகங்கள் இருந்த சாலையின் மறு பக்கத்தில் 1970-இல் கடல் வீரர்களுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவாலயம் இருக்கிறது. இது கடலில் கலக்கும் டேஜோ நதி தீரத்தில் இருக்கிறது. இது புதிய முறையில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. முதல் தளத்தில் கடல் வீரர்களின் சாகசச் செயல்களும் அவை பற்றி விளக்கும் வீடியோ படங்களும் இருக்கின்றன. இந்தக் கட்டடத்தின் ஏழாவது தளத்திற்குச் செல்ல லிப்ட் இருக்கிறது. அங்கு சென்றால் ஊரின் மொத்த அழகையும் உயரத்தில் இருந்து பார்க்கலாம். இந்தக் கட்டடத்தின் வெளிச் சுவர்களில் கடல் வீரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

இதற்குக் கொஞ்ச தூரத்தில் வாஸ்கோ ட காமா காலத்திலிருந்து கடல் பயணம் செய்தவர்களை வழியனுப்பும் ஒரு டவர் இருக்கிறது. அந்த இடத்திலிருந்துதான் கடல் வீரர்கள் பயணத்தைத் தொடங்குவார்களாம். அப்போது அரசரும் மற்றவர்களும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவார்களாம்.

லிஸ்பனின் ஒரு மேடான இடத்தில் நேஷனல் பேந்தியான் (National Pantheon) என்னும் காட்சியகம் இருக்கிறது. இது வட்ட வடிவில் அமைக்கப்- பட்டிருக்கிறது. இது மூன்று தளங்களைக் கொண்டது. முதல் தளத்தில் வாஸ்கோ ட காமா உட்பட பல கடல் வீரர்களின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பகுதியில் முடியாட்சியை ஒழித்தவர்கள் பட்டியலும் அவர்களது வாழ்க்கை வரலாறும் படங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. நடுப் பகுதியில் யேசுவின் சிலை காணப்படுகிறது.

லிஸ்பனின் இன்னொரு முக்கியமான காட்சியகம் வண்ண ஓடுகள் (decorative tiles) தயாரிப்பு எப்படி இந்தப் பகுதிக்கு வந்தது என்பது பற்றிய சரித்திரமும் பல வகை வண்ண ஓடுகளின் சாம்பிள்களும் அடங்கியது. இதற்குள்ளேயே தங்கமுலாம் பூசப்பட்ட சிலைகள் அடங்கிய ஒரு தேவாலயமும் இருக்கிறது. இந்தத் தேவாலயத்தில் இப்போது பிரார்த்தனை எதுவும் நடைபெறுவதில்லை.

ஒரு வகைக் களிமண்ணிலிருந்து செய்யப்பட்டுப் பின்னால் வர்ணம் தீட்டப்படும் இந்த ஓடுகள் செய்யும் கலையை முதல் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மூர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். போர்ச்சுக்கீஸ் மொழியில் வழங்கப்படும் இந்த ஓடுகளின் பெயரே அரேபிய மொழியிலிருந்து வந்ததாம். அரேபியர்கள் பாரசீகர்களிடமிருந்து இதைக் கற்று இங்கு பரப்பியிருக்கிறார்கள். போர்ச்சுக்கீஸியர்கள் இந்தக் கலையை நன்றாக வளர்த்திருக்கிறார்கள். மிகவும் புதிய கட்டடங்கள் தவிர எல்லாக் கட்டடங்களிலும் இந்த ஓடுகளை அலங்காரத்திற்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். லிஸ்பன் முழுவதும் இந்த ஓடுகளைப் பார்க்கலாம். தரைகள், சுவர்கள், கூரைகள், கட்டடங்களின் கூண்டுகள் என்று கட்டடங்களின் எல்லாப் பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன.

லிஸ்பனுக்குப் பக்கத்தில் இருக்கும் லிஸ்பனின் புறநகர்ப் பகுதியான சின்ட்ரான் மிக அழகிய ஊர். இது மலைப்பாங்கானது. சாலைகள் நம் ஊர் மலைப்பாதை போல் வளைந்து வளைந்து செல்கிறது. நிறைய கோடைக்கால அரண்மனைகளை இங்கு கட்டியிருக்கிறார்கள். மேடும் பள்ளமுமாக இருக்கும் இந்த ஊரில் நிறையத் தோட்டங்கள் இருக்கின்றன. இப்போது பெரிய செல்வந்தர்கள் வசிக்கும் இந்த ஊரில் பல பெரிய மாடமாளிகைகள் இருக்கின்றன.

Fado என்பது போர்ச்சுகலின் தேசிய இசை. இது ஐரோப்பிய இசையும் ஆப்பிரிக்க இசையும் கலந்தது. இது எல்லா இடங்களிலும் ஒலிக்கும். ஒரு தேசத்தின் நாடி என்பார்களே அது போர்ச்சுகீஸைப் பொறுத்த வரை இதுதான்.

மொத்தத்தில் லிஸ்பன் போர்ச்சுகலின் இன்று பழைய சரித்திரத்தைக் கூறும் கட்டடங்களும் தேவாலயங்களும், கண்காட்சியகங்களும் நிறைந்த நகரம். ஒரு காலத்தில் உலகத்தின் தலைநகர் போல் செயல்பாடுகளும் வளமையும் நிறைந்த நகரம்.

 

படங்களுக்கு நன்றி: http://www.lisbane.org.uk/about-us/where-we-are-located/index.php

http://en.wikipedia.org/wiki/File:Vasco_da_Gama_Jer%C3%B3nimos_2008-1.jpg

http://www.travel-in-portugal.com/photos/img531.htm

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “போர்ச்சுகல் – ஒரு பயணம் (பகுதி-2)

 1. Dear Madam

  – Thanks for a beautiful write up on your visit to Lisbane. How did you manage your communication? With English or with translator? How did you manage the food? Which is the best time to visit Portugal?

 2. – At most of the 3 or 4 star hotels there will be some people at the hotel who speak English. At museums and so on there is usually one person at the counter who speaks English. Taxi drivers don’t speak English, but if you have your destination written down on a piece of paper that is enough for the Taxi driver to take you to the right place. For tourists there are English tours so the actual sightseeing is not a problem. (We did not have a good experience with http://wehatetourismtours.com/, so please avoid tours from this company. We felt the tour was very superficial.)

  – Food: Portugese cuisine has a lot of meat and fish, so it can be hard for vegetarians. However there are some Nepali, Indian and Chinese restaurants that have vegetarian dishes on the menu. Pizza is available too, and there are vegetable and plain cheese pizzas. A cheap option is to identify a grocery store near the hotel and buy bread, cookies/biscuits, cheese, and fruit. If the hotel room has a fridge then milk and yoghurt can be bought too. Many hotels have continental breakfast so we had a big meal in the morning. We had a light lunch (like a sandwich/biscuits/fruit made/bought from the grocery store) followed by a mean at a Nepali/Indian/Chinese/Pizza restaurant (or take away).

  – It does get cold in Portugal, but for Indians who prefer warm weather, the summer time is best. June, July or August.

  Here are some pictures (they are not annotated, the Age of Discoveries set in particular might not make much sense without annotation. Maybe you can skip that.

  Portugal Lisbon:http://goo.gl/kKiwV
  http://goo.gl/VEbVE

  Sintra:http://goo.gl/Nc8Vj

  Age of Discoveries: http://goo.gl/JJ6UE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *