நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-11)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
கல்யாணி இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் பணம் அனுப்பிய முதல் வாரம் அவர்களிடமிருந்து தகவல் வரும் என்று தைரியமாக இருந்தாள். ஒரு வாரம் என்பது பத்து நாட்களாக நீண்டு விட்டது இன்னமும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பது மட்டுமில்லை, இவள் அக்கவுண்டில் ஒரு ரூபாய் கூட அவர்களால் டெபாசிட் செய்யப் படவில்லை. கவலை பிடித்துக் கொண்டது கல்யாணியை. முதல் முறையாக தான் ஏமாற்றப் பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தலை தூக்கியது.
தனக்கு வர வேண்டிய ஐந்து கோடி வராவிட்டால் பரவாயில்லை, தான் அனுப்பிய பணம் கைக்குக் கிடைத்தால் போதும் என்று எண்ண ஆரம்பித்தாள். ஒன்றா இரண்டா? ஐம்பதாயிர ரூபாய் ஆயிற்றே! சுந்தரத்துக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம் வேறு இவளை வாட்டியது. “பேசாமல் எல்லாரும் சொன்னது போல பணத்தை அனுப்பாமல் இருந்திருக்கலாம். ஏன் எனக்கு இவ்வளவு பேராசை? “நான் என்ன? எனக்கு மட்டுமா வேணும்னு ஆசப்பட்டேன்? அவரும், நிகிலும் சேர்ந்து நல்லாயிருக்கணும்னு தானே ஆசப்பட்டேன். இதுல என்ன தப்பு?” மனம் பலவாறு போராடியது.
ஒரு சமயம் சுந்தரத்திடமும் நிகிலிடமும் சொல்லி விடலாமா? என்று நினைப்பாள். பிறகு வேண்டாம் ஏனென்றால் நிகில் சிறு பையன் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. மேலும் அவன் பைக்குக்காக வைத்திருந்த பணத்தைத்தான் கொடுத்தேன் என்று தெரிந்தால் மிகவும் வருத்தப் படுவான். பிறகு சுந்தரம்! அவரால் மட்டும் என்ன செய்ய முடியும்? தான் செய்தது முட்டாள் தனம் என்று உணர்ந்தாள். இப்போது உணர்ந்து என்ன பயன்?
கல்யாணிக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. அக்கா சுமதி கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் தானே இருக்கிறாள்? அவர்கள் ஆபீஸ் கிளை உலக முழுவதும் இருக்கிறதே சவுத் ஆப்பிரிக்காவில் இருக்காதா? அங்கே அக்காவுக்குத் தெரிந்த யாராவது கொடுத்த அட்ரசுக்குப் போய் விசாரித்தால் குறைந்த பட்சம் என் பணம் திரும்பக் கிடைக்ககுமே என்று யோசித்து உடனே ஃபோனைச் சுற்றினாள். சற்று நேரம் கழித்து சுமதி அக்கா எடுத்தார்கள்.
“அக்கா நான் தான் கல்யாணி பேசறேன்”
“தெரியுது! கல்யாணி எப்டிம்மா இருக்க? எவ்ளோ நாளாச்சு உன்னோடப் பேசி? அன்னிக்கு வீட்டுக்கு வந்துட்டுப் பொனவதான்! அப்றமா ஏதோ பார்ட் டைம் ஜாப் செய்யறதாச் சொன்ன! அதுக்க்கப்புறம் ஃபோனே இல்லியே? என்ன ரொம்ப பிசியா? எப்டி இருக்க? வேலையெல்லாம் எப்டி இருக்கு?”
“வேலை எல்லாம் நல்லத்தாங்க்கா போயிட்டிருக்கு. ஆனா நான் தான் நல்லாயில்ல?”
“என்ன உடம்புக்கு ஏதாவது?”
“அப்டியெல்லாம் ஒண்ணுமில்லக்கா! நான் செஞ்ச முட்டாள் தனத்தை எப்டிச் சொல்றதுன்னே தெரியல”
“என்ன முட்டாள் தனம் பண்ணுன? சும்மாச் சொல்லு! “
“அதாவதுக்கா கிட்டத்தட்ட பதினஞ்சு நாளைக்கு முன்னால எனக்கு குவீன்ஸ் லேண்டுங்கற கம்பெனியிலருந்து ஒரு இ-மெயில் வந்தது. அது சவுத் ஆப்பிரிக்காவுல இருக்கு. அதுல என்ன இருந்துச்சின்னா இந்த மாதிரி நாங்க உங்களை இந்த வருஷத்தோட சிறந்த இண்டெர் நெட் யூசரா தேர்ந்தெடுத்திருக்கோம். அதுக்கு ரொக்கப் பரிசா அஞ்சு கோடி ரூவாய் தருவோம்னு இருந்தது”
“இதெல்லாம் சுத்த ஃபிராடும்மா! இந்த மாதிரி இ-மெயில் எல்லாருக்கும் மாசத்துக்கு நாலு வரும். இதையெல்லாம் நாம கண்டுக்கவே கூடாது. இதெல்லாம் உனக்குத் தெரியும் தானே?”
“ஐயோ! அக்கா! அதான் எனக்குத் தெரியாமப் போயிடிச்சி! இன்னும் கேளுங்க! எனக்கு அந்தப் பரிசுப்பணம் வந்து சேரணும்னா நான் அம்பதாயிர ரூவா அவங்க அக்கவுண்டில கட்டணும் அது வரி. அப்டி அந்த வரி கட்டி முடிச்ச ஒரு வாரத்துல பரிசுப் பணம் முழுக்க எனக்கு வந்துடும். அப்டீன்னு எழுதியிருந்தாங்க.”
“அப்புறம்?”
“அப்றமென்ன? நான் கஷ்டப்பட்டு வேலை பாத்து சேத்து வெச்ச பணம் அம்பதாயிரத்தை அவங்க சொன்ன அக்கவுண்டுல கட்டினேன். கட்டி பத்து நாளாச்சு இன்னும் எந்தத் தகவலும் இல்ல! எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல!”
“கல்யாணி எனக்கு உண்மையிலயே சிரிக்கறதா? அழறதான்னு தெரியல? இப்டி யாராவது செய்வாங்களா? படிச்சவ தானே நீ? யோசிக்க மாட்டியா?”
அந்த ஐந்து கோடி ரூபாயில் தான் என்னென்ன செய்ய நினைத்தோம் என்பதை நினைத்துக் கண்ணீர் வந்தது கல்யாணிக்கு.
“இப்போ புரியுதுக்கா. ஆனா அப்போ தெரியலியே?”
“அம்பதாயிர ரூவா மொத்தமாக் கட்டிட்டியா? இது உன் வீட்டுக்காரருக்குத் தெரியுமா?”
“அவருக்குத் தெரியாதுக்கா. அவரும் ஆரம்பத்துலருந்து நீங்க சொல்ற மாதிரி தான் இது ஃபிராடுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. நான் பணம் கட்டினேன்னு தெரிஞ்சாப் போதும் அவளோதான் வீட்டுல என்ன நடக்கும்னே சொல்ல முடியாது.”
“இப்போ இவ்ளோ பயப்படறவ முதல்லயே அவர் பேச்சைக் கேட்டிருக்கலாம் இல்ல?”
“தப்புத்தான்! தெரியாம பண்ணிட்டேன்! “
“சரி இனி நீ என்ன பண்ணப் போற?”
“அதுக்குத்தாங்க்கா உங்க ஹெல்ப் தேவை!”
“என்ன ஹெல்ப் வேணும்னு சொல்லு நான் கண்டிப்பா செய்யறேன்.”
“அதாவதுக்கா உங்க ஆபீஸ் பிரான்ச் சவுத் ஆப்பிரிக்காவுல இருக்கு இல்லியா?”
“ஆமா!”
“அங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது வேலை பாக்கறாங்களா? குறிப்பா தமிழர்கள்?”
“ஆமா! இருக்காங்க! ரெண்டு மூணு பேர் இருக்காங்க! அதுல சத்திய மூர்த்தியும்,உஷாவும் எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க! ஏன் கேக்கறே?”
“சொல்றேன்! நீங்க உஷாவையோ, சத்திய மூர்த்தி சாரையோ அனுப்ச்சி நான் சொல்ற அட்ரஸ்ல பாத்துட்டு வரச் சொல்ல முடியுமா? அட்லீஸ்ட் என் பணம் திரும்பக் கெடச்சாப் போதும்”
“நீ என்ன சின்னக் குழந்தை மாதிரி பேசறே கல்யாணி? சவுத் ஆப்பிரிக்காங்கறது ஒரு பெரிய நாடு. அந்த நாட்டுல எந்த ஊர்ல இந்த அட்ரஸ் இருக்குன்னு யாருக்குத் தெரியும்? ஒரு வேளை அவங்க பொய் அட்ரஸ் குடுத்திருந்தா?”
“ஐயோ! அக்கா! எனக்கு வயத்தைக் கலக்குது! நீங்க ஒண்ணும் சொல்லாம இருங்களேன். அப்டி ஒருவேளை நான் சொல்ற அட்ரஸ் உங்க ஆபீஸ் இருக்கற ஊர்லயே இருந்துட்டா நமக்கு நல்லது தானே?”
“சரி! அப்டியே வெச்சுப்போம்! அப்புறம்?”
“அப்றமென்ன அப்றம்? நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? அவங்க போயி பாத்து பேசி என் பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லிச் சொல்லணும் அவ்ளோதான்”
“இதெல்லாம் நடக்கற கதையா? “
“ஏதோ முயற்சி செஞ்சு பாப்போமே!”
“சரி! நீ அட்ரஸ் குடு. ஃபோன்ல சொன்னா என்னால சரியா எழுதிக்க முடியாது. அதனால் இ-மெயில் குடு. என்ன? கல்யாணி நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?”
“சொல்லுங்கக்கா!”
“நீ பணம் அனுப்புன விஷயத்தை உன் வீட்டுக்காரர் கிட்ட முதல்ல சொல்லு! வேற யார் மூலமாவோ தெரிஞ்சுதுன்னா நல்லா இருக்காது அதனால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீகிரம் சொல்லிடு புரிஞ்சதா?”
“சரிக்கா” என்று கூறி ஃபோனை வைத்தவள் “உங்க ஆளுங்க கிட்டருந்து உருப்படியான தகவல் வரும் வரை நான் எதுவும் சொல்லப் போறது இல்லை”. என்று தீர்மானம் செய்து கொண்டு சுமதி அக்காவுக்கு அந்த அட்ரஸை இ-மெயில் கொடுத்தாள்.
வந்த நாட்கள் வழக்கம் போலக் கடந்தன. வீட்டில் நிகில் மட்டுமே கலகலப்பாக இருந்தான். அவரவர் பிரச்சனையில் மூழ்கியிருந்ததாலோ என்னவோ இருவராலும் அவர்கள் நடத்தையின் மாறுதலை உணர முடியவில்லை. ஆனால் நிகில் கண்டு பிடித்து விட்டான்.
“அம்மா! ஏனோ அப்பா இப்போல்லாம் அதிகம் பேசறது இல்ல. கவனிச்சீங்களா? என்ன விஷயம்?”
“அப்டி எல்லாம் ஒண்ணும் எனக்குத் தெரியலியேப்பா! எப்பவும் போல இருக்க மாதிரி தான் இருக்காரு? நீ ஏன் கேக்கற?”
“இல்ல! எப்பவும் நான் காலேஜ்ல நடந்த விஷயம் சொல்லும் போது நல்லா இருந்தா வாய் விட்டுச் சிரிப்பாரு..அதை இன்னொரு தடவை சொல்லச் சொல்லிக் கேப்பாரு. நேத்து அவ்ளோ காமெடியான விஷயம் சொல்லியும் அவர் சிரிக்கவேயில்லை. எங்கியோ ஞாபகமாப் பாத்துக்கிட்டு இருந்தாரு”
“ஏதாவது ஆபீஸ் வேலைல கவனமா இருந்திருப்பாருடா! அதான் கவனிக்கல்ல!”
“நீங்க அதுக்கு மேல இருக்கீங்க? என்னம்மா விஷயம்?”
ஒரு நிமிடம் கல்யாணிக்கு இவனிடம் விஷயத்தைச் சொன்னால் என்ன? என்று தோன்றியது. ஆனால் மறு நொடியே தன் மனதை மாற்றிக் கொண்டாள். “படிக்கற பையன் அவங்கிட்ட இதையெல்லாம் சொல்லி அவனைக் கவலைப் பட வெக்கக் கூடாது” என்று தீர்மானித்தவள்
“ஒண்ணுமில்ல நிகில்! நாங்க நார்மலாத்தான் இருக்கோம். நீ தான் ஏதோ வீணா கற்பனை பண்ணிக்கறே? போடா கண்ணா போயி படி!” என்று அவனை அனுப்பி விட்டாள். நிகிலும் அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை போலிருக்கிறது. ஏதாவது சின்ன விஷயத்திற்குச் சண்டை போட்டிருப்பார்கள். வழக்கம் போல என்னிடமிருந்து மறைக்கிறார்கள் என்று நினைத்து அந்த விஷயத்தை அதோடு விட்டான்.
கல்யாணி ஆவலாக எதிர் பார்த்திருந்த இ-மெயில் வந்தது. சுமதி அக்கா மெயில் குடுத்திருந்தார்.
“அன்புள்ள கல்யாணி,
நீ சொன்ன முகவரியில் அப்படி ஒரு கம்பெனி இல்லை. என் நண்பர்கள் விசாரித்து விட்டாரகள்.”
இவ்வளவு தான் இருந்தது மெயிலில். கல்யாணிக்கு ஏமாற்றம் ஒரு புறம் கோபம் ஒரு புறமும் பொங்கிக் கொண்டு வந்தது. “சே! என்ன இந்த அக்கா? கொஞ்சம் வெவரமா மெயில் குடுக்க மாட்டாங்க? இப்டியா போனோம் இல்லன்னு ஒரு இ-மெயில் குடுப்பாங்க? நாமே ஃபோன் பண்ணிக் கேட்டுர வேண்டியது தான்.” என்று முடிவு செய்தவள், சுமதி அக்காவுக்கு ஃபோன் செய்தாள்.
“அக்கா நான் தான் கல்யாணி”
“நான் உன் ஃபோனைத்தான் எதிர்பாத்துக்கிட்டு இருந்தேன் கல்யாணி”
“என்னக்கா இப்டி ஒரு இ-மெயில் குடுத்திருக்கீங்க?”
“ஆமா! கல்யாணி! அதுல உள்ளது நிஜம் தான்.”
“பிளீஸ் கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க அக்கா” என்றாள் அழாத குறையாக.
“நீ குடுத்த அட்ரஸ் நல்ல வேளையா எங்க ஆபீஸ் இருக்கற ஊருக்குப் பக்கத்து ஊர்ல தான் இருந்துது. வெள்ளிக்கிழமை அன்னிக்கு உஷாவும், சத்திய மூர்த்தி சாரும் அந்த அட்ரசுக்குப் போயிருக்காங்க. அது ஒரு ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ். அங்க ரெண்டாவது மாடின்னு தான் அட்ரஸ்ல குடுத்திருந்துது. அங்க போயிருகங்க. அந்த அட்ரஸ்ல ஒரு டிராவல் ஏஜன்சி இருந்துதாம்.”
“”
“என்ன கேக்கறியா? ஹலோ?”
“கேட்டுக்கிட்டுத்தாங்க்கா இருக்கேன் மேல சொல்லுங்க”
“அவங்க அங்க விசாரிச்சிருக்காங்க! அப்போ பல உண்மைகள் தெரிய வந்துதாம்”
“என்ன உண்மைகள் அக்கா?”
“அதாவது சவுத் ஆப்பிரிக்காவுல மட்டுமில்லாம இந்த மாதிரி ஏமாத்தற கும்பல் உலகத்துல எல்லா எடத்துலயும் இருக்காம். நெட்லருந்து திருட்டுத் தனமா சில பேரோட மெயில் ஐடியைத் திருட வேண்டியது. அவங்க எந்த நாட்டைச் சேந்தவங்க அதெல்லாம் பத்தி இவுங்களுக்கு அக்கறையே இல்ல. “
“அவங்களுக்கு எதுக்கு மெயில் ஐடி”
“அவசரப் படாதே சொல்லிக்கிட்டுத்தானே இருக்கேன். ஏதாவது ஒரு ஊர்ல ஒரு பிசியான ஏரியால ஒரு எடத்தை ஒரு மாசத்துக்கு வாடகைக்கு எடுத்துப் போட வேண்டியது. அந்த ஐடிங்களுக்கெல்லாம் மெயில் அனுப்ப வேண்டியது. இந்த மாதிரி உங்களுக்கு பரிசு விழுந்துருக்கு. அதுக்கு வரியா இவ்ளோ குடு அவ்ளோ குடுன்னு. அவங்கள்ல யாராவது ஃபோன் பண்ணாங்கன்னா இவங்களே நம்ப வெக்கறா மாதிரிப் பேச வேண்டியது. புதுசா ஏதாவது ஒரு பேங்கில அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அதை அவங்களுக்குக் குடுக்க வேண்டியது. “
“அடப்பாவிங்களா?”
“பாவிங்க தான். ஏமாந்தவங்க யாராவது பணம் அனுப்புனா அதைச் சுருட்டிக்கிட்டு அந்த இடத்துல இருந்து கம்பி நீட்டிட வேண்டியது. இதுதான் அவங்க பொழப்பாம். இதுல சோகம் என்னன்னா அவங்களை யாராலயும் பிடிக்க முடியலையாம். பல நாடுகள் சம்பந்தப் பட்டுருக்கறதால் சட்டமும் சரியா இல்லியாம் இவங்களைத் தண்டிக்க.”
“அவனுங்க நாசமாப் போக! அப்போ என் பணம் போனது போனது தானா?”
“ஐ ஆம் சாரி! கல்யாணி! என்னால உனக்கு வேற எந்த வகையிலயும் ஹெல்ப் பண்ண முடியல”
“பரவாயில்லக்கா, இவ்ளோ தூரம் விசாரிச்சு சொன்னீங்களே அதுவே பெரிய விஷயம். ரொம்ப தேங்க்ஸ்கா” என்றாள். குரல் நடுங்கியது.
“கல்யாணி. கேக்கறேனேன்னு தப்ப நினைக்காதே! உன் வீட்டுக்காரர்ட்ட விஷயத்தைச் சொன்னியா இல்லியா?”
“இன்னும் இல்லக்கா! ஆனா கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன்” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தாள்.
கல்யாணிக்குள் புயல் வீசியது. ஏன் தான் அப்படி நடந்து கொண்டோமோ என்று தன்னைத்தானே ஏசிக் கொண்டாள். ஐம்பதாயிரம் பணம். “பாவம் நிகிலுக்கு பைக் வாங்கன்னு சேர்த்து வெச்சிருந்த்த பணம் இப்டி அனாமத்தாப் போயிட்டுதே? எத்தனை நாள் உழைப்பு? எத்தனை நாள் ராத்திரி தூங்காம, பகல்ல ரெஸ்டு எடுக்காம கம்ப்யூட்டரே கதின்னு கெடந்து உழைச்சுச் சேத்த பணம்? எல்லம் போச்சே ஒரு நிமிஷத்துல போச்சு? காரணம் பேராசை?
“என்னிக்குமே உழைச்சு வர்ற காசு தான் ஒடம்புல ஒட்டும்னு சொன்னரே? அப்படிப்பட்ட மனுஷண்ட்ட போயி நான் ஏமாந்துட்டேன்னு எப்டி சொல்றது? சொல்லித்தானே ஆகணும்? அவர் திடீர்னு பணத்தைக் கொண்டான்னு கேட்டா என்ன பதில் சொல்ல? நிகில் எவ்ளோ ஆசையா இருந்தான் பைக் கிடைச்சுடும்னு அவன் கிட்ட என்ன சொல்ல?” கல்யாணி தனக்குள் யோசித்துக் குழம்பிக் குழம்பி அவளுக்குத் தலைவலியும் காய்ச்சலும் வந்து விட்டன.
சுந்தரம் அவளுக்குப் பணிவிடை செய்யும் போதெல்லாம் குற்ற உணர்வில் தவித்தாள் கல்யாணி. எத்தனை சந்தோஷமான குடும்பமாக இருந்தது. இந்தக் கம்ப்யூட்டர் வந்து என் வாழ்க்கையையே கெடுத்து விட்டதே? என்று நினைத்தவளுக்கு கம்ப்யூட்டரைப் பார்க்கப் பார்க்கக் கோபமும் வெறியும் வந்தது. வந்து என்ன பயன்? அவள் பணம் சேர்க்க வேண்டுமானால் கப்யூட்டரை இயக்கினால் தானே முடியும்? மற்ற ஃபிரெண்ட்சை நினைத்துக் கொண்டாள். கல்யாணி இந்த மாதிரி ஏமாந்து விட்டாள் என்று தெரிந்ததும் எங்கே தன்னிடம் பணம் கேட்டு விடுவாளோ என்று இவளிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டனர்.
அது வரையில் காரக்குழம்பு செய்வது எப்படி? கட்லெட் செய்வது எப்படி என்றெல்லாம் சேட்டிங் செய்யும் பிரீதா இவளோடு பேசுவதையே தவிர்க்கிறாள். கல்யாணியாக வலியப் போனாலும் தனக்கு நேரமே இல்லை என்று சொல்லி கட் செய்கிறாள். “சீ ! இவங்கல்லாம் என்ன ஃபிரெண்ட்ஸ்? இவங்களுக்காக எத்தனை தடவை அவரோட சண்டை போட்டுருப்பேன்? இன்னிக்கு? எனக்கு ஆறுதல் வார்த்தை சொல்லக் கூட அவங்களுக்கு நேரமில்லை. கல்யாணிக்கு உலகமே வெறுத்துப் போனது.
இன்று சொல்லலாம், நாளை சுந்தரத்திடம் சொல்லலாம் என்று நாளைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி. அவளுக்கு உண்மையிலேயே பயமாக இருந்தது. ஆனால் அவள் சொல்லாமல் விட்டதால் ஏற்படப் போகும் விபரீதத்தை அறியாமல் அவள் அழுது கொண்டிருந்தாள்.
படத்திற்கு நன்றி: http://www.guardian.co.uk/healthcare-network/2012/feb/17/bma-flexible-roll-out-nhs-111