இந்த வார வல்லமையாளர்

திவாகர்

மனிதன் கண்டுபிடித்த எத்தனையோ விநோதங்களில் இந்த வெடிமருந்தும் ஒன்று.அழிவுக்காகவும் ஆக்கத்துக்காகவுமாக உபயோகப்படுத்தப்படுகின்ற இந்த அபாயகரமான பொருள் பிற்காலங்களில்  அழிவுக்குத்தான் அதிகம் பயன்படுகிறது என்றாலும் ஒரு சிறிய அளவிலாவது வாண வேடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது எனும்போது அதே சிறிய அளவில் ஆறுதலும் ஏற்படுகின்றதுதானே. ஆகாயத்தில் இந்த வாண வேடிக்கைகள் நடத்தும் இந்த வர்ணஜாலங்கள்  கண்ணுக்கும் இனிமையானது என்று சொல்லவும் வேண்டுமோ.

இந்த வாரம் இப்படி ஒரு ஆனந்தமான வர்ணஜாலத்தை தன் புகைப்படக் கருவிக்குள் கொணர்ந்து ஆச்சரியமூட்டி இருக்கிறார் திரு சிலம்பொலி அருண். ஒருமுறை இந்தப் படத்தைப் பாருங்கள். http://www.flickr.com/photos/chilampoli/7715586418/in/pool-1922937@N20/

இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் ஒளியை.. அதுவும் வாண வேடிக்கை போன்ற நகரும் ஒளியைப் படம் பிடிப்பதென்பது சற்றுச் சவாலான ஒன்று. காமிராவின் ஷட்டர் திறந்து மூடும் வேகம், எடுத்துக்கொள்ளும் நேரம், உட்புகும் ஒளியின் அளவு(அப்பர்ச்சர்) இவையனைத்தும் ஒத்திசைந்தால் மட்டுமே அழகிய வாணவேடிக்கையை அதன் அழகு சற்றும் குன்றாமல் படம் பிடிக்க முடியும். இவை எல்லாவற்றையும் சரியாகக் கையாண்டு எடுக்கப்பட்ட இந்தப்படம் பார்த்தவுடனேயே நம் மனதைக் கொள்ளை கொள்கிறது (குறிப்புக்கு நன்றி அமைதிச் சாரல்).

திறமையையாக செவ்வனே பயன்படுத்தி இப்படி ஒரு அற்புத வண்ணக் கலவையை நமக்குப் பரிசளித்த திரு சிலம்பொலி அருண் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். வல்லமை குழுவினர் சார்பில் திரு சிலம்பொலி அருண் அவர்களுக்கு நம் வாழ்த்துகள் உரித்தாகுக.

“நான் படம் பிடிப்பது பொழுதுபோக்காக  ஆரம்பித்த ஒரு விடயம் .என் கேமரா இன்று என் இரு கண்களாக மாறி விட்டது. இன்றும் நான் எடுக்கும் ஒவ்வொரு படமும் நான் அடுத்த படத்தை நன்றாக எடுக்க பழகும் படங்களாகவே கருதுகிறேன்.

நான் ஒரு மென்பொருள் எழுத்தர் கனடாவில் Vancouver நகரத்தில் இருக்கின்றேன். என் சொந்த ஊர் உடுமலைபேட்டை.  என் மனைவி பெயர் சிலம்பொலி.  “

 

கடைசி பாரா: அமைதிச்சாரல்தான் இந்தக் கடைசி பாராவில் இடம் பிடிக்கிறார். எனக்குப் பிடித்த மழை, இதுவரை வாராதிருந்த மழை, இந்தியக் கிரிக்கெட் டீம் வந்தால்தான் எங்கள் ஊருக்கு வருவேன் என்று பிடிவாதமாகக் காத்திருந்ததோ என்னவோ சென்ற சனிக்கிழமையன்று சடசடவென பெய்து ஆனந்தத்தை அள்ளி வீசி விட்டுச் சென்றது. சாந்தியின் கவிதையோடு இந்த மழையை நினைத்துப் பார்த்து ரசித்தேன்..

ஆரவாரத்துடன் நாட்டு வளம் காண
பாய்ந்து வந்த நொடியில்
சரேலென்று பறந்த
கறுப்புக்கொடிகள் கண்டு
திரும்பி விட எத்தனித்தாலும்
குடை மடக்கி உடல் நனைத்து
நா நீட்டி மழை ருசித்த
ஒரு ஈர மனதை மேலும் குளிர்விக்கத்
திரும்பி வருகிறான்
வருண தேவன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.