கட்டுரைகள்ஜோதிடம்வார ராசி பலன்

வார ராசிபலன் 10.09.2012 முதல் 16.9.2012 வரை

காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: வியாபாரிகள் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறந்தாலும், அதன் மூலம் வரும் லாபம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்கள் வெளி வட்டாரப் பழக்கங்களை ஓர் எல்லைக்குள் வைப்பது நல்லது. பெண்கள் வீணான சஞ்சலத்தையும், மனக்குழப்பத்தையும் மனதில் குடியேற விடாமலிருந்தால், திறமைகள் உங்கள் உயர்வுக்குக் கை கொடுக்கும். பணியில் இருப்போர் அலுவலக வட்டத்தில் அளவோடு பேசி வந்தால், வீண் தொந்தரவுகளை எளிதில் விலக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியின் ஊடே அதிக அலைச்சல், எரிச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். எனவே நிதானமாகச் செயல்படுவது நல்லது.

ரிஷபம்: கலைஞர்கள் தொழிலில் முழுக் கவனம் செலுத்தி வர, தங்களுக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பங்குதாரர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்தால், புதிய ஒப்பந்தங்கள் உங்கள் வசமாகும். இந்த வாரம் ஏதாவது ஒரு வழியில் பணம் செலவழியும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் சேமிப்புக்கு என ஒரு தொகை ஒதுக்கி வைத்தால் அவசரச் செலவுக்குக் கை கொடுக்கும். மாணவர்கள் வேகம், வேகம் என்று செல்லும் போது விவேகத்தையும் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அனைத்திலும் வெற்றிதான். பணியில் இருப்பவர்களுக்கு தேடி வரும் புதுப்பொறுப்புகள் மூலம் உங்கள் அந்தஸ்தும், கௌரவமும் உயரும்.

மிதுனம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் இயல்பும், குணமும் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு ஆலோசனைகளை வழங்குவது புத்திசாலித்தனம். மாணவர்கள் உங்கள் நற்பெயர் என்னும் மந்திரச் சாவியை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்புக் கதவுகள் தானே திறக்கும். கணிசமான லாபம் கிட்ட வேண்டுமா? தொழில் புரிபவர்களும், வியாபாரிகளும், வியாபார நிலவரத்திற்கேற்றவாறு செயல்பாடுகளையும், திட்டங்களையும் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் குடும்பக் கணக்கு வழக்கு, நிர்வாகம் ஆகியவற்றில் பதற்றமான முடிவுகளுக்கு இடம் கொடாமலிருந்தால், பிரச்னைகளைக் கட்டுக்குள் வைக்கலாம்.

கடகம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகளில் அகலக்கால் வைக்காமலிருந்தால், நஷ்டம் என்பதிராது. இருந்த இடத்தில் இருந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இந்த வாரம் ஓடியாடி உழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். வாழ்வில் இனிமையும், பெருமையும் தங்க வேண்டுமா? வாழ்க்கைத்துணை சொல்லும் ஆலோசனையை ஏற்றுச் செயல்படுங்கள். கல்வியின் மீது கல்வியின் மாணவர்களின் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த நலிவுகள் நீங்குவதால், பெண்கள் புதுத் தெம்புடன் வளைய வருவதோடு, விடுபட்ட வேலைகளை முடிக்கும் திறமும் கூடும். சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவியும், ஆதரவும் கிடைக்கும்.

சிம்மம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் இந்த வாரம் நெருக்கமான நபரைச் சந்தித்து அவர் மூலம் முக்கியமான காரியம் ஒன்றைச் சாதித்துக் கொள்வீர்கள். பெண்கள் காரியங்களில், கவனமாக இருந்தாலும், சில எதிர்பாராத தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் எதிர்பார்த்த லாபமும், நல்ல பெயரும் கிட்டும். முதியவர்கள் உணவுப் பழக்க வழக்கம், தேவையான தூக்கம் இரண்டிலும் கவனமாக இருந்தால், உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்குக் கடிதம் மூலம் வரும் செய்திகள் சந்தோஷத்தைச் சுமந்து கொண்டு வரும். பெற்றோர்கள் கல்விக்கடன் பெற எடுக்கும் முயற்சி பலிதமாகும் .

கன்னி: பெற்றோர்கள் எந்த ஒரு செயலையும், திறம்படச் செய்யும் பிள்ளைகளைத் தக்க சமயத்தில் பாராட்டுங்கள். அது அவர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். வியாபாரிகள் புதிய திட்டங்களில் இறங்கும் முன் கடன் நிலவரத்தையும் கவனத்தில் கொண்டு திட்டமிட்டால், காரியங்கள் நஷ்டமாகாது. பெண்கள் தெளிவான சிந்தனையோடும், தீர்க்கமான யோசனையோடும் செயல்படுவார்கள். மாணவர்கள் வரவு செலவுகளை வரைமுறைக்குள் வைத்தால், பிறரிடம் கைமாற்றாய் பணம் பெற வேண்டிய அவசியமிராது. மழைக் காலங்களில் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

துலாம்: முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை முழுமையாக நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் பாராட்டை எதிர்பாராமல், உறுதியாக உழைத்தால், அந்த உழைப்பே கௌரவமான பதவியில் உங்களை அமர வைத்து விடும். பெண்கள் குடும்பத்தில் பிறர் செய்யும் தவறுகளை இதமாகச் சுட்டிக் காட்டுங்கள். உறவுகளின் இனிமை மாறாமலிருக்கும். மாணவர்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகி, தன்னம்பிக்கை அதிகரிப்பதால், சவாலான பணிகளில் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த வாரம் உறவினர் வருகையால் மகிழ்ச்சியும், அதற்கேற்ற செலவுகளும் கூடும்.

விருச்சிகம்: இந்த வாரம் கலைஞர்கள் வாழ்வில் திருப்பங்களுக்கும், விறுவிறுப்புக்கும் நிறைய இடமிருக்கும். பெண்கள் மனம் விரும்பும் போல் வீட்டை அழகு படுத்துதல் மற்றும் விரிவுபடுத்தல் ஆகியவற்றில் முனைப்புடன் இறங்குவீர்கள். மாணவர்கள் சில சிரமங்களைத் தாண்டி வேலைகளை முடிப்பார்கள். வேலை செய்யும் சூழல், அதிகாரிகளின் போக்கு ஆகியவை சாதகமாக இருப்பதால், பணியில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் நாவடக்கத்தை மேற்கொண்டால், கருத்து வேற்றுமை, கசப்பான அனுபவம் ஆகியவை தலை காட்டாமல் இருக்கும். சுய தொழில் புரிபவர்கள் ஏற்றமான நிலை காண்பர்.

தனுசு: புதிய மனிதர்களின் சந்திப்பு மாணவர்களுக்கு உபயோகமான பலனைத் தரும். விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் புதிய சாதனை படைப்பார்கள். பணியில் உள்ளவர்கள் உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு கனிந்து வரும். பெண்களுக்கு ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபடுவதிலேயே நேரம் போய் விடும் என்றாலும், ஆரோக்கியத்தைப் பராமரிப்பதிலும் கொஞ்சம் கவனம் தேவை. மாணவர்கள் நண்பர்களை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் பெறும் ஆதாயங்கள் அதிகமாக இருக்கும். வியாபாரிகள் பல விஷயங்களில் திட்டமிட்டு அடியெடுத்து வைப்பது மூலம் நல்ல பலனைப் பெறலாம்.

மகரம்: நீடித்த கடன்கள் விலகுவதால் பெண்கள் மனதில் நிம்மதியும், முகத்தில் மகிழ்ச்சியும் மலரும். கலைஞர்கள் புதிய முயற்சியில் ஈடுபடும் போது, எழும் தடைகளைத் தவிர்க்க தீவிர முயற்சி, இதமான அணுகு முறை இரண்டையும் கடைப்பிடித்தல் அவசியம். மாணவர்கள் ஈடுபாடோடு எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும் என்பதை நினைவில் கொண்டால், பாடங்கள் சுமையாய்த் தோன்றாது. வியாபாரிகள் நிதி நிலவரத்தைக் கவனத்தில் கொண்டபின், காசோலைகளைப் பிறர்க்கு வழங்குவது நல்லது. இந்த வாரம் வழிப் பயணங்களில் சிறு விரயங்களும் அதனால் மன வருத்தமும் உருவாகலாம்.

கும்பம்: வியாபாரிகள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்களால் வரும் முழுமையான லாபத்தைப் பெறலாம். தினசரிப் பணிகளில் குழப்பங்கள் உருவாகாமலிருக்க பெண்கள் கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் பல சலுகைகளில் சில மட்டுமே நிறைவேறுவதால், மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். முதியவர்கள் சின்ன விஷயங்களுக்காக பிறர் மேல் சீறிப் பாய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். குடும்ப அமைதி குலையாது. வேலையின் பொருட்டு அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்பவர்கள் ஒவ்வாமை தரும் உணவு வகைகளை ஒதுக்குவது நல்லது.

மீனம்: மாணவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்தும், திட்டமிட்டும் செயல்பட்டால் எதிலும் வெற்றிதான்! போட்டிகள் மற்றும் பொறாமைகளின் நடுவே எதிர்நீச்சல் போட்டு கலைஞர்கள் தங்கள் வய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வர். இந்த வாரம் குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய நெருக்கடிக்குச் சிலர் ஆளாகலாம். பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றிய வீணான கவலை நீங்கும் வண்ணம், அவர்களின் செயல்பாட்டில் தெளிவு காணப்படும். பெண்கள் எந்தச் சமயத்தில் எதைச் செய்ய வேண்டும், எங்கு எப்படிப் பேச வேண்டும் என்பதை உணர்ந்தாலே குடும்பத்தில் கலகலப்புக்கு குறைவிராது. பணியில் உள்ளவர்கள் மறதியால் சிலவற்றிற்கு வீண் தண்டம் கட்ட வேண்டி யிருக்கும்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க