நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-16

2

பெருவை பார்த்தசாரதி

கடந்த பதினான்கு மற்றும் பதினைந்தாவது இதழ்களில், நண்பர்கள் பலர் நம்முடன் எப்படிப் பழகுகிறார்கள், நாம் அவர்களிடம் எவ்வாறு நட்பாக நடந்து கொள்ளுகின்றோம், முடிவில் நண்பர்கள் பலவிதம் என்பதையும், நட்புக்கு உறுதுணையாகத் திகழும் நண்பர்கள் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள் என்பதையும் படித்தோம். ஏனென்றால், நட்பிலக்கணத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம்பெறும் கதாபாத்திரங்கள் மூலம் நம் ஆன்றோர்களும், அறிஞர்கள் பலரும் தங்களது சிறப்பான அபிப்பிராயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். நம்முடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு, இனிமையான வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற நண்பர்களை தேர்ந்தெடுக்கும் அதே சமயத்தில் நல்ல நட்பு, கூடா நட்பு மற்றும் நண்பர்களின் தராதரத்தை அறிந்து கொள்ளுதல் போன்றவற்றை முன் வைத்து, இந்த மூன்றாவது இதழிலும் நண்பர்களின் வழிகாட்டுதலுக்கே முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது என்பதை நட்போடு அணுகுவோம்.

ஒரு பாதி வாழ்க்கையை முன்பே கழித்து விட்ட பலருக்கு, மீதமிருக்கும் காலம் எவ்வளவு என்பதை யவராலும் ஊகிக்க முடியாது?……..அப்படி வரும் காலத்தைப் பற்றி ஊகித்தாலும், காலக்கணக்கீட்டில் உண்மை இருக்க வாய்ப்பில்லை!…….ஆக, கடந்த கால அனுபவங்களையும், நாம் இனிமேல் வாழப்போகின்ற மீதமுள்ள கொஞ்ச காலத்தைப் பற்றியும் சிறிது நேரம் சிந்தனை செய்தோமானால், நம் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும், அவை பெரும்பாலும் நல்ல எண்ணங்களாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், நம்மோடு உறவாடுகின்ற நண்பர்கள், சுற்றத்தார்கள், உறவினர்கள் இவர்களும் நல்லவர்களாக இருக்கவேண்டும். வாழ்க்கையில் எவ்வித முயற்சியும் எடுக்காமல், எவருக்குமே தானாக எல்லா வசதிகளும் வந்து அமைந்துவிடுவதில்லை. வாழ்க்கையில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிட்டுகிறது என்பதை நம்முடைய அனுபவத்திலே அறிய முடியும். வாழ்க்கை வசதிகள் பலவற்றை நாம் நம் முயற்சியின் மூலமே பெறமுடியும் என்பது நாம் அறிந்த சாதாரண விஷயம். உண்மையான நண்பர்களை அமைத்துக் கொள்வதைக் கூட, தொடர் முயற்சியால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதையும் தூய நட்புக்கு இலக்கணமாகத் திகழுகின்ற ஒரு சில உதாரணங்களைப் பற்றி இந்த இதழில் சற்று நிதானமாகச் சிந்திப்போம்.

வாழ்க்கையின் பல தருணங்களில், பல சந்தர்ப்பங்களில், பல இடங்களில், நம் மனதைக் கவர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை நண்பனாக்கிக் கொள்ளுகிறோம். சில சமயம் ஒருவருக்கொருவர் சந்திக்காமலேயே, நேரில் உரையாடாமலேயே நண்பர்களாவதும் உண்டு. இன்றய காலக்கட்டத்தில், முகநூல் (Face Book), மின் அஞ்சல்(Mail), இணைய தளம்(Internet) இவற்றால் இது சாத்தியமாகிறது. முகநூலில் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை, உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஒருவரைப் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. அறிந்த பிறகு அவரோடு நட்பு கொள்ள முடிகிறது. இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முகநூலில் ஒருவர் மூலமாக அவரது நெருங்கிய நண்பர்களையும், நமக்கு நண்பர்களாக்கிக் கொள்ள முடியும். இதில் ஒரே ஒரு கடினமான விஷயம் யாதெனில், ஒருவரை நண்பனாக்குவதற்கு முன், அவரது நம்பகத்தன்மையை மட்டும் அறிய முடியாது என்பது இதுவரை கண்டரியப்படாத உண்மை. இப்படி நாம் உருவாக்கிக் கொள்ளுகின்ற நண்பர்கள் பலர் நமக்கு உதவி செய்வார்களா என்பது தெரியாவிட்டாலும், அவர்கள் நம்மை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இன்றய நாளிதழ்களில் இம்மாதிரியான சம்பங்கள் இடம்பெறுவதைப் படித்திருக்கிறோம். ஏனென்றால் நண்பர்கள் என்ற பெயரில் நம்மோடு உறவாடிவிட்டு, நம்முடைய ரகசியங்களைத் தெரிந்து கொண்டு, பின்னாளில் நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்தி விடுவர். முகம் தெரியாத இணைய தள நட்பை எப்போது வேண்டுமானாலும் உதறித் தள்ளி விடலாம், ஆனால் ஒருவரோடு நேரில் நெருங்கிப் பழகி விட்டு, அவரைச் சட்டென்று உதறி விடுவது சாத்தியமாவதில்லை.

இணையதளம், முகநூல், மின் அஞ்சல் போன்ற எந்தவித வசதிகள் சற்றும் இல்லாத பண்டைக் காலத்திலேயே, ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துக் கொள்ளாமல் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்?… இதை நம்புவது சற்றுக் கடினம்தான். சங்க காலத்தில், பிசிராந்தையார் என்பவர் கோப்பெரும்சோழனுக்கு நண்பராக இருந்தவர். ஒருவரை ஒருவர் நேரில் அறியாதவாறு எவ்வாறு நண்பர்களாகியிருந்தனர் என்று பார்ப்போம். சோழ அரசன் வளமோடு இருக்கும் வரை புலவர் பிசிராந்தையார் அவரைச் சந்திக்க வரவில்லை. ஆனால் அவன் துன்பப்படும்போது அவனது மானம் காத்திட ஓடோடி வந்தார் என்கிறது சரித்திரம். நட்பின் சிறப்பைப் பற்றிக் கூறுமிடங்களிலெல்லாம், தவறாமல் பிசிராந்தையார் இடம் பெறுவார். சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பு அப்பழுக்கில்லாதது. ஆபத்துக் காலத்தில், எங்கிருந்தோ ஓடிவந்து நேரில் சந்தித்திராத நண்பனுக்கு உதவிய உண்மையான நட்பைப் பற்றிய படைப்பிலக்கியம்தான் பாவேந்தருக்கு சாகித்திய அகடமி விருது வாங்கிக் கொடுத்தது.

இப்படிப்பட்ட நண்பர்களைப் போலவே, இன்னும் பல மன்னர்களுக்கும் புலவருக்கும் இருந்தது என்பதைப் பல புத்தகங்களில் படித்திருக்கிறோம். எதிரிகளின் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பாரியின் இரண்டு மகளையும் காப்பாற்றிய நண்பர் கபிலரும், தமிழ்ப் புலவர் பெருஞ்சித்திரனாரின் வறுமையைப் போக்க தன் தலையை அளித்த குமணனும், அவ்வைப் பிராட்டியும் மன்னன் அதியமானும், இதிகாசங்களில், ராமனும் குகனும், கர்ணனும் துரியோதனும், குசேலரும் கண்ணனும் நட்புக்கு இலக்கியமாகத் திகழ்ந்த பல உத்தமர்களை இங்கே உதாரணங்களாக அள்ளி அடுக்க முடியும். சங்க இலக்கியங்களிலும், புராண இதிகாசங்களிலும் நட்புக்காக எடுத்துச் சொல்லப்பட்ட இவர்களைப் பற்றிய விபரங்களை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக அறிந்து கொண்டு, மேலும் விரிவாக அறிந்து கொள்ள, புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மகாபாரதத்தில் துரோணர், துருபதர் இவர்களின் இருவரின் நட்பு பற்றி அறிய முடியாதவர்கள் இருக்க முடியாது. ‘நீ என் நண்பன், நான் அரசனானால், எனது ராஜ்ஜியத்தில் பாதியை உனக்குக் கொடுப்பேன்’ என்றான் துருபதன். மற்ற நட்பை விட இவர்கள் இருவரின் நட்பு சற்று வித்தியாசமானது, பால்யப் பருவத்தில் இருவருக்கிடையே இருந்த உன்னதமான நட்பு, பின்னாளில் வாழ்க்கை முறையில் மாற்றம் என்று வரும்போது பகையாக மாறி விடுகிறது. பசியால் அழுகின்ற தன் குழந்தைக்கு ஆவின் பாலைக்கூட தரமுடியாத வறுமையில் வாடுகின்ற ஒருவன், வசதியாக வாழும் தன் நண்பணிடத்தில், ஒரு பசுவைத் தானமாகக் கேட்கிறான். அங்கே உதவி கேட்டு வந்த நண்பன் உதாசீனப் படுத்தப் படுகிறான். துருபதன் துரோணரை அவமானப் படுத்தினான். இந்த சம்பவமே நட்பாக இருந்த அவர்களுக்குள் தீராத ஜென்மப் பகையாக உருவெடுக்கிறது. பின்னால் தனது சீடன் மூலம் நண்பனைப் போரில் வென்று, அவனைத் தேர்ச்சக்கரத்தில் கட்டி இழுத்து வந்து, அவனுடைய ராஜ்ஜியத்தின் பாதியை எடுத்துக் கொண்டு, தான் விருப்பட்டு தானமாகக் கேட்ட பசுவையும் எடுத்துக் கொண்டு, அவனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்கிறான். உதவி கேட்ட நண்பன் துரோணன், உதவி செய்ய மறுத்த துருபதனுக்குப் பாடம் புகட்டுவதாகவும், பின்னால் வருகின்ற சந்ததியினருக்கு, நண்பர்களை நல்வழிப்படுத்த, துரோணர்/துருபதனின் கதை ஒரு சிறந்த வழி காட்டுதலாக அமைந்துள்ளது. உடலும், உயிரும் போலப் பழகிய நண்பர்களை எக்காரணம் கொண்டும் உதாசீனம் செய்யக்கூடாது, வசதி வாய்ப்புகள் அதிகமாகும் போது, நட்பை மறந்து கர்வம் கொண்டவர்களுக்கு துரோணர், துருபதன் நட்பு ஒரு உதாரணம். இதே நட்பைத் தற்காலத்தோடு ஒப்பிட்டோமானால்!..

ஒரு சில நண்பர்கள், இங்கிதம் தெரியாமல், மற்ற நல்ல நண்பர்களிடத்தில் நம்மைப் பற்றி ஏதாவது உளறி வைப்பார். நாசுக்காக நடந்து கொள்ளத் தெரியாமல், பின்வரும் விளைவுகளைப் பற்றியும் யோசிக்க மாட்டார். இப்படிப் பட்டவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் நண்பர்கள் பற்றியும் சிறிதும் கவலைப் படமாட்டார்கள். கர்வம், பிடிவாதம், கோபம் போன்ற குணங்களுக்கு பஞ்சம் இருக்காது. இவர்களோடு நாம் நண்பராகி விட்டால், மற்ற நண்பர்களிடத்தில் நமது நன்மதிப்பு குறைந்து, நட்புறவில் விரிசல் ஏற்பட ஏதுவாகி விடும். எப்போதுமே நம்மிடத்தில் இருக்கும் குற்றம், குறைகளை மட்டுமே முன்னிருத்தி, நம்மிடம் பழகுபவரும் இருக்கிறார்கள், இவர்களோடு நாம் உறவாடும் போது, நமது வெற்றிக்கு ஒருகாலும் இவர்கள் உதவிகரமாக இருக்க மாட்டார்கள். முக்கியமாக நம்மிடையே அதிகம் காணப்படும் நண்பர்களில் பெரும்பாலோர், ஏதாவது உதவி என்று மட்டும் வரும்போது உறவு கொண்டாடுவர். மற்ற நேரங்களில் இவரைப் போன்றவர்களின் இருப்பிடத்தைக்கூட நம்மால் அறிந்து கொள்வது கடினம்.

தீய பழக்கமுடைய நண்பனைத் திருத்துவதற்காக தானும் தீய பழக்கங்களுக்கு ஆளான அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றில், கூடா நண்பர்களின் சகவாசத்தால், அவர் பல இன்னல்களுக்கு ஆளானதைப் படித்திருக்கிறோம். தீய நண்பர்களின் வற்புறுத்தலின் படி புகைபிடித்தல், புலால் உண்ணல், திருடுதல், பொய்சொல்லுதல், தற்கொலை முயற்சி போன்ற சோதனைகளுக்கு ஆளாகி, முடிவில் நாட்டின் விடுதலைக்காகவும், உலக ஷேமத்திற்காகவும் தன்னை வருத்திக் கொண்டு உத்தமராக வாழ்ந்து காட்டினார். ஒருவரை நண்பராக அடைவதற்கு முன், அவரது குடிப்பிறப்பினையும், குற்றம் குறைகள், குணங்களையும் நன்கு ஆராய்ந்த பின் நட்பு கொள்ளாவிடில் இன்னல்களுக்கு ஆளாகி விடுவோம் என்பதுதான் அண்ணல் காட்டிய வழி, அவர் பெற்ற அனுபவம்.

நண்பர்களின் தராதரம் தெரிந்து, அவர்களோடு உறவாடினால் இனிமையான நண்பர்கள் கிடைப்பார்கள். தொடர்ந்து நட்புறவு நீடிக்க வேண்டுமென்றால், நண்பர்களின் குணாதிசயங்களை அனுசரித்துப் போவதும், அவருடைய செயல்பாடுகள் நன்மை பயப்பனவாக இருக்கிறதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நண்பர்களிலே, பனை, தென்னை வாழை என மூன்று வகையென்பார் கவியரசர் கண்ணதாசன், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை “அர்த்தமுள்ள இந்துமதத்தில்” மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதை படித்து அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். தாவரங்கள் அனைத்துமே, தமக்குக் கிடைக்கும் உதவிகளைப் பொறுத்துத்தான் பலன் தரும். ஆனால் பனை என்ற தாவரம், பிறரது உதவியை எதிர்பார்க்காமல், இயற்கைச் சூழலில் தானாக வளர்ந்து, பிறருக்கு உதவுகிறது. இந்தப் பனை மரத்தின் குணங்களைப் பெற்றவன் ஒருவனே உண்மையான நண்பனாக இருக்க முடியும் என்பார் கவியரசர் கண்ணதாசன்.

நண்பர்களின் தரத்தை எடைபோட மேலும் சில சிந்தனைகள்:-

நம்மிடையே பழகும் நண்பர்கள் சிலரிடம், நம்மிடத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் நன்றாகக் கேட்டறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமிருக்கும். ஆனால் அவர் தன்னைப் பற்றிய ஒரு சாதாரண விஷயம் கூட ரகசியமாகவே மற்ற நண்பர்களுக்குத் தெரியாமல் பாதுகாக்கப்படும். இப்படிப்பட்ட குணாதிசயத்தைப் பெற்றவர்கள், நண்பர்களோடு பழகும் போது, தன்னலத்தில் அதிக அக்கரை உள்ளவராகத் தென்படுவார். எந்த ஒரு காரியத்தைச் செய்யவும் துணிவில்லாமல், அதே காரியத்தை நண்பர்களைச் செய்யச் சொல்லி, அதிலிருந்து அனுபவம் பெறுவார். தன்னலம் கருதாத நண்பர்கள் அமைவது நமக்குக் கிடைத்த பாக்கியம்.

நீண்ட கால நண்பராகப் பழகிக்கொண்டிருக்கும் சிலரை, சில சமயம் கடைசி வரை புரிந்து கொள்ள முடியாமல் போவதும் உண்டு. இவர் எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்று தெரியாமல் நாம் ஒரு முடிவுக்கும் வர முடியாது. ஒரு நேரத்தில் கோபமும், மற்ற நேரத்தில் மெளனமாகவும் இருப்பார். நண்பர்களுக்கு இவரால் எவ்வித பயனும் ஏற்படாது. பொய் சொல்வதில் வல்லவராக இருப்பார். இவரது செயலில் பொய் இருப்பதால், இவரோடு பழகுபவர்கள் ஏமாளியாகி விடுவதும் உண்டு. தவிர்க்க வேண்டிய நண்பர்களில் இவர்கள் ஒரு ரகம்.

நம்மிடத்தில் எவ்வித குறையும் இல்லாமலேயே, நம்மிடம் எரிச்சல் படும், கோபப்படும் நண்பர்களும் உளர். நண்பர் செய்யும் தவறுகளை நாம் சுட்டிக் காட்டும் போது, இந்தக் கோபமும் எரிச்சலும் அதிகமாகவே வெளிப்படும். நண்பர்களுக்காக நலம் செய்ய நாம் விரும்பும்போது, இப்படிப்பட்ட நண்பர்கள், நம்மிடம் இருந்து சற்று விலகியே இருப்பார்கள். நண்பர் அவருடைய மனைவிக்குத் தெரியாமல் ஒரு தீய செயலைச் செய்ய முன்வரும் போது, நீங்கள் அதில் தலையிட்டால், நண்பரின் கோபத்துக்கு ஆளாகி விடுவீர்கள். இவர்கள் நெருங்கிய இடத்தில் வைக்காமல், சற்று தொலைவில் வைக்கப்பட வேண்டியவர்கள்.

மேலே கூறியது போல், தவிர்க்க வேண்டிய நண்பர்களைத் தவிர்த்து, நம்முடைய நேரான எண்ணங்களுக்கு (positive thinking) உற்சாக மூட்டக்கூடிய நண்பர்களுடன் நமது நோக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்றைக்கும் நன்மை பயக்கும். எதிர்மறை எண்ணங்கள், குறைகூறுதல், எந்த ஒரு காரியத்துக்கும் ஏதாவதொரு ‘முட்டுக்கட்டை’ போடுதல் போன்ற அறிவுரைகளைத் தவிர்த்து நண்பர்களின் ஆலோசனைகள் என்றைக்குமே நன்மை பயக்கும் என்பதை அனுபவத்தில் அறியலாம்.

நண்பர்களான திரு சுரேஷ், திரு பாலகிருட்டினன் இருவரின் படைப்புகளை தமிழர்கள் நன்றாக அறிவார்கள். இருவருமே திறமையான எழுத்தாளர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எழுத்துலகில் இருபெரும் எழுத்தாளர்கள் இணைபிரியா நண்பர்கள் என்பதை ஒரு சிலரே அறிவர். நட்பு மூலம் இலக்கியப் பணிகளைச் செய்ய முடியும் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக் காட்டு. இவர்கள் இருவரும் எழுதிய படைப்புகள் “சுபா” என்ற அடைமொழியோடு தமிழர்களின் மனதில் இடம் பெற்று விட்டது.

இன்று இளைய தலைமுறையினருக்கு நல்வழிகாட்ட எண்ணற்ற நூல்கள் வந்து விட்டன. அவற்றில் பெரும்பாலான நூல்கள் சுய முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை வலியுறுத்தும் நோக்கத்தை அடிப்படையாக வைத்து எழுதுவதில் மேநாட்டு அறிஞர் டாக்டர் காஃப் மேயர் போல், நம் நாட்டில், டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி, எழுத்தாளர் மெர்வின், மற்றும் கணேசன் இன்னும் பலர் எழுதிய தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் எண்ணங்களை தூண்டக்கூடிய அருமையான நூல்கள் இளைய தலைமுறையினர் படித்துப் பயன்பெற வேண்டியவை. இவர்கள் எழுதிய நூல்களில் பெரும்பாலானவை இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக ஆன்றோர்கள் கூறிய அறநெறிகளைகளும், மேல்நாட்டு அறிஞர்கள் கூறிய பொன்மொழிகளையும் மேற்கோள்களாக எடுத்துக் கூறப்பட்டிருக்கும். பல மேதாவிகளின் ஆரம்ப கால வாழ்க்கையில் அவர்கள் பட்ட இன்ப, துன்பங்களை எடுத்துக் கூறி, பின்னாளில் அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து உலகுக்கு வழிகாட்டுபவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதை விரிவாக எடுத்துரைத்திருப்பார்கள். விடுதலைக்குப் பின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விழிப்புணர்வு நூல்கள் பெருகி விட்டன. அதிலே வெற்றிக்கு வழிவகுக்கும் நண்பர்களின் பங்கு மூலம் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். உயரிய சிந்தனைகளோடு எழுதப் பட்ட இத்தகைய புத்தகங்களை இளம் வயதிலேயே படிக்கப் பழகிக்கொண்டால், தன்னம்பிக்கை என்ற மாபெரும் சக்தி இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.

தொடரும்…….

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-16

  1. ஆறாவது பத்தியில் எழுத்துப்பிழை, ஒரு சின்ன திருத்தம்::

    உதவி கேட்டு வந்தவன் “துருபதன்”, உதவி செய்ய மறுத்தவன் “துரோணன்”
    என்றிருக்க வேண்டும்.

  2. திரு இராமச்சந்திரன்.

    கட்டுரையில் சரியாகவே சொல்லப் பட்டிருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.