‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன்

 

 ஜடைமுடி தலையைச் சுற்றித் தொங்க, வெறித்த கண் நீங்காமல் பார்த்த அந்த சித்தரை (?) நானும் மிகுந்த நேரமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். 

கீழேயிருந்து குரல், ”சார், போதும். நீங்க கீழ வரலேன்னா, எனக்கு ஈ.ஓ. சீட்டுக் கிழிச்சுடுவார்!” என்றது. குருக்கள்தான். திரிபுடைமருதூர் கோபுரத்து நிலைகளுக்குள் நான் ஏறிச் சுற்றிக்கொண்டிருந்தேன். மனமில்லாது அந்த இடத்தை விட்டு அகன்றேன். யாராயிருக்கும்? இப்படி ஒரு விநோத மரச் சிலையை நான் பார்த்ததே இல்லை. 

‘சுவாமி சன்னதி நடை சாத்தர நேரமாயிடுத்து. சீக்கிரம் வரேளா?’ 

‘நிறைய சுவாமி பார்த்தாச்சு! பரவாயில்ல, அடுத்த தரம் சேவிச்சுக்கிறேன். இந்த முறை இந்த சிற்பங்களை என் கண்கள்ல சேமிச்சுக்கறேன்!’ 

விநோதமாய்ப் பார்த்த குருக்கள் நகர்ந்தார். 

கோவிலின் பின்புறம் தாமிரபரணி மிக அழகாக ஓடும் என்று குருக்கள் கூற, ஆசையாய் ஓடினாள் என் குட்டிப் பெண். கூடவே நானும். 

கரை சுத்தமாக இல்லை. ஆங்காங்கே ப்ளாஸ்டிக் பைகள், ஊசலாடிக் கொண்டிருந்தன. ஆடுகள் சர்வசாதாரணமாய் பின்புறத்திலிருந்து புழுக்கைகள் உதிர்த்துக் கொண்டு, திரிந்து கொண்டிருந்தன! தூரத்தே ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டப்பட்டதுபோல், மாட்டு வண்டிகள். ஆட்கள் ஈர மணலை மண்வெட்டியால் எடுத்து, சவுக்குக் கட்டைகளால் பாத்தி கட்டி, கட்டப்பட்ட வண்டியுள் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். வடியும் நீர், அந்த கட்டைகளினூடே மெல்ல வடிந்து, மீண்டும் அதன் தாய்மடி தேடி ஆற்றில் வழிந்து கொண்டிருந்தது. 

‘முன்னல்லாம், மணல் அதிகமா இருக்கும். இப்ப, எல்லாத்தையும் அள்ளீர்ரானுவல்லே, அதான் தண்ணி நிறமே மாறிப் போச்சு!’ என்றான் அருகில் ஒரு கிழவன் நான் கேட்காமலேயே! 

மீண்டும் கோவில் வாசலுக்கு வந்து ஆட்டோக் காரனிடம், ‘ஏம்பா, மன்னார்கோவில் போக எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டேன். 

‘சார், இன்னிக்கி முழு சவாரி நீங்கதான்னு சொல்லிட்டீங்க, கோவில் மூடுறமுன்ன போயிருவம்ல,” என்று ஆக்ஸிலரேட்டரை முடுக்கினான். 

வெறுமையாய் தொடர்ந்த தார்ச் சாலையில், துணைக்கு வரிசையாய், பரலாங் தூரம் இடைவெளி விட்டு, மாட்டு வண்டிகள். அவற்றின் முதுகில் ஈர மணல். 

சட்டென ஆட்டோ திசை திரும்ப, கண்ணில் பட்டது அந்த கோபுரம். பழமையானது என்றாலும், அழகானது. 

‘ஐ, பச்சை சாமீ,’ என்றால் கூட வந்த என் பெண். 

‘ஆமாம், பச்சை சாமிதான். இது சுதைல செஞ்சு, இயற்கைச் சாறால வர்ணம் பூசிய மூலவர். அந்த அழகைப் பார்த்துத்தான், குலசேகர ஆழ்வார், ‘பச்சை மாமலை போல் மேனி, பவளவாய், கமலச் செங்கண்’னு பாடி, நாடே வேணாம், உன் பாதமே கதின்னு இங்க கிடந்தார்! அவர் சமாதி பக்கத்துலேயே கோவிலுக்குள்ள இருக்கு பாருங்கோ! மேலே கோவில் வேலை நடக்கறது. அதனால போகமுடியாது. 

நின்றார், அமர்ந்தார், கிடந்தார்னு, மூணு விதமாப்பெருமாளை இங்க மட்டும்தான் பார்க்கலாம்.,” என்பவரை இடைமறித்து, “இல்ல, இன்னொரு கோவில் நான் பார்த்துருக்கேன். உத்தரமேரூர்,” என்றேன்! 

சுற்றி வருகையில், சுவர்களில் இருந்த கல்வெட்டு எழுத்துக்களை படிக்க முயன்றேன். ஊஹூம். முடியவில்லை. அதற்குமேல் பட்டையாக வெள்ளை அடித்திருந்தார்கள். வெள்ளை அடித்தாலோ, ஸாண்ட் ப்ளாஸ்டிங் எனும் கப்ரெஸர் கொண்டு மணலால் அடித்து சுத்தம் செய்தாலோ, இந்த வரலாற்றுச் சான்றுகள் அழிந்து போய்விடும். இவர்களுக்கு இது ஏன் தெரிவதில்லை? 

மேலே நீலவர்ணத்தில் அமர்ந்திருந்தவனைக் காணாமல் வர மனம் ஒப்பவில்லை. சுற்றிக் கட்டியிருந்த சாளரத்தில் சட்டென ஏறி, முட்டுக் கட்டைகள் இடையே நுழைந்து திருமாலைத் தேடினேன். ஏன் வந்தோம் என ஆகிவிட்டது. சுற்றுச் சுவர்கள் முழுதும் தீட்டப்பட்ட அழகிய ஓவியங்களின் மேலே, அவசரக் கட்டுமானம் செய்ய இரைத்த சிமெண்ட் சாரல்கள் விழுந்திருந்தன. சவுக்குக் கட்டைகளுக்கு இடையே, சிறைபட்டிருந்த ‘அவன்’ மவுனமாய் பார்த்துக் கொண்டிருக்க, மனம் அழுதபடி கீழே இறங்கினேன். 

கிடந்தவர் இருக்கும் சன்னதி முற்றிலும் அடைபட்டிருந்தது. அந்தப் பெருமாள் அங்கே எதற்கிடையில் சிக்கி என்னப் பாடுபடுகிறாரோ? 

கோவிலின் தூண்களில் உள்ள சிலைகள், மதில் சுவற்றின் மேலிருந்த கல்லால் ஆன குடை போன்றவற்றை புகைப்படமாய்ப் பதிந்தேன். 

ஆட்டோ டிரைவர், ‘பக்கத்துலதான் ப்ரம்மதேசம் கோவில். அண்ணாமல சீரியல் கூட எடுத்தாங்கல்ல! வாங்க பார்க்கலாம்.” என்றான். 

அதுல இருக்குற மண்டபத்து சிலைகள் தனியழகுன்னு கேள்விப்பட்டுருக்கியா? 

‘இல்லை’ என்பதுபோல் தலையாட்டினான் டிரைவர். 

கோவில் பூட்டிக் கிடந்தது. அர்ச்சகரைத்தேடி அக்ரஹார வீடுகளுக்கு சென்று வந்தான் டிரைவர். ம்ஹூம். பலனில்லை. பக்கத்துலயே வாலீஸ்வரமுடையார்னு ASI பராமரிக்கிற கோவில் இருக்கு தெரியுமா?” என்று நான் கேட்டதற்கு ‘இல்லை’ என்றே ஆச்சரியமாய் பதிலளித்தான். 

மிகுந்த அலைச்சலுக்குப் பின் தான் என் மரமண்டையில் புத்தி வந்தது! கேட்கும் விதத்தில் கேட்கவேண்டும்! 

‘செக்யூரிட்டி வெச்ச கோவில் எதுப்பா?’ என்று கேட்டதும், ‘அப்படி சொல்லுவீயளா, இதோ’, என்று ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த அத்தனை பேரும் ஒரு திசையில் கைகாட்டினார்கள். அந்த வழியே போனோம். 

மீண்டும் வழியெங்கும் இடைவெளி விட்டு ஈர மணல்கள் சுமந்து மாட்டு வண்டிகள். 

வாலீஸ்வரம் நான் எதிர்பார்த்ததைவிட சுத்தமாய் இருந்தது. திகட்டத் திகட்ட சிலைகளும், கல்வெட்டுக்களும் பார்த்து, ‘க்ளிக்’கிக் கொண்டிருந்தேன். கஜசம்ஹாரமூர்த்தி, நடராஜர் என்று ஒரு பக்கமென்றால், நாராயணர், ராமரென்று மறுபக்கமும், பிரம்மன், காளி தெற்கு நோக்கியும், கிழக்குப் பார்த்த பகுதியில், கண்ணப்ப நாயனாரின் கண் பறித்து ஆண்டவனுக்கு இடும் காட்சியும், சோழர்கால கலைஞர்கள் எத்தனை நேர்த்தியாய் செய்துள்ளார்கள்! கையுடைந்த ப்ரம்மாண்ட ஷண்முகர், மிகப் பெரிய அளவில் சப்த மாதர்கள், அவர்களுக்கு அருகில், பூதகிபோல் இருவர் என்று  எல்லாமே புதுமையாக இருந்தது. பகல் நேரம் ஆகிவிட்டதால், உடன் அழைத்துக் கொண்டு வந்த சின்ன மகளுக்கு பசிக்குமே என்று, வெளியே வந்தேன். இங்கும் சிவதரிசனம் இல்லை. வாட்ச் மேன் மட்டும் அமர்ந்திருந்தான். 

‘ஐயரு காலைல வந்துட்டு பூசை போட்டு போயிருவாரு சார். நமக்கு ட்யூட்டில்ல? அதான் உட்கார்ந்திருகேன்.” என்றான். 

என் கண்களோ அருகிலுள்ள நதிக் கரையில் வரிசை கட்டி நிற்கும் மாட்டு வண்டிகளையே பார்த்துக் கொண்டிருந்தன. 

டிரைவர் ஏதேதோ சொல்லிக்கொண்டே வந்தான். கவனம் அதிலில்லை. வழியெங்கும்… 

‘அம்பாசமுத்திரம் போயிடலாம். அங்கே சாப்பாடு ஓரளவு நல்லா கிடைக்கும்.” 

“சரிப்பா உன் இஷ்டம்’ என்றேன். 

மீண்டும் வழியெங்கும் இடைவெளி விட்டு மாட்டுவண்டிகள் சென்று கொண்டிருந்தன. ஈர மணலுடன். வண்டிக்காரன், மாடுகள் என அனைவருமே தூங்கினாலும்,வண்டி சரியாக பாதையில் போய்க் கொண்டிருந்த்து. 

“பழக்கம் சார். இன்னிக்கு நேத்தா செய்றாங்க! தினம் போற வழிதான? சரிய்யா போய்டுவாப்ல!” என்றான் டிரைவர். 

ஒரு மாட்டு வண்டியினருகில் நிறுத்தச் சொன்னேன். வண்டிக்காரரை சத்தம் போட்டு எழுப்பினேன். திடுக்கிட்டு எழுந்த அவன், “யாருலேய்” என்றான் பொதுப்படையாக! 

‘எங்க போகுது வண்டி?’ 

‘என்ன கேள்வி? மணல் ஆத்துல இருந்து எடுத்து வாபாரிங்க கிட்ட கொடுக்கோம், ஏன்? உன் வீட்டுக்கு வேணுமா?கடைல பேசிக்க,” என்றான். 

` என்ன வெல?’ 

‘அட, ஒரு நடைக்கு 500 ரூபாய் கிடைக்கும்பா! நாளுக்கு 4 நடையாவது போனாத்தான் பத்துகாசு பார்க்கலாம், சரி, சரி, காலைலேர்ந்து அள்ளிகிட்டு இருக்கோம். விடு பொழப்பக் கெடுக்காத; உய், உய் ..ட்ர்ர்ர்ர்” – அவன் போய்விட்டான்! 

எனக்கு எதோ நெருடலாய் பட்டது. 

அடுத்த வண்டியை நிப்பாட்டினேன். 

‘ஏங்க, எங்க போகுது?’ 

‘அம்பை வழியா போனா வண்டிங்க நெரிசல், ஆபீசருங்க, கட்சி ஆளுங்க தொல்லை அதான். குறுக்கால கீழாம்புர் ரோடு வழியா போய்ட்டா பாவநாசம் கட்டிட காண்ட்ராக்டர் வீடு, கடை எல்லாம் ஒண்ணுதான, அங்குன போயீரலாம்.’ 

ஆழ்வார்குறிச்சியில் காலையில் ஆரம்பித்து சில்லென்ற எதிர் காற்று  முகத்தில் கொண்டு பரவசப்பட்டதும், பரம கல்யாணி கோவில் ஆற்றில் பெண்ணோடு நீந்த முற்பட்டதும் (இப்போதுதான் ஞாபகம் வந்தது! அங்கும் ஆற்று நீருள் கால்களில் மணல் நெருடவேயில்லை, சரளையும், களிமண்ணும் தான்!), 

பாரதி யாதுமாகி நின்றாய் காளீ என்றும், ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’ என்று பாடவைத்த அந்த கடையத்து உக்ர காளியும், பச்சைசாமியும், அந்த உற்றுப்பார்த்த சித்தரின் சிலையும் கூடவே அவ்வப்போது எட்டிப் பார்க்கும் வயிற்றுப் பசியும், மாறி, மாறி சிந்தனையில் வந்து போனாலும், எல்லாம் மறந்துபோய் வரிசையாய் போகும் மணல் சுமந்த மாட்டுவண்டிகளே, மனதில் நின்றன. 

அப்படியே, கீழாம்பூர் ரோட்ல போயி, அந்த மணல் காண்ட்ராக்டர் வீடு வரைக்கும் போப்பா!” 

‘சார், அங்கதான் பாபநாசம், தண்ணி நல்லா இருக்கும், பாஃல்ஸ் இருக்கு, குளிக்கிறீயளா?” 

‘வேண்டாம். காண்ட்ராக்டர் வீடு வரை போ!’ 

பார்த்தேன். சுற்றி இடமின்றி மணல் கொட்டப்பட்டு, இடையே சிறிய கடை ஒன்று தெரிந்தது. 

திரும்பி வரும் வழியெங்கும் ஆட்டோ டிரைவர் கேள்வியாய் கேட்டுக் கொண்டு வந்தான். 

சார், நீங்க நிருபரா?

இல்ல 

கவர்மெண்ட் ஆபீசரா

இல்ல 

போலீஸா?

இல்ல 

கோவில் ஈ.ஓ வா?

இல்ல

படம் எடுக்குறதுக்கு லொகேஷன் பார்க்க வந்தீயளா?

இல்ல 

ஓவியரா?

கொஞ்சம்.. 

பின்ன என்னதான் சார்? 

இந்தியன். ரசிகன்.! 

அத்தோடு அவன் கேள்விக்கணைகள் நின்றன! அவன் பார்த்த பார்வை ‘கட்டாயம் இது மறை கழன்ற கேசு,’ என்று கட்டியம் கூறியது! 

வரிசையாய் மாட்டு வண்டிகள்.. 

அவற்றின் முதுகுகளில் ஈர மணல்… 

ரோட்டோரமாய் கீழே உட்கார்ந்து நான் அவை போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பக்கத்தில், மிகப் பக்கத்தில், சக்கரம் கடந்து போனது.

அடுத்த வண்டி. ஆ.. என்னது? என் மேலேயே ஏறுகிறதே..`ஏய்ய். ஏய்ய் வண்டிகாரா

நேரா போப்பா..’ நான் கத்துவது அவன் காதில் விழவில்லை. ஒரு பக்கத்தில் முட் செடிகள், அந்தப் பக்கம் மாட்டு வண்டி என்னை நோக்கி வருகிறது.. வாயைத் திறக்கும் முன் திடீரென அந்தச் சித்தரின் கண்கள் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன! இவர் எங்கிருந்து வந்தார்? அந்தக் கண்களை விட்டு என் கண்கள் அகலுமுன், வண்டி ஏறியே விட்டது! ஆ..ஆஆஆஆஆ.. 

‘என்னங்க, என்னங்க,’ அருகில் படுத்திருந்த மனைவி உலுப்பி எழுப்பினாள். 

`அ அ! என்ன, எங்கிருக்கேன்?’ 

‘சரியாப் போச்சு. மாம்பலத்துல, நம்ம வீட்ல! எதேனும் கெட்ட கனாவா? லீவுக்கு எங்க அம்மா வீட்டுக்கு போலாம்னேன். என்னய அனுப்சுட்டு, நீங்க கல்வெட்டு, சிலை, கோவில் அது இதுன்னு அலையாதீங்கன்னு சொன்னா கேட்டாதான? இதுல பொண்ணையும் இழுத்துகிட்டு போயீர்றேங்க. அவளுக்கும் எதாச்சும் பேயி பிசாசுன்னு பிடிச்சுடப் போறது! 

‘இல்ல, இது கனவில்ல. நிஜம்! மணல் வண்டிங்க, மணல் படுகைய மொட்டையடிக்கிறது, இந்த சித்தர் எல்லாம்..” 

‘பேசாம, தண்ணி குடுச்சுட்டு, நெத்தில விபூதி வெச்சுகிட்டு படுங்க!” என்று சொல்லிவிட்டு, தானும் தூங்க போய்விட்டாள்! 

என்னை மட்டும், சித்தரும், மொட்டையடிக்கப்படும் நதிக்கரைகளும், மாட்டுவண்டிகளும் விட்டுச் செல்ல மறுத்தன! மணல் கயிறு என் கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கொண்டிருக்கிறது! 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *