தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-10)

முகில் தினகரன்

‘ஆமாம்மா…அதுவும் வெறும் கதையல்ல…மாபெரும் சோகக் கதை!”

நெற்றியைச் சுருக்கிக் கொண்டு மைதிலி அவரையே கூர்ந்து பார்க்க,

சொன்னார்.

வெளியூர் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தன் மகனுடைய படிப்புச் செலவுக்கு பணம் அனுப்ப முடியாத ஒரு சூழ்நிலையில் தன் கிட்னியை விற்றுப் பணம் அனுப்பி வைத்த செய்தியை அவர் சொல்லச் சொல்ல…,

மைதிலியின் முகம் இருண்டது.

‘கல்யாணச் செலவுக்கு என்ன பண்ணப் போறேன்னு தெரியலை” ன்னு அத்தனை கவலைப்பட்டவர் கோயமுத்தூர் போய் ஒரே வாரத்துல எப்படி அவ்வளவு பணம் புரட்டினார்ன்னு இப்பத்தான் புரியுது!…விடக் கூடாது கேட்டே தீரணும்!”

‘என்னம்மா திடீர்ன்னு அமைதியாயிட்டே?” நடுத்தர வயதுக்காரர் சற்று உரத்த குரலில் கேட்க,

சிந்தனை கலைந்த மைதிலி ‘ஒண்ணுமில்லைங்க!…’என்று சொல்லி முகத்தை இயல்புக்கு கொண்டு வந்தாள்.

சில நிமிட அமைதிக்குப் பின், ‘ஏங்க…நீங்க கோயமுத்தூர் போய்த்தானே கிட்னியை வித்தீங்க?” மைதிலி கேட்டாள்.

‘இல்லேம்மா….பெங்களூர்ல!….பெங்களூர்தான் இந்த வேலைக்கெல்லாம் பேர் போன ஊர்!”

ஒரு முறை சுந்தர் வாய் தவறிக் கோயமுத்தூர் என்பதற்குப் பதிலாய் பெங்களுர் என்று சொல்லி விட்டு உடனே சமாளித்ததன் ரகசியம் இப்போதுதான் அவளுக்கு விளங்கியது. ‘அடப்பாவி மனுஷா!…பணம் புரட்ட முடியலை என்பதற்காக இப்படியா செய்வாங்க?”

அவள் மீண்டும் ஏதோ சிந்தனையில் மூழ்கி அமைதி காக்க, அந்த நடுத்தர வயதுக்காரர் அவளை விநோதமாகப் பார்த்தபடி வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

கையில் கெரஸின் கேன் இருப்பதையும், வீட்டில் அம்மா அதற்காக காத்துக் கொண்டிருப்பதையும், மொத்தமாய் மறந்து விட்டு நேரே சுந்தர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மைதிலி.

மனதிற்குள் சிந்தனைச் சூறாவளி.

எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்த சுந்தர் அவளைக் கண்டதும், ‘என்ன மைதிலி…திடீர்னு எதிர்ல வந்து நிக்கறே?…என்ன விஷயம்?…அதென்ன கைல கேனு?”

சமையலறைக்குள்ளிருந்து வெளியே வந்த அவன் தாய் லட்சுமி, ‘வாம்மா மகாராணி” என்று தமாஷாய்ச் சொன்னதைத் துளியும் சட்டை செய்யாதவளாய்; சுந்தரின் அருகில் சென்று நின்றாள் மைதிலி.

‘கொஞ்சம் அந்த ரூமுக்குள்ளார வாங்க…உங்க கிட்ட தனியாப் பேசணும்!” என்றாள்.

திக்கென்றது அவனுக்கு.

‘என்ன மைதிலி…என்ன விஷயம்?…இங்கியே சொல்லு!” என்றவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள் மைதிலி.

வாயடைத்துப் போய் நின்றாள் லட்சுமி.

அறைக்குள், ‘உண்மையைச் சொல்லுங்க!…உங்க வயத்துல இருக்கற தழும்பு எப்படி வந்தது?” விறைப்புடன் கேட்டாள்.

‘அதான் அன்னிக்கே சொன்னேனே…ஸ்கூட்டர்க்காரன் வந்து இடிச்சுட்டான்னு!”

‘நெஜமா?”

‘என்ன இப்படிக் கேட்குறே?…நான் எதுக்கு உன்கிட்டப் பொய் சொல்லணும்?”

‘த பாருங்க…எனக்கு எல்லா விஷயமும் தெரியும், நீங்களா உண்மையைச் சொல்லலைன்னா…அப்புறம் அம்மாவைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டி வரும்!”

மாந்தோப்பில் மாங்காய் திருடப் போய் காவல்காரனிடம் மாட்டிக் கொண்ட பள்ளிக்கூட மாணவனைப் போல் கைகளைப் பிசைந்தபடி நின்றான் சுந்தர். ‘அடக் கடவுளே!…இவளுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து விட்டது போலிருக்கே!…இதுக்கு மேலேயும் மறைக்கப் போனா இவ அம்மாவைக் கூப்பிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிடுவா…அதனால பேசாம இவகிட்ட உண்மையைச் சொல்லிடறதுதான் சரி!” என்று தனக்குள் முடிவு செய்து கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

ஆரம்ப பெண் பார்க்கும் படலத்தில் துவங்கி….பெங்களூர் ஆஸ்பத்திரியில் கிட்னி விற்ற படலம் வரை நடந்தவைகளை அப்படியே ஒப்பித்தான் சுந்தர்.

அதிர்ச்சியில் உறைந்து போய் சிலையாய் நின்றாள் மைதிலி.

அவளது பெரிய விழிகளில் கோபம் கொப்பளித்தது. சிவந்த அதரங்கள் சினத்தில் துடித்தன. தொண்டை வரை வந்த வார்த்தைகள் வெளியே வர முடியாமல் அங்கேயே தங்கி ஒரு அடைப்பினை ஏற்படுத்த..

‘குபுக்” கென்று பொங்கி குலுங்கிக் குலுங்கி அழுதாள் மைதிலி.

‘மைதிலி…அழாத மைதிலி…இதனால என் ஆரோக்கியத்துக்கோ…என் உயிருக்கோ எந்த விதமான ஆபத்தும் வராதாம்!…டாக்டர் சொல்லியிருக்கார்!”

வாயைத் திறந்து பதிலேதும் சொல்லாமல் அவனையே சில விநாடிகள் வெறித்துப் பார்த்தவாறே நின்ற மைதிலி ‘விருட்”டெனக் கிளம்பி அறைக்கு வெளியே வேக வேகமாக நடந்தாள்.

அவள் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாய் வந்த சுந்தர், ‘மைதிலி…மைதிலி…நில்லும்மா…நான் சொல்றதைக் கொஞ்சம் கேளும்மா!”

‘படக்”கென நின்றவள் அவசரமாய்த் திரும்பி, ‘யோவ்…தங்கச்சி மேல பாசம் இருக்க வேண்டியதுதான்…அதுக்காக இப்படியா?…ஒரு நொடி…ஒரே ஒரு நொடி என்னைய நெனைச்சுப் பாத்தியா?” என்றவள் நாலடி நடந்து, மீண்டும் திரும்பி, ‘ப்ச்…என்னைய மன்னிச்சிடுய்யா!” என்று சொல்லி விட்டு தெருவில் இறங்கி வேக வேகமாக நடந்து சென்றாள்.

செய்வதறியாது அப்படியே மலைத்துப் போய் நின்றவனை, லட்சுமி உசுப்பினாள். ‘என்ன சுந்தர்…என்ன சொல்லிட்டுப் போறா மைதிலி?”

‘அது…வந்து…ஒண்ணுமில்லைம்மா…” என்று பதட்டமாய்ச் சொன்னவன் தொடர்ந்து அங்கு நின்றால் அம்மாவின் தொடர் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதால் அவசரமாய் அகன்றான்.

(தொடரும்)

படத்திற்கு நன்றி:http://anu-lal.blogspot.in/2010/12/poison.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *