புரிதல்கள்
முகில் தினகரன்
உறக்கம் பிடிக்காமல் மேலே சுழலும் மின் விசிறியையே பார்த்தபடி படுத்திருந்த கணவனிடம் மெல்லக் கேட்டாள் ரத்னா.
‘என்னங்க…என்ன யோசனை?…வீட்டுக்காரர் நாளைக்கு வாடகை கேட்டு வந்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்கறீங்களா?…’
‘………………………’
‘விடுங்க அவர்கிட்ட நான் பேசி…எப்படியாச்சும் டைம் வாங்கிடறேன்’
‘அதில்ல ரத்னா..நம்ம வித்யா வேற அடுத்த வாரம் ஸ்கூல்ல ஏதோ டான்ஸ் ப்ரோக்ராம்….அதுக்கு டிரஸ் வாங்கணும்…இருநூறு ரூபா வேணும்னு கேட்டா….அதுவும் ரெண்டு நாள்ல டீச்சர்கிட்ட குடுக்கணுமாம்….அதான் என்ன பண்றதுன்னு யோசனை பண்ணிட்டிருக்கேன்…’ என்றான் கோபால்.
‘இதுல யோசிக்கறதுக்கு என்னங்க இருக்கு?…..டான்ஸூம் வேண்டாம்….ஒரு மண்ணும் வேண்டாம்…ஒழுங்கா படிக்கற வேலைய மட்டும் பாருன்னு சொல்லிட்டாப் போச்சு’
‘இல்லடி….புள்ள பாவம் ஆசைப் பட்டுக் கேட்குது…வேண்டாம்ன்னு சொல்ல மனசு வர மாட்டேங்குதுடி…’
‘அதுக்காக?’
‘எங்காச்சும் கடனாவது வாங்கிக் குடுத்துடலாம்னு தோணுது’
‘ஆஹா…இது நல்லாருக்கே…..கடன் வாங்கி டான்ஸ் ஆடணுமாக்கும்?’ ரத்னா சற்றுப் பெரிய குரலில் சொல்ல,
‘கொஞ்சம் மெதுவாப் பேசுடி…..புள்ள முழிச்சுடப் போவது…’
‘ஏற்கனவே திரும்பின பக்கமெல்லாம் கடன் வாங்கி வெச்சாச்சு….மறுபடியும் வாங்கிட்டே இருந்தீங்கன்னா…கடைசில வர்ற மொத்த சம்பளமும் கடனைத் திருப்பிக் குடுக்கவே செரியாப் போயிடும்’
‘நம்ம கஷ்டம் அதுக்கென்னடி தெரியும்?…’
‘க்கும்…..நீங்களாச்சு…உங்க புள்ளையாச்சு….என்னமோ பண்ணுங்க’
‘வெடுக்’ கென்று சொல்லி விட்டு ‘படக்’ கென்று திரும்பிப் படுத்தாள் ரத்னா.
மனைவி தடுத்தும் கேளாமல் இருநூறு ரூபாய்க் கடனுக்காக பார்க்காதவர்களையெல்லாம் பார்த்தார்….கேட்காதவர்களிடமெல்லாம் கேட்டார் கோபால.;
‘அடடே…இப்ப என் நிலைமையே ரொம்ப டைட்டா இருக்கே கோபால்…’
‘என்னபபா நீ,…இப்ப வர்றே….நேத்திக்குத்தான் இருந்த பணத்தையெல்லாம் சீட்டுக்குக் கட்டினேன்.’
‘ஸாரி கோபால்…இந்த மாசம் வீட்டுல ஏகப்பட்ட ஆஸ்பத்திரி செலவு’
இப்படியான பதில்களையே திரும்பத் திரும்பக் கேட்டு நொந்து போய் வாடிய முகத்துடன் வீடு திரும்பிய போது,
‘அப்பா நான் டான்ஸ் ப்ரோக்ராமுக்கு பணம் கட்ட வேண்டியதில்லை’
மகள் சொன்னதைக் கேட்டதும் முகம் பிரகாசமானது கோபாலுக்கு ‘ஏம்மா…ஏன் வேண்டாம,;?’
‘அது…வந்து….இன்னிக்கு நடந்த செலக்ஷன் போட்டில…நான் செலக்ட் ஆகலை…’
‘அடடே….’ பாவனையாய் அங்கலாய்த்தான் கோபால்.
‘நான் நல்லாவே ஆடலைப்பா…எனக்கு டான்ஸ் சரியா வர மாட்டேங்குது…அதான் செலக்டே ஆகலை…’
‘சரி…சரி…போனாப் போவுது விடும்மா…அடுத்த தடவ நல்லா ஆடி செலக்ட் ஆகிக்கலாம்…என்ன?’
அவள் நகர்ந்ததும் ‘அப்பாடா’ என்றிருந்தது கோபாலுக்கு.
அடுத்த வாரத்தில் ஒரு நாள்,
மகளின் பள்ளி டான்ஸ் ஆசிரியையை மார்க்கெட்டில் சந்தித்தாள் ரத்னா.
‘நீங்க…வித்யாவோட அம்மாதானே?’ டான்ஸ் ஆசிரியை வலிய வந்து கேட்டாள்.
‘ஆமாம்….நீங்க?’
‘நான் உங்க மகளோட டான்ஸ் டீச்சர்’
‘அப்படியா…ரொம்ப சந்தோசமுங்க’
‘போன வாரம் ஸ்கூல்ல நடந்த டான்ஸ் ப்ரோக்ராமுக்கு நீங்க யாருமே வரலை போலிருக்கு…’
‘அமாங்க….எங்க வித்யா ஆடற மாதிரி இருந்தா வந்திருப்போம்…அவதான் செலக்டே ஆகலையே….அதனால ப்ரோக்ராமுக்கு வந்து அவ மனசையம் கஷ்டப்படுத்தி…நாங்களும் சங்கடப்பட வேண்டாம்னுதான் யாருமே வரலை..’
‘உண்மையில் அந்த ப்ரோக்ராமோட முதல் பரிசு…உங்க வித்யாவுக்குத்தான் போக வேண்டியது…’
‘என்ன டீச்சர்….அவதான் செலக்ஷனே ஆகலையே…’
‘அதுதான் எனக்கும் புரியலை….செலக்ஷனுக்கு முந்தின நாள் வரைக்கும் ரொம்ப நல்லா எல்லோருமே ஆச்சரியப்படுற மாதிரி ஆடினவ….அந்த செலக்ஷன் டான்ஸ்ல மட்டும் ஏன் சரியா ஆடலைன்னு இதுவரைக்கும் எனக்குப் புரியலைங்க…’
ஒரு சிறிய யோசிப்பிற்குப் பின் ‘நான் வேணா அவகிட்ட பேசிப் பார்க்கிறேன் டீச்சர்..’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்த ரத்னாவுக்கும் தன் மகளின் செயலுக்கான காரணம் புரிபடாமலே இருந்தது.
வீட்டையடைந்ததும் முதல் வேலையாய் வித்யாவிடம் விசாரித்தாள்.
‘அம்மா…அன்னிக்கு ராத்திரி நீயும் அப்பாவும் பேசிட்டிருந்ததை கேட்டேன்…பாவம் அப்பா…ஏற்கனவே என் ஸ்கூல் அட்மிஷனுக்காக…புத்தக ஃபீஸூக்காக….நெறைய கடன் வாங்கிட்டார்…இந்த டான்ஸ் புரோக்ராமுக்காக மறுபடியும் அவரைக் கடனாளியாக்க நான் விரும்பலை…..நமக்கு டான்ஸாம்மா முக்கியம்?…படிப்புதானே முக்கியம்?…அதனாலதான் நான் வேணுமின்னே செலக்ஷன் டான்ஸ்ல மோசமா ஆடி..செலக்ஷன் ஆகாமப் போனேன்…அப்பாகிட்ட எனக்குப் பணம் கட்ட வேண்டாம்ன்னு சொன்னப்ப அவர் முகம் எத்தனை சந்தோஷமாச்சுன்னு தெரியமா?…நம்ப அப்பாவ நாமே கஷ்டப்படுத்தலாமா?’
மகளை ‘வெடுக்’ கென்று இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டாள் ரத்னா.