இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ………………………. (23)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள் இதய முன்றலிருந்து ……
உலகத்தில் அனைத்துச் செல்வங்களும் இன்று வந்து நாளை போகக்கூடியவை. மனிதனுடன் நிலைத்திருப்பது, அவனிடமிருந்து யாரும் பறித்தெடுக்க முடியாதது கல்விச் செல்வம் மட்டுமே.
இக்கல்விச் செல்வத்தின் உண்மையான மதிப்பை எமது பின்புலங்களில் உள்ளவர்கள் மிகையாக உணர்ந்துள்ளார்கள். காரணம் என்னவெனில் வாழ்க்கையின் முன்னேற்றத்தை ஒரு ஓட்டப்போட்டியாகக் காணும் மனப்பான்மை எமது மனங்களிலே நிலை கொண்டுள்ளது.
முக்கியமாக முந்தைய காலங்களிலே மேலைநாடுகளைப் போலல்லாது எமது பின்புலநாடுகளிலே, பெற்றோர் தமது வயோதிக காலங்களுக்கென எதுவுமே சேமித்து வைப்பது கிடையாது. தமது வருமானம் முழுவதையுமே தமது குழந்தைகளின் எதிர்கால சுபீட்சத்திற்கான கல்வியைப் பெறுவதில் செலவிட்டு விடுவார்கள்.
தமது பிள்ளைகளே தமது காப்புறுதிகள் (Insurance) எனும் அடிப்படையிலேயே வாழ்ந்தார்கள். இப்பவும் கூட பலர் அப்படித்தான் வாழ்கிறார்கள். ஆனால் வயதான காலத்தில் பிள்ளைகள் அவர்களை வயோதிகர் இல்லத்தை நோக்கித் தள்ளி விடுவது ஒருபுறமிருக்கட்டும். அதை இன்னொரு மடலில் அலசுவோம்.
இத்தகைய ஒரு நோக்கத்தின் அடிப்படையிலே தான் தமது வாரிசுகளை மேற்படிப்புக்காக இங்கிலாந்து, அமேரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதுவும் பலர் தமது காணி பூமிகளை விற்றுத்தான் தமது பிள்ளைகளின் கல்விக்குச் செலவிடுகிறார்கள்.
மேலைநாடுகளும் வெளிநாட்டு மாணவர்களிடம் பெரிய தொகையை பெறவிட்டு, அவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்குகிறார்கள்.
எதற்காக இவன் இத்தகைய பீடிகையுடன் மடலை ஆரம்பிக்கிறான் என எண்ணுகிறீர்களா?
கடந்தவாரம் இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த ஒரு அதிரடி நடவடிக்கையின் விளைவுகளை சிறிது பகிர்ந்து கொள்ளவே இந்தப் பீடிகை.
சரி அதிகமாக அளக்காதீர் ஜயா ! அது என்ன நடவடிக்கை என்று நீங்கள் அலுத்துக் கொள்வதற்கு முன்னால் சொல்லி விடுகிறேன்.
லண்டன் மெட்ரோபொலிட்டன் யூனிவர்சிட்டி (London Metropolitan university) என்னும் கல்வி நிறுவனத்தில் ஏறக்குறைய 4000 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்தவாரம் திடீரென்று அரசாங்கம் இந்த நிறுவனம் வெளிநாட்டு மாணவர்களின் படிப்புக்காக வழங்கும் மாணவர் விசா வழங்குவதற்கான அதிகாரத்தை நிறுத்துவதாக அறிவித்து விட்டார்கள்.
அதுதவிர அங்கே படிப்பதற்கு அனுமதி பெற்ற மாணவர்கள், படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எதிர்வரும் அறுபது நாட்களுக்குள் தமது கல்வியைத் தொடர்வதற்குரிய வேறு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்களைத் தேர்ந்தெடுக்காவிடில் அவர்கள் திரும்பவும் தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
இந்த அதிரடி அறிவித்தலால் சுமார் 2600 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு அறிக்கை கூறுகிறது.
அது சரி ஏனிந்த தீர் நடவடிக்கை எனும் கேள்வி உங்களுக்கு எழுவது சகஜமே. இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி தீர்ந்தபாடில்லை. அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க தாம் எடுக்கும் நடவடிக்கையே சரியான வழி என்று மார்தட்டி எடுத்த அடிகள் நாட்டை இக்கட்டில் இருந்து விடுவித்ததாகத் தெரியவில்லை. நாடு எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு கடந்த அரசாங்கமும் அதன் பொருளாதாரக் கொள்கைகளுமே காரணம் என பல்லவி பாடிக் கொண்டு எத்தனை காலத்தை ஓட முடியும்.
பதவிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டதே ! இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பழைய பல்லவி பாடிக் கொண்டே காலத்தை ஓட்டுவார்கள் ?
எல்லோர் கண்களிலும், எண்ணங்களிலும் வெளிப்படையான தோற்றம் கொண்டுள்ளது வெளிநாட்டுக்காரரின் இங்கிலாந்து வருகையே ! அதுவே மிகவும் இலகுவாக தப்பித்துக் கொள்ளக்கூடிய வாதம்.
அதுவும் இக்காலகட்டத்திலே இங்கிலாந்துக்கு வருகை தரும் வெளிநாட்டு மண்வர்கள் அதிகம். இவர்களில் சிலர் இங்கு மாணவர்கள் எனும் போர்வையில் வந்து விட்டு தலைமறைவாகி விடுவார்கள் எனும் வாதத்தை மறுக்க முடியாது. ஆனால் பெரும்பான்மையான மாணவர்கள் தாம் தேடி வந்த மெற்படிப்பை முடித்துக் கொண்டு தம் நாட்டிற்குத் திரும்பி விடுகின்றார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம், பொருளாதாரச் சிக்கல் மறுபுறம் என அல்லாடும் இங்கிலாந்து நாட்டில் ஏன் அவர்கள் தங்கி இருக்கப் போகிறார்கள்?
ஆனால் இங்கிலாந்து உள்நாட்டு அமைச்சகத்தின் கீழியங்கும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் தாம் மேற்கொண்ட விசாரணைகளில், லண்டன் மெட்ரோ போலிட்டன் யூனிவர்சிட்டி எனும் இந்த கல்விக்கூடத்தில் அதிகமான மாணவர்கள் தலைமறைவாகிறார்கள் என்றும் அதனால் இக்கல்விச்சாலை வெளிநாட்டுக் காரர்கள் மாணவர் விசாக்களில் தமது யூனிவர்சிட்டிக்கு வருவதற்கு அங்கீகாரம் அளிக்கும் தகுதியை இழந்து விட்டார்கள் என்று அறிவித்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாவம். இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க முடியாமல் அல்லாடும் அரசாங்கம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி தம்மீது எழும் நம்பிக்கையின்மையைத் தவிர்ப்பதற்காக ஆட முயற்சிக்கும் ஆட்டத்தில் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் இந்திய மாணவர்கள் அதிகம் இடம் பெறுகிறார்கள். இவர்களில் சிலர் தாம் மேலைநாட்டில் கல்வி கற்பதற்காக தமது பெற்றோர் தமது கையிருப்புகளைக் கரைத்த கதைகளைக் கூறும் போது அது மனதை வாட்டுகிறது.
அவர்களின் நிலையை என்னால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் சுமார் 37 வருடங்களுக்கு முன்னால் நானும் இந்நாட்டுக்கு மாணவனாக வந்தவன் தான். ஆனால் அந்நாட்களில் நிலைமை வேறுவிதமாக இருந்தது. இருந்தாலும் மாணவர்களுக்கேயுரிய பிரச்சனைகள் பொதுவானவையாக இருப்பதால் உணர்வுகளைக் கொஞ்சம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.
ஆனால் இம்மாணவர்களின் மீது சாதாரண இங்கிலாந்து மக்கள் மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளார்கள் என்பதுவே உண்மை. எத்தனையோ லட்சம் செலவழித்து தமது நாட்டின் கல்வித்தரத்தினை உணர்ந்து இங்கே கல்வி கற்க வந்திருக்கும் மாணவர்களுக்கு தமது அரசாங்கம் இத்தகையதோர் நடவடிக்கை மூலம் அநீதி இழைத்துள்ளது என்பது பலரிடையே ஒரு பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் மிகவும் பிரபல்யமான ஊடகங்கள் இம்மாணவர்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
எமது நாட்டில் வந்து மேற்படிப்பு படித்து விட்டு தமது சொந்த நாடுகளுக்குப் போய் அந்நாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார்களானால் அவர்கள் மூலம் எம் நாட்டின் வியாபாரம் விருத்தியாகுமே ! இத்தகைய ஓர் அதிரடி அமுலாக்கல் எம்மீதான நல்லபிப்பிராயத்தைச் சிதைத்து விடுமே ! என்கிறார்கள் பல புத்திஜீவிகள்.
ஆனால் தேசியக் கட்சிகள் என்று கூறிக் கொண்டு சிறிதளவு இனத்துவேஷத்தைத் தூவும் கட்சிகளைச் சேர்ந்த சிறுபான்மையோர் இந்நடவடிக்கையை ஆதரித்து மக்களுக்கு சில திரிபு வாதங்களை முன்வைக்கிறார்கள்.
இங்கிலாந்தின் பொருளாதாரச் சூழல் தற்போது உருவாக்கும் கலாச்சாரத்திலிருந்து (Manufacturing economics), சேவைக் கலாச்சாரத்திற்கு (Service economics) மாறியுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் இங்கிலாந்தில் வந்து படிப்பதன் மூலம் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு வருடமொன்றுக்கு ஏறத்தாழ 12 பில்லியன் பவுண்ட்ஸ் வருகிறது என்கிறது ஒரு கணிப்பு.
ஏற்கனவே பொருதாரச் சிக்கலினால் தத்தளிக்கும் பிரித்தானிய நாடு இத்திடீர் நடவடிக்கையால் வெளிநாட்டு மாணவர்களின் வருகைப் பாதிப்பினால் இவ்வருவாயை இழப்பது எவ்வகையில் புத்திசாலித்தனமாகும் என்று வாதிடுகிறார்கள் சில பொருளாதார நிபுணர்கள்.
ஆனால் இந்நடவடிக்கைக்கு எதிரானவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. கோடைகால விடுமுறை முடிந்து இங்கிலாந்து பாராளுமன்றம் இவ்வாரம் மீண்டும் கூடுகிறது. இந்தப்பிரச்சனையை இக்கூட்டரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
“விஞ்ஞானம் மேலைநாட்டில் போரை நாடுது, மெய்ஞானம் கீழை நாட்டில் அமைதி தேடுது ” என்றான் கவியரசன். மெய்ஞானத்தில் மூழ்கிய நாட்டிலிருந்து விஞ்ஞானத்தை தேடிப்போன மாணவர்களின் எதிர்காலம் செழிப்பாக வேண்டுமென இறைவனை வேண்டுவோம்.
மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்