உச்சம்
கே.எஸ்.சுதாகர்
அவுஸ்திரேலியாவில் வருடக்கடைசி – கோடைகால விடுமுறை, மிக நீண்டதாக இருக்கும். பள்ளிக்கூடங்கள் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். வேலையில் இருந்து எனக்கு மூன்று கிழமைகள் விடுமுறை கிடைக்கும்.
பாடசாலை விடுமுறை விட இன்னமும் இரண்டு கிழமைகள்தான் இருந்தன. காலையில் மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும் போது, வீதியில் பெரியதொரு கங்காரு இறந்து கிடப்பதைப் பார்த்தோம். வாகனங்கள் அதை விலத்திப் போய்க் கொண்டிருந்தன.
“கங்காரு வருத்தம் வந்து இறந்திருக்க வேண்டும்” என்றேன்.
“இல்லை.. இல்லை… எந்தவொரு விலங்கும் வருத்தம் வந்தால், வீதியில் வந்து இறந்து விடுவதில்லை. எங்காவது பற்றைகள் மரங்கள் உள்ள மறைவிடங்களைத்தான் அவை தேடிப் போகும். யாரோ இதை வாகனத்தினால் அடித்து விட்டார்கள்” என்றான் மகன்.
நாங்கள் இருக்கும் இடம் ஒருகாலத்தில் – 10 வருடங்களுக்கு முன்னர் – மரங்கள் அடர்ந்த, இயற்கையான நீர் ஊற்றுக்களைக் கொண்ட இடமாகத்தான் இருந்தது. கங்காரு, அன்னம், தாரா மற்றும் பறவைகள் ஏராளமாக இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் விரட்டிவிட்டு உருவான நகரம்தான் தற்பொழுது உள்ளது. இப்பொழுதும் வாய்க்கால்களிலும் குளங்களிலும் அன்னப்பட்சிகளும் பறவைகளும் இருப்பதைக் காணலாம். சமீபமாக உள்ள reserve பகுதிகளுக்கு அவ்வப்போது கங்காருகள் வந்து போகின்றன. இன்னும் ஒரு 10 வருடங்களுக்கு அவை தாக்குப் பிடிக்குமா என்று சொல்வதற்கில்லை.
திடீரென்று “காரை நிறுத்துங்கள்” என்றான் மகன். அடுத்து வந்த குறுகலான வீதிக்குள் சென்று காரை நிற்பாட்டினேன். காரிலிருந்து இறங்கி கங்காருவை நோக்கி ஓடினான். கங்காருவை வீதியினின்றும் இழுத்துக் கரையில் போட்டான். குந்தி இருந்து அதைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். மீண்டும் வந்து காரில் ஏறிக் கொண்டான்.
“என்ன பார்த்தாய்?”
“அந்தக் கங்காருவின் வயிற்றில் பை இருக்கின்றதா என்று பார்த்தேன். நல்ல காலம் பை இல்லை.”
“பை இருந்தால்?”
“பெண் கங்காரு! சிலவேளை குட்டி வயிற்றில் இருக்கலாம்.”
கார் போய்ச் சேரும் வரைக்கும் ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய மிருகமான கங்காரு பற்றியே பேச்சு இருந்தது.
கங்காரு என்ற பெயர் முதன் முதலாக 1770 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி கப்டன் ஜேம்ஸ் குக் என்பவரால் பதியப்பட்டுள்ளது. கப்பலைத் திருத்துவதற்காக Endeavour river (தற்போது cook town) இல் தங்கியிருந்தபோது, அந்த அதிசய மிருகத்தைப் பார்த்து ‘அதன் பெயர் என்ன?’ என்று அங்குள்ள ஆதிவாசிகளிடம் கேட்டிருக்கின்றார்கள். ஆதிவாசிகள் ‘Kangaroo’ (‘நீங்கள் கேட்பது புரியவில்லை’) என்று தமது Guugu Yimithirr பாஷையில் சொல்லியிருக்கின்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் அந்த மிருகத்தின் பெயராயிற்று.
ஏறக்குறைய 50 இனங்கள். சாதாரணமாக மணிக்கு 25 கி.மீ தூரம்வரை ஓடக்கூடியவை. பொதுவாக 6 தொடக்கம் 20 வருடங்கள் வாழக்கூடியவை. தாவர போஷனி. புல், இலைகள் சாப்பிடும். மாலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிடும் – nocturnal (இரவில் நடமாடும் வகை) சார்ந்தவை. இவற்றிற்கு நீண்ட பின்னங்கால்களும், முன்னங்கால்கள் கைகளைப்போல குட்டையாகவும் உள்ளன. வால் மிகவும் வலிமையானது. தாவிப் பாயும்போது சமநிலை பேணவும், மெதுவாக நடக்கும் போது இன்னொரு கால் போலவும் பயன்படுகின்றது.
பொதுவாக வருடம் முழுக்க குட்டி போடும் இவை, ஒரு நேரத்தில் ஒரு குட்டியைத்தான் போடுகின்றன. குட்டி (Joey) (2 கிராம் எடை, 3 cm நீளம் கொண்டது) பிறக்கும்போது பார்வையற்ற இவை, ஒரு சில நிடங்களில் தாயின் வயிற்றுப் பகுதியில் உள்ள பையிற்குள் ஊர்ந்து சென்று தங்கிவிடும். குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இதற்குள்ளேயே உள்ளன. பையிற்குள் 8 – 9 மாதங்கள் வரையில் இருக்கும். அதன்பிறகு முற்றாக இறங்கி வெளியே வந்துவிடும்.
கங்காரு இறைச்சி அதிக புரதச்சத்தும் இரும்பும், மிகக்குறைந்தளவு கொழுப்பும் கொண்டது. நீர் அருந்தாமல் தொடர்ச்சியாக பல மாதங்கள் இவை இருக்கும். கங்காருவைப் பற்றிய கதையொன்றை தான் இன்ரநெற்றில் வாசித்ததாகச் சொன்னான் மகன். அது தாய்மையின் உச்சம்.
ஒருமுறை அவுஸ்திரேலியாவில் கடும் வரட்சி. காட்டு விலங்குகளும் பறவைகளும் நீரைத்தேடி நகரத்தை நோக்கி வரத் தொடங்கின. மழை பெய்யாததால், மக்களுக்கும் வீட்டில் வளர்க்கும் மிருகங்களுக்குமே நீர் போதாத நிலை. நகரத்தில் உள்ள தண்ணீர்த்தொட்டிகளைத் தேடி வரும் காட்டுவிலங்குகளைத் துரத்துவதற்காக துப்பாக்கியுடன் காத்திருந்தார்கள் மனிதர்கள்.
அது ஒரு மாலை நேரம். நகரத்தின் வெளிப்புறத்தில் வீடு கட்டி வசித்து வந்த ஒருவர், தூரத்தே மரமொன்றின் மறைவில் இருந்து தனது வீட்டை உற்று நோகிப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மிருகத்தைக் கண்டார். அது சற்று நேரத்தில் மெதுவாக வெளிப்பட்டு தயங்கியபடியே அவர் வீடு நோக்கி வரத் தொடங்கியது.
சுடுவதற்கு ரெடி. உற்று நோக்குகின்றார். அது ஒரு கங்காரு. பையில் ஒரு குட்டி. அதைச் சுட்டால் சிலவேளை குட்டியும் சாகலாம். அவர் மனம் கலவரமடைகின்றது. செய்வதறியாது திகைத்து அவர் நிற்கையில் கங்காரு அவரைக் கண்டுவிட்டது. இருப்பினும் தயங்காமல் நேராக தோட்டத்திலுள்ள தொட்டியை நோக்கிச் சென்றது. தொட்டியை அண்மித்ததும் உடலைச் சரித்து நின்றது. பையிற்குள்ளிருந்து தலையை நீட்டி தண்ணீரைப் பருகியது குட்டி. குட்டி நீரைப் பருகி முடிந்ததும், அந்தத் தாய்க்கங்காரு தான் ஒரு துளி நீர் தன்னும் பருகாமல் அந்த மனிதனைத் திரும்பிப் திரும்பிப் பார்த்தபடி சென்று காட்டிற்குள் மறைந்தது. கண்கள் குளமாக மனிதர் நெகிழ்ந்துவிட்டார்.
புகைப்படத்துக்கு நன்றி:
http://www.wallpaperslibrary.com/animals/909-kangaroo-wallpaper.html