மறவன்புலவு க. சச்சிதானந்தன்

குரங்கொட்டான்

குரங்கோடு ஒட்டாமல் மனிதனோடும் ஒட்டாமல் காட்டில், மரங்களில் வீடுபோன்ற கூடுகட்டி, குடும்பம் மற்றும் உறவுகளுடன் வாழ்வன குரங்கொட்டான்.

மனிதனுக்கும் குரங்கொட்டானுக்கும் மரபணுக்கள் 96% ஒத்துப்போவன. கிசுகிசுத்தல் ஊழையிடல், இலைகளால் ஊதிசெய்து ஊதல் என அவற்றின் தொடர்பு மொழிகள் ஏராளம்.

வேட்டைக்குப் போகும் மனிதரான ஆண்களைக் காமத்துடன் ஈர்க்கும் பெண் குரங்கொட்டான். விறகு பொறுக்கப் போகும் மனிதரான பெண்களைக் காமத்துடன் கட்டிப்பிடிக்கும் ஆண் குரங்கொட்டான்.

 

 விலங்குக் காட்சியகங்களில் பயிற்றுவிப்போர் சொல்லிக் கொடுத்தால் கணிணியையும் பயன்படுத்தும் அறிவு உள்ள விலங்கா? மனிதக் குரங்கா? மனிதனா? குரங்கொட்டானா?

 

சுமாத்திராவிலும் போர்ணியோவிலும் உள்ள மழைக் காடுகளின் அரசன் குரங்கொட்டான். காடுகளின் பரப்பளவு குன்றக் குரங்கொட்டானின் எண்ணிக்கையும் குன்றிவருகிறது.

 

தமிழர் வரலாறு

தமிழருக்கும் அந்தத் தீவுக்கும் நீண்ட நெடிய தொடர்பு. 1,600 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் காலத்தில் அந்தப் பகுதியை ஆண்ட மன்னன் பூரணவர்மன். தமிழ் நாட்டின் பல்லவ அரசுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அரசுப் பரம்பரையில் வந்தவன். அந்தத் தீவின் பெயர் பூரணனூர். காலப்போக்கில் அராபியர் வழிவந்தோர் வாயில் புருணை ஆகியது, பின் மேலை நாட்டார் வாயில் போர்ணியோ ஆகியது.

 நாகப்பட்டினம், மாமல்லபுரம், மயிலாப்பூர் துறைகளில் இருந்து புறப்படும் தமிழர், நக்காவரம் வழி கடாரம் கண்டனர். மலைக்கா கண்டனர். சிங்கப்பூர் கண்டனர். காம்போசம், சம்பா, எனக் கிழக்கே கண்டனர். பூரணனூர், சுலவாசி, தீமூர், சாவகம் எனத் தெற்கே கண்டனர். வணிகத்துக்காகப் பயணித்தனர். தமிழரின் வரிவடிவம், கலை, பண்பாடு, ஆட்சிமுறை, இறையுணர்வு யாவும் அந்தந்த மக்களோடு பகிர்ந்தனர். அசைவில் செழுந் தமிழ் வழக்கை அயல் வழக்கினரோடு பகிர்ந்தனர்.

 

தமிழ்நாட்டின் கிரந்த வரிவடிவத்தில் எழுதிய கல்வெட்டுகள், அதுவும் சைவசித்தாந்த மரபுகளை விளக்கும் கல்வெட்டுகள், போர்ணியோத் தீவில் கண்டெடுக்கப்பட்டுள. அந்நாளைய பிள்ளையார் சிலை, நந்தியின் சிலை இன்றைய சரவாக்கு அருங்காட்சியகத்தில் உள. சண்டைக்கண்ணுக்குத் தெற்கே உள்ள ஊரின் பெயர் சம்பூரணம்.

 

 

 

 

பூரணனூர் எனும் போர்ணியோ

பூரணனூரின் தலைநகரம் விசயபுரம் அல்லது விசித்திரபுரம். அங்கே சிவபத மன்னனின் ஆட்சி. மகள் இந்திர கோதை. வணிகத்துக்கு வந்த இசுலாமிய அரபு நாட்டவரிடம் காதல் கொண்டு மணக்க, அந்த வழி வந்தோர் சுலு சுல்தான்களாகிய காலம் 13ஆம் நூற்றாண்டு.

 தென் பிலிப்பைன்சு வரை கிழக்கே சுலு சுல்தான் ஆட்சி. சரவாக்கு வரை மேற்கே புருணை சுல்தான் ஆட்சி.

இசுலாமிய பரப்பெல்லைகள் கரையோரமாயமைய, உள்ளூர் மக்கள் முன்னோர் வழிபாட்டினராய்த் தொடர்ந்தனர். இபானியர், தயாக்கள், கடசானியர், துசுனினர், பசாக்கியர் என 30க்கும் கூடுதலான மொழிக்குழுக்கள் முன்னோர் வழிபாட்டினராக, சிவ வழிபாட்டினராக இத்தீவில் வாழ்ந்தனர்.

புருணை சுல்தானுக்கு உதவியாகத் தமிழ்நாட்டவர் வந்தனர்.

ஆங்கிலேயர் காலத்திலும் இந்தத் தொடர்பு விரிந்தது. பச்சையப்ப முதலியார், தணிகாசலம் முதலியார், வேதாரணியம் முதலியார் எனப் பலர் இங்கு தம் வணிகச் சுவடுகளைப் பதித்தனர்.

தோட்டங்களை அமைத்த ஆங்கிலேயருக்குத் தொழிலாளர்களாக வந்தோர் ஆயிரக்கணக்கான தமிழர்.

பல்லவர் காலத்துக்கு முன்பு தொடக்கம் இன்றுவரை தமிழரின் நீள்பரப்பெல்லையாகப் நீர்கடந்த எல்லையாக போர்ணியோ என்னும் பூரணனூர் இருந்து வந்துள்ளது.

மலேசியாவில் சபா, இலபுவான்

மலேசியாவின் கிழக்கெல்லை மாநிலம் சபா. மலேசியக் கூட்டரசு நிலப்பரப்பு இலபுவான். மலேசியாவின் மற்ற மாநிலம் சரவாக்கு. சரவாக்குச் சூழ்ந்த சிறு நிலப்பகுதி புருணை எனும் தனி நாடு. தெற்கே இந்தோனீசியாவுக்குரிய களிமண்தன் மாநிலம். ஆக மூன்று அரசுகள் போர்ணியோத் தீவைப் பங்குபோட்டுள்ளன.

 

குரங்கொட்டானும் குள்ள யானையும் தும்பிக்கைக் குரங்கும் சபா மாநிலத்தில் உள்ளன. 30 மொழிக்குழுக்களாக ஆதிவாசிகள். அவர்களுள் கடாசான் இனத்தவர் பெரும்பான்மையினர்.

73,661 சகிமீ. பரப்பளவு, 32இலட்சம் மக்கள், எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள், எரிவாயு, எரிஎண்ணெய், இரப்பர் தோட்டங்கள் என்பன வருவாய் பெருக்கும் வளங்கள்.

 சபா மாநிலத்தில் வாழும் 16,000 வரை எண்ணிக்கையுள்ள தமிழர் பல்வேறு நகரங்களிலும் தோட்டங்களிலும் வாழ்கின்றனர்.

கோட்டைக்கினபாலு தலைநகர். அங்கே சற்றேறக்குறைய 9,000 தமிழர் வாழ்கின்றனர். மருத்துவர் மாதவன் தலைமை அறங்கவலரான பசுபதிநாதர் கோயில். படை முகாமுக்குள் முருகன் கோயில்.

சுலு சுல்தான்களின் தலைநகரான சண்டைக்கண் நகரில் சித்திவிநாயகர் கோயில். தெற்கே தவாவுவில் முருகன் கோயில். சபாவுக்கு அருகே கூட்டரசு ஆட்சியில் இலபுவான் தீவு. அங்கே முருகன் கோயில்.

 

 

பூமிப் பந்தின் வட பாதியில் தமிழர் சூரியனை வரவேற்பது சண்டைக் கண் சித்திவிநாயகர் கோயிலிலாம். அங்கு அர்ச்சகர் அதிகாலை திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார். தமிழைக் கேட்டவாறே சூரியன் உதிக்கிறார்.

 

புருணை சுல்தான் காலத்தில் வந்த தணிகாசல முதலியார், இலபுவானில் தொடங்கிய சலாம் புடைவைக் கடை, இன்று வரை தொடர்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தோட்டத் தொழிலாளராக வந்து ஆதிவாசிகளான கடாசான் மற்றும் துசுன் பெண்களைத் திருமணம் செய்தோர் சபா மற்றும் இலபுவான் நிலப்பகுதியில் பரந்து வாழ்கின்றனர்.

சபா மாநிலத்திலும் இலபுவானிலும் தமிழ் ஆசிரியர் பலர் உளர். அரசின் தேசியப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கின்றனர். தமிழ் மாணவருடன், பிலிப்பபைன்சு, இந்தோனீசியா, கடாசான், துசுன், பசாக்கு இன மாணவர்களும் தமிழைப் பாடமாகப் பயில்கின்றனர். இலபுவான், கோட்டைக்கினபாலு, சண்டைக்கண், தவாவு ஆகிய நகரங்களில் இவ்வாசிரியர் தமிழ் பயிற்றுவிக்கின்றனர்.  மழலை வகுப்புத் தொடக்கம் 6ஆம் வகுப்புவைர 200க்கும் கூடுதலான பிற இன மாணவர் தமிழைக் கற்கின்றனர்.

என் பயணம்

சரவாக்கு மாநிலம் மிரி நகரத்திலிருந்து 22.08.2012 வானூர்தியில் கோட்டைக் கினபாலு வந்தேன்.

மலேசிய இந்துச் சங்கத் தேசியத் தலைவர் திரு. மோகன் சண் என் வருகையைத் தெரிவித்திருந்தார்.

மலேசிய இந்துச் சங்கத்தின் சபா மாநிலத் துணைத் தலைவர் திரு. இராமசாமி வானூர்தி நிலையம் வந்து என்னை வரவேற்றார். அவருடன் யோக சுவாமிகளின் அன்பர் திரு. இரமேசர் சிவநாதன் வந்திருந்தார்.

குரங்கொட்டானைப் பார்க்கவோ அந்தத் தீவுக்கேயுரிய குள்ள யானைகளையும் தும்பிக்கைக் குரங்குகளையும் பார்க்க நான் செல்லவில்லை. மழைக் காடுகளின் வனப்பையோ, அங்குள்ள நெடுங் குகைகளையோ, வண்ண வண்ணப் பறவைகளையோ பார்க்க நான் செல்லவில்லை.

சபாவிலும் இலபுவானிலும் வாழும் தமிழரைப் பார்க்கச் சென்றேன். தேவார திருவாசகங்களை அவர்களுக்கு மின்னம்பலம் வழியாக எளிதாகக் கொடுக்கச் சென்றேன். தருமபுரம் ஆதீனத்தின் தேவாரத் தளத்தை விளக்கச் சென்றேன். எந்த எதிர்பார்ப்புமின்றிச் சென்றேன்.

பசுபதி நாதர் கோயில் வளாகத்தில் காலையும் மாலையும் சிறுசிறு கூட்டங்கள். பெரும்பாலும் மாணவர்கள், ஆசிரியர்கள். ஐந்து செய்திகளை அவர்களுடன் பகிர்ந்தேன். 1. கணிணியில் தமிழ்ப் பயன்பாட்டுக்காக என்னெச்செம் எழுதியை இறக்கல். 2. கணினியில் எந்தச் செயலியிலும் தமிழில் ஒருங்குறியில் தட்டச்சிடல், மின்னஞ்சல் அனுப்பல். 3. மின்னம்பலத்தில் தமிழில் தேடல். 4. தமிழ்ப் பனுவல்களைத் தமிழ் வரிவடிவம் தெரியாதவர்களுக்காக மலாய் வரிவடிவத்திற்குக் கணிணி வழி மாற்றல். 5. ஐம்பண் போற்றியான பஞ்ச புராணத்தைக் கொண்ட தேவாரம் மின்னம்பல தளத்துக்குள் www.thevaaram.org சென்று அதன் பல்வேறு பயன்களைப் பெறல்.

இவ்வாறான படிமுறைப் பயிற்சியை மாணவர், இளைஞர், தமிழ் ஆர்வலர் விரும்பினர். மூவர் அல்லது நால்வராகத் தத்தம் மடி கணினியுடன் வந்தனர்.

அதி காலை வந்தவர் சிலர், காலை உணவுக்கு வந்தவர் சிலர், முற்பகல் வந்தவர் சிலர், பிற்பகல் வந்தவர் சிலர், மாலை நேரம் வந்தவர் சிலர், முன்னிரவு வந்தவர் சிலர்.

 

சற்றேனும் களைத்திலேன். என் ஊக்குவிப்பைக் குறைத்திலேன். செய்தி சொல்வதை முழுமையாகச் சொன்னேன். ஆர்வத்துடன் பயின்றனர். தம் நண்பர்களுக்குப் பயிற்றுவிப்பதாக வாக்குறுதி தந்தனர். அந்த வாக்குறுதியே அவர்களிடம் நான் கேட்ட கூலி, வேறல்ல. 

சபா மாநிலத்திலும் இலபுவான் கூட்டரசுப் பிரதேசத்திலும் 9 நாள்களில் சற்றேறக்குறைய 150 பேர் இவ்வாறு பயின்றிருப்பர்.

கோட்டைக்கினபாலு முருகன் கோயில், சண்டைக்கண் பிள்ளையார் கோயில், தவாவு முருகன் கோயில், இலபுவான் முருகன் கோயில் என 4 மண்டபங்களில் அடியவர்களுக்குக் காட்சி உரையாகத் தேவாரத் தளத்தை விளக்கினேன்.

 

பயிற்சிக்கு வந்தோர், கூட்டங்களுக்கு வந்தோர் யாவரிடமும் தருமபுரம் ஆதீனப் பணி எனத் தொடங்கும் தேவாரத் தளத் துண்டு விளம்பரத்தைக் கொடுத்தேன்.

திரு. இராமசாமியின் வேண்டுகோளை ஏற்ற தொழிலதிபர் திரு. தவமணி, தன் வண்டியில் சண்டைக்கண், இலாகாத் தட்டு, தவாவு ஆகிய இடங்களுக்குத் என்னை அழைத்துச் சென்றார். திரு. இராமசாமி, திரு. இரமேசர் சிவநாதன் உடன் வந்தனர்.

என் சைவ உணவுப் பழக்கத்தைத் தெரிந்த திரு. இரமேசர் சிவநாதன் தன் சைவ உணவுப் பழக்க இல்லத்திலிருந்து உணவு தந்து தானாகவே உவந்து பேணினார்.

சபா மாநிலத்தில் இலபுவானில் நான் சந்தித்த பலருள் விவரம் தந்தோர் பட்டியல்:

  1. இராமசாமி, இலபுவான் 0060 128271979
  2. இரமேசர் சிவநாதன், கோட்டைக்கினபாலு 0060 168402847
  3. தவமணி, இலாகாத்தட்டு 0060 165519625
  4. மனோகரன், தவாவு 0060 198137130
  5. அரங்கையா முத்துசாமி, தவாவு rangiiah@yahoo.com
  6. மணியம், தவாவு 0060 198095427
  7. ஆனந்தன், இலபுவான் 0060 13720412
  8. தெய்வேந்திரன், இலபுவான் 0060 129011512
  9. கதிரவன், இலபுவான் 194628030
  10. ரெங்கையா, இலபுவான் 0060 123993138

சைவ சமயத்தைக் கடைப்பிடித்து ஒழுகி வாழும் கிழக்கெல்லைத் தமிழருக்குப் பின்னூட்டங்களையும் ஆதரவையும் வழங்கவேண்டியது சைவ உலகின் கடனாகும்.

பிலிப்பினோ மழலைகளுக்குத் தமிழ்

http://www.youtube.com/watch?v=bOnU8eBI-yc 

 
மலேசியா – சபா மாநிலம் – தமிழர்
 
மலேசியா – இலபுவான் – தமிழர்
 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பூரணனூரில் பொலிவுறும் தமிழர்

  1. Migavum arputham. Samayam valarntha alavirkku Moil valara villaiyeh engal Malainaathil entra kurai maddum than Aiyah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.