சீரகம்..
திவாகர்
ஹெல்லோ.. இந்த சீரகம் எங்கே வெச்சுட்டே.. அடுப்புல வாணலி காயுது.. சீக்கிரம் சொல்லு
அட, அந்த அஞ்சறைப் பெட்டில இருக்கே, சரி.. அடுப்புல எண்ணெயை ஊத்திட்டீங்களா..
எண்ணெயா.. இல்ல இல்ல, எண்ணெய்க் கிண்ணம் கையில இருக்கு.. இன்னும் அடுப்பு சிம்’ல தான் இருக்கு.. அந்த அஞ்சறைப் பெட்டில சீரகம் இல்லன்னுதானே உனக்கு போன் பண்ணிக் கேக்கறேன்..
ஓ.. தீர்ந்து போச்சா.. புதுப் பேக்கட் எங்கன்னு சரியா முதல்லேயே கேக்கப்படாதா.. மேலே மொத ஷெல்ஃப்’ ல ரெண்டாவது அலுமினிய டப்பா இருக்கும் பாருங்க.. அதுக்குள்ள புதுப் பேக்கட் இருக்கும்..
ஐய்யோ.. இப்ப கையில எண்ணெயை வெச்சுண்டு.. கொஞ்சம் இரு.. லைனை கட் பண்ணிடாதே.. எண்ணெயை கீழே வெச்சுட்டு போய் ஸ்டூல் எடுத்து வரணும்..
நான் ஏன் லைன் கட் பண்ணப் போறேன்.. நீங்க பண்ற கால்தானே.. சரி சரி.. ஜாக்கிரதையா ஸ்டூல் மேல ஏறுங்க.. போன வாட்டி பல்ப் போடறேன் பேர்வழி’ன்னு அந்த ஸ்டூல் மேல ஏறி நிக்க முடியாம டமால்’னு விழுந்தீங்களே.. அதான் ஞாபகம் வருது..
சிரிக்கிறியா.. உனக்கு என் பொழப்பு சிரிப்பாப் போயிடுச்சா.. கொஞ்சம் இரு.. ஏதோ தீஸ வாசனை வருது.. அட.. வாணலி ரொம்ப காய்ஞ்சி போயிடுச்சி.. கடகட’னு சொல்லமாட்டியோ.. எங்கேயாவது வெச்சுட்டு என்னைத் தேட வெச்சு தொல்லை கொடுத்தா எப்படி?..
என்னை அப்பறம் சாவகாசமா ரூம் போட்டு திட்டலாமே.. முதல்ல அடுப்பை அணைங்களேன்..
ஐய்யயோ அது முடியாதுடி..
ஏன்.?.
அத்தே ஏன் கேக்கறே போ.. இந்த லைட்டர் ரெண்டு நாள் முன்னாடியே பணால்’னு புட்டுக்குச்சு.. தீப்பெட்டி வாங்கிவெச்சேன்.. அது நேத்து தண்ணி பட்டு நமுத்துப் போச்சு. எப்படியோ ஒண்ணே ஒண்ணு ஒழுங்கா பத்தவெச்சு ஸ்டவ்வுலயும் போட்டுட்டேன்.. வேற குச்சி இல்லே.. அதனால் சமயல் முடியற வரை கண்டிப்பா ‘நான்-ஸ்டாப்’ ஸ்டவ் தான்..
ஐய்யோ, அப்போ அடுப்பு எரிஞ்சுண்டே இருக்கவேண்டியதுதானா..
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. அந்தக் காலத்துல யாராவது ஒருத்தர் வீட்ல சதா அடுப்பு எரிஞ்சுண்டே இருக்குமாம்.. நெருப்பு தேவைப்படறவங்க அங்க வந்து ஒரு குச்சி நெருப்பு வாங்கிண்டு போவாங்களாம்.. பெரியாழ்வார் பாட்டு இருக்கே..
இப்ப பெரியாழ்வார் பாட்டு எதுக்கு? ஏதாவது மெழுகுவத்தி பக்கத்துலேயே வெச்சுக்க வேண்டியதுதானே..
இப்போ எதைத் தேடச் சொல்றே.. சீரகத்தையா.. மெழுகுவத்தியையா..
உங்களோட் ரொம்ப தொல்லையா போயிடுச்சு…. கொஞ்சம் அந்த வாணலியை இறக்கி வெச்சுட்டு ஸ்டாப் கேப்’ல கொஞ்சம் வெந்நீர் வெச்சுக்குங்க..
வெந்நீர் எதுக்கு?..
உங்க தலைல.. வேண்டாம் என் தலைல ஊத்துங்க.. வாணலி சூடாகி அங்கே வேஸ்டா போகறதே.. கொஞ்சம் கூட ஸென்ஸே இல்லே..
ஸென்ஸ் பத்திப் பேசாதே.. அப்படின்னா என்னா அர்த்தம்னு கேக்கற நிலைமைல இருக்கேன்..அத்த வுடு.. இதோ ஸ்டூல் கொண்டாந்துட்டேன்.. டோண்ட் வொர்ரி.. நான் ஜாக்கிரதையாதான் இருக்கேன்.. நீதான் கண்ட இடத்துல வெச்சுட்டு இவ்வளோ கஷ்டம் கொடுக்கறே..
சரி சரி.. என்னை அப்புறமா திட்டுங்களேன்.. ஒரு கையில போனை வேற வெச்சுண்டு இருக்கீங்க..
அய்.. அதுதான் இல்லே.. என் காதுக்கும் தோளுக்கும் மத்தியிலே ஜாக்கிரதையா கிரிப் கொடுத்து பேசிண்டிருக்கேனாக்கும்.. ஐயய்யோடா..
என்ன ஆச்சு.. விழுந்து தொலைச்சுட்டீங்களா..
சேச்ச்சே.. நானாவது விழறாவது.. இந்த போன் கீழே விழுந்து போச்சு.. பாரேன் நல்ல ஸ்ட்ராங் போன்தான்.. போனதடவை ஒரு போன் இப்படித்தான் விழுந்து கெட்டுப் போச்சு.. இந்த போனுக்கு ஆயுசு கெட்டி.
இருக்கட்டுமே.. அந்த அலுமினிய டப்பாவை எடுத்துட்டீங்களா இல்லியா..
கொஞ்சம் இரேன்.. இப்பதான் ஏறிண்டிருக்கேன்.. ஐய்யோ..
என்ன இப்ப விழுந்திட்டிங்களா.. எனக்குத் தெரியும்..
ஏண்டி இப்படி விழுந்திட்டியா விழுந்திட்டியா’ ன்னு ஒவ்வொரு தடவை கேக்கறே.. கொஞ்சம் சும்மா இரேன்
அப்ப எதுக்கு ஐய்யோ’ன்னு கத்தினீங்க..
பல்லி.. அதான் சட்’னு கத்தினேன்.. அது அப்படியே அங்கேயே அட்டை மாதிரி சுவத்தை ஒட்டிண்டு இருக்கு..ஏய்.. ச்சூ.. ச்சூ..
கடவுளே பல்லிக்கெல்லாம் பயந்துண்டு இருந்தா காரியம் ஆகுமா.. பல்லி சுவத்துல ஒட்டிண்டுதான் இருக்கும்.. முதல்ல டப்பாவை எடுங்க..
இருடி.. இப்பதான் அந்த பல்லி கொஞ்சம் கொஞ்சமா மூவ் ஆகறது.. ஹாங்.. போயிடுச்சி..
சரி,, இப்பவாவது விழுந்துடாம ஜாக்கிரதையா ஏறுங்க..
சரி ஏறிக்கிட்டே இருக்கேன்..
விழாம ஏறுங்க..
சரி.. ஏன் கத்தறே அதுக்கு.. ஏறியாச்சு.. டப்பாவை எடுத்தாச்சு.. என்ன இந்த டப்பா இவ்வளோ கனமா இருக்கு.. மொத்தம் பத்து கிலோ தேறுமோ..
என்னங்க நீங்க.. புதுசா வாங்கற ஸ்பைஸஸ் எல்லாம் அப்படியே பேக்கட்டோட போட்டுருக்கேன்.. நிதானமா இறக்குங்க..
இறக்கியாச்சு, இறக்கியாச்சு ..ம்.. ஒரே தீச வாசனை..
அலுமினியம் டப்பால எப்படி தீச வாசனை வரும்.. நல்லா கழுவிட்டுதானே பேக்கட் எல்லாம் போட்டு வெச்சேன்.
ஐய்யோ நான் அடுப்பிலே உள்ள வாணலியைச் சொல்றேன்..
அடக் கடவுளே.. நீங்க அங்கே வெந்நீர் வெக்கவே இல்லியா.. இன்னுமா வாணலி காயுது?
ஏண்டி நீதான் பார்த்துண்டே ஐ மீன் கேட்டுண்டே இருக்கே இல்லே.. அப்படி இப்படி அசைய வுட்டியா.. அதை எடு இதை எடு’ன்னு தொல்லை பண்ணிண்டே இருக்கே..
நீங்க..மறுபடியும் என்னைத் திட்ட ஆரம்பிச்சிட்டீங்களா.. முதல்ல அந்த அலுமினிய டப்பா தொறந்து சீரக பேக்கட் எடுங்களேன்.. உங்களை எந்த நேரத்துல உங்கம்ம பெத்தாளோ..
ஆஹா…. நல்ல ப்ரும்ம முகூர்த்தத்துல, தேவர்கள் எல்லாம் பூமழை பொழிய பொறந்தவனாக்கும்..
ஹைய்யோ.. வேணாமே.. கடகடவென் சொன்ன வேலையைச் செய்யுங்களேன்..
இரு இரு.. அதத்தான் செய்யறேன்.. கன்னாபின்னான்னு பேக்கட்டுங்க இருக்கு.. ஆங்.. கிடைச்சுடுச்சு..
அப்பா.. கிடைச்சுதா.. போன தடவை கடுகு பாக்கேட்டை கிழிக்கிறேன் பேர்வழின்னு டொய்ங்’ன்னு கிழிச்சு அத்தனை கடுகும் தரைல வேஸ்ட்டா உருண்டோடிப் போச்சே.. அந்த மாதிரி இல்லாம இந்த சீரகப் பாக்கெட் நிதானமா கிழிச்சு கொஞ்சம் சீரகத்தை முதல்ல வாணலில போடுங்க..ஹல்லோ.. எண்ணெயை முதல்ல ஊத்தி தொலைங்க, மறந்துடாதீங்க..
ஆஹா.. எனக்கே சமயல் சொல்லித் தர்ரியா.. எல்லாம் மறந்துட்டியா… கல்யாணமான புதுசுல உனக்கு சமையல் கத்துக் கொடுத்ததே நான்.. உனக்கு அந்த ரவா உப்புமா கதை ஞாபகம் இருக்கா..
ஐய்யோ வழியுதே.. உப்புமால கொஞ்சம் தக்காளி போட்டா நல்லா இருக்கும்னு ஏதோ சொன்னீங்க.. செஞ்சேன்.. உடனே சமயலே நீங்கதான் கத்துக் கொடுத்தமாதிரியெல்லாம் பேசவேண்டாம்.. உங்களுக்கு எத்தனை தரம் சொல்லிருக்கேன்.. எங்க வீடல சின்னப்பலேர்ந்து அரிசில கல் பொறுக்கறதுலேர்ந்து..
ஸ்டாப் ஸ்டாப்.. கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சு.. அந்த ரகசியம் தெரியும்.. அந்த அரிசியில கல்லு பொறுக்கறது மட்டும்தான் கல்யாணம் ஆகறவரைக்கும் நீ கத்துண்டங்கறது..
என்னை ஏதாவது குறை சொல்றதுன்னா உங்களுக்கு சாக்லேட் சாப்பிடறமாதிரி.. சரி சரி.. வாணலில எண்ணெயைப் போட்டுட்டு உடனேயே சீரகத்தையும் போட்டுத் தொலைங்க.. ஏற்கனவே ஓவரா காஞ்சிப் போயிருக்கு.. உருகிப் போயிடுச்சோ என்னவோ..
ரொம்பக் காமெடி பண்ணாதே.. நான் அப்படில்லாம் உருக விடுவேனா.. உருகுதே உருகுதே..
ஐய்யோ.. நிஜமாகவே உருகிப் போயிடுச்சா..
பாட்டும்மா.. பாட்டு வருது.. சினிமா பாட்டு.. உனக்குத் தெரியுமா, எங்க பாட்டி விறகு அடுப்புல சமையல் பண்ணி முடிக்கறதுக்குள்ளே லலிதா ஸகர்ஸநாமமும், விஷ்ணு சகஸ்ரநாமும் பூரா சொல்லிடுவாளாம்..
உங்கபாட்டி புண்ணியம் கட்டிண்டு போய்ச் சேர்ந்தாச்சு.. முதல்ல எண்ணெயை ஊத்துங்க..
இதோ எண்ணேய் ஊத்தியாச்சு.. உடனேயே இந்த சீரகத்தையும் போட்டாஆஆ… ஐய்யய்யோ..
என்ன சுட்டுண்டீங்களா.. ஐய்யோ கண்றாவியே.. பர்னால் ஏதாவது பக்கத்துல இருக்கா.. இல்லே ஃப்ரிட்ஜ்’ல ஐஸ்கட்டியை அப்படியே கையிலே வெச்சுக்குங்க.. உங்களுக்கு ஆனாலும் அவசரப்புத்தி.. அப்படியே உங்கம்மாதான்..
ஏண்டி இப்படி டேமேஜ ஆயிட்ட மாதிரியே பேசறே.. எனக்கு ஒண்ணும் ஆகலே.. ஆனா இது சீரகம் பேக்கட் இல்லே.. சோம்பு.. அதான் பெருஞ்சீரகம் பேக்கட்.. சீரகம்னு நினைச்சுட்டேன்
ஐய்யோ கடவுளே.. சோம்பு போட்டுட்டீங்களா.. டேஸ்ட்டே மாறிடுமே.. ஆமாம் கேக்க மறந்துட்டேன்.. இப்ப சீரகம் எதுக்குப் போடப் போறிங்க..
ஏன்.. உருளை வறுவலுக்குதான்..
உருளை வறுவலுக்கு சீரகம் எதுக்கு.
நீதானே சொன்னே எல்லா பொறியலுக்கும் முதல்ல கொஞ்சம் சீரகம் போட்டிங்கன்னா உடம்புக்கு நல்லதுன்னு.
ஐய்யோ நான் பொதுவா சொன்னேன்.. உருளை வறுவலை அப்படியே எண்ணெய்ல போட்டு பொறிக்க வேண்டியதுதானே..
இத முன்னாடியே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே..
நீங்க முன்னாடியே கேட்டுத் தொலைக்க வேண்டியதுதானே..
சரி சரி.. டைம் வேஸ்ட்.. முதல்ல போன் வை..
நான் ஏன் வெக்கணும்.. பண்ணது நீங்க..முதல்ல நீங்கதான் வெக்கணும்.. ஆஃப்டர் ஆல் ஒரு உருளைக்கிழங்கு வறுவல்.. இதைப் பண்ணத் தெரியலே..
நான் போனை வெச்சுட்டேன் வெச்சுட்டேன். கத்தாதே…
—
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம், திரும்பத் திரும்பப் படிச்சு.. என்னால முடியல.. சிரிச்சு சிரிச்சு…வயிறு வலி தாங்க முடியல.. என்னவொரு ஹாஸ்யம், கட்டுரை முழுவதும்..நன்றி திவாகர் சார், கவலை மறந்து சிரிக்க வச்சதுக்கு..
சீராக இருக்கு, அகம் சிரிக்க.
அது சரி,
சிறுஞ் சீரகமா?
பெருஞ் சீரகமா?
அதைப்பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே!
அன்பன்
கி.காளைராசன்
திவாகர்! சொந்த அனுபவம் இல்லையே?:) பயங்கர சிரிப்பு தான் போங்க:)போன் பில் எகிறி இருக்குமே சீரகம் தேடிய சீராளருக்கு?:)
Aaha super. Romba pidichuthu enakku. Athuvum antha thakkali potta upma kathai – ditto niraya veetil nadakkum (including mine – :)).
Enjoyed reading it so much.
episode moves real fast… I finished reading in less than one minute… good show!
ஒரு உருளை வறுவலுக்கு ஆளையே வறுத்து எடுத்துட்டீங்களே
, சோம்பு போட்டாக் கூட நல்லாதான் இருக்கும் . மார்வாடிங்க போடுவாங்களே
அன்புடன் தமிழ்த்தேனீ
காலத்தைக் காட்டும் கண்ணாடி இலக்கியம் எனிலோ இது கைப்பேசி இலக்கியமாகும், வாயுச் சமையல் இலக்கியமாகும், நெகிழிப் பொதி இலக்கியமாகும், அலுமினியப் பெட்டி இலக்கியமாகும், மின்வெட்டுக்கான மெழுகுவர்த்தி இலக்கியமாகும், வாணலி சீரகம் சோம்பு நமக்கு முன்னோர் தந்தது. உருளைக் கிழங்கும் கலப்புத் தமிழும் முந்தைய தலைமுறை தந்தது. தொடர்க, காலத்தின் கண்ணாடியாகுக.
hehehehehehehehehehehe nalla irukku, rasichu sirichen.
நெருப்பு தேவைப்படறவங்க அங்க வந்து ஒரு குச்சி நெருப்பு வாங்கிண்டு போவாங்களாம்.. பெரியாழ்வார் பாட்டு இருக்கே..//
but it is true. எனக்குத் தெரிஞ்சு எங்க வீட்டிலே இருந்து அடுப்புத் தணல் வாங்கிட்டுப் போய்ப்பார்த்திருக்கேன். அதெல்லாம் அறுபதுகள் வரை.
நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளிலேயே அடக்கவொண்ணா ஹாஸ்யம் நிறைஞ்சிருக்குன்றதை இதைவிடவும் சிறப்பா சொல்லவே… சாரி… எழுதவே… முடியாது! அபாரம் திவா ஸார்! இதைப் படிக்கறப்போ, உங்க பழைய நாடகங்கள் எந்தத் தரத்துல சிறப்பா இருந்திருக்கும்னு உணர முடியுது! அர்த்தமற்ற அபத்த காமெடிகளைத் திரும்பத் திரும்ப செய்து, நம்மை எரிச்சலூட்டும் நமது காமெடியன்கள் இதைப் படிக்கணும். வடிவேலு தொடங்கி எல்லாருக்கும் அனுப்புங்கோ! யார் கண்டா? உங்களையே ஆஸ்தான ‘ரைட்டரா’ வைச்சுண்டுடுவா! :)) [அட்வான்ஸ்] வாழ்த்துகள்!
முதல்ல ஸார் சீரகத்தைக் கண்டுபிடிக்கட்டும். அப்பறந்தானே இருக்கு திரு. காளைராசன் கேட்ட கேள்விக்கான பதில்! அதுக்கும் ஒரு ‘கால்’ போட மாட்டாரா என்ன? இது தொடராதா என்ன? சரிதானே திவா ஸார்? அப்புசாமி மாதிரி இதையும் வைச்சு ஒரு சீரியல் பண்ணுங்கோ! டி.வி. தொடராவும் வரலாம்!
:))))))))))))
சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. கொஞ்சம் சீரகத்தைத் தின்று வயிற்றைச் சீராக்கிக் கொண்டேன்.
அருமை திவா. இப்பதான் தெரியுது சசி ஊருக்கு போனப்புறம் சமையல் எப்படின்னு. நலனுக்கு கெட்டபேரு. பேசாம என் வீட்டுக்கு வந்திரு தினம் சாப்பாட்டுக்கு. jokes apart கதை ரொம்ப அனுபவிக்கு எழுதியிருக்கே. தொடரட்டும் உன் சமையல் சாரி எழுத்து.
Hilarious, Divakar! Without my knowing it, I was reading the page at an express speed with a pumped-up anxiety about the burning stove, the overheated frying pan, your falling off from the chair, etc. etc. Honestly, I was disappointed that the write-up ended so suddenly when I was expecting still more argument, and action, all the while worrying about your safety!
ananth
adadadadaa.. arputham sir.. sariththira kathaiyaalar haasya kathai ezhutharathu romba kashtam.. sirichu sirichu .. appadiye sontha anubhavam maathiriye irukku.. sooperrrr.
லாஜிக் பார்க்கலாம்னா, ஒரே ஒரு சின்ன சந்தேகம்!
இந்தக் காலத்துல உ.கி. வறுவல்லாம் இன்னுமா வீட்டுல பண்றாங்க? கடைல அத்தனை வகைவகையாக் கிடக்கறப்போ?
வா.கா.ன்னா கொஞ்சம் ஏத்துக்கலாம்! :))))
Experience speaks well,
An experienced writer speaks very well
Excellent Sir
ரசித்துப் படித்து, பதிலெழுதி, பாராட்டிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தையால் என்னால் சொல்லிவிட்டுப் போகமுடியவில்லைதான்.. தொடர்ந்து எழுதத் தூண்டுகோலாக இந்த அன்பு வார்த்தைகளை எடுத்துக் கொள்கிறேன்.
seekirama shyamlikku kalyanam panni aahanum. let us pray……
அன்பு திவாகர்ஜி வடக்கில் இந்த சீரகம் மட்டும் போட்டு உருளைக்கிழங்கு சப்ஜி செய்வார்கள் ரொம்ப டேஸ்டாக இருக்கும் ….இந்த . சிரி கட்டுரை சூப்பர் படிக்க படிக்க டெம்போ … . நல்ல வேளையாக வாணலி பற்றிக்கொள்ளவில்லை . அதில் எண்ணெய் இருந்தால் பற்றிக்கொண்டிருக்கும் .
தம்பதிகள் பேச்சு ரொம்ப நேசுரலாக இருந்தது . .படித்தாலே மனதுக்கு நல்ல ரிலாக்ஸேஷன் …. எனக்கு ரொம்ப பிடித்தது வாழ்த்துகள்
Fantastic…oru second kooda antha pakkam intha pakkam manasu pogala…Chance illa sir! Appadiyae padam paakkaraapla manasula odidichi…