அன்னா ஹசாரே: இந்திய வரலாற்றின் திருப்பு முனை

3

கேப்டன் கணேஷ்

anna hazare

ஆண்டு: 2003, மாதம்: ஆகஸ்ட், இடம்: மஹாராஷ்டிரம்.

அப்போதைய மாநில அமைச்சர் சுரேஷ் தாதா ஜெயின், ஒருவருக்குப் பாடம் புகட்ட எண்ணினார். அவர் தான் அன்னா ஹசாரே! ஹசாரே தன் மீது ஊழல் குற்றம் சுமத்தியதோடு அல்லாமல், தம்மை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அறிவித்தார். இது தான் அமைச்சரின் கோபத்திற்கு மூலம்.

“கான மயிலாட கண்டிருந்த வான் கோழி” போல, சண்டைக் கோழி ஆனார் அமைச்சர். தாமும் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதற்கு அமைச்சர் தந்த விளக்கம் “ஹசாரே ஒரு போலி! அவர் நடத்தி வரும் அறக்கட்டளையில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. அதை அரசு விசாரிக்க வேண்டும். ஹசாரே ஒரு நடிகர். பிறர் மீது குறை கண்டுபிடிப்பது அவருக்குப் பிடித்த விஷயம். அதனால்தான் அவர் என் மீது குறை கூறுகிறார்!”

ஹசாரேவின் குற்றச்சாட்டை ஏற்று, விசாரணைக் குழு அமைத்தது மஹாராஷ்டிர அரசு. இரு ஆண்டுகள் கழித்து (2005ஆம் ஆண்டு) நீதி அரசர் சாவந்த் தலைமையிலான விசாரணைக் குழு தந்த அறிக்கையினால், அமைச்சர் ஜெயின் பதவி விலக நிர்பந்திக்கப்பட்டார். சண்டைக் கோழி அமைச்சர் ரொம்பவே சிலிர்த்துக்கொண்டாலும் வேறு வழியின்றி பதவி விலகினார்.

யார் நடிகர்? யார் குறை காண்பவர்? என்று மக்கள் அன்று அடையாளம் கண்டனர்.

யார் இந்த அன்னா ஹசாரே? இன்று தனி மனிதராக மொத்த இந்தியாவையும் தன் பின் திரட்டியிருக்கிறார். இது எப்படி சாத்தியம்? முதியோர், இளைஞர், பள்ளி மாணவர், அரசு அதிகாரிகள், வழக்கறிஞர் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்து, தன் பின் திரட்டியிருக்கிறார். இவரின் முயற்சியை ஆதரிக்கும் ஒரு கல்லூரி மாணவி சொல்கிறார் “இனி என்னிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அவரின் முகத்தில் அறைவேன். நான் அன்னா ஹசாரே!”. இதையே பொது மக்களிடையே அன்னா ஹசாரே ஏற்படுத்திய தாக்கமாக அறிந்துகொள்ளலாம்.

அன்னா ஹசாரேவின் இயற்பெயர், கிசான் பாபட் பாபுராவ் ஹசாரே. மஹாராஷ்டிர மாநிலம், அஹமது நகர் மாவட்டத்தில் பிங்கர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். ஒரு சாதாரண விவசாய குடும்பம். சொல்லிகொள்ளும் அளவு வசதி இல்லை. 1952ஆம் வருடம் ராலேகான் சித்தி என்னும் கிராமத்தில் குடும்பம் குடியேறியது. அத்தையின் பராமரிப்பில் வளர்ந்த ஹசாரேவால் ஏழாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் போனது.  வறுமை.

இந்திய இராணுவப் பணியில் சேர்ந்தார். அங்கே அவருக்கு ஓட்டுநர் வேலை தரப்பட்டது. அதீத வேலைகளுக்கு நடுவே கிடைத்த சிறு சிறு ஓய்வு நேரங்களிலும் விவேகானந்தர் மற்றும் காந்தியடிகளின் புத்தகங்களைப் படிப்பாராம். விநோபா பாவே அடிகளைத் தன் முன்னோடியாய்க் கொண்டார்.  1965ஆம் ஆண்டு நடந்த போரில் கலந்துகொண்ட ஹசாரே, போருக்குப் பின் 1975இல் விருப்ப ஓய்வில் இராணுவத்தில் இருந்து வெளிவந்து, தனது கிராமமான ராலேகான் சித்தி சென்றார். தனது கிராமத்தை நாட்டின் முன் மாதிரி கிராமமாய் மாற்றிக் காட்டினார். இவரது சமூக சேவைகளைப் பாராட்டி, அரசு 1992இல், இவருக்குப் “பத்ம பூஷன்” விருது வழங்கிக் கவுரவித்தது.

anna hazareஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன், இவர் ஊழல் அரசியல் மற்றும் சமூக அநீதிகளை எதிர்த்துப் போராட ஆரம்பித்தார். இவர் சந்தித்தது எல்லாம் ஏளன விமர்சனங்களைத்தான். இவரது முக்கிய விமர்சகர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே. மனித நேயம் மற்றும் அறவழி நம்பிக்கை அற்றவர்களோ, இவரை ஒரு விளம்பரப் பிரியர் என்று விமர்சித்தனர். சரத் பவார் போன்ற பெரும் தலைவர்களின் மீதான அன்னா ஹசாரேவின் குற்றசாட்டுகள் அனைத்தையும் ஆதாரமற்றவை என்று அரசியல்வாதிகள் என்றும் விலக்கி வைத்தனர். ஊழலுக்கு எதிராகச் “சாகும் வரை உண்ணாவிரதம்” என்ற இவரது போராட்ட முறை, மிகப் பழைமையானதாக, நசித்துப் போன ஒன்றாக, யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளத ஒன்றாக, எந்தவித நன்முடிவுகளும் தராத ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டது.

அன்னா ஹசாரேவின் சில ஆரம்ப காலப் போராட்டங்கள் பலவும் அவருக்கு தலைவலியைத் தந்தன. சிலவோ, எதிர் விளைவுகளைத் தந்தன.  1990களின் மத்தியில் அன்னா ஹசாரே, தனது முதல் பெரிய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். ஊழலில் ஈடுபட்ட மூன்று மாநில அமைச்சர்களின் மீது குற்றம் சாட்டினார். அதனால் அவருக்குக் கிடைத்ததோ, ஒரு நாள் சிறை வாசம். பின்னாளில் அந்த மூன்று அமைச்சர்களும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விசாரணைக் குழுவால் விடுவிக்கப்பட்டனர்.

அன்னா ஹசாரே, 1991இல் ஊழல் விரோத மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். இந்த அமைப்பின் ஒரு சில உறுப்பினர்களின் தவறான செயல்பாடுகளால் இந்த இயக்கம் கடும் விமரிசனங்களுக்கு உள்ளானது. ஆனாலும் மனம் தளராத அன்னா ஹசாரே தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வந்தார்.

இவரின் அடுத்த பெரிய ஊழல் எதிர்ப்பு போராட்டம், 2003இல் நான்கு மஹாராஷ்டிர அமைச்சர்களுக்கு எதிரானது. அன்னா ஹசாரேவால் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவர் தான் மேலே குறிப்பிடப்பட்ட “சண்டைக் கோழி” அமைச்சர்!  இந்தப் போராட்டத்தின் விளைவாக அமைந்த விசாரணைக் குழு நான்கு அமைச்சர்களையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது. விளைவு, நான்கு அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன!  வேடதாரி அமைச்சர் வீட்டுக்குப் போனார்! மராட்டியத்தின் மக்கள் அன்னா ஹசாரேவிற்கு மதிப்பு அளிக்க ஆரம்பித்தனர்.

பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்களில் ஒருவர், பதம்சின் பாட்டில். மிகவும் செல்வாக்கு மிக்கவராய் அரசியல் வட்டங்களில் பார்க்கப்பட்டவர்.  காரணம் இவர், சரத் பவாரின் நெருங்கிய உறவினர். அன்னா ஹசாரேவின் போராட்டத்தால் இவர் கூட பதவி இழந்தது, அன்னா ஹசாரேவின் மிகப் பெரும் வெற்றியாய்ப் பார்க்கப்பட்டது. பதம்சின் பாட்டில் மீது மீண்டும், தம்மைக் கொல்ல முயன்றதாக ஒரு குற்றசாட்டினையும் வைத்தார் அன்னா ஹசாரே. பதம்சின் பாட்டில், வேறு ஒரு கொலை வழக்கில் கைது ஆனார். ஆனால் அவரால் ஏவப்பட்ட கூலிப் படை, அன்னா ஹசாரேவைக் கொல்ல, பதம்சின் பாட்டில் பணம் கொடுத்தாக ஒப்புதல் அளித்தது.

இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் அன்னா ஹசாரே, தமது மாசற்ற குணங்களுடனும் அஞ்சாமையுடனும் எஃகு போன்ற மனத்திண்மையுடனும் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தார்.

இவரின் தற்போதைய போராட்டம், தலைநகர் தில்லியில் நடக்கிறது. ஜன் லோக் பால் (Jan Lok Pal) என்ற மசோதாவைத் தாமதமின்றி சட்டமாக்குவது இவரின் இன்றைய கோரிக்கை. பிரதம அமைச்சர் முதற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் வரை யார் தவறு செய்து இருந்தாலும், எந்த ஒரு புகாரின் பெயரிலும் (பொதுமக்கள் உட்பட யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்) ஒரு மாதத்திற்குள் நடவடிக்கையை ஆரம்பித்து, ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு தரப்பட வேண்டும். இதன் தீர்ப்புக்கு எந்த ஒரு மேல் முறையீடும் கிடையாது. இதுவே இச்சட்டத்தின் அடிப்படைச் சாராம்சம். இந்த மசோதா சட்டமாக்கப்படுமா? இது, இன்று இந்தியர் அனைவரின் முன் தோன்றும் தாகமான ஒரு கேள்வி.

அன்னா ஹசாரே, தனது உண்ணாவிரதம் தொடங்கிய நாளில் மீண்டும் அரசியல்வாதிகளின் அசட்டைக்கு ஆளானார். ஏறக்குறைய நூறு பேர் கொண்ட குழு தன்னைச் சூழ்ந்து அமர, சாதாரணமாய்த்தான் தொடங்கினார் அன்னா ஹசாரே. ஆரம்பித்த அரை நாளில் மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் சில நூறு மக்கள் அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாய்ப் போராட்டத்தில் குதித்தனர். அன்று இரவு முதல் சில ஆயிரங்களில் போராட்டத்தை இணையம் வாயிலாகக் கவனித்த இந்தியர்கள், மறுநாள் காலையில் பல ஆயிரத்தைக் கடந்து லட்சங்களையும் தொட்டனர்.   இரண்டாம் நாள் மாலைக்கு முன்பாக, ஆறு நகரங்களில் ஆயிரங்களில் மக்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். மூன்றாம் நாள் அன்னா ஹசாரேவைச் சந்திக்க வந்திருந்த ஒரு சில “முயல் வேக” அரசியல்வாதிகள், மக்களால் அன்பாக(!)த் திருப்பி அனுப்பப்பட்டனர்! உண்ணாவிரதம் தொடங்கி, மூன்று நாட்கள் கடந்து விட்ட நிலையில் பாரத சமுதாயத்தின் அனைத்துத் தரப்பின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டார் அன்னா ஹசாரே!
anti corruption2011 ஏப்ரல் 7ஆம் தேதி மதியத்தில் இருந்து அரசு, வழக்கம் போல் மெல்ல அசைய ஆரம்பித்துள்ளது. ஒரு சில தூண்டில்களை அன்னா ஹசாரே என்ற திமிங்கிலத்தை நோக்கியும், பல எலும்புத் துண்டுகளை மக்கள் சமுதாயத்தை நோக்கியும் வீசிப் பார்த்தது. “இந்த போராட்டம் முழுவதுமே அர்த்தமற்றது” என்று சொன்ன அமைச்சர்கள் சிலர், ஊடகங்களின் கேள்விக் கணைகளால் திணறிப் போயினர். ஒரு வெகுஜனப் போராட்டம், பெரிய அரசையும் அசைத்துப் பார்க்கும் திறன் கொண்டது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

ஒரு இராணுவ வீரருக்கு, நாட்டு நலன் கருதி, தாமே முன்வந்து போராடும் ஒரு குடிமகனுக்குக் கிடைக்கும் மரியாதையாய் இதை நாளைய வரலாறு பதிவு செய்யும்.

குடும்ப வாழ்க்கையில் சிக்க விரும்பாத அன்னா ஹசாரே, திருமணம் செய்யவில்லை. தனது முழுக் கவனத்தையும் வாழ்க்கையையும் நாட்டு நலனுக்காய்த் தந்தார். மழை நீர் சேகரிப்பு, பண்ணைத் தொழில் போன்ற பல துறைகளிலும் தனது கிராமத்தை முன்னேற்றிய இவர், அத்தோடு நில்லாமல் தனது கிராமத்தில் மதுவின் பாதையில் இருந்து மக்களை மாற்றி, முன்னேற்றத்தின் பாதையில் இட்டுச் சென்றார். தனது கிராமத்தை நாட்டின் “முன்னோடி மாதிரி கிராமம்” ஆக்கிக் காட்டினார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போராட ஆரம்பித்த முதல் இந்தியர், அன்னா ஹசாரே. கிராம அளவில் ஆரம்பித்த இவரின் செயல்பாடுகள், வட்டம், மாவட்டம், மாநிலம் தாண்டி, இன்று நாடு தழுவிய ஒன்றாகியிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கூட அன்னா ஹசாரேவின் போராட்டத்தை “இரண்டாவது சுதந்திரப் போராட்டம்” என்று அழைக்கும் அளவு இவரது போராட்டம் நியாமான ஒன்றாய் இருக்கிறது. இதற்காக அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் வெட்கித் தலை குனிவதில் தவறில்லை என்று தோன்றுகிறது!

அரசு இயந்திரம் அரண்டு போய் கிடக்கின்றது! அசைந்து கொடுத்த அரசு, நாடு முழுவதும் எழுந்த ஆரவாரமான மக்கள் ஆதரவு கண்டு ஆடிப் போனது. அலட்சியமாய்ப் பேசிய அமைச்சர் கூட அமைதியாகிப் போனார்.

தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, சண்டிகர், அலஹாபாத், அஹமதாபாத், சூரத், பெங்களுரு, ஹைதராபாத், கோயம்புத்தூர் என, நாடு முழுவதும் அழைக்கப்படாத மக்கள், சொந்த ஆர்வத்தினால் எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்திக்கொண்டு குவிந்தனர்.

பிரதம அமைச்சர், குடியரசுத் தலைவரிடம் நிலைமையை விளக்குகிறார். அனைத்துக் கட்சித் தலைவர்களும் போராட்டத்தின் வேகத்தை உணர்கின்றனர். மக்களுக்கான அரசு, இறுதியில் மக்கள் முன் மண்டியிட்டது. ஜன் லோக் பால் (Jan Lok Pal) மசோதாவின் மூல வரைவினை வரையறுக்க மந்திரிகளும் மக்களும் சேர்ந்த ஒரு அமைப்பை ஏற்படுத்த ஒப்புக்கொண்டது. பாராளுமன்றத்தில் வருகின்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மசோதாவினைத் தாக்கல் செய்யப் போவதாகவும் உறுதி அளித்தது.

குடியரசு ஆட்சியில் இது ஒரு தவிர்க்க முடியாத சம்பிரதாயம். இதை உணர்ந்த அன்ன ஹசாரேவும் ஆதரவாளர்களும் போராட்டத்தைக் கைவிட முன்வந்தனர் என்றாலும் இந்த மசோதா சட்டமாக்கப்படவில்லை என்றால் போராட்டம் மீண்டும் தொடங்கும் என்று முன் அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.

ஜன் லோக் பால் (Jan Lok Pal) சட்டமாக்கப்பட வேண்டும் என்பது அன்னா ஹசாரே மற்றும் அவரின் ஆதரவாளர்களின் குறிக்கோள். ஊழல் அற்ற, நியாயமான, நீதிக்குக் கட்டுப்பட்ட நேர்மையான நல்லாட்சி அமைய வேண்டும் என்பது நம் விருப்பம் மட்டும் அல்ல. மக்களின் விருப்பம் கூடத்தான்.

இந்திய வரலாற்றின் முன்னேற்றப் பாதையில் இது ஒரு முக்கிய திருப்பு முனை.

பாதையின் வளைவில் அரசை அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து முழு இந்தியாவும் வளைக்கிறது! வளையுமா இந்திய அரசு?!?!?!????!!!!!!!!!!

===============================

படங்களுக்கு நன்றி: http://www.hindustantimes.com, http://www.ndtv.com, http://dinamalar.com

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அன்னா ஹசாரே: இந்திய வரலாற்றின் திருப்பு முனை

  1. we pray for more annaa hasaarey’s outcome in our nation. not only point out the politicians, and to the individual citizens who raise the finger against the politiicians, having corruption fingers in normal life.

    ……………… … ..KAVINKAVI.

  2. Hope Capt.Ganesh has written few important points but do we ever think that media which is highlighting all this things is Neutral.. Certainly no if the media support was 100% for Anna Hazare then this jan lok pal would have been implemented now.

    All the very best for Jan lok pal

  3. Anna Hasare pola anaithu Inthiyargalum unarvu mikkavargalai irukka vendum… 120 kodi peril oru poraali thaan irukiraara? Aacharyamaga irukirathu..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *