கே.எஸ்.சுதாகர்

நாங்கள் இருப்பது அவுஸ்திரேலியாவில். விடுமுறையில் ஒருநாள் பிலிப் தீவிற்குச் சென்றோம். 

இருள் கவியத் தொடங்குகின்றது. கோடை காலத்தில் சூரியன் மறைய ஏழு எட்டு மணிவரைக்கும் காத்திருக்க வேண்டும். பத்துப்பன்னிரண்டு நீண்ட படிக்கட்டுகளில் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். பள்ளிக்கூட விடுமுறையாதலால் சிறுவர்கள் குழந்தைகள் அதிகம். முன்னே பரந்த கடல், அகன்ற வானம். எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி ஒலிபெருக்கியில் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது. ஆங்காங்கே குழந்தைகளின் அழும் குரல்கள் தேய்கின்றன. எதற்காக இந்த ஆரவாரம்? 

பென்குவின்கள் கடலிற்குள் இருந்து வெளிப்பட்டு, கரையிலுள்ள தமது உறைவிடங்களிற்கு செல்லும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்பதற்காகத்தான் அவ்வளவு பேரும் காத்திருக்கின்றார்கள். இவை நீரிலும் நிலத்திலும் வாழும் பறவையினம். இரவில் கடற்கரையை அண்மித்த மறைவிடங்களில் வாழும். பகலில் இரை தேடிக் கடலிற்குப் புறப்பட்டுவிடும். 

விக்டோரியா மாநிலத்தில் பிலிப் தீவில் (Phillip Island) பென்குவின்கள் செறிந்து வாழ்கின்றன. இங்கே இருப்பவை குள்ளமான இனத்தைச் சேர்ந்தவை. உலகில் 17 வகை இனங்கள் இருப்பதாகத் தகவல். வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளைக் கவரும் இடமாக பிலிப்தீவு உள்ளது. பென்குவின்களைப் பார்ப்பதற்காக அமைந்திருக்கும் இந்தப் பிரத்தியேகமான இடத்தில் எந்தவிதமான புகைப்படக்கருவிகளும் அனுமதிக்கப்படுவதில்லை. 

“அதோ கடலிற்குள் தெரிகின்றன!” என்றான் மகன். தூரத்தில் கடல் நுரைகளுடன் சிறுசிறு கூட்டங்களாக மிதந்தபடி வருவதும் போவதுமாக அவை ஊஞ்சலாடுகின்றன. பென்குவின்கள் பறப்பதில்லை. இறக்கைகளை துடுப்புகள் போல நீந்தப் பாவிக்கின்றன. சற்று நேரத்தில் அவை கரை தட்டின. கூட்டம் கூட்டமாக வெளிப்பட்ட அவை அணிவகுத்து நடக்கத் தொடங்கின. 

அழகாகனதொரு அணிவகுப்பு (Penquin Parade) அது. 

எல்லாத்திசைகளிலும் பரந்த அவை வரிசை வரிசையாக தமது வாழ்விடங்களை நோக்கி நடை பயிலத் தொடங்கின. எம்மைக் கடந்து செல்லும் குழுக்களில் சில நிமிர்ந்து எங்களைப் பார்த்துவிட்டு பயப்படாமல் தமது பயணத்தைத் தொடர்ந்தன. 

“அம்மா! அங்கே பாருங்கள்!! கடலிற்குள் அக்ஷிடென்ற் பட்ட பென்குவின்களை… பாவம் அவை…” மகன் சுற்றிக்காட்டிய திசைகளில் சில பென்குவின்கள் நொண்டியபடி தமது குழுக்களிலிருந்து சற்று விலகி தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருந்தன. அவை கடலிற்குள் மீன் பிடிக்கும்போது அபார சாகசம் காட்டியவைகளாக இருக்கலாம். எந்தவொரு பறவையுமே களைத்து விழுந்து வருவதாகத் தெரியவில்லை. மனிதர்கள்தான் வேலை முடித்து வரும்போது களைத்து விடுகின்றார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் ஏறக்குறைய பத்துப்பதினைந்து பென்குவின்கள் வரையில் இருந்தன. கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பவர் ஸ்மாற் (smart) ஆகத்தான் இருந்தார். லீடர் தனது நடையை நிறுத்தும் போதெல்லாம் பின்னாலே வந்தவர்களும் ஒருசீராக தமது நடையை நிறுத்தினார்கள். 

வெற்றிகரமாக தமது இருப்பிடத்தை வந்து சேர்ந்த அவை, மகிழ்ச்சியில் சத்தம் போடுகின்றன. இவற்றின் தோற்றம், நடையைப்போல -இவை போடும் ஒலிகூட சிரிப்பைத்தான் தருகின்றன. கடற்கரையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர் இப்போது எழுந்து கொண்டார்கள். ஒரு சிலர் வீடு செல்ல, ஏனையோர் ஏற்கனவே மறைவிடங்களிற்கு வந்து சேர்ந்த பென்குவின்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். வாகனத்தரிப்பிடங்களிலிருந்து வாகனங்களை எடுக்கும்போது ஒருதடவை கீழே பென்குவின்கள் நிற்கின்றனவா எனப் பார்க்கும்படி ஒலிபெருக்கியில் அறிவித்தல் வந்தது. 

ஒவ்வொரு சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்தச் சின்னப் பென்குவின்கள் கடலிலிருந்து வெளிப்பட்டு, ஆடி ஆடி நடந்து கடற்கரையைக் கடந்து, தமது மணலினாலான வளைக்குள் திரும்பும் காட்சி நடக்கின்றது. பென்குவின்கள் பனி அடர்ந்த தென்துருவப்பிரதேசத்திலும்(அண்டார்டிக்கா), அர்ஜென்டினாவிற்குச் சொந்தமான மார்டிலோ தீவுகளிலும், தென்னாபிரிக்கா கேப்டவுனிலுமாக மொத்தம் 18 நாடுகளில் உள்ளன. உலகிலேயே மிகக்குறைந்த வெப்பநிலையில் (-60 பாகை F) முட்டைகளை அடைகாக்கும் இனம் பென்குவின்தான். பெண் பொதுவாக 2 முட்டைகள் இடும். அதன்பின்பு இரை தேடிப் புறப்பட்டுவிடும். ஆண்தான் அடை காக்கும். பார்த்தமாத்திரத்தில் ஆணையும் பெண்ணையும் இனம் காண முடியாது. மணிக்கு சுமார் 25 கி.மீ வேகத்தில் நீந்தும் வல்லமை கொண்டவை. இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது. ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிக் கொள்ளும். கடல் நீரை மாத்திரம் குடிக்கும். உடலில் உள்ள ஒரு சுரப்பி மூலம் உப்பை பிரித்து அகற்றிவிடும். 

வீட்டிற்குப் போவதற்குத் தயாரானோம். பென்குவின்களைப் பார்ப்பதற்கென விஷேசமாக அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து நுழைவாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.

“அப்பா! வடதுருவமான ஆர்டிக் பகுதியில் ஏன் பென்குவின்கள் வசிப்பதில்லை?” மகன் நியாயமானதொரு கேள்வியைக் கேட்டான்.

“அங்கே குளிர்காலத்தில் அதிகப்படியாக கடல் உறைந்து பனிக்கட்டியாகிவிடுகின்றது. இதனால் பென்குவின்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. இவற்றால் தூரமாகவுள்ள கடலுக்கு பறக்கவும் முடியாது. அதனால் அங்கே வசிப்பதில்லை.” அத்துடன் புவி வெப்பமடைவதன் காரணமாக பென்குவின்களும் அழிந்து கொண்டு வருகின்றன என்ற செய்தியையும் அவனுக்குச் சொல்லி வைத்தேன். 

எமது நடைக்குப் போட்டியாக மிகச் சமீபமாக ஒரு கூட்டம் பென்குவின்கள் வந்து கொண்டிருந்தன. மிக அண்மையாக நின்று அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன ஆச்சரியம்! சடுதியாக முன்னாலே வந்த லீடர் பென்குவின் நின்று கொண்டது. நெருப்புப் பெட்டிகளை வரிசையாக அடுக்கிவிட்டு, தட்டிவிட்டதுமாப்போல அந்தக்கூட்டத்தின் நடை ஓய்விற்கு வந்தது. அந்தப் பென்குவின் வரிசையிலிருந்து வெளியே வந்தது. பின்னர் அணிவகுப்பைப் பார்வையிடும் ஒரு வீரனைப்போல, அவர்களின் பக்கத்தினால் நடந்து பின்னோக்கிப் போனது.

“பென்குவின் தன்னுடன் கூடவந்தவர்கள் எத்தனை பேர் என்று எண்ணிச் சரிபார்க்கின்றது” என்றான் மகன். 

வரிசையின் அந்தத்திற்குச் சென்ற அந்தப் பென்குவினிற்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும். திரும்பவும் முன்னோக்கிப் பார்த்தது. பின்னர் அப்படியே 180 பாகை திரும்பி பின்னோக்கிப் பார்த்தது. அங்கே தூரத்தில் அவர்களது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பென்குவின் நொண்டி நொண்டி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. இவர் நிலத்தைக் குனிந்தபடி அந்த விபத்துக்குள்ளான பறவை வந்து சேரும் வரைக்கும் காத்திருந்தார். அது வந்து சேர்ந்தவுடன் அவரை மேலும் கீழும் பார்த்தார். அவருக்குக் கிட்டவாகச் சென்று ‘நலமா?’ என்று விசாரித்தார். இத்தனைக்கும் வரிசையில் ஒரு சிறு ஆட்டம் தன்னும் இல்லை. அப்படியே சிலையாக நின்றார்கள். பின்னர் அந்தப் பென்குவின் மீளவும் ராஜநடை நடந்து முன்னே வந்தது. இந்தத்தடவை அவர் அணிவகுப்பைப் பார்வையிடவில்லை. விரைவில் வீட்டிற்குப் போய்விடவேண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு இருந்தது. 

எமக்கும் அந்த எண்ணம் மூளையில் உறைத்தது.

புகைப்படத்துக்கு நன்றி:

http://www.alia.vic.edu.au/images/02-03-2010_028_1%20Penguin%20Parade%20Phillip%20Island%20Camp.jpg

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பென்குவின் அணிவகுப்பு….

  1. உங்களுடைய முந்தைய பதிவான உச்சமும், இந்தப் பதிவும் மிக நேர்த்தியாக, ரசிக்கும்படி, தகவல் நிறைந்தனவாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *