பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 26

1

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

E.Annamalai, Annakannan, Nageswari Annamalai

அண்ணாகண்ணன் எழுப்பிய கேள்வி:

ஆங்கில ஒலிபெயர்ப்பில் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. முக்கியமாக T, D ஆகியவற்றை ர, ற என்ற எழுத்துகளால் ஈழத் தமிழர்கள் ஒலிபெயர்க்கின்றனர். நெடிலைக் குறிலாக எழுதுகின்றனர். http://tamilcnn.com தளத்திலிருந்து 2011 மார்ச்சு 29 அன்றைய தேதியில் எடுத்த சில சான்றுகள்:

Ontario – ஒன்ராறியோ – ஒன்டாரியோ

Toranto – ரொறன்ரோ – டொரன்டோ

Ticket – ரிக்கற்று – டிக்கட்டு

Credit – கிறடிட் – கிரெடிட்

New york –  நியூயோர்க் – நியூயார்க்

Police – பொலிஸ் – போலீஸ்

Hostel – ஹொஸ்டல் – ஹாஸ்டல்

எந்த ஒலிபெயர்ப்பு சரி?  இதைச் சீரமைக்க என்ன செய்யலாம்?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஒரு மொழி வேறொரு மொழியிலிருந்து சொற்களைக் கடன்பெற்றுப் பயன்படுத்தும் போது அந்தச் சொற்களில் புதிய ஒலிகள் இருந்தால் அவற்றை எப்படி எழுதுவது என்னும் கேள்வி எழுகிறது. கடன்பெறும் மொழியில் உள்ள ஒலிகளே இருந்தாலும், அந்த ஒலிகள் அந்த மொழியில் வராத இடங்களில் – சொல்லின் முதல், இறுதி, சில ஒலிகளின் அண்மை போன்ற இடங்களில் – வந்தால் எப்படி எழுதுவது என்னும் கேள்வியும் எழுகிறது. சமஸ்கிருதச் சொற்களைப் பொறுத்தவரை இந்தக் கேள்விகளுக்குத் தமிழ் இலக்கண நூல்கள் விடை கூறுகின்றன. இருப்பினும் விடைக்கு அடிப்படையான விதிகள் இன்றைய தமிழில் மீறப்படுகின்றன. கடன் சொற்களை எழுதும் விதிகள் காலத்தின் அடிப்படையில் மாறலாம். பழையன கழிதல் இயல்பல்லவா?

தமிழ் இலக்கண நூல்களின் பழைய விதிகள், பொதுச் சொற்களுக்கும் சிறப்புச் சொற்களுக்கும் (names) வேறுபாடு காட்டவில்லை. இன்றைய தமிழில் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சிறப்புச் சொற்களில் எழுத்து விதிகள் அதிகமாகத் தளர்த்தப்படுவதைக் காணலாம்.

இக்காலத்தில் தமிழ் அதிகமாகக் கடன்வாங்கும் மொழி ஆங்கிலம். ஆங்கிலச் சொற்களை – பொதுச் சொற்களையும், சிறப்புச் சொற்களையும் – தமிழில் எப்படி எழுதுவது என்னும் கேள்விக்கு விடையாக எந்த இலக்கண ஆசிரியரும் விதி சொல்லவில்லை. தமிழறிஞர்கள் கடன்சொற்களே வேண்டாம் என்ற கோட்பாட்டில் நின்று, இந்தக் கேள்வியைப் புறக்கணித்துவிடுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டால் பிரச்சினை மறைந்துவிடுவதில்லை. ஊடகங்களில் பிற நாட்டுச் சிறப்புப் பெயர்களை எழுதும்போதும், அறிவியல் நூல்களில் கலைச்சொற்களை எழுதும்போதும் இந்தக் கேள்வி கண்முன்னால் பெரிதாக நிற்கிறது. ஆங்கிலச் சொற்களை எழுத விதிகள் இல்லாததால், நாம் மக்கள் எழுதும் மரபைப் பார்க்கலாம்.

சில மரபுகளுக்கு இவை உதாரணங்கள்:

ஆங்கில ஒலி / L / வல்லெழுத்தை ஒட்டிவரும்போது /ள்/ என்றும் (சைக்கிள், பிளேடு), வேறு இடங்களில் /ல்/ என்றும் (பார்சல், சிலேட்டு) எழுதப்படுகிறது. சொல்லின் இறுதியில் வல்லெழுத்து ஒலிப்புடன் வந்தால் ஒற்றையாகவும், ஒலிப்பின்றி வந்தால் இரட்டையாகவும் (சல்ஃபைடு, சல்ஃபைட்டு) எழுதப்படுகின்றன. மெல்லெழுத்தை அடுத்து வரும் வல்லெழுத்து தமிழில் ஒலிப்புடையதாகும். ஆங்கிலச் சொல்லில் இந்த இடத்தில் வரும் வல்லெழுத்து ஒலிப்பின்றி இருந்தால், மெல்லெழுத்தை ஓரின மெல்லெழுத்தாக எழுதாத மரபு (சென்ட்ரல், ஃபான்டா, அன்டார்டிக்கா), விலக்குகள் இருந்தாலும் பரவலாக, பின்பற்றப்படுகிறது.

/ae/ என்ற உயிரொலி /ஏ/ அல்லது /ஆ/ வாக (பேன்ட்ஸ்; பேங்க் / பாங்க்) என்று எழுதப்படுகிறது. ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பைச் சார்ந்தில்லாமல் அவற்றின் எழுத்துக் கூட்டலை (spelling) வைத்துத் தமிழில் எழுதும் மரபும் இருக்கிறது (credit = கிரெடிட், மியாமி = Miami (இதன் அமெரிக்க உச்சரிப்பு மயாமி)). இன்னும் சில மரபுகளும் இருக்கின்றன.

இந்த மரபுகள் தமிழகத் தமிழிலும் ஈழத் தமிழிலும் வேறாக இருக்கலாம். ஒரு வேறுபாடு ஆங்கிலத்தில் உள்ள /aa/ என்னும் உயிர் தமிழகத்தில் /ஆ/ என்றும், ஈழத்தில் /ஓ/ என்றும் எழுதப்படுவது (ஹாஸ்டல், ஹோஸ்டல்). இந்த வேறுபாடு, தமிழ்ச் சொல்லிலும் உண்டு (ஆம், ஓம்). ஆங்கிலச் சொல்லின் முதலசையில் அழுத்தம் (stress) கொடுத்து ஒலிக்கும் குறில், தமிழகத்தில் நெடிலாகவும் ஈழத்தில் குறிலாகவும் எழுதப்படுகிறது (போலீஸ், பொலீஸ்).

தொல்காப்பியம் சொல்லும் உச்சரிப்பின்படி /ற்/ வல்லெழுத்து; நுனி நா, நுனி அண்ணத்தைத் தொட்டு எழும் ஒலி; ஆங்கில /t/ -யின் ஒலி. ஈழத்தில்      /ற்/ -க்குச் சில இடங்களில் இந்த உச்சரிப்பு இருக்கிறது. இது இரட்டிக்கும்போதும் மெல்லெழுத்துக்குப் பின் வரும்போதும், ஈழத் தமிழில்  வல்லொலியாக உச்சரிக்கப்படுகிறது. (‘என்று’ என்ற சொல் ‘என்டு’ என்று உச்சரிக்கப்படுகிறது). ஆங்கிலச் சொல்லின் இறுதியில் வரும் /t/ -யைத் தமிழர்கள் இரட்டித்து /tt/ என்று ஒலிப்பதைத் தமிழகத்தில் /ட்ட்/ என்றும் ஈழத்தில் /ற்ற்/ என்றும் எழுதுகிறார்கள் (டிக்கட்டு, ரிக்கற்று). தமிழகத்தில் பதற்றம் என்ற சொல் பதட்டம் என்றும் எழுதப்படுவதை இங்கு கவனிக்கவும். இது இரட்டித்து ஒலிக்கப்படாமல் சொல்லின் இறுதியில் உயிரேறாமல் வந்தால், /ட்/ என்றே இரண்டு வழக்குகளிலும் எழுதப்படுகிறது (கிரெடிட், கிறடிட்). இந்த ஒலி சொல்லின் முதலில் உயிரேற்று வரும்போதும், சொல்லின் இடையில் மெல்லெழுத்துக்குப் பின் உயிரேறி வரும்போதும் தமிழ்நாட்டில் /ட்/ -ஆகவும் ஈழத்தில் /ர்/ -ஆகவும் எழுதப்படுகிறது (டிக்கட்டு, ரிக்கற்று; டொரன்டோ, ரொறன்ரோ). இந்த இடங்களில் /t/ -வின் ஒலி நின்றிசைக்காமல் நழுவலாக (flap) ஈழ உச்சரிப்பில் ஒலிக்கும் என்பது என் அனுமானம். /r/ வல்லெழுத்தை அடுத்தும், இரு உயிர்களுக்கிடையேயும் வரும்போது தமிழகத்தில் /ர்/ என்றும், ஈழத்தில், மேலே சொன்ன /ர்/ -இலிருந்து வேறுபடுத்தி, /ற்/ என்றும் எழுதப்படுகிறது (கிரெடிட், கிறடிட்; ஒன்டாரியோ, ஒன்ராறியோ).

பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் சொற்களின் எழுத்துக்கூட்டலில் வித்தியாசம் (colour, color; catalogue, catalog; programme, program;  realise, realize) இருப்பது போல், ஆங்கிலச் சொற்களை எழுதுவதில் தமிழக மரபிற்கும் ஈழ மரபிற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு மரபுகள் இருப்பதில் இழப்பில்லை. வழக்கில் இருக்கும் இரு மரபுகளையும் தரப்படுத்தும் தேவை இருக்கிறது. இக்காலத் தமிழுக்கு எழுதப்படும் புதிய இலக்கணம் இந்தத் தேவையை நிறைவு செய்ய வேண்டும்.

=====================================

(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 26

  1. “…ஆங்கிலச் சொற்களை எழுதுவதில் தமிழக மரபிற்கும் ஈழ மரபிற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு மரபுகள் இருப்பதில் இழப்பில்லை. வழக்கில் இருக்கும் இரு மரபுகளையும் தரப்படுத்தும் தேவை இருக்கிறது. இக்காலத் தமிழுக்கு எழுதப்படும் புதிய இலக்கணம் இந்தத் தேவையை நிறைவு செய்ய வேண்டும்…’

    -இந்தக் கருத்தை வரவேற்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *