ஐ.நா.வின் இளையோர் தூதராக, நடிகர் விக்ரம் தேர்வு

vikramபிரபல திரைப்பட நடிகரான சியான் விக்ர‌ம், ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐ.நா.வின் மனிதக் குடியேற்ற திட்டம்) பிரிவின் இளையோர் தூதராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து, சிலர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசியாவில் இருந்து தேர்வு நடிகர் விக்ரம் தேர்வாகியுள்ளார். கென்யாவின் நைரோபி நகரில் நடைபெறும் 23ஆவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். 2011 ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

வறுமை ஒழிப்பிற்கும் நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்கும் குறிப்பாக, ஏழைகளின் வாழ்வு மேம்படவும் பாடுபடும் பெருமைக்குரிய அமைப்போடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது, மிகப் பெரிய கவுரவம் என்று நைரோபியில் இருந்து நடிகர் விகரம் கூறியுள்ளார்.

ஐ.நா. சபையின் ஹாபிடேட் பிரிவின் நோக்கம், ஆரோக்கியமான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் வளர்ச்சி மூலம் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது என்று கூறும் விக்ர‌ம், மக்களுக்கு அவசர தேவை, தினசரி பயன்பாடு, மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வசதி வழங்குவதோடு, வீட்டு வசதியை அளித்து, சேரிகளை இல்லாமல் செய்வதே ஆகும் என்றும் தெரிவிக்கிறார்.

சினிமா தனக்கு வழங்கியுள்ளதற்கு நன்றிக் கடனாக, ஐ.நா. அமைப்பு மூலம் அதன் நோக்கம் நிறைவேற உதவி செய்து மக்களுக்குச் சேவைசெய்ய விரும்புவதாக விக்ரம் பெருமிதத்தோடு கூறுகிறார். வளமான எதிர்காலத்திற்காக நகரங்களை மாற்ற இந்த அமைப்பு முயல்வதாகவும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

விக்ரம் சமூக பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். அவர் சஞ்ஜீவினி அறக்கட்டளையின் தூதராக உள்ளார். சிறப்புத் தேவை கொண்ட மாணவர்களின் பள்ளியான வித்யா சுதாவின் நல்லெண்ணத் தூதராகவும் இருக்கிறார்.

மாற்றுத் திறனாளிகள், பெண்கள், ஏழைகள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான விக்ரம் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனராகவும் விக்ர‌ம் விளங்குகிறார். இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும் காசி கண் சிகிச்சை முகாம் திட்டத்தின் பின்னணியிலும் அவர் இருக்கிறார். இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ஏழைகளின் பார்வையை இந்தத் திட்டம் மீட்டுத் தந்துள்ளது.

இந்தச் சமுக நலப் பணிகளோடு நடிகர் விக்ரம், இனி இளையோர் தூதராக ஐ.நா.வின் நோக்கம் நிறைவேறப் பாடுபடுவார்.

========================================
தகவல் – மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஐ.நா.வின் இளையோர் தூதராக, நடிகர் விக்ரம் தேர்வு

 1. இந்தத் தேர்வு விக்ரமைக் கெளரவிக்கிறது. அவரது வறுமை ஒழிப்புப் பணியைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்தக் கெளரவங்களின் எழுதப்படாத விதி: நாள்தோறும் இந்தத் தொண்டு செய்ய வேண்டும். தன்னடக்கம் இருக்கவேண்டும். விக்ரமுக்கு என் வாழ்த்துகள்.

 2. நடிகர் விக்ரம் ஐ நா வின் இளையோர் தூதராக
  நியமனம் பெற்றது பாராட்டுக்கு உரியது. அவர்
  பல அமைப்புகளுக்கு நல்லெண்ணத் தூதுவராக
  இருப்பதும் ஒரு சிறப்பு! சினிமாவில் உள்ளோர்
  நல்லது செய்கிறேன் என்று சொல்லிவிட்டு
  அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள். அப்படி அரசியலுக்கு
  வந்த நடிகர்கள் செய்த நன்மைகள் என்ன என்பதை
  எண்ணிப்பார்க்க, விடை தெரியவில்லை.
  “இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
  கடனறி காட்சி யவர்” – திருக்குறள்
  இரா. தீத்தாரப்பன்,இராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published.