காக்கா ஃபார்முலா
முகில் தினகரன்
அதிக சூடும் இல்லாமல் அதிக ஜில்லிப்பும் இல்லாமல் இடைப்பட்ட வெதுவெதுப்பிலிருக்கும் இதமான நீரை மொண்டு உச்சந் தலையில் வைத்து நிதானமாய் ஊற்றி;க் கொள்ளும் போது மேனியில் ஏற்படும் ஒரு இன்ப சிலிர்ப்பிற்கு இந்த உலகத்தையே எழுதி வைக்கலாம். கண்களை மூடிக் கொண்டு அந்தச் சுகானுபவத்தை சுகித்துக் கொண்டிருந்த நான் பாத்ரூம் கதவு தட்டப்பட,
‘யாரூ’ எரிச்சலுடன் கேட்டேன்.
‘அப்பா…நான்தானப்பா ரஞ்சனி…’ என் ஏழு வயது மகள்.
‘எ…ன்…ன…ம்…மா….?’
‘அப்பா..நம்ம வீட்டு மொட்டை மாடில நெறைய காக்காய்ங்க வந்து உட்கார்ந்துட்டுக் கத்துதுங்கப்பா’
அப்போதுதான் கவனித்தேன். ‘கா…கா….கா…கா…’ என்ற பேரிரைச்சல் காதை அடைத்தது. இடையே ‘கா….கா…கா…கா…’ என்று சில அண்டங்காக்கைகளின் அலறல் வேறு.
‘என்ன கருமம் இது,…ஏய் ரஞ்சனி…அம்மாவ மொட்டை மாடிக்குப் போய்ப் பார்த்திட்டு வரச் சொல்லு…ஏதாச்சும் செத்துக் கித்துக் கெடக்கும்’
‘பாத்தாச்சுப்பா….ஒரு காக்காய்க் குஞ்சு நம்ம ஓவர் டேங்க் தொட்டிக்குள்ளார விழுந்து கெடக்காம்’
‘அய்யய்ய…செத்துக் கிடக்கா?’ மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது எனக்கு.
என்னுடைய இந்தக் கேள்விக்கு என் மனைவியின் குரலில் பதில் வந்தது. ‘இல்லைங்க…சாகலை….அது பறக்கத் தெரியாத குஞ்சு போலிருக்கு…அரையும் குறையுமாய்ப் பறந்து வந்து நம்ம தொட்டிக்குள்ளார விழுந்து கெடக்கு…நானும் சொல்லிட்டேதானிருக்கேன்’ அந்த ஓவர் டேங்க் தொட்டிக்கு ஒரு மூடி போடுங்க மூடி போடுங்க’ ன்னு நீங்க காதுலயே போட்டுக்கலை…இப்பப் பாருங்க எப்படியொரு பிரச்சினைன்னு….’
‘என்னடி பெரிய்ய பிரச்சினை?..எடுத்து வெளிய போட வேண்டியதுதானே?’ துண்டால் உடம்பைத் துடைத்துக் கொண்டே சொன்னேன்.
‘அது சரி…கிட்டத்தட்ட அம்பது…அறுவது காக்காய்ங்க தொட்டியைச் சுற்றியும் பறந்திட்டிருக்குதுக…நான் போய் அந்தக் குஞ்சைத் தொட்டேன்னு வெச்சுக்கங்க…எல்லா சேர்ந்து கொத்தியே என் தலையை ஓட்டை போட்டிடும்ங்க’
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன் அவளை எரித்து விடுவது போல் பார்த்து விட்டு ‘ஒரு காக்காய்க் குஞ்சை வெளிய எடுத்துப் போடத் துப்பில்ல…வாய் மட்டும் கேளு…இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசி வரைக்கும்….’
‘ஆமாம்ங்க…எனக்குத் துப்பில்லைதான்…ஒத்துக்கறேன்….நீங்க ஆம்பளை சிங்கம்தானே?…போங்க…..போய் வெளிய எடுத்துப் போட்டுட்டு வாங்க…’ என்றாள் கௌசிகா.
‘ஆ…என்னே…அவமானம்?’ என் தன்மான உணர்ச்சி தூண்டி விடப்பட்டதும் ‘விடு…விடு’ வென்று படிகளில் ஏறி மொட்டை மாடியை அடைந்தேன்.
போன வேகத்தில் பின் வாங்கினேன். கிட்டத்தட்ட நூறு காக்கைகளுக்கும் மேலிருக்கும். தொட்டிக்குள் கிடக்கும் அந்தக் குஞ்சைக் காப்பாற்றத்தான் நான் வந்திருக்கிறேன் என்பதை உணராத அந்தக் காக்கைகள் மூர்க்கத்தனமாய் என் தலைக்கு மேல் ‘விர்…விர்’ ரென்று பறந்து என் தலையைக் கொத்தப் பார்த்தன.
அலறியடித்துக் கொண்டு கீழே ஓடினேன்.
‘என்னமோ…வீராவேசமாப் போனீங்க…போன வேகத்துல வந்துட்டீங்க…’ கௌசிகா என்னைப் பார்த்துக் கிண்டலடிக்க
‘ஹேய்….அப்பா பயந்திடுச்சு….அப்பா பயந்திடுச்சு’ ரஞ்சனி கத்தினாள்.
அவமானமும் ஆத்திரமும் சேர்ந்து என்னை ஆட்டி வைக்க ‘வாயை மூடிட்டுப் போங்கடி…காலங்காத்தால வேற வேல இல்ல பாரு எனக்கு?…அவனவன் ஆபீஸூக்கு லேட்டாச்சுன்னு அல்லாடிட்டிருக்கான்…காக்காய்ப் புடிக்கணும்…கழுதையைப் புடிக்கணும்…னுட்டு…’ கத்தலாய்ச் சொல்லி விட்டு வீட்டிற்குள் புகுந்தேன்.
என் முதுகுக்குப் பின்னால் கௌசிகாவும் ரஞ்சனியும் ‘குசு..குசு’வென்று பேசியபடி நமுட்டுச் சிரிப்பு சிரிப்பது எனக்குத் தெரிந்தும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
மணி எட்டரை. ஸ்கூட்டரை கேட்டருகே கொண்டு வந்து ஸ்டார்ட் செய்யப் போகும் முன் மேலே அண்ணாந்து பார்த்தேன். இன்னமும் அந்தக் காக்காய்க் கூட்டம் மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவற்றின் மேல் அப்படியே அமர்ந்திருக்க யோசித்தபடியே வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்தேன்.
போகும் வழியில் என் சிந்தனை முழுக்க தொட்டியில் விழுந்து கிடக்கும் அந்தக் காக்கைக் குஞ்சையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. ‘எப்படி அதை எடுத்து வெளியே போடுறது?….ராத்திரி நேரத்துல மத்த காக்கைகளெல்லாம் இருக்காதே…அந்த நேரத்துல போய் எடுத்துப் போட்டுட்டா….’ ‘பளிச்’சென்று அந்த யோசனை தோன்ற முகம் மலர்ந்தேன். அடுத்த விநாடியே இன்னொரு எண்ணம் வந்து அந்த மலர்ச்சியை வாட வைத்தது. ‘அய்யய்ய…ராத்திரி வரைக்கும் அது தாங்குமா,…செத்துக் கித்துப் போயிடுச்சுன்னா மொத்தத் தண்ணியம் நாறிடுமே….அப்புறம் தொட்டியைக் க்ளீன் பண்ணணும்…அதுக்கு ஞாயிற்றுக் கிழமைதான் டைமிருக்கும்…அதுவரைக்கும் என்ன பண்றது?’
அன்று முழுக்க ஆபீஸில் எனக்கு வேலையே ஓடவில்லை. ஒரு சமயம் எனக்கே என் மீது கோபம் வந்தது. ‘ச்சை…இது ஒரு பெரிய விஷயம்ன்னு காலையிலிருந்து இதையே நெனச்சிட்டிருக்கியே…நீயெல்லாம் என்ன ஆளு?…அவனவன் எதையெதையோ சாதிக்கறான்…ஒரு காக்கைக் குஞ்சுப் பிரச்சினைக்கு இப்படி நொந்து நூலாகறியே?….’ ஈவினிங் ஆக ஆக இனம் புரியாதவொரு அச்சம் மனதில் படர வீட்டிற்குப் போகவே தயக்கமாயிருந்தது. ‘அது என்னவாகியிருக்கும்,..ஒருவேளை அதுவே எந்திரிச்சுப் பறந்து போயிருக்குமா?’ நினைக்கவே சந்தொஷமாயிருந்தது.
வீட்டையடைந்ததும் ஸ்கூட்டரை கேட்டுக்கு வெளியிலேயே ஆஃப் செய்து இறங்கித் தள்ளியபடியே உள்ளே சென்றேன். என்னையுமறியாமல் என் கண்கள் மேலே பார்த்தன. ஒரு காக்கையைக் கூடக் காணோம். ‘நான் நெனைச்ச மாதிரியே அதுவா எந்திரிச்சு பறந்து போயிடுச்சு போலிருக்கு’
வீட்டிற்குள் நுழைந்து ஷோபாவில் அமர்ந்த போது ரஞ்சனி ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘டாடி…ரஃப் நோட்டு வாங்கிட்டு வரச் சொன்னனில்ல?..எங்கே?’ கேட்டாள்.
காலையிலிருந்து அந்தக் காக்காய்க் குஞ்சையே நினைத்துக் கொண்டிருந்த நான் ரஞ்சனியையும் ரஃப் நோட்டையும் சுத்தமாகவே மறந்து போயிருந்தேன்.
‘அது…வந்தும்மா…இப்ப நான் வெளிய போவேன்…வரும் போது வாங்கியாரேன்…என்ன?’ சமாளித்தேன்.
என் மனம் அவள் அந்தக் காக்கைக் குஞ்சைப் பற்றி ஏதாச்சும் சொல்வாள் என எதிர்பார்த்தது. அவளோ ரஃப் நோடடிலேயே குறியாய் இருந்தாளே தவிர அந்தப் பேச்சையே எடுக்க வில்லை. நானாக வலியப் போய்க் கேட்க எனக்கும் மனம் ஒப்பவில்லை.
காபி கொண்டு வந்து கொடுத்த கௌசிகா ‘ஏங்க…அவளும் ரஃப் நோட்டு வேணும்னு நாலு நாளா கேட்டுட்டிருக்கா….காதுல வாங்கிக்க மாட்டேங்கறீங்களே….பாவம்…இன்னிக்கும் மிஸ்கிட்ட அடி வாங்கியிருக்கா, சொல்லேண்டி உங்கப்பன்கிட்ட…’ என்றாள் திரும்பி ரஞ்சனியைப் பார்த்து,
‘ஆமாம்பா..இன்னிக்கும் மிஸ் அடிச்சாங்க!’
‘சரி..சரி…இன்னிக்கே வாங்கிடலாம்’ என்றவன் ஒரு வாய் காபியை உறிஞ்சிவிட்டு அதைப்பற்றிக் கேட்க கௌசிகாவை நோக்கித் திரும்பி வாயெடுத்தேன். பிறகு அப்படியே நிறுத்திக் கொண்டேன். ‘காலையிலே என் முதுகுக்குப் பின்னாடி நமுட்டுச் சிரி;ப்புச் சிரிச்சவ…இவகிட்டக் கேட்டா எதையாவது சொல்லி இளக்காரம் பண்ணுவா…வேண்டாம் கேட்கவே வேண்டாம்’
இரவு சாப்பாட்டின் போது,
‘அடடே…இன்னிக்கு என்ன விசேஷம்…பாயசமெல்லாம்?’
‘சும்மாத்தாங்க…இவ கேட்டா..சரி…ன்னு பண்ணிட்டேன்…பாருங்க டம்ளர்ல ஊத்தி அடிக்கறதை’ என்றாள் ரஞ்சனியைப் பார்த்து சிரித்தபடி,
தலையைத் தூக்கிப் பார்த்தேன.; லோட்டா போன்ற பெரிய சைஸ் டம்ளரில் பாயஸத்தை ஊற்றி ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.
இவங்க ரெண்டு பேரில் யாராவது ஒருத்தருக்காவது அந்தக் காக்கா ஞாபகம் வந்து அதைப் பத்தி சொல்ல மாட்டாங்களா? என்று என் மனம் ஆர்வமாய் எதிர் பார்த்தது.
அந்தப் பெரிய சைஸ் டம்ளரினுள் விரலை விட்டுக் குடைந்து கொண்டிருந்த ரஞ்சனியை அதட்டினாள் கௌசிகா. ‘ஏய்…ஏய்…என்னடி இப்படி அசிங்கம் பண்ணிட்டிருக்கே…குடிச்சு முடிச்சாச்சுன்னா டம்ளரைக் கீழே வைடி!’
‘இல்லம்மா இதுக்குள்ளார ஒரு முந்திரிப் பருப்பு ஒட்டிக்கிட்டிருக்கம்மா…விரலுக்கு எட்ட மாட்டேங்குதும்மா…’
‘அவ்வளவுதானே?….பேசாம காக்கா ஃபார்முலாவையே இதுக்கும் யூஸ் பண்ணுடி’ என்றாள் கௌசிகா.
‘காக்காய்’ என்ற வார்த்தை காதில் விழுந்ததும் சடாரெனத் தலையைத் தூக்கிப் பார்த்தேன் நான்.
ரஞ்சனி செம்பிலிருந்த தண்ணீரை அந்த டம்ளருக்குள் ஊற்றி உள்ளேயிருந்த முந்திரி மிதந்து மேலே வந்தது. எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சிரி;த்தாள் ரஞ்சனி.
அந்த நேரத்திலும் என் மனம் காக்காய்க் குஞ்சையே நினைத்துக் கொண்டிருந்தது. ‘என்னவாகியிருக்கும்?…இவளும் எதுவும் சொல்ல மாட்டேங்குறா’
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு கடைசியில் நானே கேட்டு விட்டேன் ‘ஆமாம்…அந்தக் காக்காய்க் குஞ்சு என்ன ஆச்சு?’
‘அதுக்கும் இதே ஃபார்முலாதான்’ என்றாள்.
‘புரியலையே’
‘ஆமாங்க…கால் தொட்டி தண்ணி இருந்திச்சு…இது அதுல விழுந்து மேலெழும்பிப் பறக்கவும் முடியாம…நடந்து போகவும் முடியாம…’பட…பட’ன்னு இறக்கையடிச்சுட்டே கெடந்திச்சு…பாத்தேன்…மோட்டார் போட்டு விட்டேன்…தொட்டில தண்ணி ஏற…ஏற… அது இறக்கையடிச்சுட்டே மேல வந்துச்சு….தண்ணி நிரம்பி வடிஞ்ச போது இதுவும் தொட்டிக்கு வெளிய வடிஞ்சு வந்து விழுந்திடுச்சு…அப்புறம் கொஞ்ச நேரம் தரைல தத்தித் தத்தி நடந்துட்டு…அரை மணி நேரத்துல ‘ஜிவ்’ன்னு பறந்து போயிடுச்சு’
எனக்கு அவமானமாயிருந்தது.
‘ச்சே…எவ்வளவு சுலபமா பிரச்சினையைத் தீர்த்துட்டு இன்னிக்குப் பூராவும் ஜாலியா இருந்திருக்கா இவ….நான் என்னடான்னா காலைலயிருந்து இதையே நெனச்சுக்கிட்டு ஆபீஸ் வேலை கூடச் சரியாப் பார்க்காம பைத்தியக்காரனாட்டம் இருந்திருக்கேன்’
‘என்னங்க….உங்களுக்கும் பாயஸத்தை டம்ளரிலேயே ஊத்தித் தந்திடவா?’
கௌசிகா கேட்க,
இயந்திரத்தனமாய்த் தலையாட்டினேன்.
(முற்றும்)