புதுவைப் பிரபா

‘ஒன்ன திருத்தவே முடியாதுடா’ஒரு நாளைக்கு பத்து முறையாவது இந்த வார்த்தையை சொல்லிவிடுவார் பார்த்தீபன். அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு ஏற்படுத்தித் தராமலே இருந்தான் மகன் பிரதாப். அவசரஅவசரமாக ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அது நகரத் தொடங்கியபோதும் விடாமல் தலையை வெளியில் நீட்டி ‘அவன திருத்தவே முடியாது. இனிமே. . அவன எம் மொகத்துலேயே முழிக்கவே வேணாம்ன்னு சொல்லிடு’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டுதான் வந்தார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பூனா நோக்கிய பயணம் தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. ஆனாலும் பார்த்தீபனின் எண்ணம் முழுக்க பரவியிருந்த எரிச்சல் உணர்வு இன்னும் குறைந்தபாடில்லை.

‘டேய். . . நான் ஊருக்கு போறன். வர.. ஒரு வாரமாகும். உங்கம்மாவ மட்டும் தனியா உட்டுட்டு. . .ஊர் சுத்திக்கிட்டே கெடக்காத. சரி. ஏனக்கு எட்டு மணிக்கு ட்ரெயின். ஆறு மணிக்கு வீட்லேர்ந்து கௌம்பனா சரியாயிருக்கும். என்ன. . . பஸ் ஸ்டாண்டுல டிராப் பண்ணிடறீயா?’

‘ம்ம். ஆறு மணிக்குத்தான? இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கு. அதுக்குள்ள நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடறேன்’

‘யப்பா. . . நீ போனீனா … அவ்வளவு லேசுல வரமாட்ட. அதனால அமைதியா இங்கியே இரு.’

‘வந்துடறேன். . .வந்துடறேன்’

சொல்பேச்சை கேட்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு போனவன் மணி ஆறரை ஆன பின்னும் வரவில்லை. கடைசியாய் ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து சென்ட்ரல் வந்து சேருவதற்குள் இரத்த அழுத்தம் ஏறி பார்த்தீபனுக்கு மயக்கமே வந்துவிட்டிருந்தது.

ஏறக்குறைய அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்த எல்லோரும் தூங்கிப்போயிருந்தார்கள் பார்த்தீபனைத்தவிர. பிரதாப்பின் முகமும் அவனது வினோத குணமும் பார்த்தீபனின் தூக்கத்தை விரட்டியடித்துக்கொண்டிருந்தது.

பிரதாப். இருபத்தி நான்கு வயது இளைஞன். பனிரெண்டாம் வகுப்பு வரை அவனிடம் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால். . .கல்லூரி படிப்பை முடிப்பதற்குள் ஏகப்பட்ட மாற்றங்கள். இரவில் நெடு நேரம் இன்டர்நெட்டில் கண்ட கண்டதையும் பார்ப்பது, காலை பத்து மணிக்கு மேல் எழுந்திருப்பது, யாரிடமும் எதுவும் சொல்லாமல் அடிக்கடி தற்காலீக தலைமறைவை மேற்கொள்வது, சொல் பேச்சு கேட்டல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் மறந்துபோனது, என்று அவன் குணாதிசயக் கூறுகள் மாறிப்போயின.’தம்’ ‘தண்ணீ’ பழக்கங்கள் அவனுள் குடியேறியது. படிப்புக்கேற்ற வேலை தேட வேண்டும், உழைத்து சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் இல்லாமலிருந்தான் அவன்.
பார்த்தீபனுக்கு எப்போது தூங்கினோம் என்று தெரியவில்லை.

ஆனால். . விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்தது. காரணம்- எதிர் இருக்கையில் பிரதாப் வயதை ஒத்த இளைஞன் ஒருவன் பல் துலக்கி முகங்கழுவி தலைவாரி தயாராவதற்குள் அவன் பட்ட பாடும், படுத்திய பாடுமே. அவன் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால்தான் அப்படியொரு ஆர்ப்பாட்டத்தோடு கிளம்பினான் என்று எதிர்பார்த்த பார்த்தீபனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஆக அந்த இளைஞனுக்கு ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருக்கும் பழக்கம். பார்த்தீபனுக்கு பிரதாப் பற்றி நினைக்கத்தோன்றியது.

‘எனக்குந்தான் ஒன்னு இருக்கே! சூரிய உதயத்த சினிமாவுலேயும் சீரியல்லையும் தவிர நேர்ல ஒருமுறை கூட பார்த்ததே கிடையாது’

‘..ச்சீ! வேலையா வேற ஊருக்குத்தான வந்திருக்கோம்? இங்கியும் வந்து அந்த உருப்படாதத பத்தி நெனச்சுக்கிட்டு. . .’ பார்த்தீபன் நினைவுக் குதிரையை வேறு திசைக்கு விரட்டிவிட்டார்.

பூனா வந்திறங்கியபோது இமாம் தயாராக நின்றிருந்தான்.

இமாம் உசைன். பார்த்தீபனின் பள்ளி கால தோழன். குடும்பத்து உறவுபோல செயல்படுவான். பூனா நகராட்சியில் பொறியியல் அலுவலராக பணி.

‘வாங்க சார்…ஆபிஸ் வேலையா அனுப்பினாதான் வருவீங்க. . . ஒங்குளுக்கே. . . எங்கள பாக்கனும்னு தோனாதில்ல..’ பார்த்தீபனின் தோள்பட்டையை அழுந்த பிடித்துக்கொண்டு கேட்டான்.

‘இல்லப்பா. . .இப்ப மட்டும் நீதான் போகனும்னு என்ன யாரும் அனுப்பல. நானேதான் . .சரி நாம போனா இமாமையும் பார்த்துட்டு வரலாமேன்னு இந்த அசைன்மெட்ட வாங்கிட்டு வந்துட்டேன்.’ உணர்வுகளோடு வந்து விழுந்தன வார்த்தைகள்.

‘எனக்குந்தெரியும்டா. ஒன்ன சொல்றேனே. . .நான் மட்டும் ஒன்ன ஓடியாந்து ஓடியாந்து பாத்துட்டேனா?’ நண்பனை விட்டுக்கொடுக்காமல் அவனே பேசினான்.

இரவு. உணவுக்கு பின மொட்டை மாடிக்கு பிரவேசித்த நண்பர்கள் குடும்பம் அரசியல் சமூக செய்திகளை அலசிக்கொண்டிருந்தனர். எப்படியோ பேச்சு பிரதாப்பை தொட்டபோது அவன் மீதிருந்த அதிருப்திகளை கொட்டித்தீர்த்தான் பார்த்தீபன்.

‘அவங்கெட்டு சீரழிஞ்சுட்டான்டா. இனிமே. . .அவன ஒன்னும் பண்ண முடியாது. வெளியில போனா வீட்டுக்கு நேரத்துக்கு வர்றதில்ல. . .இல்லாத கெட்ட பழக்கமில்ல. . .ஆம்பளைக்கு அழகு சுயமா ஒழச்சு சம்பாரிக்கிறதுதாங்கிற எண்ணமில்ல. . .அதவிட கொடும சில நேரத்துல ரெண்டு மூணு நாளு ஆளு எங்க இருக்கான்னே தெரியாம அல்லாடியிருக்கோம் தெரியுமா? போலீஸ் ஸ்டே. . .’ வார்த்தைகள் வெளி வர மறுத்தன.

‘டேய். . வயசுல சில பசங்க அப்படித்தான் இருப்பாங்க. சரியாயிடுண்டா..’

‘வாய்ப்பேயில்லடா. . அவன் நெஞ்சழுத்தக்காரன்டா. ..தான் செய்யறது தப்புன்னு தெரியாத பசங்களுக்கு அத தெரியப்படுத்தினதும் மாறிடுவாங்க. ஆனா. . இவனுக்கு நல்லா தெரியும். தெரிஞ்சுகிட்டே செய்யறான். அவனுக்குள்ள. . . எண்ணங்கள் குப்பையும் கூளமுமா கெடக்குதுடா. அத ஒன்னும் பண்ண முடியாது.’

‘சரி.அத விடு. காலையில ஒனக்கு எங்க வேல?’

‘கடக்குவாசலாவுல’

‘சரி. ஓன்னு பண்ணுவோம். எங்கூட’ஷபிம்ப்ரீ’ வந்துடு. அங்க. . .அரை மணிநேரத்து வேல. அத முடிச்சுட்டு நானே ஒன்ன கூட்டிட்டு போறேன்’

‘வேணாம்ப்பா. ஓனக்கு எதுக்கு சிரமம். நான் போயிக்குறேன்.’

‘இல்லடா. நான் வேல செய்யற எடத்த நீ அவசியம் பார்த்தாகணும்’ இமாம் எதற்காகவோ இதை அழுத்திச் சொன்னான்.

காலையில் பிம்ப்ரீயில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துள் நுழைந்தபோது பார்த்தீபன் கேட்டான், ‘என்னடா இது… ஒரே’கப்’ அடிக்குது. இங்க ஒரு கூவம் ஆறா?’

‘பூனா சிட்டியோட ஒட்டுமொத்த கழிவு நீர் பா. அதத்தான் இங்க சுத்திகரிச்சு. . .குடிநீரா மாத்தரோம்’ இமாம் பெருமையாக சொன்னான்.

‘டேய். . கன்னங்கரேல்ன்னு கண்டதும் மெதந்துகிட்டு வருதே. . .இந்த தண்ணியவா?’

‘கண்டது என்ன? செத்த நாயெல்லாம்கூடத்தான் அடிச்சுகிட்டு வரும். ‘ பார்த்தீபன் முகம் சுருங்கி விரிந்தது.

‘சரி. இத எப்படி குடிநீரா மாத்தறோம்ன்னு பாக்கணும்ன்னு நீ ஆசைபடற மாதிரி தெரியுது. வா . சுத்திக்காட்றேன்’ சிரித்துக்கொண்டே இமாம் சொல்ல,  ‘அடப்பாவி. . .ஒனக்கு ஆச. சரி. நடத்து. . .’ என்றான் பார்த்தீபன்.

அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முதல் வடிகட்டும் தொழிட்நுட்பம் தொடங்கி தேக்கிவைத்தல், ஏரியேட்டர் அலசல் முதற்கொண்டு படிப்படியாய் கழிவுநீர் எப்படி குடிநீராக மாற்றப்படுகிறது என்பதை பார்த்தீபனின் கண்களுக்கு நேரடியாக காண்பித்து விளக்கிக்கொண்டே போனான் இமாம்.

கடைசியாக வெள்ளை வெளேரென்று வடிந்த தண்ணீரை பார்த்தீபன் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, இமாம் அதில் கொஞ்சம் பிடித்து வாயில் ஊற்றிக்காட்டினான். பார்த்தீபனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.

‘என்ன பார்த்தீபா. . .உள்ள நுழையும்போது நீ பார்த்த அந்த அழுக்கு தண்ணீ தான் இன்னும் மனசுல இருக்கில்ல. இவ்வளவு வேலைகள் நடந்து அதோட நிறம்  மணம் சுவை… எல்லாம் மாறனதுக்கப்புறங்கூட இந்த மாற்றத்த ஒன்னால ஏத்துக்க முடியல இல்ல? பிரதாப் விஷயத்துலேயும் நீ இப்படித்தான் நெனைக்கிற’ பார்த்தீபன் இமாமை வெறித்துப்பார்த்தான்.

‘இல்லப்பா. . .நெனைக்கிறேன்னுதான் சொன்னேன்’. அவனே தொடர்ந்தான்.

‘இந்த சாக்கடைய மாத்த முடியிறபோது. . .அழுக்கு எண்ணங்கள சுத்திகரிப்பு பண்ணமுடியாதுன்னா நெனைக்கிறே? ஆனா. . .கண்கூடா பாக்கற இந்த நீர் மாற்றத்தையே ஏத்துக்க ஒம்மனசு ஒப்பாதபோது பிரதாப் திருந்துவான்னு ஒன்னால நம்ப முடியாத இருக்கிறதுல ஆச்சரியம் ஒன்னுமில்ல.’

பார்த்தீபன் பெருமூச்சு விட்டான். இமாம் இன்னும் பேசினான்.

‘சரி. நீயே சொல்லுப்பா. கூவம் என்ன ஒரே நாள்ளலையா நாத்தம் புடிச்ச ஆறா மாறிடுச்சு? நல்ல நெலையிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மாறும்போது யாரும் கவனிக்கல.அப்போ கண்டுக்காம விட்டுட்டு. . .ஆங். . .இத ஏன் சொல்ல வரேன்னா. . .பிரதாப்பையும் அப்படித்தான் நீ விட்டுட்ட. அவன் சின்னதா தப்பு செய்யத் தொடங்கும்போதே கண்டிச்சிருக்கணும். கட்டுப்படுத்தியிருக்கணும். அப்பலாம் விட்டுட்டு இத்தன வருஷம் கழிச்சி ‘கெட்டுட்டான். . .கெட்டுட்டான்னு’ கூவறது எந்த விதத்துல நியாயம்பா? நீன்னு இல்ல. நாட்ல நெறைய பெத்தவங்க இதே தப்ப தான் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பிள்ளைங்கள பாத்து பாத்து வளப்பாங்க. ஒரு லெவலுக்கு மேல. . .அப்படியே கழட்டி விட்டுடுவாங்க. கண்காணிக்க மறந்துடுவாங்க. மத்தவங்க மாதிரியே நடந்துக்கிற பெத்தவங்கமேல பிள்ளைங்களுக்கு வெறுப்புணர்ச்சி வளர ஆரம்பிச்சுடும். அவங்ககிட்ட பேசற, அவங்க சொல்றத காது கொடுத்து கேட்கற யாரோ ஒருத்தர பிடிச்சுபோயிடும். அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ அவங்க சொல்படியே நடக்கனும்னு தோனிடும்’

‘இமாம்… நீ என்ன சொல்ல வர்றே? பிரதாப்ப திருத்திட முடியுமா?’

‘முடியும். அதுக்கு மொதல்ல நீ திருந்தனும்.’ஒன்ன திருத்தவே முடியாது’ ‘நீ உருப்படவேமாட்ட’ங்கிற நெகடிவ் வார்த்தைகள அவங்கிட்ட பேசறத நிறுத்து. முன்னைக்கு அவன் பரவாயில்ல’ ன்னு அவன் காதுபடவே பேசு. கண்டிப்பா மாறிடுவான்.’

பார்த்தீபனின் செல்பேசி அலறியது. மாதவி பேசினாள்.

‘என்னங்க. . .பிரதாப் ரெண்டு நாளா வெளிய எங்கியும் போவலங்க. சமத்தா எங்கூடையே இருக்கான். உங்ககிட்ட பேசனுமுன்னு சொன்னான் பாருங்க. . .’

‘அப்பா. . ‘

‘சொல்லுப்பா. . ‘

‘அப்பா. . .ரொம்ப சாரிப்பா. அன்னிக்கு பெட்ரோல் இல்லாமல் பைக் பாதி வழியிலேயே நின்னுடுச்சுப்பா. அதான் உங்கள. . கூட்டிட்டு போக வரமுடியலப்பா ‘ இமாமின் பேச்சால் பிரதாப் குரலை வேறு கோணத்தில் கேட்டான் பார்த்தீபன்.

‘பரவாயில்லபா. பெட்ரோல் இல்லாம நின்னதுக்கு நீ என்ன பண்ணுவ?’

இதுபோல் மகனிடம் பேசி வெகு வருடங்கள் ஆகியிருந்ததை பார்த்தீபனால் உணரமுடிந்தது.

‘அப்பா. . .எம்மொகத்துலேயே முழிக்கமாட்டேன்னு சொன்னீங்களாமே!. . அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்கப்பா.. .ப்ளீஸ்பா. ..நான் இனிமே அதமாதிரி செய்யமாட்டேம்ப்பா..’ குரலில் தழுதழுப்பு தெரிந்தது.

‘ச்சீ. .அது கோவத்துல சொன்னதுப்பா. பிரதாப். . .அப்பாவுக்கு ஒன்ன ஒடனே பாக்கணும்போல இருக்குப்பா…’

‘எனக்கும்தாம்ப்பா. ..’

பார்த்தீபனின் கண்கள் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.

‘இமாம். . .ஒங்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மாதிரியே நானும் மாறப்போறன். எம்பையன. . .சுத்தப்படுத்தப்போறன். நிச்சயம் அவன் மாறிடுவான். .’ பார்த்தீபனின் மனதிலிருந்து அவநம்பிக்கையும் விழிகளைவிட்டு கண்ணீர்த்துளிகளும் வெளிநடப்பு செய்துக்கொண்டிருந்தது.

‘கண்டிப்பா நடக்கும்’ இமாம் பார்த்தீபனின் முதுகை தட்டிக்கொண்டே சொன்னான். ஆனால் அங்கெழுந்த சத்தம் கைதட்டல் சத்தம் போலவே கேட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.