சென்னையில் பிடித்ததும், பிடிக்காததும்

0

 

மோகன் குமார்

சென்னை நல்லதும் கெட்டதும் கலந்த ஒரு ஊர். 16 வருடமாய் நமக்கு சென்னை வாசம் தான்.  

சென்னை அனைவருக்கும் பிடிக்க, என் பார்வையில் இதோ பத்து காரணங்கள் :

1. இந்தியாவிலேயே அமைதியான ஒரு மாநிலம் தமிழகம் ! பல இடங்களில் வரிசையாக குண்டு வெடிப்பு நடந்த போது கூட சென்னை பக்கம் எந்த பிரச்னையும் இல்லை. ஊரடங்கு, கடை அடைப்பு, இன்ன பிற தொந்தரவுகள் இல்லாத அமைதி பூங்கா சென்னை. 

2. சென்னையில் உள்ள நிறுவனங்களும், கடந்த பத்து ஆண்டுகளில் தொழில் துறையி வளர்ச்சியும் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாய் ஆட்டோமோபைல் துறையில் சென்னை உலகிலேயே மிக சிறந்த ஒரு hub-ஆக உள்ளது. பெங்களூரு, மும்பை போன்ற ஊர்கள் விரிவடைவதில் புவியியல் ரீதியான சிரமங்கள் உண்டு. ஆனால் சென்னை மிக எளிதாக ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம் என விரிந்து பெரிய நிறுவனங்களுக்கு இடமளிக்கிறது. 

3. உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகள் குவிந்து கிடப்பது மிக பெரிய பிளஸ். சினிமா, டிவி மீடியா, எழுத்து துறை என அனைத்திலும் உள்ள வாய்ப்புகள், அதை சரியே பயன்படுத்தி கொண்டால் நிச்சயம் பலரும் அறிந்த வி. ஐ. பி ஆக வைக்கும் இந்த சென்னை. 

4. கல்விக்கு சென்னை மிக சிறந்த இடம் ! ஐ. ஏ. எஸ் துவங்கி சி. ஏ வரை எந்த படிப்புக்கும் மிக சிறந்த பயிற்சி கிடைப்பது சென்னையில் தான்… ! தனிப்பட்ட முறையில் நான் ACS, ICWA என்கிற இரு கடினமான கோர்ஸ்கள் நான் முடிக்க சென்னையில் கிடைத்த exposure மற்றும் பயிற்சி தான் காரணம். 

5. சென்னையின் ரயில் சேவை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. எலெக்ட்ரிக் டிரெயின்,  பறக்கும் ரயில் மிக குறைவான கட்டணத்தில் மிக விரைவாய் எங்கும் கொண்டு சேர்க்கும். மெட்ரோ ரயிலும் வந்து விட்டால் சென்னையை அடிச்சிக்க முடியாது. 

6. இங்குள்ள மனிதர்கள்- சென்னை வாசிகள் பொதுவாய் கடவுளுக்கு பயந்தவர்கள்- இதனால் தப்பு செய்யவும் தான். (சாமியார்கள் விதிவிலக்கு). அன்பானவர்கள். நீங்கள் கேட்டால் (ஆம் கேட்டால்) உதவும் தன்மை உள்ளவர்கள். சிக்கனமானவர்கள். சேமிப்பவர்கள். குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். நிறுவனத்துக்கு உண்மையாய் (loyal) உழைப்பவர்கள். 

7. பொழுது போக்கு: சினிமா, டிராமா, இசை நிகழ்ச்சி துவங்கி, முதலை பண்ணை – குவீன்ஸ்லான்ட் என பொழுது போக்குக்கு பஞ்சமே இல்லை. சென்னையில் இருந்தால் காலை துவங்கி இரவு வரை நேரம் போவதே தெரியாது. ( சொந்த ஊர் போகும் போது தான் இதை நன்கு உணர முடியும். இரண்டு நாளுக்கு மேல் அங்கு என்ன செய்வதென்று தெரியாது. மனது சென்னையை தேட ஆரம்பிச்சிடும்). 

8. மருத்துவதுறை: இந்தியாவில் மருத்துவத்துக்கு சிறந்த சில இடங்களில் சென்னையும் ஒன்று. சங்கர நேந்திராலயா சென்றால் ஏராளமான வட இந்தியர்கள், அங்கிருந்து வந்து சிகிச்சை எடுப்பதை காணலாம். இது பல மருத்துவ மனைகளுக்கும் பொருந்தும். சற்று காஸ்ட்லி என்றாலும், நல்ல மருத்துவம் கிடைத்தால், பணம் ஒரு பொருட்டில்லை என நினைக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள். 

9. உணவு: பிற நாட்டு, பிற மாநில உணவை விட சென்னை உணவு தான் மிக சிறந்தது என்று அடித்து சொல்ல முடியும். நம் கம்பனிகளுக்கு வரும் வெளிநாட்டினர் ” ஸ்பைசி..ஸ்பைசி ” என்று சொல்லியவாறே நம் சாப்பாட்டை வெளுத்து கட்டி விட்டு ” இது மாதிரி சாப்பாட்டை எங்கும் சாப்பிட்டதில்லை” என்பதே இதற்கு சான்று. வெளியூர் செல்லும் நாம் சிக்கி சின்னாபின்னமாகி எப்படா ஊரில் சாப்பிடலாம் எனசென்னைக்கு ஓடி வருவது இன்னொரு கொசுறு சான்று. 

10. ஷாப்பிங்: நூறு ரூபாய் துவங்கி பத்தாயிரம் ரூபாய் வரை ரெடிமேட் சட்டை எடுக்க முடியும். பெண்களுக்கோ கொண்டாட்டம் தான். டி நகர் துவங்கி மயிலாப்பூர், வட சென்னையின் ஹோல்சேல் துணி கடை வரை… சென்னை ஒரு துணி கடல் ! நகை, புத்தகம், இப்படி என்ன வாங்கணும்னாலும், சென்னைக்கு வாங்க !

 

****

இனி சென்னையின் கருப்பு பக்கங்கள் : 

1. அரசியல்வாதிகள்: தமிழகத்தில் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஆட்சி மாறுவதால் சென்னையில் எந்த ஒரு பாலிசி முடிவும் ஆட்டம் காண்கிறது. ஒருவர் மெட்ரோ ரயில் என்பார்.அடுத்தவர் வந்து, மோனோ ரயில் என மாற்றுவார். ஒருவர் கண்ணகி சிலையை எடுப்பார். இன்னொருவர் அது தான் பெரிய பிரச்சனை என அரற்றி மீண்டும் சிலை வைப்பார். இப்படி எல்லா முடிவும் ஐந்தாண்டுக்கொரு முறை மாறி மாறி நடப்பதில் முன்னேற்றம் ரொம்பவும் தடைபட்டு விடுகிறது. 

இரண்டு கட்சிகளும் லஞ்சத்தில் திளைத்தவை. ஒவ்வொரு கவுன்சிலரும் கண் முன்னே கார், வீடு என வாழ்நாளைக்கு தேவையான மொத்த பணமும் ஐந்தாண்டில் சம்பாதிப்பதை நாம் பார்த்தவாறு சும்மா இருக்கிறோம். படித்த மக்கள் படிக்காத இந்த ஆட்களிடம் பல்வேறு அப்ரூவல்களுக்கு காசும் தந்து விட்டு அலைய வேண்டிய சூழ்நிலை. 

நம் வாழ்நாளில் இங்கு அரசியல் புனிதமாகும் என்ற நம்பிக்கை இல்லை ! 

2. ஆட்டோ கட்டணம் : சென்னை அளவு மிக அதிக ஆட்டோ கட்டணம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பெங்களூரு, ஹைதராபாத், கேரளாவின் பல பகுதிகள், டில்லி என எங்கு சென்றாலும் மீட்டர் போட்டு அதில் வரும் காசு வாங்குகிறார்கள். அந்த ஊர்களில் வாங்குவதை விட குறைந்தது இரண்டு அல்லது மூன்று மடங்கு இங்கு கட்டணம் ! மீட்டர் போட்டு ஓட்ட சொல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

3. மிக மோசமான சாலைகள்: சென்னையில் அடையார் போன்ற “வசதி வாய்ந்தவர்கள்” இருக்கும் இடங்களில் வேண்டுமானால் சாலைகள் நன்கு இருக்கலாம். ஆனால் தாம்பரம், மடிப்பாக்கம், வேளச்சேரி போன்ற பல இடங்களில் மிக மோசமான சாலைகள். சரியான பிளானிங் இல்லாமல் செய்யப்பட்ட லே அவுட்கள். 

நல்ல ரோடு போட்டால் ஒவ்வொரு ஆண்டும் ரோடு போட்டு காசு செய்ய முடியாதே என ஒவ்வொரு ஆண்டும் மறுபடி ரோடு போடுகிறது போலவே செய்து வைக்கிறார்கள். மழைக்காலத்தில் மக்கள் சாலைகள் நடுவே நடப்பார்கள். வேறு வழி இல்லை ! 

எந்த மேயர் வந்தாலும் சென்னை சாலைகள் அப்படியே தான் இருக்கிறது ! 

4. விலைவாசி: சமீபத்தில் விலைவாசி விண்ணைத் தொட்டு விட்டது. பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, வீட்டு வாடகை என அனைத்தும் உயர்ந்தததால், பத்தாயிரத்துக்கும் குறைவாய் சம்பாதிக்கும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி போய் விட்டது. சென்னை கஷ்டப்படும் சாதாரண மனிதர்கள் துயரத்துக்காய் கவலை படுவதே இல்லை. 

5. குப்பைகள்: சென்னையை குப்பைகளின் நகரம் என சொல்லி விடலாம். தெருவில் ஒரு காலி மனை இருந்தால் அங்கு தெரு மக்கள் முழுதும் குப்பை கொட்டுவார்கள். இன்னொரு பக்கம் குப்பை எரிப்பு பெரிய அளவில் நடக்கும். கேரிபாகுகள் (Carrybags ) பயன்பாடு குறைந்த மாதிரியே தெரிய வில்லை. குப்பைகளுக்கு நடுவே தான் வாழ்ந்து கொண்டு அவற்றை தாண்டி சென்று வந்து கொண்டிருக்கிறோம் எந்த கவலையும் இல்லாமல் ! 

6. சென்னையின் வெய்யில் : இங்கு மூன்று விதமான தட்ப வெப்பம் இருக்கும். ஹாட். ஹாட்டர். ஹாட்டஸ்ட்.. ! சென்னையில் பல வருடம் வாழ்ந்தவர்கள் கூட தாங்கி கொள்வார்கள். புதிதாய் சற்று நல்ல கிளைமேட் உள்ள இடங்களிலிருந்து வந்தவர்கள் புலம்பித் தள்ளி விடுவார்கள். 

7. பெயர் தெரியாத பக்கத்து வீட்டுக்காரர்: சென்னையை தாண்டி தமிழகத்தின் பிற ஊர்களுக்கு சென்றால், தெருவில் இருக்கும் அனைவர் பெயரும் தெரியும். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர் யார் என நிச்சயம் தெரியும். ஒருவருக்கு ஒரு தொந்தரவு என்றால் ஓடி வந்து உதவ தயாராய் இருப்பார்கள். 

கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போகும் வீட்டில் காஸ் முதலியவை வாங்க உதவுவார்கள் என்று மட்டுமே பக்கத்து வீட்டில் பேசுகிறார்கள். இதை விட மோசம் சின்ன விஷயங்களில் சண்டை போட்டு கொண்டு ஒரு பிளாட்டில் இருப்போர் வேறு சிலருடன் பேச மாட்டார்கள். ஒரு பிளாட்டில் பத்து குடும்பம் இருந்தால் அனைவரிடமும் சண்டையின்றி பேசுவோர் ஒன்று அல்லது இரண்டு பேர் இருந்தாலே அதிகம் ! 

8. பார்க்கிங் : இது பெருநகரங்கள் அனைத்திலும் உள்ள பிரச்சனையா அல்லது சென்னையில் மட்டும் தான் உள்ளதா தெரியவில்லை. பிளாட்(Flat) களிலும் சரி, வெளி இடங்களிலும் சரி போதிய பார்க்கிங் வசதிகள் இருப்பதே இல்லை. வெளியில் போனால் வாகனம் நிறுத்துவதில் அடிக்கடி பிரச்சனை வருகிறது. அரசு நினைத்தால் இந்த விஷயத்தை ஓரளவு சரி செய்யலாம். 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.