வார ராசி பலன் 07.10.2012 முதல் 13.10.2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: மாணவர்கள் சீதோஷ்ண நிலைமைக்கு ஏற்ற உணவு வகைகளை உண்பது நல்லது. பெண்கள் வீண் செலவுகளைக் குறைப்பது மூலமாகப் பணத் தட்டுப்பாட்டையும், தேவையற்ற மன உளைச்சலையும் குறைக்கலாம். வியாபாரிளுக்குக் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை மாறி, நீண்ட நாள் கடன் பிரச்சினைகள் குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போனால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனமாக இருந்தால், வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்களுக்கு வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் நல்ல பலன் கை மேல் கிடைக்கும்.
ரிஷபம்: பிள்ளைகள் மூலம் பெற்றவர்களின் சந்தோஷமும், மரியாதையும் கூடுவதோடு, இந்த வாரம் சற்றுச் செலவுகளும். கூடும். மாணவர்களுக்கு உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் உறவுகள் நடுவே சிறுசிறு விஷயங்களுக்குக்காகக் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அதனால் உறவுகளிடம் பெண்கள் பண விவகாரங்களில், எச்சரிக்கையுடன் செயல்படவும். வியாபாரிகளுக்கு, வேண்டிய சலுகைகள் வந்து சேரும். முதியவர்களுக்கு, அதிகப்படியாக இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். சுய தொழில் செய்பவர்களின் பண வரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். .
மிதுனம்: பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வந்தால் வீண் அபராதத்தைத் தவிர்க்கலாம். சுய தொழில் புரிபவர்கள், புதிய முதலீடுகளில் கவனமாய் இருந்தால், எதிர்பார்க்கின்ற லாபம் கிட்டும். மாணவர்கள், உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித் தனம். பொது வாழ்வில் இருப்பவர்கள், உண்மையான திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்வரை பொறுமை காக்கவும். கலைஞர்கள் பயணங்களின்போது புதியவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். பணிபுரிவோருக்கு, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை அவ்வப்போது வந்து போகும்.
கடகம்: மாணவர்கள், இணக்கமாய் நடந்து கொள்வதில் கவனமாய் இருந்தால் உடனிருப்பவர்களின் மூலம் கிடைக்கும் உதவி உங்களுக்குச் சாதகமாய் இருக்கும். சிறிய வேலைகளை முடிப்பதற்கான அலைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள், அதிலும் கவனமாக இருப்பதே புத்திசாலித்தனம். கர்ப்பிணிப் பெண்கள், ஆயாசம் தோன்றாத வகையில் சத்தான உணவு வகைகளை உண்ணவும். பொது வாழ்வில் உள்ளவர்கள், பணப்புழக்கத்தில் உள்ள பிரச்சினைகளை நிதானமாகக் கையாளவும். கலைஞர்களுக்குப் புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் அளவோடு பழகுதல் நல்லது. பங்குதாரகள் இடையே கருத்து வேறுபாடு வரலாம். எனவே வியாபாரிகள் பக்குவமாக நடந்து கொள்ளவும்.
சிம்மம்: வேலையில் இருப்பவர்கள், மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து, பாராட்டுக்களைப் பெறுவார்கள். படிப்பு விஷயங்களில் சிறிது மந்த நிலை ஏற்பட்டாலும், மாணவர்கள் உங்கள் விடா முயற்சியை மேற்கொண்டால், இந்த நிலைமாறி விடும். பொது வாழ்வில் உள்ளவர்கள், அதிக அலைச்சல் அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். பெண்கள், செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித்தனமாகும். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் வரவுக்கு ஏற்றவாறு சரக்குகளைக் கொள்முதல் செய்து கொண்டால், வருகின்ற லாபம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு, அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறும்.
கன்னி : பெண்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள் சுய தொழில் புரிபவர்களுக்குப் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றாலும் அதற்குரிய பண வரவு கிடைப்பதில், சிறிது தொய்வு உண்டாகும். கலைஞர்கள், ஆடம்பர செலவைச் குறைப்பது புத்திசாலித் தனம். பணியில் இருப்பவர்கள், பித்தம், தொடர்பான உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். மாணவர்கள், எடுக்கும் பணியில் சிரத்தை எடுத்துச் செய்தால், வேண்டிய பாராட்டும் தானே வந்து சேரும். பொது வாழ்வில் உள்ளவர்கள், புதிய சொத்து வாங்கும் எண்ணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரிகள், திறமையை முழு அளவில் பயன்படுத்தினால் நல்ல வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
துலாம்: இந்த வாரம், பெண்கள், எதிர்பார்த்த வகையில் விஷயங்கள் அமையாமல் சிற்சில பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டி வரலாம். பொறுப்பில் உள்ளவர்கள், திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுவது அவசியம். பணியில் உள்ளவர்கள், பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், அமைதியாக வேலைகளில் ஈடுபட முடியும். வியாபாரிகள், அவ்வப்போது வழக்குகளில் போக்கைக் கவனித்து வருவது அவசியம். கலைஞர்கள், உடன் இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும் மாணவாகள் மனதை ஒருநிலைப்படுத்திப் படிப்பதில், உறுதியாக இருந்தால் சுலபமாக அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம்.
விருச்சிகம்: நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்புக் கிடைப்பதால், மாணவர்களுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த வாரமாய் அமையும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கலில், கவனமாக இருந்தால், லாபம் குறையாமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், வலிய உறவு கொண்டாட வருபவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது. இழுபறியாக இருந்த வழக்குகளில், நல்ல சாதகமான முடிவுகள் ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள், மெத்தனமாக இருந்தால், கையில் உள்ள பணம் தண்ணீராய்க் கரையும். பெண்கள் குடும்பச் சூழலுக்கேற்றாற்போல் வளைந்து கொடுத்தால், காரியங்களைச் சாதிக்கும் வழி எளிதாகும். இந்த வாரம், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
தனுசு: மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடினமான வேலைகளில், ஈடுபட்டிருப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் வேலைகள் தேங்காமல் இருக்கும். பங்குதாரர்கள் திடீரென்று விலகிப் போகும் சூழல் உருவாகலாம். அதனால் வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். பொதுவாழ்வில் இருப்பவர்கள், சாமர்த்தியமாகச் செயல்பட்டால், எதிரிகளை எளிதில் வெல்ல முடியும் பெற்றவர்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பெண்களுக்குப் பிரியமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
மகரம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், சிக்கலான விஷயங்களில், இறங்கும் முன் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. கலைஞர்களுக்குத் திடீர் பண முடை மனக் கிலேசத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் பெண்கள் நினைத்தது போலக் காரியங்கள் நடக்காதது ஏமாற்றத்தை உண்டாக்கும். அதனால் பொறுமையுடன் இருந்து வருவது அவசியம். மாணவர்கள் .தன்னம்பிக்கையுடன் பாடங்களைப் படித்து வர கூடுதல் மதிப்பெண்களோடு பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் நிதானத்துடன் செயல்பட்டால் பணப்பற்றாக்குறை என்னும் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள், இதமான அணுகுமுறையை மேற்கொண்டால், காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ளலாம்.
கும்பம்: மாணவர்கள் தங்கள் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் நட்பு வட்டத்தை விட்டு விலகி இருந்தால், படிப்பில் முழுக்கவனம் செலுத்த இயலும். சுப காரியங்கள் நினைத்தது மாதிரி நடப்பதால், பெண்களுக்கு இது சிறப்பான வாரமாக அமையும். படிப்புக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் மீண்டும் வந்து சேர்வதால் குடும்பத்தில், மகிழ்ச்சிக்கும், கலகலப்புக்கும் பஞ்சமிராது. பெண்கள், வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், மருத்துவச் செலவுகளைத் தடுக்கலாம். சிறு சிறு போட்டிகள், பொறாமைகள் எழுந்தாலும், கலைஞர்கள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. கலைஞர்கள் வெற்றி கிட்டும் வரை, பொறுமை என்னும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம்.
மீனம்: இந்த வாரம் பணியில் இருப்பவர்கள், எந்தக் காரியத்திலும் இயல்பான மனநிலையோடு செயல்பட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. பெண்கள், குடும்ப அமைதிக்காக அதிக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள், உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். கலைஞர்கள், புதிய வீடு மாற்றம், மனை வாங்குதல் போன்றவற்றில், சற்று யோசனைக்குப் பின் செயல்படுதல் அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள், பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதையும் தவிர்த்தால் சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றைத் தவிர்த்து விடலாம் மாணவர்கள், கருத்துடன் படிப்பில் ஈடுபடுவது அவசியம்.