கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்

சேசாத்திரி
   

நூல் குறித்து சுருக்க விளக்கம்: 

1889 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டுக் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அக்குசிரிங்கசில் (Oxyrhynchus) விவிலிய அகழ்வாய்வுக் கூட்டமைப்பு நடத்திய அகழாய்வில் கண்டெடுத்த பாபிரசுச் சுருள் ஒன்றனுள் கிரேக்க நகைச்சுவை நாடகமும் அடங்கும். திரு. பெர்னார்டு பி. கிரென்பெல் (Bernard P. Grenfell), ஆர்தர் எசு. அண்ட்டு (Arthur S. Hunt) ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் இந்த கிரேக்க நாடகத்தின் கிரேக்கப் பகுதியை ஆங்கிலத்தில் பெயர்த்தியும் கிரேக்கம் அல்லாத சொற்களை ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு செய்தும் 1903 இல் அதை ஒரு நூலாய் வெளியிட்டனர். இதன் காலத்தை அவர்கள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டினதாக முடிவு கட்டினர். 

இந்த நாடகத்தில் ஆங்காங்கே கிரேக்கம் அல்லாத வேற்று மொழி உரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. இது அந்த ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்நாடகத்தில் தென்கன்னட மாவட்டத்தில் இருந்து பிரித்த உடுப்பி மாவட்டத்தின் உடுப்பிக்கு அருகில் உள்ள மள்பி என்ற துறைமுகத்தை ஆளும் தலைவன் குறிப்பிடப்படுவதால் அதில் உள்ள வேற்று மொழி திரவிட மொழி தான் என்று முடிவு கொண்டனர். முனைவர் ஈகன் உல்ட்சு என்ற ஆய்வாளர் இந்த வேற்று மொழி கன்னடமே என்று கூறினார். 

1927 இல் திரு. கோவிந்த பய் என்ற கன்னட அறிஞர் அந்த உரையாடல்களைக் கன்னடமாகக் கொண்டு ‘பிரபுத்த கர்னாடகா’ என்ற நூலாக வெளியிட்டு தம் கருத்தை வழங்கினார். இன்னும் பலர் இந்த வேற்று மொழி பழைய துளு, பழைய கொங்கணி, பழைய கன்னடம், பழந்தமிழ் என்றெல்லாம் சொல்லி உள்ளனர். 

இந்நாடகத்தில் 48 திரவிட மொழித் தொடர்கள் உரையாடல் பகுதியில் எண்ணிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. கன்னட மொழியை நன்றாக அறிந்த பேராசிரியர் திரு இரா. மதிவாணன் அவற்றை நன்கு ஊன்றி ஆராய்ந்து இவை கன்னடம் அல்ல என மறுத்து, மாறாக இவை துளு நாட்டு வட்டார வழக்குத் தமிழின் திரிந்த மக்கள் பேச்சு வழக்கு என்று தம்முடைய “கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல், 1978” என்ற குறுநூலில் 30 – 35 பக்கங்களில் ஒப்பிட்டு நிறுவி உள்ளார். பக்கம் 29 இல் செவ்விய தமிழ் சொல்லாட்சிகளாக 11 தொடர்களைச் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த மக்கள் வழக்குத் திரிபிற்கு ஒரு காட்டாக சென்னை வட்டார வழக்கில் ‘அதற்கு என்ன என்கிறார்’ என்ற சொற்றொடரைக் கல்லா மக்கள் ‘அதுக்கு இன்னான்ற’ என உரைப்பதைச் சுட்டுகிறார். 

படிக்குநர்கள் இந்நாடகம் குறித்து மேலதிகச் சேதிகளை அறிந்து கொள்வதற்காகவே இக்குறுநூல் இணைப்பில் இணைக்கப்பட்டு உள்ளது. முதலில் 30 – 35 பக்கங்களில் தமிழ் –  துளு – ஆங்கில எழுத்து பெயர்ப்பு ஆகியவற்றின் ஒப்பீட்டைப் படித்து விட்டு, அதன் பின் பக்கம் 20 – 29 வரை கொடுத்துள்ள நாடகத் தெளிவுரையையும் படித்த பிறகு ஆங்கிலத்தில் உள்ள கிரேக்க நாடகத்தைப் படித்தால் நாடகம் நன்றாகப் புரியும், சுவையூட்டும். அப்படியல்லாமல் நேரடியாக ஆங்கில நாடகத்தைப் படித்தால் ஒன்றும் புரியாமல் அலுப்பை ஏற்படுத்தும். 

இனி, இணைப்பில் . . . . .

கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்”- ஒளிவருடியது

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *