வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 5

2

பவளசங்கரி திருநாவுக்கரசு

Pavalasankariபன்முக மனிதர்கள் இருப்பதைப் போல ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் பல முகங்கள் இருக்கின்றன. ஆம், அக வாழ்க்கையின் முகம் ஒன்று, புற வாழ்க்கையின் முகம் வேறு. அந்த அகம் மற்றும் புற வாழ்விலும் உட்பிரிவுகளும் உண்டு. அக வாழ்வின் முகத்திற்கும் புற வாழ்வின் முகத்திற்கும் பல மாற்றங்கள் உண்டு. நிறைய முரண்பாடுகளும் இருக்கும். அதைத் தூக்கி எடை பார்க்க ஆரம்பித்தால் குடும்பம், உறவு, பந்தம் என்ற அக வாழ்வுதான் முற்றிலும் பாதிக்கப்படும். இதையெல்லாம் அதிக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாலே முடிவு பிரம்மச்சரியமோ அல்லது காவி உடையோ என்ற தப்பித்தல்தான். ஆனாலும அந்தத் தப்பித்தல் ஒரு தற்காலிகமானதாகத்தான் இருக்குமே தவிர அதுவே நிரந்தரமாகாது.

ரம்யா, ஊருக்குச் செல்லத் திட்டமிட்டாள். தன் தந்தை, தாய், அன்புத் தம்பி என்று சிறிய குடும்பம்தான். எல்லோரையும் பார்த்து வருடம் ஒன்றாகிவிட்டது. இதற்கு மேல் தான் ஒரு முறை சென்று வராவிட்டால் பிரச்சினைகள் பலவாகிப் போகும்.

”என்ன ரம்யா, உனக்கு லீவ் சேங்க்‌ஷன் ஆகிவிட்டது போல. சரவணன் அங்கு கரிச்சிக் கொட்டிக்கிட்டு இருக்கான்”

”ஆமாம்ப்பா, அவன் கிடக்கிறான். நான் இரண்டு மாதம் முன்பே அப்ளை பண்ணியிருந்தேனே, உனக்குத் தெரியாதா” என்றாள்.

”ம்.சரி விடு. எப்ப கிளம்பப் போகிறாய். டிக்கெட் பார்த்து விட்டாயா. நான் பார்க்கட்டுமா” என்றான்.

”டிக்கெட் கன்பார்ம் ஆயிடிச்சு. அடுத்த மாதம், முதல் வாரத்தில் கிளம்பலாம் என்று இருக்கிறேன் மாறன்’.

“தம்பி இப்போது எப்படி இருகிறானாம் ரம்யா? பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையில்தானே சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது முனனேற்றம் தெரிகிறதா?”

தம்பியைப் பற்றிப் பேச்செடுத்தவுடனே ரம்யாவின் முகம் உச்சி வேளைக் கதிரவனின் அனலில் துவண்டு போன ரோசா மலரைப் போன்று களையிழந்து போனது.

”ம்ம். அம்மா அப்படித்தான் கூறினார்கள். குறும்பு மட்டும் குறையவே இலலை என்கிறார்கள். ஆளும் வாட்ட சாட்டமாக நன்கு வளர்ந்து விட்டானாம். அவனைச் சமாளிப்பது பெரும் பிரச்சினையாக இருப்பதாகக் கூறினார்கள். அப்பாவிடமும் இப்போதெல்லாம் அடங்க மறுப்பதாகக் கூறினார்கள். இந்த முறை ஊருக்குப் போகும் போதுதான், அவனைப் பிரத்யேகமாக கவனித்துக்கொள்வதற்கென்று ஒரு ஆளை ஏற்பாடு செய்ய வேண்டும்”

அதற்குள் மாறனுக்கு அலுவலகத் தொலைபேசி அழைப்பு வரவும் அதனைக் கவனிக்கச் சென்றாலும், ரம்யாவின் நினைவலைகள் மட்டும் தன் குடும்பச் சூழலுக்குள் சிக்கி வெளி வர வழி தேடிக்கொண்டிருந்தது. தம்பி கோபாலகிருஷ்ணன் பிறந்த போது வீடே எப்படி கோலாகலமாக இருந்தது. 12 வருடம்… ஒரு மாமாங்கத்திற்குப் பிறகு வீட்டில் ஒரு மழலை தவழ்ந்தால் பெற்றோரை விட, தனக்கு எத்துனை மகிழ்ச்சியான தருணமாக அது இருந்தது என்பதை அடிக்கடி நினைத்துக்கொள்ளத் தவறுவதில்லை.

பிறந்தவுடன், அன்றலர்ந்த மலர் போன்ற முகமும், கொவ்வைச் செவ்வாயும், குனித்த புருவமும், ரம்யாவை மிகவும் கவர்ந்து, தன் அன்புத் தம்பிக்கு கோபாலகிருட்டிணன் என்ற பெயரையும் சூட்டச் செய்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஏன் தம்பிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்த பிறகும் கோபியின் மீது பாசம் பெருகிக்கொண்டேதானே இருக்கிறது. மூன்று, நான்கு வயது வரை மற்ற குழந்தைகளைப் போல சாதாரணமாகத் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தவன் தானே. திடீரென வந்த காய்ச்சல் குறையாததால் ஜன்னி போல வந்து மூளையை சிறிதாகப் பாதித்திருக்கலாம் என்று ஏதேதோ காரணம் கண்டுபிடித்தாலும், கோபி மற்ற குழந்தைகளைப் போல விரைவில் சகஜ நிலைக்குத் திரும்பி வருவான் என்று நம்பிக்கொண்டுதான், அவனுடைய நோய்க்கான தீர்வு தேடி, நண்பர்கள் சொல்லும் அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறாள்.

இப்போதெல்லாம் அப்பாவின் நினைவு வந்தவுடன் அவருடைய பதற்றமான முகம்தான் நினைவிற்கு வருகிறது. வியாபாரத்தில் நண்பர்களை நம்பி மோசம் போனதை மறக்க முடியாமலும், விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் மேன்மேலும் ஏதாவது பிரச்சினையில் சிக்கிக்கொள்வதும், அதில் இருந்து விடுபட முயல்வதும், இப்படியே பல வருடங்களாக வாழ்க்கையில், நம்பிக்கையை மட்டும் இழக்காமல் போராடிக்கொண்டே இருக்கும் அந்த உறுதியான மன நிலையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லாதது, அவளுக்கு ஆச்சரியமான விசயமாக இருக்கும்.

தொலைபேசி மணி மென்மையாக இசைக்கவும், தன் குடும்பச் சூழலிலிருந்து மீண்டு வர முடிந்தது அவளால். மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும் வரை ஒரு தியானம் போல வேறு எந்த நினைவிற்கும் இடம் கொடுக்க மாட்டாள்!

மாலை மணி ஐந்தாகிவிட்டது. வேலையெல்லாம் முடித்துவிட்டு, வழக்கம் போல் தன் சொந்த மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு புதிய, ஆனால் தன் உயிரோடு இணைந்த பெயராக ஒரு காலத்தில் இருந்த, ரிஷி என்ற பெயர் கொட்டை எழுத்தில் இருந்த ஒரு மெயில் கண்ணில் பட்டது……… ஏனோ அந்த மெயிலைத் திறக்க அவளுக்கு மனம் ஒப்பவில்லை. ஒரு காலத்தில் இந்தப் பெயர் எப்படி எல்லாம் தன்னை மெய்சிலிர்க்கச் செய்தது என்று நினைத்துப் பார்த்த போது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.

ரிஷி என்ன அவ்வளவு எளிதாக மறக்கக் கூடிய காரியமா செய்தான். அவனை எவ்வளவு நம்பியிருந்தாள் அவள். ஆரம்பத்தில் காதல் மயக்கத்தில் இருந்த அவன், நாட்கள் வருடங்களாக மாறி, மயக்கம் தெளிந்தாலும், யதார்த்த சூழலை உணர்ந்துகொள்ள முடியாதவனாகவே இருந்து விட்டானோ என்ற கோபம் மட்டும் அவன் மீது குறையவே இல்லை அவளுக்கு…….

மின்னஞ்சல் பெட்டியில் குப்பையாகக் குவிந்து கிடந்தாலும், ரிஷி என்ற அந்தக் கொட்டை எழுத்து மெயில் அடிக்கடி வரிசையாகப் பல முறை கண்ணில் பட்டது. யாராக இருக்கும்? இத்தனை முறை கொடுத்துள்ளார்களே? ஒரு வேளை அவனாக இருக்குமோ? என்ற நினைவில் அதனைத் திறந்து பார்க்கும் எண்ணம் கூட வீண் என்று தோன்றியது அவளுக்கு.

அவள் ரிஷி மீது, எவ்வளவு ஆழ்ந்த காதல் வைத்திருந்தாள். இன்று அந்தப் பெயர் கொண்ட மின்னஞ்சல் கூடத் தீண்டத் தகாததாகப் போனது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் நொடிக்கொரு முறை நினைத்து, பரவசம் அடைந்த காலத்தையும், அவனுடைய ஒவ்வொரு செயலையும் பெரிய சாதனையாகக் கண்ணுற்ற எண்ணமும் இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது.

”ரம்யா போகலாமா, இன்னும் வேலை முடியலையா”, என்று கேட்டுக்கொண்டே மாறன் வந்தான்.

”இல்லை மாறன், இதோ முடிந்துவிட்டது. சும்மா மெயில் பார்த்துக்கிட்டிருந்தேன். இதோ முடித்துவிட்டேன் என்று அவள் அதிலிருந்து வெளியேற நினைத்த போது, அருகில் இருந்த மாறன் கண்களில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட ரிஷி என்ற பெயர் படவும் அவன் முகத்திலும் ஒரு வாட்டமும் மாற்றமும் தெரிந்தது. ஆனாலும் இது அவனுடைய மெயில்தானா என்று அவளைக் கேட்க மனம் வரவில்லை. காரணம் அவன் செய்த காரியம் அப்படி. அவனைப் பற்றிப் பேசினால் அவள் வருத்தம் அதிகமாகுமே என்ற கவலை வேறு அவனைப் பேச விடாமல் செய்தது. இருந்தாலும் சட்டென மாறனைத் திரும்பிப் பார்த்தவள், அவன் முகத்தில் இருந்த சந்தேகக் கீற்றை உணர்ந்தவளாக லேசான புன்னகையைப் பதிலாக்கினாள்.

இருவரும் காரை நோக்கிப் பயணிக்கும் போதும், ஆழ்ந்த மௌனத்திலேயே ஆழ்ந்து போனாலும், மாறன் தொண்டையைக் கணைத்துக் கொண்டு,
”ரம்யா, ரிஷின்னு இருந்த மெயில், அவன்தானா….. பார்த்தாயா நீ? நிறைய மெயில் அதே பேரில் இருந்தது போல. கொட்டை எழுத்தில் இருந்ததால் சற்று தொலைவிலிருந்த போதும் தெளிவாகத் தெரிந்தது. அதான் கேட்டேன்” என்றான்.

”இல்லை மாறன். அந்தப் பேரைத் தொட்டு மெயிலைத் திறக்க எரிச்சலாக இருந்தது. அதனால்தான் பார்க்கவில்லை” என்றாள் குறைந்த தொனியில்.

”ஹாய், ரம்யா, மாஷன்”, என்று கூப்பிட்டுக்கொண்டே அருகில் வந்தான் ஜேம்ஸ். மாறன் என்ற அழகிய பெயர் அவன் வாயில் படும் பாடு, மிக அதிகம். ஆனால் ரம்யா என்ற பெயரை உச்சரிக்கும் போதே அவன் முகத்திலும் வார்த்தைகளிலும் ஒரு உற்சாகமும் ஆனந்தமும் வெளிப்படையாகத் தெரியும். அதை மறைக்கும் முயற்சியும் அவன் எடுக்க மாட்டான் என்பதால் அந்த யதார்த்தம் ரசிக்கும் வண்ணமே இருக்கும். ரம்யா மட்டும் அதைத் துளியும் சட்டை செய்ய மாட்டாள்.

”ஓகே, கைய்ஸ், சீ,யூ டுமாரோ” என்று சொல்லி கை ஆட்டிவிட்டு, ரம்யாவைப் பார்த்து லேசாகக் கண்ணையும் காட்டிவிட்டு, சிட்டாகப் பறந்து விட்டான் ஜேம்ஸ்.

ரம்யாவின் அமைதி, ஏனோ அவனுக்கு உறுத்தலாக இருந்தது. பல பிரச்சினைகள் அவளை அழுத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்தக் கசப்பான நினைவுகளை எப்படியும் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவளிடம் பேச்சுக் கொடுக்க முயன்ற அதே நேரம்,

”என்ன மாறன், அப்பாவிடம் ஏதாவது பேசினாயா? அவர் என்ன சொன்னார்…… அவந்திகா பற்றி ஏதேனும் பேசினாயா?” என்றாள்.

”இல்லை ரம்யா. அப்பா திரும்ப அந்த இன்னொரு பெண், அதான் ஏதோ சொந்தம் அப்படீன்னு சொன்னாரே, அந்த போட்டோவை அனுப்பியிருப்பார் போல. போன் செய்து சொன்னார். நான் இன்னும் அதைப் பார்க்கவே இல்லை. ஒரே சங்கடமாக இருக்கிறது. என்ன செய்வது என்றே புரியவில்லை” என்றான்.

”நீ இப்படியே சொல்லிக்கிட்டே இரு, உன் அப்பா உன் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்டு……”

மேற்கொண்டு அவள் பேசப் போவதைக் கேட்க விரும்பாதவன் போல, ”நேரமாச்சு ரம்யா கிளம்பலாமா?” என்றான்.

அவள் ஏதோ சொல்ல முயலவும், மாறனின் செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

”ஹலோ, ஐயாம் மாறன் ஹியர்”…….என்றான்.

மறுமுனையில் ஒரு சிறு தயக்கம் தெரிந்தது. பின்பு மெதுவாக, ”மாறன்தானே இது?” என்ற குரல், தயக்கத்தினூடே வந்தது.

”ஹலோ மாறன், நான் ரிஷி. எப்படி இருக்கிறாய்? என் மீது உள்ள கோபம் இன்னும் தீரலையா உனக்கும்? என்ன செய்வது, சூழ்நிலை, அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டியதாகி விட்டது. ரம்யா எப்படி இருக்கிறாள்? நான் அவளுக்குப் பல முறை மெயில் கொடுத்தும் பதில் இல்லை…… அவளிடம் கொஞ்சம் பேச வேண்டும் மாறன்…”

மாறனுக்குக் கோபம் தலைக்கேறியது. ‘பாவி…..இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது………..?’

”ஹலோ……..ஹலோ….மாறன் இருக்கிறாயா………….?”

(தொடரும்…………….

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வெண்ணிலவில் ஒரு கருமுகில் – 5

  1. மிகவும் தத்துவ ரீதியாகத் தொடங்கி இருக்கிறீர்கள், பவளா! இந்த அகமும் புறமும், அவற்றின் பன்முகமும் மாற்றங்களும், முரண்பாடுகளும் வாழ்வியலின் அடித்தளம் என்பதால், நாம் ஒவ்வொருவரும் குழப்பத்தில் உழலாமல், ஆனால் குழப்பத்தில் எதிர்நீச்சல் அடித்து வருகிறோம். மனோதத்துவத்தின் சார்பில், கருத்துகளைக் கூறி, உலகளவில் கியாதி பெற்று வருபவர், பேராசிரியர். வீ.எஸ்.ராமச்சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.