மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 11

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

 

சைமனும், மெட்ரீனாவும் தாங்கள் இதுவரையிலும் யாருக்கு உணவும், உடையும், அடைக்கலமும் கொடுத்திருந்தனர் என்று உணர்ந்த போது அளவில்லாத ஆச்சரியமும், மகிழ்ச்சியுமடைந்து கண்ணீர் விட்டனர். மைக்கேல் மேலும் தொடர்ந்து “நான் மனிதனாகித் தனியாகவும் நிர்வாணமாகவும் விடப்பட்டேன். அது வரையிலும் மனிதனுடைய தேவைகளும், பசி பட்டினி, குளிர் ஒன்றும் அறியாதவனாக இருந்தேன். நான் குளிரில் உறைந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற போது எதிரில் ஒரு சிறிய தேவாலயத்தைக் கண்டேன். அங்குச் சென்ற போது ஆலயத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆகவே குளிருக்கு ஒதுங்க ஆலயத்தின் பின்பறம் சென்று அமர்ந்தேன். மாலை வேளை நெருங்கிய போது குளிரும், பசியும், உடல் வேதனையும் அதிகரித்தது. அப்போது திடீரென ஒரு மனிதனின் குரல் கேட்டது. அவன் ஒரு சோடிச் செருப்புகளைக் கையில் ஏந்திக் கொண்டு தனிமையிலே பேசிக் கொண்டு சென்றான். நான் மனிதனாக மாறிய பின்பு பார்த்த முதல் மனித முகம் அவனுடையதுதான். அவன் முகம் மிகவும் விகாரமாகக் காணப்பட்டதால் தலையைக் குனிந்து கொண்டேன். இங்கு நான் பசியிலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த போது அவன் குளிர்காலத்தில் எப்படித் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றுவது, போஷிப்பது என்று பேசிக் கொண்டு சென்றான். அவன் முதலில் என்னைப் பார்த்து அறுவெறுப்படைந்து அங்கிருந்து விலகிச் சென்றான். எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. சிறிது நேரத்தில் அவன் திரும்பி வரும் சத்தம் கேட்டது. நான் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. மரணக்களையாக இருந்த முகம் இப்போது தெளிவாக இருந்தது. இறைவனின் பிரசன்னத்தை அவனில் கண்டேன். அவன் என்னைத் தூக்கி விட்டு ஆடை அணிவித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் நுழைந்த போது ஒரு பெண் எங்களைச் சந்தித்தாள். அவள் முகம் அவனுடைய முகத்தை விட விகாரமாக இருந்தது. அவள் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளில் மரணத்தின் ஆவி நிறைந்திருந்தது. அவளைச் சுற்றியிருந்த மரணத்தின் வாடையால் எனக்கு மூச்சு விட முடியவில்லை. அவள் என்னைக் குளிருக்குள் துரத்த மனமுடையவளாக இருந்தாள். அவள் அப்படிச் செய்தால் மரணமடைவாளென்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

அந்த நேரத்தில் அவள் கணவன் அவளிடம் இறைவனைப் பற்றி பேசின போது அவள் மனம் மாறியது. அவள் எனக்கு ஆகாரம் கொண்டு வந்து கொடுத்த போது அவள் முகத்தைப் பார்த்தேன். அவளிடமிருந்த மரணக்களை மாறி இறைவன் குடியிருப்பதைக் கண்டேன். அப்போது இறைவன் கேட்டிருந்த முதல் உண்மையைத் தெரிந்து கொண்டேன். “மனிதனுள் வாசம் பண்ணுவது என்ன? “மனிதனினுள் வாசமாயிருப்பது அன்பு”. இறைவன் என்னை மறக்காமல் முதல் உண்மையை வெளிப் படுத்தியுள்ளார் என்று நினைத்து முதல் முறையாகப் புன்னகைத்தேன்.
நான் உங்களோடு தங்கி ஒரு வருடம் ஆகி விட்டது. ஒரு நாள் ஒரு மனிதன் வந்து தனக்குப் பூட்ஸ்கள் தைக்க வேண்டும், அவை ஒரு வருடம் உருக் குலையாமலும், தையல் பிரியாமலும் இருக்க வேண்டுமென்றான். நான் அவனைப் பார்த்த போது அவன் பின்னால் மரண தூதன் நின்று கொண்டிருந்தான். அவன் என்னுடைய தோழன். வேறு யாரும் அவனைக் காணவில்லை. அன்று மாலைக்குள் அந்த மனிதனின் ஆத்துமாவை எடுத்துச் செல்வான் என்று தெரியும். ஆனால் அது தெரியாமல் அந்த மனிதன் பூட்ஸ்கள் ஒரு ஆண்டு உழைக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது உண்மை “மனிதனுக்கு அருளப்படாதது எது?, மனிதனுக்கு அருளப்படாதது அவனுக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள முடியாதுதான்”. என்னுடைய தோழனைப் பார்த்ததாலும், இரண்டாவது உண்மையை அறிந்து கொண்டதாலும் இரண்டாவது தரம் புன்னகைத்தேன்.

கடைசி உண்மையைத் தெரிந்து கொள்ள உங்களோடு தங்கியிருந்தேன். ஆறு வருடங்கள் சென்று விட்டன. இன்று அந்த இரட்டைச் சிறுமிகள் அந்தப் பெண்ணோடு வந்த போது அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். அந்தச் சிறுமிகளின் தாயின் ஆத்துமாவை எடுக்கச் சென்ற போது அவள் தன் ஆத்துமாவை எடுக்க வேண்டாமென்று கெஞ்சி, “ தாயும், தந்தையும் இல்லாமல் குழந்தைகள் வாழ முடியாதென்று” சொன்னதை நான் நம்பினேன். ஆனால் அந்த அன்னியப் பெண் சிறுமிகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்துப் பாலூட்டி, அன்புசெலுத்தி வளர்த்த விதமும், அவர்களுக்காகக் கண்ணீர் விட்ட போது அவளிடம் உயிருள்ள இறைவன் இருப்பதைக் கண்டு மூன்றாவது உண்மையை “எதனால் மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்பதைப் புரிந்து கொண்டேன். இறைவன் என் பாவத்தை மன்னித்து விட்டார் என்று உணர்ந்ததால் மூன்றாம் முறை புன்னகைத்தேன்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.