ஷகிலா பாடிய குத்துப் பாட்டு
சத்ய சாய் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.லஷ்மண்ராவ், பி.சீனிவாசராவ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சண்முகிபுரம்’. இந்தப் படத்தில் மனோஜ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் அந்த்ர விஸ்வாஸ், ஷாதிகா இருவரும் நாயகிகளாக நடிக்க என்.ஆர்.என். செழியன் டைரக்ஷன் செய்கிறார்.
இந்தப் படத்தின் பாடல் பதிவு ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள ‘ஜி’ தியேட்டரில் 16.04.2011 காலை நடைபெற்றது. இந்தப் படத்தில் இடம் பெறும் “சொடக்கு போடு சொடக்கு போடு சொர்ணாக்கா…. மடக்கிப் போடு மடக்கிப் போடு மங்காத்தா…” என்கிற பாடலை நடிகை ஷகிலா பாடினார். அவருடன் இணைந்து பாடகி அமிர்தா, சலோனி இருவரும் சேர்ந்து பாடினார்கள்.
இந்தப் பாடலைப் பாடலாசிரியர் விஜய்கிருஷ்ணா எழுத, வீ. தஷி இசையமைத்தார். மேலும் பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், தாணு கார்த்திக், கவிஞர் கணேசன் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.
இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்திற்குக் கெளதம் கதை எழுத, ஆதி ஒளிப்பதிவு செய்கிறார். பத்ரன் படத் தொகுப்பைக் கவனிக்கிறார். செந்தாமரை சுரேஷ் நடனம் அமைக்கிறார். ஒரு பாடலுக்கு ஷகிலா நடனம் ஆடுவதோடு, நகைச்சுவை கலந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிப்பது பற்றி நடிகை ஷகிலா கூறுகையில், “சத்ய சாய் கிரியேஷன்ஸோட சண்முகிபுரம் படத்தில் இப்போ நடிக்கப் போறேன். இந்தப் படத்துல டிபரண்டான காமெடி காட்சிகள் எனக்குச் சொல்லிருக்காங்க. இந்தப் படத்திலேந்து காமெடியில் ஒரு பிரேக் எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. இதுல ஒரு பாடலில் நான் ஆரம்பத்தில் நடிக்கிறேன். அதன் பிறகு வேறு நடிகை நடிப்பாங்க. அந்தப் பாடலில் நானே பாடி நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் செழியன் விரும்பினார். அதனால் பாடிப் பார்க்கலாம்னு டிரை பண்ணுனோம். எப்படி வந்திருக்குன்னு தெரியலை. நான் ஆரம்பிச்சு வைக்கிற இந்தப் பாடலில் எனக்குப் பிறகு அமிர்தா என்கிற பொண்ணு பாடுறாங்க. இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் தஷி, அவர் இசையமைத்த முதல் மலையாளப் படத்திற்கே இசைக்காக விருது வாங்கினவர். அவர் இசையில் பாடியது சந்தோஷமா இருக்கு.”
தொடர்ந்து பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்தால் பாடுவீங்களா?
“முதன் முதலா டிரை பண்ணிருக்கேன். குரல் நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கிறார். டிரை பண்ணுவோம். இந்தத் துறையையும் ஏன் விட்டு வைக்கணும். ஆனா நடிக்கச் சொன்னால் நடித்துவிடலாம். ஆனால் பாடுறது கஷ்டம்தான்.”
வேறு என்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
“தமிழ்ல ரெண்டு மூணு படம் போய்க்கிட்டு இருக்கு. பேரு மட்டும் கேட்காதீங்க. மைண்ட்ல நிக்காது. நானே கிளாப் போர்டு பார்க்கும் போததான், ஓ இந்தப் படம் எனத் தெரிஞ்சுக்குவேன். மத்தபடி கால்ஷீட் மேனஜர் சொன்னா, சூட்டிங் போய்டுறதுதான். தமிழ் தவிர கன்னடத்துல அஞ்சு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுல சாது காக்கிலாவோட ரெண்டு படம் அவர் காம்பினேஷன்ல பண்றேன். ‘நயன்டி குடி பல்டி அடி’ என்கிற படத்துல பெரிய ரோல். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம், கன்னடத்துல ரீமேக் பண்றாங்க. அதுல தமிழ்ல நடிச்ச அதே ரோல் பண்றேன். இதைத் தவிர மலையாளத்தில் ரெண்டு படத்துல நடிக்கிறேன்.”
மலையாளத்தில் நடிக்கிறீங்களா?
“ஆமாம். மலையாளத்துல கிட்ட தட்ட ஏழு வருடத்திற்குப் பிறகு ‘தேஜா பாய்’ என்கிற படத்தில், சுராஜ் சார் காம்பினேஷன்ல நடிச்சுக்கிட்டு இருக்கேன். பிரிதிவிராஜ் முக்கிய வேடத்தில நடிக்கிற படம் இது. ரொம்ப ரொம்ப முக்கியமான ரோல். இப்போது அங்கே நிறைய கமர்சியல் படங்களுக்குக் கேட்கிறாங்க. எனக்கு கேரக்டர் ரோல் தருறாங்க. சந்தோஷமா இருக்கு…” என்றார்.
======================================
தகவல் : மக்கள் தொடர்பாளர் ஜி.பாலன்