விமான நிலையத்தில் இரண்டரை மணி நேரம்

என். சுரேஷ்

chennai airport

காத்திருப்பது என்பது, மலர்வதற்கு முன் ஒரு பூவின் மௌனத்தைப் போன்று இருக்க வேண்டும் என்பது உண்மைதான்!

இருந்தாலும், விடிந்ததும் வேலை விஷயமாக என் மகள் ஒரு மாத காலத்திற்கு அபுதாபி செல்கிறாள் என்ற செய்தி எனது அன்றிரவின் தூக்கத்தை அள்ளிச் சென்றது!

எத்தனையோ முறை விமானத்தில் நான் பயணித்திருப்பினும் என் மகளின் முதல் விமானப் பயணம் எனக்கு அப்படி ஒரு பயத்தை ஏன் தந்ததோ தெரியவில்லை. பிரிவின் வேதனையும் என் மனத்திற்கு வலியைத் தந்திருக்கக்கூடும்!

வாழ்க்கை என்றால் நிச்சயம் இப்படியெல்லாம் இருந்துதான் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளில் நானும் பயணிப்பதால்தான் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவிக்கிறேன் என்று அன்றும் உணர்ந்தேன்.

வலிகளைத் தாங்கி கொள்ளுங்கள், எங்கேயோ ஒரு சிவப்புக் கம்பளம் காத்திருக்கிறது என்ற சிந்தனை என்னை அப்போது ஆறுதல் செய்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை விமான நிலையத்தில்….!

என்னிடமும் என் குடும்பத்தார் அனைவரிடமும் “சென்று வருகிறேன்” என்று சொல்லி மகள், செக்-இன் செய்யப் புறப்பட்டாள்.

குடும்பத்தினர் அனைவருக்கும் ஏணிப்படியாக இருக்கிற என் அப்பா ஏன் இப்படி – என்ற செய்தி மகளின் கண்களில் தெரிந்தாலும் அவளும் என்னை விட கவலையில் இருப்பதை நான் புரிந்துகொண்டேன்.

இன்னமும் இரண்டரை மணிநேரம் கழித்துத்தான் விமானம் புறப்படும்.

ஆகையால், குடும்பத்தினர் அனைவரையும் இல்லத்திற்கு புறப்படச் சொல்லி, நான் விமான நிலையத்தில் அடுத்த இரண்டரை மணி நேரம் காத்திருக்கத் தீர்மானித்தேன்.

என்னருகே ஐரோப்பியர் ஒருவர் வந்தமர்ந்தார். அவர் என்னிடம் “Are you a Tamil?” என்று கேட்டார், ‘தமிழ் என்பது எனது தாய்மொழி, நான் தமிழன்’ என்று பதில் சொல்வதற்குள், கிண்டலும் பயமும் கலந்த அவரின் அடுத்த கேள்வி, “Are you a Tiger?”

தமிழனை இந்த மனிதர்கள் யாரும் சக மனிதர்களாக பார்க்கும் அறிவின்றிப் போனதே! என்ற சிந்தனையில் தவித்தேன். ஒரு பெருமூச்சு விட்டு என்னை நானே சமாதானம் செய்து, மென்மையாக, இந்தியா, இந்தியர்கள், தமிழ் மொழி, தமிழினம், தமிழன் கோட்டை கட்டி ஆண்ட சரித்திரம், தமிழர்களின் வாழ்வியல், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான தமிழ் மக்கள், தமிழ் அறிஞர்கள், இலங்கையில் கம்பி வளையங்களுக்குள் தற்போது தவிக்கும் அப்பாவி தமிழ் மக்கள், வாழ்ந்த பூமியை இழந்து அகதிகளாக தற்போது ராமேஸ்வரத்தில் வாழும் தமிழ் மக்கள் என்பவைகளை மிகச் சுருக்கமாக, ஆனால் வேதனையின் வலியோடு சொன்னேன்.

ஆங்கிலம் கற்றதில் அப்போது கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்!

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட, அந்த ஐரோப்பியர், “மன்னிக்கவும் நான் தவறாகப் புரிந்துகொண்டேன்” என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

ஆனால் இந்தத் தவறை நெஞ்சாரப் போற்றும் உலகத் தலைவர்கள் மீது எந்தன் கோபம் மௌனத்தில் பாய்ந்த போது, என்னில் பல கேள்விகள் எழுந்தன!

கனமான கேள்வி எதுவெனில் வாழ்வின் மௌனமானத் தருணங்கள்தான் என்று மீண்டும் புரிந்துகொண்டேன்.

எனக்கு அந்த ஐரோப்பியர் மீது கோபம் இல்லை. அவருக்கு என் மீது கோபம் உள்ளதாகவும் எனக்குத் தெரியவில்லை.

வேகமாக செல்கின்ற வாழ்க்கையில் மற்றவர்களின் வேதனைகளைக் காண இயலாமல் உலகெங்கும் இன்றைய மனிதர்கள் இருப்பதை விடக் கொடுமை, மிகத் தவறான புரிதலோடு இருப்பதுதான்!

“தற்போது நான் விமானத்தில் இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் என் அலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும்” என்று சொன்ன என் மகள், “அப்பா, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஒரு மாத புராஜக்ட் தானே?” என்று சிரித்துக்கொண்டே என்னை ஆறுதல்படுத்த முயன்றாள்.  அவளின் சிரிப்பு, சோகத்தின் இலையில் பரிமாறப்பட்டது என்று புரிந்துகொண்ட நான், “மகளே பத்திரமாகச் சென்று வா” என்றேன்!

மகளின் விமானம் பறந்து சென்றது!

மகளுக்குக் கொடுக்க வேண்டிய எனது கடிதம் அவளிடம் கொடுக்க மறந்துவிட்டேனே! சரி…. மின்னஞ்சலில் அனுப்பலாம் என்று சமாதானம் அடைந்தேன். இருப்பினும் நான் என் மகளுக்கு எழுதிய அந்தக் கடிதத்தின் கடைசி பத்தியை மீண்டும் வாசித்தேன்,

“மகளே,
உண்மையான உழைப்பும் பொறுமையும் கடினம்தான்.
ஆனால் அதன் கனிகள் சிறப்பானவை!
எளிமையாக வாழு! மற்றவர்கள் மீது கருணையாக இரு!
கனிவாகப் பேசு!
மிச்சத்தையெல்லாம் இறைவனிடம் விடு!”

அன்புடன் உன் அப்பா
என் சுரேஷ்”

==========================================

படத்திற்கு நன்றி: http://www.schwartzarch.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “விமான நிலையத்தில் இரண்டரை மணி நேரம்

 1. மும்பை,பெங்களூர் முதலிய இடங்களில் தமிழன் அடி வாங்கினான்.
  மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் உ பி மற்றும் பீகார்
  மக்கள் மும்பையில் அடிவாங்கிய போது மத்திய அரசு கொதித்து
  எழுந்தது. இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்து
  என்று ஓலமிட்டது. ஆனால் இலங்கையில் அடி வாங்கிக்கொண்டிருந்த
  தமிழன் திருப்பி அடிக்க ஆரம்பித்தான். அதை சிங்கள அரசால் தாங்கிக்
  கொள்ள முடியவில்லை. ஏன்? நம் இந்திய அரசாலும் தாங்கிக் கொள்ள
  முடியவில்லை! இவைகள் இரண்டும் தாங்க முடியாத பாரத்தை இலங்கைத்
  தமிழன் மேல் போட்டு விட்டார்கள். தமிழன் கதி இதுதானோ!
  இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *