அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – 1

3

கீதா சாம்பசிவம்

geetha sambasivamநாங்க அம்பத்தூருக்கு வந்த புதுசுலே வீடுகள் அனைத்துமே தனித் தனியாகவே இருந்தன. அந்த தனி வீடுகளிலேயே பகுதியாகப் பிரிக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. அல்லது ஒரே காம்பவுண்டுக்குள்ளேயே சின்னச் சின்ன வீடுகள் கட்டப்பட்டு மூன்று வீடுகளுக்கு ஒரு குளியலறை, கழிவறை என்று ஏற்படுத்தி வசித்தனர். கூட்டம் அதிகம் இல்லை. நகரில் இருந்து தூரம் என்பதோடு நகருக்குச் செல்லப் பேருந்து வசதிகளும் அதிகம் இல்லை. ஆனாலும் ரயிலில் அரை மணி நேரத்திலே சென்னை சென்ட்ரல் போக முடிந்திருக்கிறது. தண்ணீர் சுவையாக இருக்கும். மதுரை போன்ற நகரத்தில் இருந்துட்டு வந்த எனக்கு, முதலில் சிரமமாய் இருந்தாலும், அப்புறம் பழகிவிட்டது. பக்கத்துப் போர்ஷன் காரங்களோட பேசணும்னாலும் வீட்டைப் பூட்டிக்கொண்டே போகணும். ஒவ்வொருவருக்கும் தனி வாசல், எதிரே ஏக்கர் கணக்கில் பெரிய திறந்த வெளி, மரங்கள், மரங்கள், மரங்கள்.

அப்போல்லாம் டேபிள் ஃபேன் தான். சீலிங் ஃபேன் வைச்சுக்கலை. அடிக்கடி மாற்றலாகும் என்பதால் சீலிங் பேன் போடுவதும் கழற்றுவதும் ஒவ்வொரு முறையும் ஆள் தேடணும்னு டேபிள் பேன் தான். அதுவே டிசம்பரில் இருந்து தேவையும் படாது! நாங்க இருந்த வீட்டில் இருந்து வைஷ்ணவி கோயிலுக்கும், திருமுல்லைவாயில் கோயிலுக்கும் நடந்தே போவோம். எந்தப் பயமும் இருக்காது. அப்புறமும் நாங்க பெண்களாய்ச் சேர்ந்து நடந்தோ, அல்லது பேருந்திலோ போயிருக்கோம்.

india landஇப்போ அந்த அம்பத்தூரானு இருக்கு. நகரமயமாக்குதல் என்ற பெயரிலே எல்லா இடங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வருகின்றன.  கார்த்திக் ஒரு பதிவில், சென்னையில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தி இருக்கலாமே என்றார். என்ன அடிப்படை வசதி இருக்கு சென்னையிலே?? அவர் சொல்றார் அம்பத்தூரிலே வேணா இல்லை, மற்ற இடங்களிலே இருக்குனு சொல்றார். எனக்குத் தெரிஞ்சு அரை மணி நேரம் மழை பெய்தால் கோயம்பேடு நூறடிச் சாலை நிரம்பி வழிகிறது. தண்ணீர் போக வழியில்லை. சென்னையின் பிரதான சாலைகள் எல்லாத்துக்கும் இந்தக் கதிதான். அம்பத்தூருக்குக் கேட்கணுமா??

apartnentsமற்ற மாநிலங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு முன்னால் அடிப்படை வசதிகளை அவங்க நிறைவேற்றி இருக்கணும். அப்புறம் தான் கட்டடம் அஸ்திவாரமே போட முடியும். ஆனால் இங்கே?? கழிப்பறைக் கழிவு நீர் செப்டிக் டாங்குகளில் நிரம்பிக்கொள்ளும்படியான ஏற்பாடுதான் இன்னும் உள்ளது. பாதாளச் சாக்கடை என்பதே இல்லை. திட்டம் ஆரம்பிக்கப் போகிறோம்னு சொல்லி குடியிருப்போரிடம் ஒன்பதாயிரம் வசூல் செய்ய ஆரம்பித்தது, அம்பத்தூர் நகராட்சி. ஆனால் அதை எதிர்த்ததால் கொஞ்சம் கீழே இறங்கி, ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்டி, வருஷம் பத்துக்கும் மேல் ஆகிறது. இன்று வரை பாதாளச் சாக்கடைக்கு எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இந்த அழகில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு அவங்க பாட்டுக்கு அனுமதி கொடுத்துட்டே போறாங்க. ஏனென்றால் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் எத்தனை குடியிருப்புகள் வருகின்றன என்பதைக் கணக்கிட்டு அவங்களுக்கு என பெட்டர்மெண்ட் டாக்ஸ் வசூலிக்கிறாங்க இல்லையா? குடியிருப்பு அதிகம் ஆக, ஆக நகராட்சிக்கு வருமானம் அதிகம். செலவும் செய்யவேண்டாமே! போய்க் கேட்டால் இதோ போடுவோம்னு சொல்லிட்டாப் போச்சு.

apartnentsஅடுத்துக் குடிநீர். சென்னை முழுதுக்குமே இங்கிருந்து புழல் தண்ணீர் தான் குடிக்கப் போகிறது. ஆனால் அம்பத்தூர் மக்களுக்கு ஒரு சில இடங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நகராட்சியால் வழங்கப்படுகிறது. அதுவும் எல்லா இடங்களிலும் இல்லை.  இத்தனைக்கும் அம்பத்தூரைச் சுற்றிலும் ஒரு காலத்தில் ஏரிகள் நிறைய இருந்தன. இப்போது தான் கொஞ்சம் விழித்துக்கொண்டு தாங்கல் ஏரியையும் முகப்பேர் ஏரியையும் தூர் வாரிச் சுத்தம் செய்திருக்கின்றனர். இங்கே எங்க வீட்டுக்கு அருகே உள்ள கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவே இல்லை. ஏரி கடும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருப்பதோடு, சில இடங்களில் பார்த்தீனியமும் வளர்ந்து நீரை உறிஞ்சுகிறது. இதை எல்லாம் ஒழுங்கு செய்தாலே குடிநீருக்குக் கை ஏந்த வேண்டாம். முக்கியமாய் அடுக்கு மாடி கட்டும் முன்னர், காலி மனை குறைந்தபட்சம் மூன்று கிரவுண்டு இருக்க வேண்டும் எனச் சட்டம் கொண்டு வரவேண்டும். கர்நாடகாவில் பங்களூருவில் ஐந்து கிரவுண்ட் காலி மனை என்றால்தான் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதி கிடைக்கும். மூன்று கிரவுண்ட் என்றால் தனியாக ஓரிரு வீடுகள் கட்டிக்கொள்ளலாம். அதோடு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டவெனச் சில விதிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றுகிறார்கள்.

குடியிருப்பைச் சுற்றிலும் குறைந்தபட்சம் நான்கடி இடமாவது இருக்கவேண்டும். மரங்கள் குடியிருப்பின் முன்னாலும், பின்னாலும் கட்டாயமாய் இருக்கவேண்டும். குடியிருப்புக் கட்ட அஸ்திவாரம் போடும்போதே கழிவு நீர் செல்லும் சாக்கடை வசதிகள், மற்றும் கழிப்பறை நீர் செல்லும் செப்டிக் டாங்கின் முறையான இணைப்புகள், விதிமுறைகளுக்கு உட்பட்டுக் கட்டப்படவேண்டும். குடிநீர் வசதிக் குழாய்களையும் முதலிலேயே பதிக்க வேண்டும். இவை இத்தனையையும் அந்த அந்த நகராட்சி, மாநகராட்சி அநுமதியை முறைப்படி பெற்றுச் செய்து முடிக்க வேண்டும்.  இதைக் கட்டாயமாகக் கர்நாடகாவில் பின்பற்றுகின்றனர். குஜராத்திலும் பின்பற்றுகின்றனர். குஜராத் பற்றித் தனியாகச் சொல்கிறேன். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் ஒரு கிரவுண்டில் ஒருத்தர் வீடு கட்டிக் குடி இருந்தால் கூட அவர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் தன்னோட மனையைக் கொடுத்துவிட்டு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பும், கையில் லட்சங்களில் ரொக்கமும் பெற முடிகிறது. இந்த மாதிரி ஒரு கிரவுண்டில் எல்லாம் மற்ற மாநிலங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்ட அநுமதிப்பதில்லை.

(தொல்லைகள் தொடரும்…..

=============================================

படங்களுக்கு நன்றி: http://homes.mitula.in, http://www.indiamart.com, http://www.inetgiant.in

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – 1

  1. டில்லியிலும் இந்த நெரிசல் பிரச்சனை உண்டு. ஆனாலும் முறைகேடான அனுமதி வழங்குவது சென்னையில் (தமிழ்நாட்டில் ) அதிகம். எல்லாம் அவர்களுக்கு பின் இருக்கும் அரசியல் சக்திகள் செய்யும் வேலை

  2. எழுத்து நடை அருமை.
    நகரமயமாதலில் பல நன்மைகளும் உண்டு, அவை பற்றி அப்புறம் பேசிக்கொள்ளலாம்.
    ஆன்மிகம் மட்டும் அல்லஇ லவ்கீகமும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள்
    நன்றிகள், பாராட்டுகள்.

  3. அம்பத்தூரின் அபார வளர்ச்சி பற்றியும் அடுக்ககங்களின் அபத்தங்கள் பற்றியும் அருமையாக எழுதியுள்ளீர்கள். இப்போது மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது என்பதற்க்கு இந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கள்தான் சாட்சி. முறையற்ற அனுமதி ஒருபுறம் என்றாலும், இங்குள்ள சொந்த வீடுகளில் உள்ளவர்களில் வயதானவர்களே அதிகமாக இருப்பதால், அவர்கள் பிள்ளைகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிப்பதாலும் முதியோர்கள் பிள்ளைகள் இவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயங்குவதில்லை. ஆனால் பெற்றோகளை உடன்வைத்துகொள்ள மட்டும் உடன்படுவதில்லை. வயதானவர்களும் அவர்களுக்கே உள்ள வீம்பு காரணமாகவும்,இயலாமை காரணமாகவும், தாங்களிருக்கும் வீடுகளை அடுக்கு மாடிகள் கட்டிட கொடுத்து விட்டு அவர்கள் தருகின்ற பிளாட் மற்றும் லட்சங்கள் வாங்கிகொண்டு வங்கியில் போட்டுவைத்தபடி வரும் வட்டினை வாங்கி தங்கள் தேவைகளுக்கு உபயோகபடுதிகொள்கிறார்கள். நகர வளர்ச்சி பற்றி பார்ப்பவர்கள் நகர சுத்தம் பற்றி கொஞ்சம் கூட கவலைபடுவதில்லை என்பதும் உண்மை. அடுக்கு மாடி குடியிருப்புக்களை கட்டுபவர்களும் ஒரு குடியிருப்புக்கும் மற்றொரு குடியிருப்புக்கும் சதுர அடியின் விலையினை கூட்டிகொண்டே இருக்கிறார்கள். பகுதி மக்களின் சந்தோசத்தை பற்றி கவலைபடுவதில்லை. இப்போது அம்பத்தூர் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இருப்பதால் இனி வருங்கலத்தில் நமது நகரம் கண்டிப்பாக நல்ல நிலைக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.