அன்பாலும் அறத்தாலும் ஆட்கொள்க!
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
10 Sri Lankan fishermen held
Ten Sri Lankan fishermen have been arrested for allegedly fishing in Indian waters off the Andhra Pradesh coast, officials said on Sunday. The Sri Lankans were fishing in the Exclusive Economic Zone off the Narasapur coast (West Godavari district) on Friday evening.
http://www.thehindu.com/news/national/article1704292.ece
கடந்த ஞாயிற்றுக்கிழமை (2011 ஏப்ரல் 17) விசாகப்பட்டினத்துக்கு மேற்கே இந்தியப் பொருளாதார வலையத்துள் சிங்கள மீனவர் பதின்மர் மீன் பிடித்துக்கொண்டிருந்த கப்பலை இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்து விசாகப்பட்டினத் துறைக்குக் கொண்டு வந்து ஆந்திரப் பிரதேசக் காவல் படையிடம் கையளித்தது.
இந்தியக் கடலோரக் காவற்படை, அம்மீனவர்களைச் தாக்கியிருக்கலாம்; கொன்றிருக்கலாம்; கப்பலில் இருந்த மீன்களைக் கொள்ளையடித்திருக்கலாம்; வலைகளை அழித்திருக்கலாம்; மீன்பிடிக் கப்பலையே சின்னாபின்னமாக்கியிருக்கலாம்.
1978இல் தொடங்கிய இந்தியக் கடலோரக் காவற்படையின் வரலாற்றில் இந்தியக் கரையோரத்தில் எந்த நாட்டு மீனவர்களுக்கு எதிராகவும் இத்தகைய கொடிய நிகழ்வு எதுவும் நிகழவில்லை என்பது இந்திய மனித நேயத்திற்கும் பெருந்தன்மைக்கும் அறநோக்கு அரசியலுக்கும் எடுத்துக் காட்டு.
ஆனால் பிற நாடுகளில் இருந்து வந்து இந்தியப் படைப் பிரிவினரின் பயிற்சிக் கல்லூரிகளில் பயின்று வெளியேறுவோர், தத்தம் நாடு திரும்பிய பின், இங்கு கற்ற மனித நேயத்திற்கும் பெருந்தன்மைக்கும் அறநோக்கு அரசியலுக்கும் எடுத்துக் காட்டாகச் செயற்படுவதில்லை.
பிஜித் தீவில் இந்திய வம்சாவழியினரை ஒடுக்கிய படைப் புரட்சியாளர் சித்திவேனா இரபூக்கா, உதகமண்டம் வெலிங்டனில் படைப் பயிற்சி பெற்றவர். பிஜித் தீவில் இந்திய வம்சாவழிப் பிரதமரைச் 1987இல் சிறைவைத்த படைத் தளபதி ஜோர்ஜ் இசுப்பறையரும் இங்கு பயின்றவரே.
இலங்கைக் கடற்படையினருக்கு விசாகப்பட்டினத்தில் இந்தியா பயிற்சி கொடுத்தாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாத கதையே. அதனாலன்றோ கடந்த சனிக்கிழமை(2011 ஏப்ரல் 16), வடகடலின் மேற்குக் கரையோரத்தில் தமிழக மீனவர்களின் நான்கு உடலங்கள் ஒதுங்கின. திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்ற வடகடல் மீனவர்களுள் நால்வரைக் காணவில்லை என மீனவர் முறையிட்டனர், மீன்பிடிக்கச் செல்வதில்லை எனப் போராடினர், இராமேச்சர மீன்வளத் துறை அலுவலகத்தைத் தாக்கினர்.
மட்டைப் பந்தாட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, இந்தியா உலகக் கோப்பையை வெல்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கையின் மலையகத்தில் அட்டன் நகரில் தமிழரைச் சிங்களவர் தாக்கினர், கடைகள் சூறை, வீடுகள் தீக்கிரை, 25 தமிழர் படுகாயங்களுடன் மருத்துவமனையில். முத்தையா முரளீதரனை இலங்கையின் மட்டைப் பந்து அணிக்கு ஈந்த மலையகத் தமிழ்ச் சமுதாயத்துக்கா இக்கொடுமை?
முந்தைய நாளைய மலையகத் தமிழர் மீதான தாக்குதல்களுக்கும் நேற்றைய தமிழக மீனவர் கொலைகளுக்கும் என்ன காரணம்?
1915இல் புத்த பிக்கு அநாகரிகத் தருமபாலர் முசுலிம்களுக்கு எதிராகவும் அவரின் சீடரான குணசிங்கா 1930களில் மலையாளிகளுக்கு எதிராகவும் அவர் வழிவந்த சேனநாயக்கா 1949இல் மலையகத் தமிழருக்கு எதிராகவும் அந்த வழி தொடர்ந்த பண்டாரநாயக்கா 1956இல் ஈழத் தமிழருக்கு எதிராகவும் அதற்குப் பின்னர் வந்த அத்தனை சிங்களத் தலைவர்களும் வடகடலிலும் தென்கடலிலும் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் கடைப்பிடிக்கும் வன்முறை வழியாகச் சிக்கல்களைத் தீர்க்கலாம் என்ற சிங்கள புத்த மேலாதிக்கக் கொள்கையே காரணம்.
100 ஆண்டுக்காலத் தொடர்ச்சியான சிங்கள, புத்த மேலாதிக்க வன்முறைக் கொள்கை நீட்டத்தின் விளைவே இலங்கை அரசைப் போர்க் குற்றவாளியாக்கும் 2011இன் ஐ.நா. மன்ற ஆணையத்தின் தொடக்க நிலை அறிக்கை.
தமிழகக் கரையோரத்தில் எங்கும் இல்லாதவாறு வடகடல் மீனவர்களே சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாவதன் காரணம், இலங்கையின் வடமேற்குக் கரையோரத்தில் 1950 தொடங்கி, ஈழத் தமிழர் தாயகத்தில் காங்கேயன் துறை, காரை நகர், தலைமன்னார், கற்பிட்டி ஆகிய நான்கு சிங்களக் கடற்படைத் தளங்கள் இருப்பதே.
இந்தத் தளங்களில் இருந்து 1952 முதலாக, கள்ளத் தோணிகள் எனச் சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவரைச் சுட்டுக் கொன்றனர். 1960களில் சிறீமாவோ அரசின் பொருளாதாரத் தடைக் கொள்கையால் வடகடலில் தமிழரைக் கடத்தல்காரர் எனச் சுட்டுக் கொன்றனர். 1980களில் சிங்கள வன்முறைக்குப் பதிலடி கொடுத்த எதிர்வினையாளரான ஈழத் தமிழருக்கு உதவுவதாகத் தமிழக மீனவரைச் சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். 2009 மே 17இன் பின்னரும் வடகடலில் தமிழரைச் சுட்டுக் கொல்லக் காரணம் என்ன?
சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தால் 1952 தொடக்கம் நேற்று வரை கரைசேர்ந்த நான்கு உடலங்களுடன் ஏறத்தாழ 5,000 தமிழர்களுக்கு வடகடல் நீர்ப்புதைகுழி ஆயிற்று. 500 பேர் வரையில் கொலையுண்டதாகத் தமிழக அரசுப் புள்ளிவிவரம். இவர்கள் மீது தனிப்பட்ட கோபம் காரணமல்ல, இவர்கள் குற்றவியல் சட்ட மீறலாளர் என்பதல்ல, இக்கொலைகளுக்கு இவர்கள் தமிழர் என்பதே காரணம்.
10,000 சதுர கிமீ. பரப்பளவு கொண்ட வடகடலின் கிழக்கில் சரிபாதியான 5,000 சதுர கிமீ. இலங்கைக்குச் சொந்தம். மேற்கில் அடுத்த 5,000 சதுர கிமீ., இந்தியாவுக்குச் சொந்தம். இந்திய இலங்கை எல்லைக் கோட்டின் ஒரு கிமீ. கிழக்கே 3 சதுர கிமீ பரப்பளவுள்ள கச்சல் தீவு; உவர் நீரின் கசப்பு உள்ளதால் கச்சலாக உள்ளதால் அது கச்சல் தீவு. நக்காவரத் தீவுக் கூட்டத் தென்முனையிலும் தமிழர் கண்ட கச்சல் தீவு அதே பெயருடன் இன்றும் உண்டு.
10,000 சதுர கிமீ. பரப்பளவில் அங்கிங்கெனாதபடி எங்கும் நடைபெறும் தமிழக மீனவர் கொலைகளைப் போக்க, 3 சதுர கிமீ பரப்பளவுள்ள கச்சல் தீவை இந்திய எல்லைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற வாதம் கடல் பரப்பின் விரிவையோ, 100 ஆண்டுக் காலச் சிங்கள புத்த மேலாதிக்க வன்முறைக் கொள்கையையோ அறிந்து உணராதவர்களின் நுனிப்புல் மேயும் கூற்று.
1989களில் பாம்பன் தீவில், இராமேச்சரத்துக்கு வடக்கே ஓலைக்குடா மீனவர் குடியிருப்பைச் சிங்களப் படை தீவைத்துக் கொளுத்தியது. இந்திய அரசு எச்சரிக்கவில்லை, எதிர்க்கவில்லை, பதிலடி கொடுக்கவில்லை.
1974 சூலை 4ஆம் நாள் உகாண்டாவின் தலைநகர் கம்பாலா விமான நிலையத்தில் தன் குடிமக்களுள் நூற்றுவரை மீட்ட இசுரேலிய அதிரடிப் படை நடத்திய 35 நிமிடத் தாக்குதலில் 20 உகாண்டாப் படை வீரர்களையும் 6 பாலஸ்தீனியர்களையும் மட்டுமே கொன்றது. உகாண்டாக் குடிமகன் எவரையும் காயப்படுத்தவே இல்லை.
பாம்பன் தீவின் ஓலைக்குடாக் குடியிருப்பைச் சிங்களக் கடற்படை கொளுத்தியபொழுது, தமிழக மீனவர் தீக்காயம் உற்றனர். அப்பாவி மக்கள் வீடிழந்தனர். அங்கு எரிந்த பனைமரங்கள் நிகழ்வின் வடுக்களாக இன்றும் சாட்சி கூறுகின்றன.
கச்சல் தீவை இந்திய இலங்கை எல்லைக்கு மேற்கே நிலைநிறுத்திய பின்பும் ஓலைக்குடாக்கள் தொடர்ந்து தீயுறும், தமிழர்களுக்கு வடகடல் தொடர்ந்தும் நீர்ப்புதைகுழி ஆகும். தாக்குதல்களின் கருவறை, கச்சல் தீவல்ல. கொலைகளின் புயற்சின்னம், கச்சல் தீவல்ல.
100 ஆண்டுக் காலமாக வரலாறு பதிந்து தந்த முசுலிம், மலையாளி, மலையகத் தமிழர், ஈழத் தமிழர், தமிழக மீனவர் மீதாகத் தொடரும் சிங்களப் புத்தரின் கொலை வெறி உளப்பாங்கே தாக்குதல்கலின் கருவறை. சிங்களப் புத்தரின் மனோநிலையே கொலை வெறியின் புயற்சின்னம்.
கொலைகளைப் பாதகம் என்றவர், தன் உறவுகளிடையே போர் நடந்த கபிலவஸ்து சென்று போரை நிறுத்தியவர், மாமன் மருமகனான நாகர்களிடையே போர் நடந்த யாழ்ப்பாணம் சென்று போரை நிறுத்தியவர் புத்தர் பெருமான்.
அத்தகைய புத்தர் பெருமானின் அறவழிக் கொள்கைகளையும் மனிதநேயத்தையும் பின்பற்றுமாறு இலங்கை அரசையும் அன்பாலும் அறத்தாலும் ஆட்கொண்டு வன்முறைக் கண்ணோட்டத்திலிருந்து திசைதிருப்பி, அறவழி நடத்துவதே இந்தியத் தென் பிராந்திய அமைதிக்கான கால்கோள்.
அத்தகைய கொடுமைக்குக் கூடுதல் வேகம் கொடுக்கும் கட்சிகளையே அரசு அமைக்குமாறு அடுத்தடுத்துத் தேர்தல்களில் தெரிவுசெய்யும் சிங்களப் புத்த மக்களையும் அன்பாலும் அறத்தாலும் ஆட்கொண்டு வன்முறைக் கண்ணோட்டத்திலிருந்து திசைதிருப்பி அறவழி நடத்துவதே தமிழக மீனவர் படுகொலைகளுக்கு உடனடித் தீர்வாகும்.
இலங்கை சென்று, ஊர்தொறும் திருச்சிற்றம்பலம் நீடூழி வாழ்க எனக் கூறிய துறவியின் சொற்கேட்டுச் சிதம்பரம் வந்து, மாணிக்கவாசக சுவாமிகளின் அருள்பெற்றவன், இலங்கையின் புத்த மன்னன். இலங்கையில் அன்பையும் அறத்தையும் அமைதியையும் அவனே காத்தான் என்பதற்குச் சிங்கள வரலாற்று நூல்களும் தமிழக வரலாற்று நூல்களும் சான்று.
===========================================
படங்களுக்கு நன்றி: http://ibnlive.in.com, http://www.fastheadlines.com
ஒவ்வொரு வரியிலும் உண்மை பேசுகிறது. ஆளுமையில் உள்ளவர்கள் இது அறிந்தும், ஆவன செய்யவில்லை என்பது சோகம் அளிக்கிறது.
மறவன் புலவு சச்சிதானந்தம், புத்தரின் போதனைகளைச்
சொல்லி அதன் பெருமைகளை விளக்கியது அருமை.
இலங்கை அரசும் அங்குள்ள புத்த பிட்சுக்களும் புத்தரின்
கொள்கைகளுக்கு மாறாக நடப்பவர்களே! படிப்பது
ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற
கொள்கையில் வாழ்பவர்கள். வெல்லிங்டனில்
ராணுவப் பயிற்சி பெற்றாலும் இந்தியப் பண்பு எங்கிருந்து
வரும்? கார்கில் போரில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானிய
வீரர்களுக்கு நம் வீரர்கள் உதவி செய்துள்ளார்கள். ஆனால்
நம் வீரர்களைப் பாகிஸ்தானிய வீரர்கள் துண்டு துண்டாக
வெட்டி, பார்சலில் அனுப்பினார்கள். போரிலும் தர்மத்தை
நாம் கடைப்பிடிக்கிறோம். அவர்கள் அதர்மத்தைக்
கடைப்பிடிக்கிறார்கள்.
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.