பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 27

0

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

E.Annamalai

செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி -1:

தமிழகப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நிகழும் தமிழியல் ஆய்வுகளையும் ஒப்பிட முடியுமா?

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:

ஐரோப்பிய அரசுகள் இந்தியாவோடு கொண்ட ஆதிக்க உறவின் ஒரு விளைவு, இந்தியவியல் (Indology) என்னும் அறிவுத் துறை. இந்தத் துறை ஆராய்ச்சியின் மையம், சமஸ்கிருதம். ஐரோப்பிய நாகரிகத்தின் அடிப்படையாகக் கொள்ளும் லத்தீன், கிரேக்க மொழிகளோடு சமஸ்கிருதத்துக்கு உள்ள உறவு, அதன் மைய இடத்துக்கு ஒரு காரணம். ஐரோப்பிய அலுவலர்களும் மத போதகர்களும் செய்த திராவிட மொழிகளைப் பற்றிய ஆய்வு, இந்தியவியல் ஆய்வில் விளிம்பு நிலையிலேயே இருந்தது. இந்தச் சூழ்நிலையில், இந்திய நாகரிகத்தைச் சரியாக அறியத் திராவிட நாகரிகத்தையும் ஆராய வேண்டும் என்ற நிலைப்பாட்டில், இந்த நாகரிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் சார்ந்து செய்த ஆய்வுப் பிரிவுக்குத் தமிழியல் என்னும் பெயர் ஏற்பட்டது. இந்த வரலாற்றின் வழியில் இந்தியவியலில் ஒரு அங்கமாகவும் திராவிட அரசியல் வழியில் தனித் துறையாகவும் போட்டித் துறையாகவும் தமிழியல் நோக்கப்படுகிறது.

தமிழ் ஆய்வு, தமிழ் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் பற்றியது. இதுவே இந்திய, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மரபாக உள்ள தமிழ்த் துறைகளில் நடப்பது. தமிழியல் ஆய்வு, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு உள்ளாக வந்த ஆய்வுத் துறை. இந்த ஆய்வுக்கு உந்துதல் தரவே உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 1964இல் கீழைத் தேய ஆய்வாளர் (Orientalists) மாநாட்டில் துவங்கப்பட்டது. IATR நடத்திய மாநாடுகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் வீச்சைப் பார்த்தால், தமிழ் தொடர்பான இலக்கியம், மொழி, பண்பாடு, சமயம், சமூகம், அரசியல், வரலாறு முதலான பல்வேறு அறிவுத் துறைகளைச் சேர்ந்த அறிஞர்களின் பங்கு தெரியும். தமிழின் பன்முகத்தைப் பல்வகை அறிவுத் துறை வழியே அணுகும் ஆராய்ச்சி தமிழியல் என்பது விளங்கும்.

பல்கலைக்கழகங்களில் தமிழியல் துறை இதிலிருந்து குறுகிய பாடத் திட்டத்தை, ஆய்வுப் பரப்பைக் கொண்டது. இது மரபான தமிழ்த் துறை எடுத்துக்கொண்ட இலக்கியம், இலக்கணம் என்ற இரண்டு பொருளையும் விரிவுபடுத்தி அமைந்தது. இக்கால இலக்கியம், அதன் இலக்கிய விமரிசனம், நாட்டார் இலக்கியம் முதலியனவற்றைச் சேர்த்து இலக்கியம் விரிந்த பொருள் பெற்றது; மொழியியல் நோக்கு, பத்திரிகைத் தமிழின் இயல்பு என்று இலக்கணம் விரிந்தது. இலக்கியம், இலக்கணம் என்னும் இரண்டு பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி வரலாறு, சமூகவியல், மானிடவியல் ஆகிய அறிவுத் துறைகளின் பார்வையிலும் நடத்தப்படும். இதைத் தமிழியல் துறை தமிழ்த் துறையை விட அதிகமாக அனுமதிக்கிறது. ஆயினும், தமிழியல் பட்டம் பெறும் மாணவர்களுக்கு இந்தத் துறைகளில் பயிற்சி இருக்காது; அவர்கள் இந்தத் துறைகளின் எந்த வகுப்பிலும் சேர்ந்து படிக்க முடியாது. இந்தத் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ் சார்ந்த ஆராய்ச்சி செய்தாலும்,. தமிழியல் துறையில் எந்தப் பாடமும் படிக்க முடியாது.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் தவிர்த்த வேறு நாடுகளில், தமிழியல் கல்வியின் மரபு வேறானது. தமிழியல், தனித்து நிற்கும் (autonomous) ஆய்வுத் துறை அல்ல; தனித்து நிற்கும் ஆய்வு நெறியும் அல்ல. அது இந்தியவியலின் அல்லது தென்னாசியவியலின் ஒரு பகுதியாகவே இருக்கும். இதில் முனைவர் பட்டத்துக்குத் தமிழ் சார்ந்த பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவரும், தமிழோடு வேறொரு மொழியும் படித்திருப்பார். இலக்கிய, இலக்கணப் பிரதிகளைப் படிப்பதோடு வேறு துறைப் பாடங்கள் சிலவாவது படித்திருப்பார். வேறு துறைகளில் பட்டம் பெறும் மாணவர்கள், தமிழ் சார்ந்த பொருளை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டால், இந்தியவியல் அல்லது தென்னாசியவியல் துறையில் கட்டாயமாக உள்ள பாடங்களை எடுத்து, இரு துறை சேர்ந்த பட்டம் பெறலாம்.

தமிழாய்வின் பரந்த பார்வையும் அதன் பயிற்சியில் உள்ள நெகிழ்ச்சியும் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தமிழியல் படிப்பிலும் ஆய்விலும் பல்துறை நோக்கைக் (multi-disciplinary approach) கொண்டுவருகிறது. தமிழ்நாட்டில் விட, இங்கு ஆய்வு நெறியைக் கற்றுக் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மற்றவர் கண்ட உண்மைகளை அறிந்துகொள்ளச் செய்வதை விட, உண்மைகளைத் தானே தேட வைப்பதே பயிற்சியின் முக்கிய நோக்கம்.

இத்தகைய பயிற்சியின் விளைவை இங்கு தமிழியலில் செய்யப்படும் ஆய்வுகளில் காணலாம். இதில் முதலாவது பல்துறை நோக்கு. இரண்டாவது, தமிழியல் ஆய்வை புதிய அறிவுத் தளங்களான பின்காலனித்துவம் (post-colonialism), பின்நவீனத்துவம் (post-modernism) ஆகியவற்றின் கருத்தாக்கங்களின் வழி நடத்துவது. இதன் ஒரு பரிமாணம்தான் இலக்கியப் படைப்பைச் சமூகத்தின் இலக்கியக் கலாச்சார நடவடிக்கையாகப் பார்ப்பது. இது இலக்கியத்தின் மூலம் சமூகத்தின் கலாச்சாரத்தை அறிவது அல்ல; எப்படிப்பட்ட கலாச்சாரம் எப்படிப்பட்ட கோயிலைக் கட்டியிருக்கிறது என்று பார்ப்பதைப் போல, எந்த மாதிரியான கலாச்சாரம் – இலக்கியப் புரவலர்கள், நுகர்வாளர்களின் சமூகப் பின்னணி, இலக்கியத்தின் தன்மை பற்றிய கொள்கை, இலக்கியத்தின் கலாச்சாரப் பயன்பாடு முதலியவை இதில் அடங்கும் – எந்த மாதிரியான இலக்கியத்தை உருவாக்கியிருக்கிறது என்று பார்க்கிறது இது.

இந்தப் பார்வையில் எந்த இலக்கியப் படைப்பும் விலக்கல்ல. ஏனென்றால், இலக்கியத்தை ஆராய, அழகியல் பார்வை ஒன்றே வழி என்ற நிலைப்பாட்டிலிருந்து இது வேறுபட்டது. களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று இந்தப் பார்வை ஒதுக்காது. காலனிய காலத்திற்கு முந்தைய நூற்றாண்டுகள், வீழ்ந்து பட்ட தமிழ் இலக்கியம் நவீன காலப் பாதம்பட்டு வரும் விமோசனத்திற்காகக் காத்துக் கிடந்த காலம் என்று உதாசீனம் செய்யாது.

புதிய பார்வைகளும் ஆய்வு நெறிகளும் தமிழாய்வுக்கு உரமூட்ட, பல்கலைக்கழகங்களில் அதைப் பிற மொழி ஆய்வோடு, பிற துறை ஆய்வோடு ஒட்டிப் பயிற்றுவிக்க வேண்டும். தமிழ் பற்றிய அறிவு பிற அறிவுகளின் மூலம் வளம் பெற வேண்டும். இதுவே தமிழாய்வு மரபைத் தமிழியல் ஆய்வாகப் புதுப்ப்பிக்கும் வழி.

படம்: அண்ணாகண்ணன்

=====================================

(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *